தாழ்வு மனப்பான்மை நீங்க...
Sat Mar 02, 2013 5:07 am
ஒரு
கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத்
தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக்
கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை
வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும்
தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும்
வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப்
பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே
இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும்
தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப்
பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி
செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா?
நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக்
கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும்.
அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும்
சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை
அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை
விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட பானை கேவலமாக
உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன்
வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
வேதத்திலும் இதுபோன்ற ஒரு
சம்பவம் உண்டு. கோலியாத்தை வென்று வீழ்த்தும் முன் தாவீதும்பரிகாசங்களை
சகிக்க வேண்டி இருந்தது. அதுவும் சொந்த சகோதரனிடமிருந்து. தாவீதின்
சகோதரனாகிய எலியாப் அவனை இவ்வாறு ஏளனம் செய்தான்,
"நீ இங்கே
வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில்
விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன்
இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்." (1 சாமு 17:28)
ஆனால், தாவீதோ தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுக்காமல், "கர்த்தர்
பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த
ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை
எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்."
தேவன் என் பட்சத்தில் இருக்கும் போது நான் தாழ்ந்தவன் அல்ல என்ற புரிந்து கொள்ளுதல் அவனுக்கு வெற்றி கனியை எட்டச் செய்ததது.
இனி உங்களை எத்தனை பேர் பரிகசித்தாலும் நீங்கள் தாவீதை போல இருப்பீங்களா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum