இரண்டு தூண்கள்
Tue Mar 12, 2019 9:49 pm
“இரண்டு தூண்கள்”
திறவுகோல் வசனம்: 2 நாளா: 3:15,17 – “ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டுதூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி, … அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்”.
1. வலது பக்கத்தூண் – யாகீன் (Jachin) – “பெருகுதல்” – ஆங்கிலத்தில் “He Shall Establish”
2. வலது பக்கத்தூண் – போவாஸ் (Boaz) – “பெலன்”; ஆங்கிலத்தில் “Strength”. இன்னொரு பொருளும் உண்டு: “ஆஸ்தியுள்ளவன்”
இவ்விரு தூண்களின் உயரம்: ஒவ்வொரு தூணும் - 35 முழம் – சுமார் 52.5” அடிகள்
தூண்களின் இருப்பிடம்: ஆலயத்திற்கு முன்பாக (2நாளா: 3:15)
இவ்விரு தூண்களும் ஆலயத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, அவையிரண்டும் எதையும் தாங்கி நிற்கவில்லை. வெறுமனே நிற்க வைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தூண்களின் பொருள் என்ன? அதை அறிய வெளிப்படுத்தலுக்குள் கடந்து செல்ல வேண்டும்.
வெளி: 3:12 – “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்”
எதிலே ஜெயம் பெற வேண்டும்?
1யோவான்: 2:15-17 – “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்”
1யோவான்: 3:8,9 – “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்”
1. உலகம் 2. மாம்சம் 3. பிசாசு – இம்மூன்றிலே ஜெயம் பெற வேண்டும். இம்மூன்றிலே ஜெயம் பெறுகிறவனை ஆலயத்தில் தூணாக்குவேன் என்கிறார்.
இவ்விரண்டு தூணின் முழுப்பொருள்: “கர்த்தருக்குள் ஜெயங்கொள்ளுகிறவன், பெருகவும் பெலனடையவும் செய்வேன்” (பெருகுதல் – யாகீன்; பெலன் – போவாஸ்)
யார் இந்த யாகீன்? போவாஸ்? எதற்காக இவ்விரு தூண்களுக்கும் இவ்விரண்டு பேரின் பெயர்களும் வைக்கப்பட வேண்டும்? அப்படி இவர்கள் என்ன செய்திருப்பார்கள்? அல்லது சாதித்திருப்பார்கள்? இவைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சத்தியம் என்ன? என்பதை தியானிப்போம் வாருங்கள்.
இவ்விரண்டு தூண்களைக்குறித்து பல பேர் பலவித கருத்துக்களை சொல்லி வருகின்றனர். ஒருசாரார் இவ்விரண்டு தூண்களும் தாவீது, சாலமோனைக் குறிக்கிறது என்கின்றனர். மறுசாரார் இல்லை… இவ்விரண்டும் உருவகப் பெயர்கள். எனவே, இவை எதையும் யாரையும் குறிப்பிடப்படவில்லை என்கின்றனர். நானோ … இவையிரண்டையும் மறுக்கிறேன்.
யாகீன்: இந்த பெயரில் வேதத்தில் மொத்தம் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்கள்:
1. ஆதி: 46:10 – “சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.” – சிமியோனின் நான்காம் குமாரன் இந்த யாகீன். வம்ச அட்டவணைகளில் தொடர்ந்து இவ்விதமாகவே குறிப்பிடப்படுகிறதை நாம் காணலாம். (யாத்: 6:15 / எண்: 26:12 / 1நாளா: 4:24)
2. நெகே: 11:10 – “ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்” – ஆசாரியனாகிள யாகீன். இவன் சாலமோன் காலத்திற்குப் பிந்தி வந்தவனானபடியால் … இவனது பெயரை இவ்விரு தூண்களில் ஒன்றிற்கு வைக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.
எனவே, முதல் குறிப்பில் உள்ள சிமியோனின் நன்காவது குமரான் யாகீனை நாம் எடுத்துக் கொள்கிறோம். வலதுபக்க தூணிற்கு இந்த யாகீனின் பெயரையே வைக்கும்படி சாலமோனிடம் தேவன் சொலல்லியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
ஆலயத்தில் தூணாக இருப்பதற்கு தகுதி: உலகம், மாமிசம், பிசாசை ஜெயிக்கிறவன், ஜெயங்கொள்ளுகிறவன் தகுதி பெறுகிறான். ஒரு பரிசுத்தவான் இம்மூன்றையும் ஜெயித்தவனாய் இருக்க வேண்டும். யாகீன் இந்த மூன்றிலும் ஜெயம் பெற்றிருந்தவனாக இருந்திருக்க வேண்டும்.
யாகீனுடைய கிரியைகள் பற்றிய விபரம், வாழ்க்கைமுறை, சம்பவங்கள் என எதுவும் எழுதப்படவில்லை. ஆகிலும், அவன் ஜெயம் பெறாமல், அவன் பெயரை இருதூண்களில் ஒன்றிற்கு வைக்க தேவன் அனுமதியார். ஏதோ ஒரு தேவநோக்கத்திற்காக, தேவனாகிய கர்த்தர் அதை மறைபொருளாக வைத்துள்ளார்.
தேவன் வேதத்தில் பல காரியங்களை மறைபொருளாக வைத்துள்ளார். உதாரணமாக, மோசேயினுடைய சரீர அடக்கம். அதுபோல இதுவும் ஒன்று. தேவ சித்தமின்றி, தேவ அனுமதியின்றி, தேவனுடைய சிபாரிசு இல்லாமல், ஆவியின் ஏவுதல் இல்லாமல் சாலமோன் யாகீன் பெயரை தூணுக்கு வைத்திருக்கமாட்டார் என்பது தெளிவு.
யாகீன் பற்றி நமக்கு விபரம் தெரிவிக்கப்படவில்லை என்பதினால் … அவன் யாதொரு கிரியையும், ஜெயமும் எடுக்கவில்லை என அர்த்தமாகாது. தேவனுக்கு அவனைப் பற்றி தெரியும். அவனவன் செய்யும் கிரியை அவரோடுகூட வருகிறது. நமக்கு தெரியாவிட்டால் அது பொய்த்து விடாது. யாகீன் ஜெயம் பெற்றவன். தேவனாகிய கர்த்தர் சாலமோனுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம். வெளிப்படுத்தாமலும் இருக்கலாம். அது அவருடைய விருப்பம். ஆனால், தேவன் சாலமோனுக்குச் சொன்னதை அவன் செய்து முடித்தான். எனவே, ஆதி:46:10 – ல் உள்ள யாகீன் பெயரை வலதுபுற தூணிற்கு இட்டான்.
போவாஸ் (Boaz) :
போவாஸ் என்றால் ‘பெலன்’ (அல்லது) ‘ஆஸ்தியுள்ளவன்’. (ரூத்:2:1)
போவாஸ் – ரூத் - ஓபேத்தை பெற்றார்கள். (ரூத்:4:17) ஓபேத் - ஈசாயை பெற்றான் (ரூத்:4:17) ஈசாய் - தாவீதைப் பெற்றான் (ரூத்:4:22) தாவீதின் வம்சத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார்.
மேசியா – இயேசு கிறிஸ்துவின் மீட்பின் திட்டத்தில் ஜெயம் பெற்றவன் “போவாஸ்”
ரூத்:4:6 – ரூத்தின் சுதந்தரவாளி மீட்கவேண்டியதை மீட்கமாட்டேன் என்று மறுத்துவிட்டான்.
ரூத்:4:9,10 – மீட்கவேண்டியதை முறைப்படி மீட்டுக்கொண்டு, மேசியா இவ்வுலகில் வெளிப்பட, மீட்பின் திட்டம் செயல்பட தன்னை தேவசித்தமும், தேவ திட்டம் செயல்பட அர்ப்பணித்துக் கொண்டான்.
தேவசந்ததி அற்றுப்போகாதபடிக்கு, தேவனுடைய மீட்பின் திட்டம் பூமியில் செயல்பட, சுதந்தரவாளியை ஜெயித்தான். தேவசந்ததி அற்றுப்போகும்படிக்கு, சாத்தான் சுதந்தரவாளியைக் கொண்டு, ரூத்தின் மூலம் இவ்வுலகில் நகோமிக்கு சந்ததி தழையாதபடி தடுக்கப் பார்த்தான். ஆனால் போவாஸ் அதை ஜெயித்தான்.
இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வரும் மீட்பின் திட்டம் வெற்றி பெற வழி செய்தான். வம்ச அட்டவணைக்கு வழி வகுத்தான். பிசாசின் சதி திட்டத்தை அழித்தான். எனவே ஆலயத்தில் இடதுப்புற தூணிற்கு போவாசின் பெயர் சூட்டப்படும்படி கர்த்தர் உதவினார்.
ஒருசிலர் இவ்விரண்டு தூண்களும் தாவீது, சாலமோனைக் குறிக்கிறது என்றும் ; அவை உருவகப் பெயர்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். மேற்கண்ட வேத ஆய்வின்படி, யாகின், போவாஸ் என்பது உருவகப் பெயர்கள் அல்ல; யாகின், போவாஸ் இருவரும் ஜெயம் பெற்ற ஜெயவீரர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, இவ்விரண்டு தூண்கள் தாவீது, சாலமோனை குறிப்பிடாது என்பது தெளிவாகிறது.
இவ்விரண்டு தூண்களை ஆலயத்திற்கு முன்னால் எதற்காக வைத்தார்?
v ஆலயத்திற்க்குள் நுழையும் முன் இவ்விரண்டு தூண்களையும் கடந்துதான் உள்ளே, வெளியே செல்ல முடியும்.
v உள்ளே நுழையும்போது இடதுபுற யாகீன் தூண்புறமாய் பிரவேசிப்போம். இது எதைக்காட்டுகிறது? தேவனுடைய ஆலயத்திற்குள் யார் எப்போது பிரவேசித்தாலும், பிரவேசிக்கும் எவரும் “பெருக்கம்” அடைவர் என்பதைக் காட்டுகிறது.
v ஆராதனை முடிந்து ஆலயத்திலிருந்து வெளிவரும்போது வலதுபுற (போவாஸ்) பக்கத்தூண் உள்ள பக்கமாய் வெளிவருவர். இது எதைக்காட்டுகிறது? ஆராதனை முழுவதும் பங்குபெற்று முடிந்து வெளிவரும் ஒவ்வொருவரும் “பெலன்” பெற்று வெளிப்படுவார்கள் என்பதையே இது காட்டுகிறது.
ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ (வெற்றி) அவனை என் தேவனுடைய ஆலயத்தின் தூணாக்குவேன் என்ற வசனத்தின்படி ஜெயம் பெற்ற இருவரின் பெயர்களை அவ்விரு தூண்களுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அப்படியானால் பரிசுத்தாவியானவர் சொல்ல வருகிறதென்ன?
தேவனாகிய கர்த்தரை ஆராதிக்க வருகிற தேவஜனங்கள் எவராயிருப்பினும், உள்ளே பிரவேசிக்கையில் பெருக்கமான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கவும், ஆராதனை முடிந்து வெளியேறுகையில் பெலன் பெற்று, இவ்வுலக வாழ்வில் வெற்றி மீது வெற்றி பெறுகிற கிருபையை கொடுத்தனுப்புகிறார்.
ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது – பெருக்கம் – பெருக்கத்தின் ஆசீர்வாதம் வெளியேறும்போது – பெலன் – பெலத்தின் ஆசீர்வாதம்
மேசியா இயேசுகிறிஸ்துவின் மீட்பின் திட்டத்தில் பங்காற்றும் எவரும் பெருக்கமும், பெலனும் ஜெயமும் பெறுவார்கள். வாரந்தோறும் ஆராதனைக்கு வரும்போது என்ன விதமான நன்மைகளை பெறுகிறோம் என்பதை நாம் அறியும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு இவைகளின் மூலம் விளங்கப்பண்ணியுள்ளார். நமது ஆலயமோ, ஆராதனையோ ஒருபோதும் வெறுமையாய் நம்மை அனுப்பி விடாது. வருகிற பிரவேசிக்கிற யாவரையும் பெருக்கத்திற்கும் பெலனுக்குள்ளும் நடத்துகிறதாய் இருக்கிறது. ஆலயமும் ஆராதனையும் நம்மை இவ்விதமான ஆசீர்வாதத்திற்கேதுவாய் நம்மை நடத்துகிறது.
எனவே, நாம் பெருக்கமடையவும், பெலனடையவும் தவறாது ஆலயத்திற்கும், ஆராதனைக்கும் குடும்பமாக சென்று ஆசீர்வதிக்கப்பட அர்ப்பணிப்போம். தேவனாகிய கர்த்தாம் தாமே நம்மைனவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum