நம்முடைய வாழ்வில் கடவுளின் நோக்கம்
Sun Apr 07, 2013 6:08 am
நம்முடைய வாழ்வில் கடவுளின் நோக்கம்
Rev.Dr.Theodore Williams
ஒருமுறை அருட்பணியாளர்கள் ஒன்றுகூடி வந்திருக்கும்போது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "உங்களுடைய
வாழ்வில் உங்களுடைய நோக்கம்என்ன?" என்பதுதான் அக்கேள்வி. "ஒரு வெற்றியுள்ள
அருட்பணியாளராக இருக்கவிரும்புகிறேன்" என்றார் ஒருவர். "ஆத்தும ஆதாயம்
செய்து பல சபைகளை உருவாக்க விரும்புகிறேன்" என்றார் வேறு ஒருவர். "அநேக
வாலிபர்களை அருட்பணியாளர்களாக அர்ப்பணிக்கும்படி ஊக்குவிக்க
விரும்புகிறேன்" என்று மூன்றாவது நபர் சொன்னார். அற்புதமான பதில்கள்! இவை
அனைத்தும் ஊழியத்தை மையமாக வைத்து சொல்லப்பட்ட பதில்கள் ஆகும். ஆனால்
கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்? "தேவன் எவர்களை முன்னறிந்தாரோ
அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு
முன்குறித்திருக்கிறார்" என்று வேதத்தில் வாசிக்கிறோம்.
நாம்
கிறிஸ்துவைப்போல ஆகவேண்டும் என்பதுதான் நம்முடைய வாழ்வில் கடவுளின்
முக்கியமான நோக்கமாகும். கடவுள் சிலரை இரட்சிப்புக்கு என்றும், சிலரை
ஆக்கினைக்கென்றும் முன்குறிப்பது இல்லை. எங்கெல்லாம் முன்குறித்தல் அல்லது
தெரிந்துகொள்ளுதல் ஆகிய வார்த்தைகள் வருகின்றனவோ, அங்கெல்லாம் நாம் ரோமர்
8:29லும், எபேசியர் 1:4,5லும் பார்க்கிறபடி, அந்த வார்த்தைகள்
பரிசுத்தத்தோடு சம்பந்தப்பட்டவைகளாய் இருக்கின்றன. பவுல் இவைகளை
அவிசுவாசிகளுக்கு போதிக்கும்போது அல்ல, விசுவாசிகளுக்கு இரட்சிப்பைப்பற்றி
போதிக்கும்போதே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்! வெற்றி, சாதனை
இவைகளை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். ஆனால் கடவுளின் வார்த்தையை நாம் கவனிப்போமானால் நாம்
அவருக்காக என்ன செய்கிறோம் என்பதைவிட நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்
என்பதிலும் அவருடைய கிருபையினாலே நாம் எப்படிப்பட்டவர்களாய் மாறக்கூடும்
என்பதிலும் அவர் கவனமுடையவராய் இருப்பதை அறிந்து கொள்ளலாம். இந்த
நோக்கத்தோடு அவர் நம்மில் கிரியை செய்கிறார். எப்படி படிப்படியாக கடவுள்
நம்மைக் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக்குகிறார் என்பதைப் பார்ப்போம். ரோம
3-8 அதிகாரங்களில் இதை நாம் காணலாம்.
பரிசுத்தம் ஆரம்பம்:
கடவுளுக்கடுத்த காரியங்களிலோ, பரிசுத்த ஜீவியத்திலோ நம் சுபாவப்படி நாம்
நாட்டம் உடையவர்களாய் இருக்கவில்லை. "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை...
தேவனைத் தேடுகிறவன் இல்லை... நன்மை செய்கிறவன் இல்லை".. ஒருவனாகிலும்
இல்லை. (ரோம 3:10-12). நம்முடைய இருதயமும் சிந்தையும்
சீர்கெட்டதாயிருக்கின்றன. நம்முடைய வார்த்தைகள் வஞ்சனை, சபித்தல், கசப்பு
போன்றவைகளால் நிறைந்திருக்கின்றன. தொண்டையைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளதைக்
கவனியுங்கள். தொண்டை, நாவுகள், உதடுகள் மற்றும் வாய்கள் மூலமாக இவைகள்
வெளி வருகின்றன. (3:13-14) நம்முடைய செயல்கள் நமக்கும், மற்றவர்களுக்கும்
நாசத்தையும் நிர்பந்தத்தையும் கொண்டு வருகின்றன. 3:15-16ல் நம்
வாழ்க்கையில் சமாதானம் இல்லை, தெய்வபயமும் இல்லை 3:17-18. இந்த
நிலைமையிலிருந்து தேவன் நம்மைத்தூக்கி எடுத்து, நம் பாவங்களை மன்னித்து
அவருடன் தனிப்பட்டமுறையில் உறவை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.
"எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி, அவருடைய கிருபையினாலே
கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு இலவசமாய்
நீதிமான்களாக்கப்படுகிறார்கள்."
(3:23-24) கடவுள் நமக்குள் பரிசுத்த ஆவியை கொடுத்து இருக்கிறார். அவர்
மூலமாக நாம் பரிசுத்தமான அன்பும் விருப்பங்களும் உடையவர்களாய் மாறுகிறோம்.
மேலும் அவரைப் பின்பற்றவேண்டிய பெலனையும் பரிசுத்தாவியானவர் மூலமாக
பெறுகிறோம். நாம் மறுபடியும் பிறக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள்
அருளப்படுகிறார். "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல", நாம்
தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச்
சாட்சி கொடுக்கிறார்" (8:9,16) கடவுளுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து
பரிசுத்த ஆவியானவராலே நாம் வல்லமையைப் பெறுகிறோம். "உங்கள் உள்ளத்திலே என்
ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக்
கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்". எசே 36:27 என்கிறார்.
பரிசுத்தத்தில் நிலைநிறுத்துதல்: நாம் மறுபிறப்பின் அனுபவமுடைய
விசுவாசிகளாய் இருந்தாலும், நாம் நிதானமிழந்து அசுத்தமான எண்ணங்களுக்கு
இடங்கொடுக்கும்போதும், உண்மையில்லாமல் நடந்துக்கொள்ளும்போதும், நாம்
அடிக்கடி சோர்ந்து போய்விடுகிறோம். நம்முடைய பழைய வாழ்க்கைக்கும்
இப்போதைய வாழ்க்கைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என எண்ணுகிறோம்.
இவ்விதமான சூழ்நிலையில் நம்முடைய நம்பிக்கையை இழந்துவிட்டு தேவன் நம்
வாழ்வில் இதுவரை நமக்காக செய்தவைகளையெல்லாம் உதறித்தள்ளிவிடக் கூடாது.
ஒன்று நாம் மாயக்காரராகி நம்மில் எந்த தவறும் இல்லை என்பதுபோல
நடந்துக்கொள்ளக்கூடாது அல்லது நாம் நம்பிக்கை இழந்துபோகக்கூடாது. நாம்
வாழ்க்கையில் தவறிவிடும்போது அவரிடம் சென்று உண்மையாய் நமது பாவங்களை
அறிக்கைசெய்து, அவரிடமிருந்து பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்குதலையும்
பெற்றுக்கொள்ளவேண்டும். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை
நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு
அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோ 1:9). இது பாவம்
செய்கிற விசுவாசிகளுக்கு கொடுக்கப்படுகிற வாக்குத்தத்தம் ஆகும். நாம்
மறுபிறப்பு அடைந்த நேரத்திலிருந்தே தேவன் நம்மை அவருடைய குமாரனுடைய
சாயலுக்கு ஒப்பாக்குதலை செய்யத்துவங்குகிறார் என்றாலும் நமக்குள்ளே
இன்னமும் அந்த பாவ சுபாவம் இருந்துகொண்டு நம்மைத் தடுமாறி விழச்செய்கிறது.
"நாம் விரும்பாததை நான் செய்தால் நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற
பாவமே அப்படிச்செய்கிறது". (ரோம 7:20) பவுல் தான் மறுபடியும் பிறந்த
அனுபவத்திற்குப் பின்புதான் இப்படி எழுதுகிறார் என்பதை கவனிக்கவேண்டும்.
வாழ்க்கையில் தொடர்ந்து தவறு செய்துகொண்டேயிருந்தால் கிறிஸ்துவின்
சாயலுக்கு ஒப்பாக மாற்றப்படுவதற்குத் தடங்கலாக இருக்கும். அப்படியென்றால்
நம்பிக்கைக்கு இடமெங்கே? நம்முடைய பாவசுபாவத்தின் மீது நமக்கு வெற்றிதந்து,
நாம் பரிசுத்தமாக வாழ தேவன் ஒரு வழியை வைத்திருக்கிறார். கிறிஸ்துவின்
இரத்தமும், கிறிஸ்துவின் ஆவியானவரும்தான் அந்த இரகசியம் நாம் பாவம் செய்த
பின்பு தவறாமல் அவரிடம் சென்று அவரிடமிருந்து பாவமன்னிப்பைப்
பெற்றுக்கொண்டு அவர் மூலமாய் பரிசுத்தமாகிறோம். பின்பு நம்முடைய
வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து பரிசுத்த ஆவியானவரின் முழுமையான
ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். நமக்குள்ளே இருக்கும்
பாவசுபாவத்திற்கு நான் உடன்படுவதில்லை என மறுப்பு தெரிவிப்பதோடு நமக்குள்ளே
வாசம்செய்யும் பரிசுத்த ஆவியானவரின் சித்தத்திற்கு ஆம் என்று
ஒப்புக்கொடுக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குக் கீழ்ப்படிவதே
பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவது என்பதாகும். நமக்குள்ளே இரண்டு
பிரமாணங்கள் இருக்கின்றன. இவை ஒன்றிற்கு ஒன்று எதிராக இருந்து நம்மில்
ஆளுகை செய்ய முற்படுகின்றன. ஒன்று பாவப்பிரமாணம், மற்றொன்று பரிசுத்த
ஆவியானவரின் பிரமாணம்.
ஓர் ஆகாய விமானம் புறப்படும்போது
புவிஈர்ப்பு சக்தி விமானத்தை கீழ்நோக்கியும், விமானத்திலுள்ள ஜெட்
எஞ்சினின் சக்தி விமானத்தை மேல்நோக்கியும் இழுப்பது போன்றது ஆகும். இது
ஜெட் எஞ்சினின் சக்தி புவிஈர்ப்பு சக்தியைமேற்கொண்டு, விமானத்தை எஞ்சினின்
சக்திக்குட்பட்டு இயங்க வைக்கிறார் விமானி, இதேபோல பரிசுத்த
ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, பாவ சுபாவத்திற்கு அடிப்பணிய
நாம் மறுக்கும்போது, நாம் பாவத்தை மேற்கொண்டு வெற்றி பெறுகிறோம். கிறிஸ்து
இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின்
பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே என்கிறார் பவுல். (ரோ 8:2). இது
பவுலின் சாட்சியாகும். பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தத்தின் ஆவியாகும்.
அவருடைய ஆளுகைக்கு இடைவிடாது நம்மை நாம் ஒப்புக் கொடுக்கும்போது பரிசுத்த
ஆவியானவர் நம்மை பரிசுத்தத்திலே நிலைநிறுத்துகிறார்.
பரிசுத்தம்
முத்திரிக்கப்படுதல்: பாவத்தின் மீது உறுதியான வெற்றி கிடைத்தவுடன், நம்மை
ஆளுகை செய்கிறவர் பரிசுத்த ஆவியானவர்தான் என்பதை நிர்ணயம் செய்ததும்,
எந்தவித இடையூறும் இன்றி நாம் பரிசுத்தத்தில் வளர்ந்து, கிறிஸ்துவின்
சாயலுக்கு ஒப்பாக்கப்படுவோம், இதுவும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையே
ஆகும். நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே
காண்கிறதுபோல கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச்சாயலாகத்தானே
மகிமையின்மேல் மகிமையடைந்து மறு ரூபப்படுகிறோம். (2கொரி 3:18).
இதைப்புரிந்து ஆவியானவர் எப்படி நமக்குள் கிரியை செய்கிறார்? என்று
உணர்ந்து தேவனைத்துதிப்போம். ஆம், கர்த்தருடைய வசனத்தின் மூலமாகவே, நாம்
வேதத்தைப் படித்து, தியானித்து கர்த்தருடைய வார்த்தைக்குக்
கீழ்ப்படியும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக
மாற்றுவார். தேவனுடைய வார்த்தையை (வேதத்தை) நாம் படிக்கவேண்டிய நேரத்தை,
நமது ஊழிய சம்பந்தமான காரியங்கள்கூட அந்த நேரத்தை அபகரித்துக்
கொள்ளக்கூடாது. சுயாதீனப்பிரமாணமாகிய பூரண பிரமாணத்தை உற்றுப்பார்த்து,
அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல் அதற்கேற்ற கிரியை
செய்கிறவனாயிருந்து, தன்செய்கையில் பாக்கியவானாயிருப்பான். யாக் 1:25.
கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நம் வாழ்வின் எல்லா
சூழ்நிலைகளையும் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தி, கிறிஸ்துவின் சாயலுக்கு
ஒப்பாக நம்மை மறுரூபமாக்குவார். பவுல் இவ்வாறு எழுதுகிறார். அவருடைய
தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு
கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று
அறிந்திருக்கிறோம். (ரோம 8:28). நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலிருந்தும்
தேவன் என்ன நன்மையைக் கொடுக்கிறார்? என்ற கேள்விக்கு அடுத்த வசனத்தில்
இதற்கான பதில் இருக்கிறது. தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது
குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்குமுன் குறித்திருக்கிறார். நம்முடைய
ஏமாற்றங்களையும், பாடுகளையும், வேதனைகளையும்கூட கர்த்தர் பயன்படுத்தி,
நம்மைக் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார். நம்முடைய
வேதனைகளையும், துயரங்களையும் தேவன் ஒருபோதும் வீணாக்குவதில்லை.
நம்முடைய வாழ்வில் அவரது நோக்கத்தை நிறைவேற்ற அவைகளைப் பயன்படுத்துகிறார்.
கடவுளின் பிள்ளை ஒருவர் இவ்வாறு ஜெபித்தார்: அன்பான தேவனே, சோதனைகளும்,
பாடுகளும் நிறைந்த என் வாழ்வில் உமது சித்தத்தை நீர் மாற்றவேண்டாம்: என்
விசுவாசத்தைப் புதுப்பியும் என்னைப் பெலப்படுத்தும், உம் சித்தத்தை
மாற்றவேண்டாம். என்னை நீர் மாற்றும் என்று ஜெபித்தார்.
தேவன்
நம்மை பரிசுத்ததிற்காகவே அழைத்திருக்கிறார். அதனால்தான் நான் பரிசுத்தராய்
இருப்பதுபோல நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்றார்.
அவர்
வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால்,
அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். 1யோ 3:2.
Dr.Rev.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் ஜாமக்காரனில் வெளியிட வேண்டி கொடுத்த
இரண்டு பக்க செய்திகளில் கடைசியாக கைவசம் இருந்த செய்தியைத்தான் நீங்கள்
மேலே வாசித்தது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum