ரெயில் பயணிகளுக்கு 92 காசு செலவில் இன்சூரன்ஸ் வசதி ரூ.10 லட்சம் வரை இழப்பீடு
Sat Aug 27, 2016 11:43 am
புதுடெல்லி,
ரெயில் பயணிகளுக்கு 92 காசுகளில் இன்சூரன்ஸ் வசதி 31–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் ரெயில் பயணத்தின்போது விபத்து அல்லது அசம்பாவித சம்பவங்களில் உயிர் இழக்க நேர்ந்தால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.
92 காசுகளில் இன்சூரன்ஸ்
ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட் தாக்கலின்போது, ரெயில் பயணிகளுக்கு தேசிய பயண இன்சூரன்ஸ் திட்டத்தை ரெயில்வே அறிமுகப்படுத்தும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டம் 31–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஒருவர் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவருக்கு 92 காசு பிரீமியத்தில் பயண இன்சூரன்ஸ் வசதி கிடைக்கும். புறநகர் ரெயில்கள் தவிர மற்ற அனைத்து ரெயில்களிலும் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்த புதிய திட்டம் பொருந்தும். இது சோதனை முயற்சியில் தொடங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் இழப்பீடு
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், வெளிநாட்டினர் ஆகியோருக்கு இது பொருந்தாது. பயணம் உறுதியான (கன்பார்ம்), ஆர்.ஏ.சி., மற்றும் காத்திருப்போர் பட்டியல் ஆகிய எந்த டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கும் இது பொருந்தும். ரெயில் விபத்து, தீவிரவாதிகள் தாக்குதல், கொள்ளை, வன்முறை, துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்படும் ரெயில் பயணிகள், அவர்களது கணவன் அல்லது மனைவி, வாரிசுகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும்.
இந்த சம்பவங்களில் பயணிகள் உயிரிழந்தாலோ அல்லது முழுமையாக செயல் இழந்தாலோ ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். பகுதியாக செயல் இழந்தால் ரூ.7.5 லட்சம், மருத்துவமனை செலவுகளுக்கு ரூ.2 லட்சம், இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல போக்குவரத்து செலவு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும்.
3 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
டிக்கெட் முன்பதிவு செய்த பின்னர் டிக்கெட்டை ரத்து செய்தால் இந்த பிரீமிய தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது. ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. லாம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. ஏலம் மூலம் இந்த 3 நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏலத்தில் மொத்தம் 19 நிறுவனங்கள் விண்ணப்பித்ததில் 17 நிறுவனங்கள் தகுதி உடையதாக இருந்தன.
இந்த 3 நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை தானியங்கி சுழற்சி முறையில் வழங்கும். ஐ.ஆர்.சி.டி.சி. இந்த நிறுவனங்களை ஒரு வருடத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அவைகளின் செயல்பாட்டின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
- சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை
- கல்விக் கடனுக்காக மாணவியின் படத்தை ஒட்டிய விவகாரம்: ரூ 1 லட்சம் இழப்பீடு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
- எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?
- வீட்டுக்கு சாதாரண இன்சூரன்ஸ்
- உஷாரா இருங்க !! இன்சூரன்ஸ் மோசடி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum