பேதுருவின் இறுதி நாட்கள்
Mon Jan 29, 2018 8:46 am
பேதுருவின் இறுதி நாட்கள்
தொடக்க கால சிறந்த வரலாற்று ஆசிரியர் எசபியஸ் (Eusebius) எழுதியுள்ள Ecclesiastical History என்ற புத்தகத்தில் பேதுருவின் இறுதி நாட்கள் பதிவு செயப்பட்டுள்ளது. பேதுரு ஆதிச்திருச்சபையில் ஒரு பெருந்தலைவராக காணப்பட்டார். பேதுரு எருசலேமை விட்டு புற இனத்தவர்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கும்படி சிரியா தேசத்திற்கு அருகில் இருக்கும் அந்தியோக்கியா சென்று அங்கு ஏழு வருடங்கள் பேராயராக பணியாற்றினார். முதன் முதலில் அந்தியோக்கியாவில் தான் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழங்கிற்று (அப் 11:20-26).
அங்கிருந்து மத்திய ஆசிய நாடுகளான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, பித்தினியா நாடுகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார் (1பேதுரு1:1-2). கி. பி – 69-ல் பேதுரு அந்தியோக்கியா சபையின் பொறுப்பை தனது சீடரான இவோடியஸ் (Evodius) என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ரோமாபுரிக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க சென்றார். பேதுருவின் மனைவியும் அவரோடு கூட மிஷனரி பயணம் செய்து ஊழியம் செய்து வந்தாள் (1கொரி 9:5). பேதுருவின் நற்செய்தி அறிவிப்பினால், அகரிப்பா அரசனின் நான்கு மனைவிகள் மனம் மாறினார்கள். தங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டார்கள்.
மேலும் அல்பினசின் மனைவி செந்திப்பாவும் தனது பாவ வாழ்கையை விட்டு பரிசுத்த வாழ்க்கைக்கு நேராய் திரும்பினாள். அகரிப்பாவும், அல்பினசும் பேதுருவின் மேல் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். பேதுருவின் நண்பர்களும், திருச்சபை மக்களும் பேதுருவை காப்பாற்றி தப்பிக்க வழி செய்தார்கள். பேதுரு தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். பேதுரு தனது மனைவியை ரோமாபுரி சபை மக்களிடத்தில் விட்டு அங்கிருந்து ஓடத்தொடங்கினார்.
பேதுரு ஓடும பொழுது, இயேசு கிறிஸ்து எதிரே வருவதைக் கண்டார். பேதுரு அவரை நோக்கி, “ஆண்டவரே! நீர் எங்கே போகிறீர்?’ என்று கேட்டார். இயேசு பேதுருவை நோக்கி, “சிலுவையிலே அறையப்படுவதற்கு நான் ரோம் நகருக்கு போகிறேன்” என்றார். அதற்கு பேதுரு “ஆண்டவரே, நீர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவதற்க்கான காரணம் என்ன?” என்று கேட்டார். இயேசு, ‘நான் மீண்டும் சிலுவையில் அறையப்படுவதற்க்காகவே ரோம் நகர் செல்கிறேன்’ என்றார். பேதுரு எந்த இடத்திலிருந்து ஓடிவந்தரோ அந்த இடத்திற்குத் தனக்கு பதிலாகச் சிலுவை சுமக்கவே இயேசு செல்கிறார் என்று பேதுரு விளங்கிக் கொண்டார். பேதுரு மரிப்பதற்க்கு துணிந்து ரோம் நகருக்கு திரும்பினார்.
பேதுரு கண் முன்னே தன்னோடு ஊழியம் செய்த தன் மனைவியை சிலுவையில் அறைந்தார்கள். இந்த காட்சியை பேதுரு காணுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் பேதுரு சிலுவையில் துன்பப்படும் தன் மனைவியைப் பார்த்து, “நம் ஆண்டவர் நமக்காக சிலுவையில் தொங்கிய காட்சியை நினைத்துக்கொள்” என்று ஊக்கப்படுத்தினார். (Eusebius, Ecclesiastical History, 3, 30).
பேதுரு இந்த செயலை துணிவோடு செய்தபடியால், சிறைச்சாலைக்காரன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். தன் மனைவியை சிலுவையில் அறைந்ததை கண்டபின், பேதுருவை சிலுவையில் அறையும் நேரம் வந்தது. அப்பொழுது பேதுரு, “என் ஆண்டவர் சிலுவையில் நேராய் அறையப்பட்டு மரித்ததைப்போல நான் அறையப்பட தகுதியற்றவன். என்னைத் தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும் என்று கேட்டு கொண்டார். பேதுரு கேட்டு கொண்ட வண்ணமாகவே சிலுவையில் தலைகீழாக அறைந்தார்கள். (Eusebius, Ecclesiastical History, 3-1).
இவ்வாறு ஆண்டவருக்காய் சிறந்த ஊழியம் செய்து இரத்த சாட்சியாய் மரித்தார், திருச்சபையின் முதல் பேராயர் சீமோன் பேதுரு.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum