தமிழ் நாடு முதலீட்டுக் கழகத்தில் தொழில் கடன் பெறுவது எப்படி?
Wed Dec 16, 2015 8:05 am
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது.
கடனுதவி பெறத் தகுதி
- இக்கழகத்தில் நிதியுதவி பெறத் தகுதியான தொழில் நிறுவனங்கள் கீழ்காணும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது ஈடுபட வேண்டும்.
- பொருட்கள் உற்பத்தி செய்தல்
- பக்குவப்படுத்தல்
- சுரங்கத் தொழில்
- மின்சாரம் அல்லது வேறு திறன் உற்பத்தி செய்தல்
- மருத்துவ இல்லம் அமைத்தல்
- பராமரிப்புத் தொழில்
- பழுது பார்த்தல், சோதனை செய்தல்
- மரக்கலங்கள், மோட்டார் படகுகள், டிராக்டர்கள் பழுது பார்த்தல்
- தங்கும் விடுதிகள்
- வாகனங்கள் வாங்குதல்
- மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடிப்பு சாதனங்கள் தயாரித்தல்
நிதியுதவியின் வரம்பு
இந்த நிதிக்கழகம் தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கும், கூட்டுறவு இணையத்திற்கும் ரூபாய் 90 லட்சம் வரை நிதி வழங்குகிறது. ஒருவரால் நடத்தப்படும் தொழிலுக்கும், கூட்டணி முறையில் நடத்தப்படும் தொழிலுக்கும் ரூபாய் 60 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. பிற சேவை நோக்கமுடைய நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
நிதியுதவி பெறத் தகுதி
தொழிலின் திட்ட மதிப்பு ரூபாய் ஐந்து கோடிக்கு மிகாமல் இருந்தால் அந்நிறுவனங்களுக்கு இக்கழகம் நிதியுதவி அளிக்கிறது
ஆதிக்க வரம்பு
இந்த நிதிக்கழகம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் ஏற்கனவே இயங்கி வரும் அல்லது இனிமேல் தொடங்க எண்ணியுள்ள தொழில் நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்கும்
விண்ணப்பப் படிவங்கள்
இக்கழகத்திடம் நிதியுதவி பெற குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் இக்கழகத்தின் தலைமை அலுவலகம், வட்டார அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் கிடைக்கிறது.
சிறப்புத் திட்டங்கள்
இக்கழகத்தின் மூலம் கீழ்காணும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
- சிறிய கூட்டுக் கடன் திட்டம்
- சுலபக்கடன் திட்டம்/ விதை மூலதனத் திட்டம்
- நவீனமயமாக்கும் திட்டம்
- பதிவுபெற்ற மருத்துவர்கள் திட்டம்
- போக்குவரத்துத் திட்டம்
- மின்னுற்பத்தி எந்திரம் வாங்க நிதியுதவி
- உபகரண மறுநிதியுதவித் திட்டம்
சிறிய கூட்டுக் கடன் திட்டம்
இக்கழகம் கைவினைஞர்கள், கிராமக் குடிசைத் தொழில்கள் போன்றவைகலுக்கு மூலதனமும், உபகரண நிதியுதவியும் அளிக்கிறது. இத்திட்டத்தில் தொழில் தொடங்குபவர்களுக்குத் தேவைப்படும் தொழில்கூடங்கள் அமைக்கவும் நிதியுதவி அளிக்கிறது. ஆதிதிராவிடர் , பழங்குடியினர், உடல் ஊனமுற்றவர் ஆகியோருக்கும் மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குகிறது.
சுலபக்கடன் திட்டம்/விதை மூலதனத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லாமல் தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கும் நிதியுதவி அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனுக்கு வட்டி கிடையாது எனினும் பணிக்கட்டணமாக குறிப்பிட்ட சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.
நவீனமயமாக்கும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டிலிருக்கும் இயந்திரங்களையும், உற்பத்தி முறைகளையும், தொழில் நுணுக்கங்களையும் மாற்றி நவீன தொழில் நுணுக்கங்களை ஏற்றுக் கொள்வதற்கும் இக்கழகம் நிதியுதவி அளிக்கிறது.
பதிவுபெற்ற மருத்துவர்கள் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் படித்த நபர்களுக்கு மருத்துவ நிலையம் வைப்பதற்கும், நவீன கருவிகள் வாங்குவதற்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
போக்குவரத்துத் திட்டம்
- சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வாங்குவதற்கு கடனுதவி அளிக்கப்படுகிறது
- மின்னுற்பத்தி எந்திரம் வாங்க நிதியுதவி
- தொழில் நிறுவனம் தடையின்றி பணிபுரிவதற்கு மின்சாரம் அவசியமாக இருப்பதால் மின்னுற்பத்தி இயந்திரம் வாங்க க்டனுதவி அளிக்கிறது.
உபகரண மறுநிதியுதவித் திட்டம்
- முன்பே நல்ல முறையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் இயந்திர உபகரணங்கள் வாங்க அவசர நிதி தேவைப்பட்டால் இக்கழகம் கடனுதவி செய்கிறது. இதற்கு கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும்
- 4 வருடங்களாக நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்
- 2 வருடமாக இலாபம் அடைந்திருக்க வேண்டும்
- வங்கிகளுக்குத் தவணை செலுத்தத் தவறியிருக்கக் கூடாது.
- வட்டி விகிதம்[தொகு]
- அரசு விதிகளின்படி அவ்வப்போது மாற்றத்துக்குரியது
கடன்கள் விநியோ கம்
கடன் அனுமதிக்கப்பட்டவுடன், விதிமுறைகளுடன் கூடிய அனுமதிக் கடிதம் தொழில் முனைவோருக்கு அனுப்பப்படுகிறது. தொழில் முனைவோர் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் கழகம் கோரும் அனைத்துச் சான்றிதழ்களையும் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடனுக்கான கால வரம்பு
புதிய நிறுவனங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 9 ஆண்டுகள் வரை தவணைக் காலம் அளிக்கப்படுகிறது.
மேலும் விவரம் அறிய :
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
எண் 692, அண்ணா சாலை, நந்தனம்,
சென்னை – 600 035
போன் :+91-044-24306100 / +91-044-24331203
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
எண் 692, அண்ணா சாலை, நந்தனம்,
சென்னை – 600 035
போன் :+91-044-24306100 / +91-044-24331203
ஆதாரம் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum