“ஜாயிண்ட் அக்கவுண்ட் போல?’’ - உஷாரான வாழ்விற்கு
Wed Aug 10, 2016 8:59 am
உயிலே.. உயிலே..
வள்ளல் சீதக்காதி கதை தெரிந்திருக்கலாம். இல்லை என்று சொல்லாத கொடைவள்ளல். ஒரு புலவர், சீதக்காதியிடம் வழக்கமாக பரிசுகள் வாங்கி பலனடைந்தவர். நொடிந்துபோன நிலையில், சீதக்காதியைப் பார்த்து பணம் வாங்குவதற்காக நம்பிக்கையுடன் வருகிறார். ஆனால் அவர் கேள்விப்பட்ட தகவலோ வேறுமாதிரியாக இருந்தது. “சீதக்காதி மரணம் அடைந்துவிட்டான்.” புலவருக்கு அதிர்ச்சி. புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்கு ஓடுகிறார். சமாதியைப் பார்த்துக் கதறுகிறார், “எப்போதும் கொடுப்பாயே. போய்விட்டாயே. உன்னை நம்பி வந்தேனே. பணம் வேண்டுமே ! எங்கே போவேன்? யாரிடம் கேட்பேன்?”
அழுது புலம்புகிறார். நிமிர்ந்த அவர் கண்ணில் பட்டதை அவரால் நம்பமுடியவில்லை. அட! சீதக்காதியின் ஒரு கை வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. பிரிந்திருந்த விரல் ஒன்றில், பளபளக்கும் தங்க மோதிரம்! “வா. இதை நீ எடுத்துப் போ’’ என்று சீதக்காதி சொல்லுவது போல இருக்கிறது. எடுத்துக்கொண்ட சந்தோஷத்தில் பாடினார், “..செத்தும் கொடுத்தான் சீதக்காதி.’’
சீதக்காதி போன்ற பலர் இறந்த பிறகும் கொடுக்க, வேறுசிலரோ, தெரிந்தோ தெரியாமலோ, ‘செத்தும் கெடுப்பார்கள்.’
வித்தியாசத்தினை கவனித்திருக்கலாம். கொடுக்காதது மட்டுமில்லை மேற்கொண்டு கெடுப்பார்கள், சென்ற அத்தியாயத்தில் பார்த்த ராம்பாபு போல. பெற்றவர்களின் சிதறிக்கிடக்கும் சொத்துக்களை சேகரிக்கவும், பெறுவதற்காகவுமே தங்களின் முழுநேர வேலை அல்லது செய்துகொண்டிருந்த தொழிலை கவனிக்க முடியாமல் விட்டவர்கள் உண்டு.
வாழ்நாள் எல்லாம் சிரமப்பட்டு சேர்கிற பணம், சிந்தாமல் சிதறாமல் வாரிசுகளுக்கு போய்ச் சேர வேண்டும்.
பணம் சம்பாதிப்பதும் அதனை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம்தான் அதற்கு வாரிசுகள் நியமிப்பதும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை நாள் ஆகக்கூடிய வேலை. அதைச் சரியாக செய்யாவிட்டால், பணமும் சொத்தும் உரியவர்களுக்கு வந்துசேர பலவருடங்கள் கூட ஆகலாம்.
“என்ன செய்ய வேண்டும்? எதோ சுலபமான வழி இருக்கிறதென்று சொன்னதாக ஞாபகம்.’’
“எல்லா கணக்குகளிலும் கணவன் _ மனைவி இருவர் பெயர்களையும் போட வேண்டும்.’’
“ஜாயிண்ட் அக்கவுண்ட் போல?’’
“ஆமாம். சில இடங்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட். வேறு சில இடங்களில் ‘இருவரில், இருப்பவர் எவரோ அவர்’ என்கிற வகையில் ஆரம்பிக்கப்படுகிற ‘எய்தர் ஆர் சர்வைவர்’ (Either Or Survivor). சுருக்கமாக E or S. கணக்குகள்.’’
“இதனால் என்ன பலன்?’’
“இருவர் பெயர்களிலும் கணக்கு இருப்பதால், அந்த வங்கிக் கணக்கிலோ அல்லது பிக்செட் டிப்பாசிட்டிலோ அல்லது வேறு கணக்கிலோ இருக்கும் பணத்திற்கு இருவருமே சொந்தம். ஒருவருக்கு ஏதும் ஆகிவிட்டால், மற்றொருவருக்கு அந்தத் தொகை சுலபமாக கிடைக்கும். சிக்கல் ஏதுமில்லை.
பங்குகள் வாங்கினாலும் இப்படி இருவர் பெயர்களில் வாங்கலாம். அதில் ‘ஃபர்ஸ்ட் ஹோல்டர்’, ‘செகண்ட் ஹோல்டர்’ என்று பெயர் போடுவார்கள். பங்குகளை வைத்திருக்கும் டி.பி கணக்குகளுக்கும் இது பொருந்தும்.’’
“கணக்கு வைத்திருப்பவருக்கு ஏதும் ஆகிவிட்டால் என்கிற சூழ்நிலைக்கு இது சரிதான். ஆனால் அதற்கு முன்?’’
“வட்டி, டிவிடெண்ட், போனஸ் , தகவல்கள் எல்லாம் முதல் ஹோல்டருக்குத்தான் வரும். இரண்டாவது ஹோல்டர் என்பவர் பெயருக்குத்தான்.’’
‘இப்படி மனைவி பெயரில் மட்டும்தான் செய்ய முடியுமா?’’
“பிள்ளைகள் பெயரிலும் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், ஒரே கணக்கிலும் அப்படிச் செய்யலாம். அல்லது, தனித்தனி கணக்குகள் திறந்து, ஒவ்வொன்றில் ஒவ்வொருவர் பெயரினை ஜாயிண்ட் ஹோல்டராகப் போடலாம். ஒரு கணக்கில் அப்பாவும் மனைவியும். இரண்டாவதில் அப்பாவும் முதல் மகனும் என்பதுபோல.’’
“எவர் பெயருக்குப் போடுகிறோமோ, அவருக்குத் தெரியாமலேயே போடமுடியுமா?’’
“தெரியாமல் போட முடியாது. காரணம், அவரும் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட வேண்டும். ஆமாம், ஏன் அவருக்குத் தெரியாமல் அவர் பெயரில் போட வேண்டும்?’’
“தெரிந்தால் இப்போதே கொடுங்கள் என்பார்களே! ஏதும் ஆன பிறகு அவர்களுக்குத்தான். எடுத்துக்கொள்ளட்டும். இப்போதே எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியுமா?’’
“அதுவும் சரிதான். அப்படி எல்லாவற்றையும் கொடுக்கவும் தேவையில்லை.’’
“யாருக்கு நாமினேஷன் இருக்கிறதோ அவருக்குத்தானா எல்லாம்?’’
“இல்லை. சட்டப்படி பார்த்தால், ‘நாமினி’ யாக நியமனம் செய்யப்பட்டவர், அந்தக் குறிப்பிட்ட பணத்தினை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே உரிமை உள்ளவர். பெற்ற பணத்தினை அவர், எல்லா வாரிசுகளுக்கும் பிரித்துக்கொடுக்கத்தான் வேண்டும்.’’
“என்ன விகிதத்தில் பிரிப்பது?’’
“சொத்துக்கு உரிமையாளர் விரும்பியபடி பிரிக்கலாம். அவருடைய விருப்பத்தினை அவர் உயில் எழுதிவைத்து தெரிவித்திருக்க வேண்டும்.’’
“உயிலா..?’’
“இருக்கும் போதே, கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஓரளவு சொத்துகளையும் பணத்தினையும் பிரித்துக்கொடுக்கலாம். வாரிசுதாரர்களுக்குக் கொடுக்கும் பணத்திற்கு , கொடுப்பவர் வாங்குபவர் இருவருக்குமே வரி கிடையாது.
இருக்கும்போது முடியாது, அல்லது வேண்டாம் என்று நினைத்தால், தங்கள் காலத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளட்டும் என்று திட்டமிட்டால், யார் யாருக்கு எவ்வளவு என்பதைத் தெளிவாகவே எழுதிவைத்துவிடலாம். சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இப்படி ஒருவர் எழுதி கையெழுத்துப் போட்டு வைப்பதுதான் உயில்.’’
“உயில் எப்படி, எதில் எழுதுவது?’’
“உயில் என்பதை சாதாரண பேப்பரில் எழுதினால்கூட போதும். அதனை பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனாலும் உயிலுக்கு என்று சில அடைப்படைத் தேவைகள் இருக்கின்றன. ஒருவர் தன்னுடைய சொத்துக்களுக்குத்தான் உயில் எழுத வேண்டும் (அட இது நல்லா இருக்கே!) உதாரணத்திற்கு, மனைவி பெயரில் இருப்பதற்கு , மனைவிதான் உயில் எழுதமுடியும்.
எழுதியவர், சுயநினைவுடனும், எவர் தூண்டுதல் இன்றியும், உடல் நலமாகயிருக்கையிலும் எழுதியதாக குறிப்பிட்டு, கையெழுத்திட வேண்டும். அவர் அப்படி கையெழுத்துப் போடும்போது, இன்னும் இருவர் சாட்சிக் கையெழுத்துகள் போடவேண்டும். சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயில் மூலம் பலன் பெறுபவர்களாக இருக்கக் கூடாது. வேறு நபர்களாகத்தான் இருக்க வேண்டும்.
மனைவி பிள்ளைகளுக்குத்தான் எழுத வேண்டும் என்பதில்லை. மற்றவர்களுக்கும் ஏன் தர்மத்துக்கும் கூட சொத்துக்களை எழுதலாம். அதே உயிலில், எவர் அந்த உயிலினை நடைமுறைப்படுத்த வேண்டும் ( எக்ஸிகூட்டர்) என்றும் குறிப்பிடலாம். அவர் வக்கீலாகவோ அல்லது வேறு எவருமாகவோ இருக்கலாம். அப்படி எவரையும் நியமிக்காமலும் விடலாம்.
எழுதிய உயிலைப் பற்றி எவருக்கும் தெரிவிக்காமலே தானே வைத்திருக்கலாம். அல்லது உயிலை ஒரு சொத்துக்கள் பதிவு செய்யும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் சிறிய கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம் ( ஸ்டாம்ப் டூட்டி அளவு அதிகமில்லை). பதிவு செய்வது மட்டுமில்லை. தேவையானால் அதனை அதே அலுவலகத்தில் டிப்பாசிட்டும் செய்யலாம்.’’
“உயில் எழுதி சில வருடங்கள் ஆகிவிட்டது. அதில் மாற்றங்கள் செய்ய நினைத்தால் செய்ய முடியுமா?’’
“தாராளமாக. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிய உயிலினை மாற்றலாம். அடுத்த நாளே கூட மாற்றலாம். எது கடைசியாக எழுதப்பட்டதோ அதுதான் செல்லும். ஆகவே உயிலில் தேதி மிகமிக முக்கியம்.’’
“உயில் இருந்தால் போதுமில்லையா? உரியவர்கள் அதன்படி பிரித்துக்கொண்டு விடலாமில்லையா?’’
“உயிலினை அவருடைய இறப்புக்குப் பிறகு சம்மந்தபட்டவர், நீதிமன்றத்தில் ப்ரோபேட் (Probate) செய்ய வேண்டும்.”
“உயிலுக்கு மாற்று ஏதும் இருக்கிறதா?’’
“உயிலுக்குப் பதில் ‘ஃபேமிலி அரேஞ்மெண்ட்’ ஆகவும் செய்துகொள்ளலாம். சொத்தினை கொடுப்பவர் உட்பட, சம்பந்தப்பட்ட உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து, எப்படிப் பிரித்துக்கொள்வது என்பதனை எழுதி கையெழுத்துப் போட்டு வைத்துக்கொள்ளலாம். அது செல்லும்’’
“உயிலும் இல்லை. வேறு வழிமுறைகளையும் செய்துகொள்ளவில்லை. என்ன ஆகும்?’’
“ உயில் இல்லாவிட்டால், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தின்படி பிரிவினை செய்யப்படும். ‘இந்து சக்சஷன் ஆக்ட்’ படி, ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’, ‘செகெண்ட் கிளாஸ்’ என்பது போல உரிமை அடிப்படையில் வாரிசுகள் பிரிக்கப்படுகிறார்கள். மனைவி, மகன், மகள்களுக்குத்தான் முதல் உரிமை. மகன் தந்தைக்கு முன்பாவே இறந்துவிட்டிருந்தால், அவனுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அந்தப் பங்கு வரும். அவர்கள் யாரும் இல்லையென்றால்தான் அடுத்தகட்ட வாரிசுகள். அதில் அப்பா, சகோதரர்கள் வருகிறார்கள்.
“மொத்தத்தில்?’’
“எல்லாவற்றுக்கும் நியமனம் செய்துவிட வேண்டியது. உயில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல பழைய உயிலினை கிழித்தெறிந்துவிட்டு, புதியதாக ஒன்று எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது.’’.
நன்றி: சோம.வள்ளியப்பன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum