வருமானவரி ரிட்டர்னை தாமதமாக தாக்கல் செய்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்
Sat Sep 05, 2015 8:49 pm
மாத சம்பளதாரர்கள், வரிவிதிப்பு ஆண்டு 2015-16-க்கான வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகஸ்டு 31-ந் தேதி என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. என்ன செய்யலாம்?
வருமானவரித்துறையினர் பிடித்து விடுவார்களோ? அபராதம் விதிப்பார்களோ? வழக்கு போடுவார்களோ? என்ற அச்சம் பிறக்கிறதா?. நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் தாக்கல் செய்யத்தவறிய உங்கள் வருமான வரி ரிட்டர்னை தாமதமாகவும் செலுத்தலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
தாமதமான ரிட்டர்ன்:
நீங்கள் வாங்கும் சம்பளத்திலேயே உங்களுக்கு வரிபிடித்தம் செய்யப்பட்டிருந்தால் (Tax Deducted at SourceTDS) அல்லது உங்கள் வருமானத்திற்கேற்ற வரியை நீங்கள் முன்னதாகவே செலுத்தியிருந்தால் (Advance Tax) இன்னும் கூட நீங்கள் உங்கள் வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம். இதுபோன்று ஆகஸ்டு 31-க்குப் பிறகு தாக்கல் செய்யும் ரிட்டர்னுக்கு தாமதமான ரிட்டர்ன் (belated return) என்று பெயர். இவ்வகையில், அடுத்த வரி விதிப்பு ஆண்டு முடியும் வரையில் அதாவது 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலும் நீங்கள் உங்களுடைய வரிவிதிப்பு ஆண்டு 2015-16-க் கான வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம்.
பாதிப்புகள் என்னென்ன?
இவ்வாறு வருமானவரி ரிட்டர்னை தாமதமாக தாக்கல் செய்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
1. வருமானவரி ரிட்டர்னில் ஏதேனும் நஷ்டம் (loss) இருக்குமானால் அந்த நஷ்டத்தை அடுத்த ஆண்டுகளில் ஈடு செய்ய இயலாது.
2. முதலில் தாக்கல் செய்த வருமானவரி ரிட்டர்னில் ஏதேனும் தவறு இருப்பின் அதை சரி செய்ய இயலாது. பொதுவாக, கெடு தேதிக்கு முன்னால் தாக்கல் செய்திருந்த ரிட்டர்னில் ஏதேனும் பிழை இருந்தால், பிழையை சரிசெய்து மீண்டும் ஒரு ரிட்டர்ன் தாக்கல் (revised return) செய்ய இயலும். ஆனால், இம்மாதிரி தாமதமாக தாக்கல் செய்வதில் சரிசெய்யும் வாய்ப்பு பறிபோய்விடுகிறது.
வட்டி:
3. இவை தவிர, நீங்கள் வரிபிடித்தம், முன்னதாக வரி செலுத்தியது ஆகியவற்றைக் கழித்தது போக, மேலும் வரி செலுத்தவேண்டியிருக்கும் பட்சத்தில், அந்த வரியை வட்டியுடன் செலுத்தவேண்டும்.
இவ்வகையில் இருவிதமான வட்டியினை நீங்கள் செலுத்தவேண்டும். ஒன்று தாமதமாக வரி செலுத்துவதற்கான வட்டி. அதாவது, நீங்கள் முன்னதாக செலுத்தவேண்டிய வரி பத்தாயிரம் ரூபாயை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதிலும் நீங்கள் 90 சதவீதத்தை விட குறைவாகவே செலுத்தியிருக்கிறீர்கள் எனில் இந்த வட்டியினை நீங்கள் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தவேண்டிய தொகையில் மாதம் ஒரு சதவீதம் என்று ஏப்ரல் மாதம் முதல் நீங்கள் செலுத்தும் தேதி வரையில் கணக்கிட்டு இதை செலுத்தவேண்டும்.
இரண்டும் தாமதமாக வருமானவரி ரிட்டர்னில் தாக்கல் செய்வதற்கான வட்டி. நீங்கள் செலுத்தவேண்டிய தொகையில் மாதம் ஒரு சதவீதம் என்று செப்டம்பர் மாதம் முதல் (அதாவது கெடு தேதிக்கு அடுத்த நாளிலிருந்து) நீங்கள் வருமானவரி ரிட்டர்னைத் தாக்கல் செய்யும் தேதி வரையில் கணக்கிட்டு இதை செலுத்தவேண்டும்.
குறிப்பு: இவ்விரண்டு வட்டிகளுமே, மார்ச் மாதம் 31-க்குப் பிறகும் நீங்கள் வரி செலுத்தவேண்டியிருந்தால் மட்டுமே செலுத்தவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நோட்டீஸ்:
ஒருவேளை வருமானவரித்துறையிடமிருந்து நீங்கள் வருமானவரி ரிட்டர்னைத் தாக்கல் செய்யவில்லை என்று நோட்டீஸ் வரும் பட்சத்தில், அதைப் பெற்ற உடனேயே நீங்கள் உங்களின் ரிட்டர்னைத் தாக்கல் செய்து விடுவது நல்லது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum