ஆவிக்குரிய தலைவர்கள் திடீரென விழுந்து போவது ஏன்?
Fri Sep 13, 2013 10:22 pm
பெரிய ஆவிக்குரிய தலைவர்கள், பரிசுத்தவான்கள் என்று கருதப்பட்டவர்கள் கூட திடீரென விழுந்து போவது ஏன்?
மிகப் பெரிய தேவ மனிதர்கள் பலரின் திடீர் விழுகை உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. "இப்படிபட்ட ஒரு பெரிய தேவ மனிதன் எப்படி விழக்கூடும்?" என்பதே நம்மை குழப்பமடையச் செய்யும் கேள்வியாயிருக்கிறது.இதற்கான பதில் தனித்தன்மை வாய்ந்தது.
ஒரு மனிதனின் ஆவிக்குரிய பெலன் அவனுடைய மனதின் பெலனைப் பொறுத்ததாகவும், அவனுடைய மனப் பெலத்துடன் நேரடியாக சம்பந்தமுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு நபர் ஊக்கமான ஜெப வீரராகவும் வல்லமையான அற்புதங்களைச் செய்கிறவராகவும் அக்கினிமயமான எழுப்புதலை கொண்டு வருகிறவராகவும், ஆத்துமாவை ஊடுருவிச் செல்லுகிற ஆவிக்குரிய செய்திகளை அளிப்பவராகவும், ஆவிக்குரிய பிரகாரமாக பல தாலந்துகளை உடையவராகவும் இருக்கக் கூடும். ஆனால் அவர் தன்னுடைய மனதை அடக்கி ஆள்க் கற்றிராத பட்சத்தில், சந்தர்ப்பம் எழும்போது அவர் விழுந்து போக ஏதுவுண்டு. ஆகவே உண்மையில் மனதுதான் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ''தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்"( நீதி.25:28) என்று வேத வாக்கியம் கூறுகிறது.
இயல்பாக நம்மிலுள்ள திறன்கள் அனைத்தும் நம் மனதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாம் எவ்விதம் இருக்கிறோம் என்பதையும் நம்முடைய மனநிலையே தீர்மானிக்கிறது. இவ்வாறிருக்கிற படியினால் நம்முடைய மனதைக் கைப்பற்றிக் கொள்ள சாத்தான் ஊக்கத்துடனும் விடாப்பிடியாகவும் பிரயாசப்படுகிறான் என்பதில் ஆச்சரியப் படுவதற்கொன்றுமில்லையே! தனக்கொப்புவிக்கப் பட்டிருக்கிற மந்டைக்கு உண்மையான மேய்ப்பனாகத் திகழ்ந்த அப்.பவுல், "சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப் படுமோவென்று பயந்திருக்கிறேன்" (2கொரி.11:3)என்று கூறுகிறார்.
ஒரு தேவ மனிதன் விழுந்து போவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே அவருடைய மனதில் விழுகை சம்பவித்திருக்க வேண்டும் - உலகிலுள்ள ஒருவருமே அதை அறியாதிருக்கக் கூடும். பிரகாசிக்கிற பரிசுத்தவான்கள் ஆகாயமண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் பொல இருக்கிறார்கள் என்று தேவ வசனம் கூறுகிறது (தானி.12:3). நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளன என்று நாம் அறிவோம். அவற்றின் ஒளி பூமியை வந்தெட்டுவதற்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஒளி ஆண்டுகள் ஆகும்(ஒளியின் திசை வேகம் 300000 கி.மீ/வினாடி). ஒரு நட்சத்திரம் பூமியிலிருந்து 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்குமாயின், நான்கு வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரம் கொடுத்த ஒளியானது இப்பொழுதுதான் பூமிக்கு வந்து சேரும். பிரகாசிக்கிற பரிசுத்தவான்களும் அவைகளைப் போன்றவர்களே.
இன்று வல்லமையாக பிரகாசித்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய பரிசுத்தவான் நான்கு வருடங்களுக்கு முன்பே கிருபையினின்று விழுந்து போயிருக்கக் கூடும். ஒரு நட்சத்திரம் 4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பது போல, அவர் ஆவிக்குரிய பிரகாரமாக ஆகாய மண்டலங்களில் அவ்வளவு உயரமான இடத்தில் இருந்தபடியால், அவருடைய ஒளியை நாம் இன்று காண்கிறோம்.ஆனால் நாளைய தினம் திடீரென்று அந்த ஒளி மறைந்து விடுகிறது. ஒரு நட்சத்திரம் நான்கு ஒளியாண்டுகளுக்கு முன் ஒளியிழந்து, கறுத்து போயிறுக்கக் கூடும். ஆனால் இன்று (அதாவது நான்கு ஆண்டுகள் கழித்து) இப்பூமியில் வசிக்கும் ஒருவரும் அதை அறியாமலிருக்கலாம். இன்றுவரை அதின் ஒளி பூமியை வந்தெட்டிக் கொண்டுதான் இருந்திருக்கும்! ஒரு தேவ மனுதன் விழும் போது ஜனங்கள்" அந்த பெரிய ஆவிக்குரிய தலைவருக்கு திடீரென்று என்ன சம்பவித்தது?" என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறார்கள். நிச்சயமாக அது ஒரு திடீர் வீழ்ச்சி அல்ல. ஒரு தேவ மனிதன் விழுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அவருடைய மனதில் விழுகை சம்பவித்திருக்கும். இது சரித்திரப் பூர்வமாகவும் இன்று நடைமுறையிலும் மெய்யானதாகவே இருக்கிறது. ஆவிக்குரிய தலைவர்கள் என்று அறியப்பட்டிருந்து, பின்பு கிருபையினின்று விழுந்துபோன பலரும் வெகு காலத்துக்கு முன்னரே தங்கள் வாழ்க்கையில் ஒரு இரகசியமான விழுகை சம்பவித்திருந்தது என்பதைத் தங்களுக்கு வெளியரங்கமான விழுகை சம்பவித்த பின்னர் தெரிவித்திருக்கின்றனர்.
வல்லமையாக பயன்படுத்தப் படும் தேவ மனிதர்கள் சிலருக்கு ஏற்படும் அபாயம்
என்னவெனில், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுசிறு தவறுகளுண்டாகும் போது அவறுக்காக சரியாக மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பி அவற்றை அறிக்கை செய்து விட்டு விடாமல், அவற்றை மறைக்க முனைந்து தாங்கள் மேன்மை பொருந்திய தேவ மனிதர் என்றும், ஆதலால் மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்வதும் மனந்திரும்புவதும் தங்கள் கௌரவத்திற்கு தாழ்வானது என்று நினைப்பதேயாகும். அதைத் தொடர்ந்து, தவறான நோக்கத்தோடு ஒருவரைத் தொடுதல், அருவருக்கத்தக்க படங்களை ஒரு நிமிடம் பார்த்தல் போன்ற இன்னுமதிகமான சிறிய இரகசிய பாவங்கள் அவர்களுடைய வாழ்க்கயைப் பற்றி பிடித்துக் கொள்கின்றன. இவை ஆரம்பத்தில் ஒரு நபரின் ஊழியத்தை உடனடியாக பாதிக்காமலிருக்கலாம். ஆனால் இவை பிற்பாடு அவனவனுடைய வாழ்க்கையையும் ஊழியத்தையும் அழித்து விடும்.
ஒரு நபர் மீது நீங்கள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாம்; அது அவரை கொன்று போடுவதில்லை. நீங்கல் அவர் மீது கொஞ்சம் வைக்கோலை வீசலாம்; அதுவுங்கூட அவரைக் கொல்லாது. அவர் மீது கொஞ்சம் மணலை நீங்கள் எறியக் கூடும்; அதுவுங்கூட அவரை கொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் மணலையும், வைக்கோலையும், தண்ணீரையும் ஒன்றாக உபயோகித்து ஒரு செங்கல் செய்து,அதை ஒரு நபரின் மீது எறிந்தால், அது அவரை கொன்று போடக் கூடும். நம்முடைய மிகச் சிறிய, சொற்பமான இரகசிய பாவங்களும் அப்படியே இருக்கின்றன. நாம் கவனமாயிருப்போமாக!
களங்கமற்றது போல் தொனிக்கும் சாத்தானின் சத்தத்தை நாம் சந்தேகப் படாமல் கேட்க ஆரம்பிக்கும்போது, அவன் நம்முடைய வாழ்க்கையில் புக, அடியெடுத்து வைக்க நாம் இடமளிக்கிறோம். அவன் முதலாவது நம்மை வஞ்சித்து, பின்பு நம்முடைய மனதைக் கெடுத்து, தீட்டுப் படுத்தி, முடிவாக அதைக் குருடாக்குகிறான்(2கொரி.4:4). அதற்குப் பின் நாம் எந்தவொரு பாவத்தையும் செய்ய தைரியமுள்ளவர்களாகிறோம். இதுவே கபடமற்ற ஏவாளுக்கு அவன் வைத்த கண்ணியாகும். விலக்கப் பட்ட விருட்சத்தின் கனி உண்மையிலேயே புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமானதும், அவளுடைய புத்தியை தெளிவிக்கிறதுமான ஒன்று என்று சிந்திக்கும் வகையில் அவள் முதலாவது வஞ்சிக்கப்பட்டாள்(ஆதி.3:6). பின்பு, தங்களை நேசித்து, தங்களோடு ஒவ்வொரு நாளும் நடந்து சம்பாஷித்து வந்த தேவன் தங்களுக்கு நல்லதும் விரும்பப் படத்தக்கதுமான ஏதோ ஒன்றை வேண்டுமென்றே கொடாமல் விலக்கிவைத்துக் கொண்டதாக எளிதாக நம்பும் படி அவள் வழி நடத்தப் பட்டாள். தன் தேவன் மே அவள் கொண்டிருந்த மாயமற்ற அன்பு போய்விட்டது- அவளுடைய மனது கெடுக்கப் பட்டு விட்டது. அதற்குப் பின், கனியைப் புசிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட நேரடியான கீழ்ப்படியாமையினால் உண்டாகக் கூடிய பின்விளைவுகளைக் குறித்து அவள் பயப்படவில்லை. அந்த அளவுக்கு அவளுடைய மனது குருடாக்கப் பட்டிருந்தது.
நாம் இப்பட்ப்பட்ட மன நிலையை அடையும் போது, எவ்வளவதிகமான ஆலோசனைகளும், ஊக்குவிப்புகளும், புத்திமதிகளும், சிட்சைகளும் அளிக்கப்பட்டாலும் அவற்றுள் யாதொன்றினாலும் நம்முடைய உணர்ச்சியற்ற, மரத்துப் போன நிலையினின்று நம்மை தூக்கியெடுக்க முடியாது; நம்முடைய அன்புள்ள கர்த்தரால் நமக்கென்று ஆயத்தமாக்கப் பட்டுள்ள மகிமையானவைகளோ அல்லது முரட்டாட்டம்பண்ணுகிறவர்களுக்காக வைக்கப் பட்டுள்ள வரப் போகும் நியாயத்தீர்ப்பையோ நம்மால் காணக் கூடாமற் போகக்கூடும்.
இந்தக் கட்டுரை விழுந்து போனவர்களுக்கு மட்டுமல்ல, இதை வாசிக்கிறவர்களுக்கும் கூட ஒரு எச்சரிக்கையாக இருக்கக் கூடும்.
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
நன்றி: தமிழ் கிறிஸ்டியன்ஸ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum