உங்களுக்கு குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்
Wed Mar 25, 2015 11:03 am
அவருடைய (கர்த்தருடைய) வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன். அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. யோபு 23: 12, 13, 14
1. கர்த்தருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்:
சுவையான இனிப்பு ஆகாரங்களை மட்டுமே நாம் சாப்பிடுவோம் என்றால் நமது வயிற்றினுள் தேவை இல்லாத கிருமிகள் வளர்ந்துவிடும். அவ்வப்போது நாம் கசப்பான பாகற்காயை சாப்பிடுவோம். கசப்பான பாகற்காயை சாப்பிடும் எந்த மனிதனும், இந்த காய் தனது உடல்நலத்திற்கு நல்லது என்று சொல்லிக்கொண்டே சாப்பிடுவான். அதுபோலத்தான் யோபுவும், கர்த்தர் தமது வாழ்க்கையில் அனுமதித்த கசப்பான மருந்த தமது எதிர்காலத்தை செழிப்பாக்கும் என்று அறிந்து இந்த வார்த்தையை சொல்கிறார்.
2. கர்த்தரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார். அவரைத் திருப்பத்தக்கவர் யார்?. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளுக்கு எந்த நேரத்தில் எந்த உணவைக் கொடுக்க வேண்டுமென நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். பெற்றோர்கள் நல்ல சுவையான உணவுகளை கொடுக்கும் பொழுது மகிழும் குழந்தைகள், கசப்பான மருந்துகளை கொடுக்கும்பொழுதோ கதறி அழுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் அழுதாலும் பரவாயில்லை என்று சொல்லி பெற்றோர்கள் அந்த மருந்தை கொடுப்பார்கள். குழந்தை அழுகின்றதே என்று சொல்லி பெற்றோர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறமாட்டார்கள். முதலில் முரண்டு பிடிக்கும் குழந்தையானது, தாய் தனது நிலையில் இருந்து தளரப்போவது இல்லை என்று நாளடைவில் அறிந்து கொள்ளும். குழந்தைக்கு விவரம் தெரியும் வயது வந்தவுடன், பெற்றோர் கொடுத்த கசப்பான மருந்து நல்லதிற்கு தான் என அறிந்து கொள்வார்கள்.
தேவனும் கூட ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், தித்திக்கும் உணவு போன்ற இன்பமான நேரங்களையும், கசப்பான மருந்து போன்ற துன்பமான சமயங்களையும் அனுமதிகின்றார். நாம் வேண்டாம் என்று அழுது அடம்பிடித்தாலும், அந்த மருந்தை நமக்கு நிச்சயமாக கொடுப்பார். தேவனுடைய ஒரே நோக்கம், நாம் அந்த கசப்பான மருந்தை உண்டு எதிர்காலத்தில் சுகமுடன் வாழ வேண்டுமென்பதே. இதை அறிந்த யோபு சொல்கிறார், கர்த்தரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்?. அவர் ஒரு மனிதனுக்கு கசப்பான மருந்து போன்ற துன்பமான சமயங்களை அனுமதித்து விட்டால், அவர் அதை ஒரே மனதோடு செய்வார். யாரும் அவரை வேறு காரியத்திற்கு நேராய் திருப்பமுடியாது என்று சொல்கிறார்.
3. எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு:
இப்படியாய் கசப்பான மருந்து போன்ற அனுபத்தில் நுழைந்து சென்ற யோபுவிற்கு ஒரு நம்பிக்கை துளிர்க்கின்றது. என்னுடைய எதிர்காலத்தின் நன்மைக்கு தேவையான பல காரியங்களை அவர் முன்குறித்து இந்த கசப்பின் அனுபவத்தில் நடத்தியுள்ளார். நிச்சயமாக எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு என்று விசுவாச அறிக்கையிடுகிறார் யோபு. இந்த கர்த்தருடைய செய்தியை வாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் ஒருவேளை, கண்ணீரின பாதையில், கஷ்டத்தின் மத்தியில், கசப்பான மருந்தை உண்பது போன்ற வேதனையான சூழ்நிலைக்குள்ளதாக கடந்து செல்லலாம்.
உங்களுடைய எதிர்காலத்தில், நீங்கள் சுகமுடன் வாழ பல நன்மையான காரியங்களை கர்த்தர் உங்களுக்காக முன்குறித்துள்ளர். “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரேமியா 29:11). கர்த்தர் “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும்” (யோபு 9:1௦) செய்ய வல்லவராயிருக்கின்றார் என்று விசுவாசத்தோடு தனக்காகவும் நண்பர்களுக்காவும் ஜெபித்து, கர்த்தர் தனக்கு குறித்திருந்த இரட்டிப்பான நன்மைகளை பெற்றுக்கொண்டார் யோபு. இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, தேவன் ஒரு அறுவடையை உங்களுக்கென முன்குறித்துள்ளார். குடும்பத்தில், வேலையில், சரீரத்தில் பல நன்மையான காரியங்களை எதிர்பார்த்துள்ளீர்களா? நிச்சயமாய் ஒரு விடுதலையை கர்த்தர் உங்களுக்கென முன்குறித்துள்ளார். ஜெபித்தோடு, உங்கள் வேலைகளை துவங்குங்கள். கர்த்தர் உங்களுக்கு குறித்திருக்கிறதை நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum