அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்
Sun May 01, 2016 9:02 am
புதுடெல்லி,
மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆட்களை தேர்வு செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறி்த்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையில், வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் எந்த அரசு அதிகாரிகளையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அரசு பணிகள் காலியாக இருக்கும் விபரங்கள் ஒரு பொதுவான இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைனிலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டு உதவியுடன் எலக்ட்ரானிக் கையெழுத்தை (eSign) இணைத்து ஆவணங்களை அனுப்ப வேண்டும். சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ள டிஜிட்டல் லாக்கரில் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை அரசு தேவைப்படும் போது சரிபார்த்துக் கொள்ளும்.
இவ்வாறு ஆன்லைன் முறையில் ஆட்களை தேர்வு செய்வதால் அரசு வேலைக்காக எந்த முக்கிய உயர் அதிகாரிகளையும் அணுக வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், வேலைக்கு சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களை அட்டெஸ்ட் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படாது.
மத்திய அரசின் மனிதவள பயிற்சித்துறை செயலாளர் சஞ்சய் கோத்தாரி மற்றும் வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்பட 12 பேர் கொண்ட குழு இந்த பரிந்துரையை ஏற்கனவே சென்ற ஜனவரி மாதமே அரசுக்கு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தற்போது மனிதவள அமைச்சகத்தில் உள்ள செயலாளர்கள் வாரந்தோறும் பரிந்துரைகளை மறுஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் இந்த முறையை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருகிறார்கள்.
ஏற்கனவே, சென்ற ஜனவரி 1-ந்தேதி முதல் கெசட்டட் அதிகாரிகள் மூலம் அட்டெஸ்ட் பெற வேண்டும் என்ற முறையை மாற்றி நாமே சுயமாக அட்டெஸ்ட்டட் செய்து கொள்ளும் எளிய முறையை கொண்டு வந்தது மத்திய அரசு. மேலும், ஜூனியர் குரூப் பி, சி, டி பணிகளுக்கு நேர்முகத்தேர்வை ரத்து செய்திருந்ததும் நினைவு கூரத்தக்கது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum