களையா அல்லது தானியக்கதிரா
Fri Jan 08, 2016 7:29 pm
தேவ ஜனமே, நீங்கள் களையா அல்லது தானியக்கதிரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்
எக்காலத்தும் இல்லாத அளவில் இன்று தேவனுடைய திருச்சபை சாத்தானாம் பிசாசினால் புடைத்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள புறமதஸ்தர்கள் நமது சாட்சியற்ற, கிறிஸ்தவ மகிமைக் குலைச்சலான வாழ்க்கையைக் கண்டு அன்பின் ஆண்டவரை தைரியமாக தூஷிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் சாட்சியற்ற வாழ்க்கையையும், அவர்கள் செய்கின்ற அட்டூழியங்களையும் செய்தித் தாட்களும், இதர உலகப்பிரகாரமான சஞ்சிகைகளும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்றன. நானாவித தொலைக்காட்சி சானல்கள் அந்தச் செய்திகளை தங்கள் சின்னத்திரையில் இராப் பகலாக மக்களுக்கு திரையிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
கழுத்தில் பெரிய சிலுவையை தொங்கவிட்ட நிலையில் திருச்சபை தலைவர் ஒருவரை போலீஸ் காவலர்கள் பல கோடி ஊழல் விசாரணைக்காக காவல் நிலையம் கூட்டிச்செல்லுவதை தினசரி செய்தித்தாட்கள் பெரிய முகப்புப் படம் போட்டு கேவலப்படுத்தி சித்தரிப்பதை நாம் துயரத்துடன் காண்கின்றோம்.
தன்னுடைய பள்ளி நிறுவனத்தின் சின்னஞ் சிறிய சிறுமிகளுடன் தவறான பாலியல் உறவு கொண்ட காரணத்திற்காக பெரிய பள்ளி நிறுவனங்களின் கிறிஸ்தவ உரிமையாளரான கிழவர் ஒருவரை கையில் விலங்கிட்டு பட்டணத்தின் வீதி வழியாக காவலர்கள் காவல் நிலையம் அழைத்துச் செல்லும் தலை குனிவுக் காட்சிகளை செய்தித்தாட்கள் வெளியிட்டு கிறிஸ்தவ மார்க்கம் எத்தனை வெறுக்கத்தக்கதான மார்க்கம் என்பதை வெளி உலகுக்குக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.
அன்பின் ஆண்டவர் இயேசுவை தன் சொந்த இரட்சகராக தனது குழந்தைப் பருவத்தில் ஏற்று தன்னுடன் படிக்கும் தனது சிறிய சக மாணவத் தோழிகளுக்கும் தான் தனது இருதயத்தில் பெற்ற தன் இரட்சிப்பின் ஆனந்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள முயன்றபோது அந்த சின்னத் தோழிகளில் ஒருத்தி சுருக்கென்று கொடுத்த பதில் இதுவேதான் "உன்னுடைய கிறிஸ்தவ பிஷப்பை செய்தி தாளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தாயா? உன்னுடைய இயேசு எங்களுக்கு வேண்டாம்" என்பதே.
ஜீவனுள்ள தேவனுடைய மாட்சிமையான பரிசுத்த நாமம் இந்த அளவிற்கு மக்களால் தூஷிக்கப்பட ஒரே காரணம் பொல்லாங்கனாம் பிசாசு அதைச் செய்தான் என்பதுதான். தேவனுடைய ஜனத்துக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், பரிசுத்தத்தையும் ஆண்டவருடைய கட்டளையின்படி கண்ணீரோடும், ஆத்தும பாரத்தோடும் பிரசங்கித்து ஒரு கூட்டம் பரிசுத்த ஜனத்தை ஆண்டவருக்கு ஆயத்தப்படுத்த வேண்டிய தேவ ஊழியன் சாத்தானாம் பிசாசின் தந்திர ஆலோசனையின்படி நிலையில்லா சரீர சுகத்தையும், தங்களுக்குச் செட்டைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து செல்லும் நிலையில்லா உலக ஐசுவரியத்தின் கவர்ச்சியையும், மாயாபுரி சந்தை சரக்குகளையும் தாரை, தப்பட்டை அடித்து பிரசங்கிப்பதுதான்.
"ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு சின்ன இயேசுவாக மாறிவிட்டால் இந்தியாவை துரிதமாக ஆண்டவர் இயேசுவுக்குக் கொண்டு வந்துவிடலாம்" என்று கூறிய நம் தேசத் தந்தை காந்தி அடிகளுக்கு இருந்த அந்த தரிசனம் அடிக்கடி பரலோகம் சென்று ஆண்டவர் இயேசுவையும் அவரது அடியார்களையும் முகமுகமாக சந்தித்து, தரிசித்து, அவர்களுடன் அளவளாவி வருவதாகக் கூறிக் கொள்ளும் நம்மிடையே உள்ள ஆசீர்வாதப் பிரசங்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது.
பாவத்தைக் கண்டித்து உணர்த்திப் பிரசங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் உலக வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும் இரகசியத்தை தேவ ஜனத்துக்குக் காண்பிக்க விரும்புகின்றான். ஆண்டவர் இயேசுவை உண்மையாகவே இந்த உலகத்தில் பின்பற்றிச் செல்லும் அவரது அடியார்கள் அனைவர்களுக்குள்ள சிலுவைப்பாதையையும், பாடுகளையும், கண்ணீர்களையும் பிரசங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் கர்த்தருடைய ஜனம் இந்த உலகத்தில் செல்வ செழிப்பில் மிதந்து வாழ்ந்து, நூறாண்டு காலம் நோய் நொடியின்றி இருக்கப் போவதான சுகபோக வாழ்வுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாக திகழ்கின்றனர்.
தரித்திரராக (2 கொரி 6 : 10) இருந்து தரித்திரருக்கு (மத் 11 : 5) சுவிசேஷத்தை பிரசிங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் யாரும் அருகில் நெருங்க முடியாத கோடீஸ்வரர்களாக இருந்து கர்த்தருடைய ஜனத்துக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் பிரசங்கிப்பதற்குப் பதிலாக சரீர சுகம், செல்வம், செழிப்பு குறித்துப் பேசுகின்றான். "மிகவும் சந்தோசமாய் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணவும், செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்"(2 கொரி 12 : 15) என்றார் பரிசுத்த பவுல் அப்போஸ்தலன்.
ஆனால், இன்றைய கோடீஸ்வர ஊழியர் ஒரு கிறிஸ்தவனின் குழந்தைப் பருவத்திலிருந்து அதாவது "இளம் பாலகர்" திட்டத்திலிருந்து அவன் விருத்தாப்பியனாகி சாகும் காலம் வரை அதாவது "கிழவர் மரண கால ஆசீர்வாத திட்டம்" வரை பற்பலவிதமான பண வசூல் திட்டங்களை தந்திரமாக வடிவமைத்து தேவ ஜனத்தின் பணத்தை பசு மாட்டின் பால் மடுக்களில் வெண்ணெயைத் தடவி அதின் கன்று குட்டி குடிக்கக் கூட பாலின்றி ஒட்டறக் கறந்து விடுவது போல அவர்களின் பணங்களை கறந்து எடுத்து தங்களுடைய உலக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுகின்றனர். பாவம், இந்த தேவப் பகைஞர் மற்றவர்களைவிட தங்களைப் புத்திசாலிகளென்று எண்ணிக் கொள்ளுகின்றனர். "கண்ணை உருவாக்கினவர் காணாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ" (சங் 94 : 9 - 10) என்று வேதம் இவர்களைப் பார்த்துக் கேட்கின்றது.
இந்த புத்திசாலித்தனமான தேவ ஊழியர்களுக்காக நாம் உள்ளம் உருகி பரிதபிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தை, ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் மாறாத தேவ வார்த்தை அவர்களை இப்படியாக எச்சரித்துச் சொல்லுகின்றது "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான், ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்" (கலா 6 : "நீ கொள்ளையிட்டு முடிந்த பின்பு கொள்ளையிடப்படுவாய், நீ துரோகம் பண்ணித் தீர்ந்த பின்பு உனக்குத் துரோகம் பண்ணுவார்கள்" (ஏசாயா 33 : 1) "கர்த்தர் பார்க்க மாட்டார் என்று சொல்லுகிறார்கள். ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கம் செய்வதுமில்லை, அவர்களுடைய வழியில் பலனை அவர்கள் சிரசின் மேல் இரங்கப்பண்ணுவேன்" (எசே 9 : 9 - 10) இந்த தேவ வார்த்தைகள் எல்லாம் சற்று கால தாமதம் ஆனாலும் நிச்சயமாக அப்படியே நிறைவேறியே தீரும்.
நன்றி: தேவ எக்காளம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum