கிறிஸ்தவ தேவாலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல், பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Sun Mar 15, 2015 10:44 pm
லாகூர்,
பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூர் அருகே உள்ளது யுஹானாபாத். இங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்திலும், ஏசு கிறிஸ்து தேவாலயத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். -அப்போது தலீபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 2 பேர் இந்த தேவாலயங்களை குறி வைத்து வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 6 பேர் உடல் சிதறி பலியானார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியது.
பெண்கள், குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாகூர் ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடித்ததும் பீதி அடைந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓடினர். இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான ஒரு வாலிபரை ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் அடித்துக்கொன்றது. பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்தது. இதற்கிடையே காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும், சிலர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 80 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum