பேதுருவின் வாழ்விலிருந்து சில சிந்தனைகள்
Mon Jun 15, 2015 3:55 pm
கற்றுக்கொள்கிறவன் கிறிஸ்தவன்... கைக்கொள்கிறவனோ சீடன்.
(பேதுருவின் வாழ்விலிருந்து சில சிந்தனைகள்)
கிறிஸ்து தன் ஊழியத்தைத் தொடங்கியவுடன் செய்த மிக முக்கியமான காரியம் தனக்கான சீடர்களைத் தெரிந்து கொண்டதுதான். அதில் பிரதானமானவர்களில் முதலானானவர் சீமோன் என்கிற பேதுரு. பேதுரு எவ்வாறு சீடனானார், அல்லது ஆக்கப்பட்டார்?
1.அழைத்தவுடன் வந்தார் - (மத்தேயு 19:20, அப்போஸ்தலர் 5:29)
அன்று பேதுரு அனைத்தையும் விட்டு உடனடியாக இயேசுவைப்பின்பற்றிச் சென்றார். மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது என்று தெளிவாக பிரசங்கித்தார். நாம் என்று எந்த அழைப்புக்காகக் காத்திருக்கிறோம். அழைப்பின் சத்தம் நம் காதில் விழுகிறாதா? வரத் தயாராயிருக்கிறோமா? நம்மிடம் அதே கீழ்ப்படிதல் உண்டா?
2.கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமாயிருந்தார்: (மத்தேயு 15:15, லூக்கா 12:41)
உவமைகளாகக் கிறிஸ்து சொன்ன சத்தியங்களை அவற்றின் மறைவான பொருட்களை அதிகமாய் அறிய விரும்பினார். இன்று சத்தியத்தை சரியாகக் கற்பதிலும் வேதத்தின் மகத்துவத்தை உணர்வதிலும் நமது ஆர்வம் எப்படி இருக்கிறது? இன்று நாம் கற்றுக்கொள்ளும், கற்க விரும்பும் வார்த்தைகள் எது? எச்சரிப்பு எரிச்சலடையவைக்கிறதா? வசனத்தை வளைக்கும் வில்லாளர்களைத்தான் மனம் விரும்புகிறதா?
3. கிறிஸ்துவைச் சரியாகக் கண்டுகொண்டார் - (மத்தேயு 16:16, மாற்கு 8:29)
யோவான்ஸ்னானகனுக்கு அடுத்து கிறிஸ்துவை அடையாளம் கண்டு கொண்டவர் பேதுரு. அவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து சரியாகக் கண்டு கொண்டு மகிமைப்படுத்தினார். இன்று இயேசு நமக்கு யார்? அவரை டாக்டராகவோ, தேவைகளை நிறைவேற்றும் பேங்கராகவோ பார்க்கிறோமா? அல்லது கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்களாய் இருக்கிறோமா? (2 பேதுரு 2:20)
4. சபையின் அஸ்திபாரமானார் - (மத்தேயு 16:18 - அப்போஸ்தலர் 1:15).
“பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்” என்று இயேசு அளித்த உறுதியின்படி சபையின் அஸ்திபாரமானார். இன்று கிறிஸ்துவின் சபையில் நாம் யார்? “சபை” என்று கிறிஸ்து கூறியவற்றின் பொருளையாவது சரியாக விளங்கிக் கொண்டிருக்கிறோமா?
5. இடறினாலும் எழுந்து நின்றார் - (மத்தேயு 26:33, மத்தேயு 26:40, மாற்கு 14:72)
சரீரத்திலும் மனதளவிலும் பலவீனாராகக் காணப்பட்டாலும், கிறிஸ்துவின் பாடு மரணத்தை வெகு சமீபத்தில் இருந்து அதற்குச் சாட்சியாயிருந்தார். அவரை மறுதலிதாலும் உடனே அதற்காக மனம் கசந்தார். இன்று பாவத்திற்காக மனம் கசக்கும் அனுபவம் உண்டா.? நம் பலகீனங்களை அறிந்து கிறிஸ்துவைப்பற்றிக்கொள்ளத்திரும்புகிறோமா? இல்லை துணிகரர்களாய் ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என்று முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறோமா? (2 பேதுரு 1:9)
6. கிறிஸ்துவின் நம்பிக்கைக்கு உகந்தவராக இருந்தார் - (மத்தேயு 17:1 மாற்கு 14:33, யோவான் 21:17)
கிறிஸ்து பிதாவினிடத்தில் மருரூபமலையிலும், கெத்சமனேயிலும் உடன் ஜெபிக்கத் தேர்ந்தெடுத்தவர்களில் பேதுருவும் இருவர். இயேசுவின் உள்வட்டத்தில் பேதுரு இருந்தார். இன்று நம் நிலை என்ன? கிறிஸ்துவின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாய், அவரால் நம்மை நம்பி ஒரு பொறுப்ப்பைக் கொடுக்கும் இடத்தில் இருக்கிறோமா? உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி (1 பேதுரு 1:21) இருக்க வேண்டும் என்று போதித்து அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடக்கிறோமா?
7.கிறிஸ்துவின் ஆடுகளை மேய்ப்பவரானார் - நல்ல மேய்ப்பன் கிறிஸ்து, உயிர்தெழுந்தபின் அழைத்து “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்று சொன்னது பேதுருவிடத்தில் தான். அதனால் தான் யூதர்களிடம் துணிவாய்த் தன் ஊழியத்தை (அப்போஸ்தலர் 2:14 ) உடனே துவங்கினார். ஊழியம் வேறு யாரோ செய்யவேண்டியது என்று எண்ணிக்கொண்டிருக்கிறோமா? ஊழியம் என்றால் என்ன என்பதைப்பற்றி சரியான புரிதல்தான் நமக்குண்டா?
8. சத்தியத்தைச் சத்தியமாய்ப்போதித்தார் - (அப்போஸ்தலர் 2:37, அப்போஸ்தலர் 2:38, 1 பேதுரு 1: 6,7)). பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி மனந்திரும்பினார்கள், இன்று நம்முடைய வார்த்தைகள் எப்படிப்பட்டது? தேன் தடவிய வார்த்தைகளைப்பேசிக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோமா? உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் என்று சொல்கிறோமா, இல்லை கிறிஸ்துவை வணங்கினால் சோதனைகளும் கஷ்டங்களும் பறந்துவிடும் என்று பொய் சொல்லிக்கொண்டிருக்கிறோமா?
9. தாழ்மையானவராய் பரிசுத்தமானவராய் இருந்தார் (அப்போஸ்தலர் 10:26)
பேதுரு தன்னை உயர்வாகக் காட்டிகொள்ளவேயில்லை. தன் பாதத்தில் விழுந்த கொர்நேலியுவை நானும் ஒரு மனுஷன்தான் என்று சொல்லி தூக்கியெடுத்தார். நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாய் தாழ்மையாய் இருக்கிறோமா? இல்லை மற்றவர்கள் நம்மை உயர்த்துவதை இரசிக்கிறோமா? உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் என்று பரிசுத்தராய் நடந்து உபதேசிக்க நம்மால் முடியுமா?
10. கள்ளத்தீர்க்கர்களைக் குறித்து எச்சரித்தார் - (1பேதுரு 2: 1-3) கள்ளத்தீர்க்கதரிசிகளும் கள்ளப்போதகர்களும் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலிக்கவும் பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்என்பதையும் தீவிரமாக எச்சரித்தார். இந்த எச்சரிக்கை உணர்வு நமக்குண்டா? இல்லை பேதுரு செய்தார் என்றால் ”அவர் பேதுரு... செய்தார்!, நாமென்ன பேதுருவா” என்றும் நோவாவின் வேலையை நோவா வந்து செய்து கொள்ளட்டும் ((1பேதுரு 2:5) என்றும் எச்சரிப்பைக் குறைசொல்லுதல் என்று சாடிக்கொண்டிருக்கிறோமா?
பேதுருவின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ள இன்னமும் ஏராளமுண்டு, இவற்றை முதலில் சிந்திக்கலாம் சகோதர்களே.
பேதுரு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவனானார், அவர் வார்த்தைகளைக் கைக்கொண்டு சீடனானார், முதலாவது சபையைக் கட்டி கிறிஸ்துவின் மந்தைக்கு மேய்ப்பனானார், கிறிஸ்துவைப்போல் பாடுகளை ஏற்றுக்கொண்டு புனிதரானார். இன்று நாம் செல்லவேண்டிய பாதையும் இதுவே.
நன்றி: சகோ.பென்னி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum