ஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறை
Sat Jul 28, 2018 9:13 am
ஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்;
விருப்பப் பதிவு முறை
இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஒரு பயம் இருக்காத்தான் செய்கிறது. உண்மையில், இந்த முறையினால் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு.
மிகுந்த கவனத்துடன் விருப்பப் பட்டியல் தயார் செய்வது தான் ஆன்லைன் கவுன்சிலிங்கை பொறுத்தவரை மிக மிக முக்கியம். சரியாக விருப்பத்தை பதிவிட தெரிந்த மாணவர்கள், குறைந்த கட்-ஆப் பெற்றிருந்தாலும், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட, விருப்பத்தை பதிவிடுவதில் தவறிழைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், சரியான விருப்பப் பட்டியல் தயாரிக்காமல், 200 ‘கட்-ஆப்’ வாங்கியிருந்தாலும், அதில் பயனில்லை.
ஐ.ஐ.டி., கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ., ஆன்லைன் கவுன்சிலிங், இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஜே.இ.இ., தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக்கூட, சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,-மும்பையில் இடம் கிடைத்துள்ளது, இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு மிக முக்கிய காரணம், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அவர்களது விருப்பக் கல்வி நிறுவனங்களை பதிவிடுவதில் செய்த தவறும், குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவிடுவதில் அந்த மாணவர் திறம்பட செயல்பட்டதும் தான்!
100 கல்வி நிறுவனங்கள் கூட இடம்பெறாத ஜே.இ.இ., கலந்தாய்வில், நன்கு படித்த குடும்ப பின்னணியைக் கொண்ட மாணவர்களே தவறிழைக்கும்போது, 500க்கும் அதிகமான கல்லூரிகளைக் கொண்ட அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்வில், கிராமப்புற, படிக்காத, அவ்வளவாக தொழில்நுட்ப அறிவைப் பெறாத குடும்பத்தில் இருந்து வரும் ஏராளமான மாணவர்கள், தவறிழைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவற்றையெல்லாம் உணர்ந்து, முழு கவுனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணிற்கு ஏற்ப விருப்பத்தை பட்டியலிட தெரிந்துகொள்வதே, ஆன்லைன் கவுன்சிலிங்கில் சரியான கல்லூரி கிடைக்க ஒரே வழி!
விருப்பப் பட்டியல்
இங்கு விருப்பப் பட்டியல் என்பது, உங்கள் ‘கட்-ஆப்’ மற்றும் தரவரிசைக்குத் தகுந்தாற் போல், இடம் கிடைக்க வாய்ப்புள்ள, அதேநேரம் நீங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் விரும்பும் பாடப்பிரிவை தேர்வு செய்து வரிசைப்படுத்துவதே ஆகும். இதற்கு, நீங்கள் விரும்பும் கல்லூரி முந்தைய ஆண்டுகளில் பெற்ற குறைந்தபட்ச ‘கட்-ஆப்’ மதிப்பெண் மற்றும் தரவரிசையை, உங்களது ‘கட்-ஆப்’ மதிப்பெண் மற்றும் தரவரிசையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஓரளவு பலனைத் தரும்.
இத்தருணத்தில் ஒன்றை நன்கு புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளின் குறைந்த பட்ச ‘கட்-ஆப்’ என்பது தோராயமான கணக்கீட்டுக்கு மட்டுமே உதவும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கல்லூரிகளின் ‘கட்-ஆப்’ இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!
மாணவர்கள் பெற்ற மதிப்பெண், அவர்களது விருப்பம், ஆன்லைன் கலந்தாய்வில் செய்யும் தவறுகள் போன்றவற்றைப் பொறுத்து, இந்த ஆண்டு ‘கட்-ஆப்’ மாறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு.
நீங்கள் பெற்ற ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை விட, உங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் கடந்த ஆண்டில் அதிகமான ‘கட்-ஆப்’ பெற்றிருந்தாலும், அதில் உங்களுக்கு ஒதுக்கீடு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே, அந்த கல்லூரிகளுக்கு உங்களது பட்டியலில் முதலிடம் தருவது சிறந்தது.
உங்களது ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணிற்கும் கீழ் உள்ள கல்லூரிகளில், உங்களுக்கு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்கனவே பிரகாசமாகத்தான் உள்ளது. ஆகையால், அந்த கல்லூரிகளுக்கு உங்களது விருப்பப் பட்டியலில் கடைசி இடம் அளிக்கலாம்.
உதாரணமாக, உங்களது ‘கட்-ஆப்’ 192 என்றாலும், 199 ’கட்-ஆப்’ பெற்ற கல்லூரிகளையும் தயங்காமல் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் சேர்க்கலாம். அதிலிருந்து படிப்படியாக, குறைவான ‘கட்-ஆப்’ பெற்ற கல்லூரிகளை விருப்பத்திற்கு ஏற்ப பதிவிடலாம்.
விருப்பத்தை பதிவிடுவதில், எண்ணிக்கை கட்டுப்பாடு ஏதும் இல்லாததால், ஆயிரம் விருப்பங்களைக் கூட நீங்கள் பட்டியலிடலாம். ஆகையால், இடம் கிடைப்பதற்கு கடினமான கல்லூரிகளையும் விட்டு விடாமல், உங்களது பட்டியலில் விருப்பத்திற்கு ஏற்ப முதலிலேயே சேர்த்துக்கொள்வது, சிறந்த கல்லூரி கிடைப்பதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கும்.
கல்லூரியைப் பற்றிய விவரம்:
மாணவர்கள், தங்களது பட்டியலில் இருக்கும் கல்லூரிகளின் விபரங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு, விரும்பும் கல்லூரிகளின் இணைய தளத்திற்குச் சென்று, ‘நாக்’ சான்று, என்.பி.ஏ., சான்று, என்.ஐ.ஆர்.எப்., எனப்படும் கல்லூரிகளின் தர வரிசை போன்ற விவரங்களைச் சேகரியுங்கள். விரும்பும் கல்லூரிகளுக்கு நேரிலும் சென்று, அதன் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள், இணையதள வசதிகள், வேலை வாய்ப்பு விபரங்கள் போன்றவற்றைக் கேட்டு அறியுங்கள்.
எப்படி பட்டியலிடுவது?
நீங்கள் எந்தெந்த கல்லூரிகளில் சேர விரும்புகிறீர்களோ, அவற்றை ஆராய்ந்து, அவற்றில் உங்களுக்கு மிகவும் விருப்பமான கல்லூரியை, உங்களது பட்டியலில் முதலிலும், அதைத் தொடர்ந்து விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரிகளை கீழே வரிசைப் படுத்தவும் வேண்டும். உங்கள் விருப்பப் பட்டியலில் முதலில் இருக்கும் கல்லூரியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால், அதை விடச் சிறந்த கல்லூரி உங்களது விருப்பப் பட்டியில் கீழே குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அதை உங்களால் பின்னர் தேர்வு செய்ய முடியாது. ஆகையால், இந்த விருப்பப் பட்டியலில் கல்லூரிகளை அதிக கவனத்தோடு வரிசைப்படுத்துவதே சரியான கல்லூரியில் உங்களது வாய்ப்பை உறுதி செய்யும்.
‘ஷேர்’ பண்ணாதீங்க...
கல்லூரி ’கோட்’ மிகவும் முக்கியம். மாணவர்கள் எளிதாக அடையாளம் காணவும், ஒரே பெயரில் உள்ள பல கல்லூரிகளை வேறுபடுத்திக்கட்டவும், ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பிரத்யேக எண் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, உங்களது விருப்பமான கல்லூரிகளின் பிரத்யேக எண்களையும் சேர்த்தே உங்கள் விருப்பப்பட்டியலில் குறித்துக்கொள்ளுங்கள். மற்றொரு முக்கியமான விஷயம், உங்களது ஆன்லைன் கவுன்சிலிங் ‘யூசர்நேம்’, பாஸ்வேர்டு, இ-மெயில் பாஸ்வேர்டு, மொபைல் ஓ.டி.பி., ஆகியவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்!
இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். ஏனெனில், ஆன்லைன் கவுன்சிலிங்கை பொறுத்தவரை, உங்கள் விருப்பப் பதிவு தான் ‘ராஜா’!
உதவி மையத்தை நாடலாம்!
* குறிப்பிட்ட கலந்தாய்வு சுற்றுக்கான விண்ணப்பதாரர்களின் தகுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
* விண்ணப்பதாரர்கள், கலந்தாய்விற்கான முன்வைப்பு தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திய பின் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பத்தை வரிசைப்படி பதிவு செய்யலாம். இதற்காக மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* பின்னர், தற்காலிக இடஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை, தரவரிசைப்படி ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களின் புகு பதிவு (login) வாயிலாக மறுநாள் பார்த்துக் கொள்ளலாம்.
* பிறகு, விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தரவரிசை செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை, இரண்டு நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
* ஒரு சுற்றில் விண்ணப்பதாரரின் விருப்பத்தை பெற்றபின், அளித்த விருப்ப வரிசை, தரவரிசைப்படி இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
* இச்சுற்றில் இடஒதுக்கீடு பெறாத விண்ணப்பதாரர்கள் அடுத்த சுற்றின் முறைப்படி கலந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி, மற்றும் பாடப்பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் சென்று சேர்ந்திட வேண்டும்.
* கலந்தாய்வின் ஒவ்வொரு கட்டமும் குறுஞ்செய்தி சேவை (எஸ்.எம்.எஸ்.,) மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகள் (இ-மெயில்) விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட அடையாளக் குறிப்பிற்கு அனுப்பப்படும்.
* உதவி மையங்கள், விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான உதவி மற்றும் வழிகாட்டி மையங்களாக திகழும். மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களும் இவ்மையங்களில் அமைக்கப்பட்ட இணையதளத்தோடு இணைக்கப்பட்ட கணினியை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
* விண்ணப்பதாரர்கள், கல்லூரி தேர்ந்தெடுத்தல் மற்றும் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற வசதிகளை உதவி மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்த விபரங்களை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 26.07.2018
Permissions in this forum:
You cannot reply to topics in this forum