சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:32 am
சாமை ரெசிப்பி
இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன.உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி.
சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தினம் ஒரு சிறுதானியம் பற்றிய இந்த சிறப்புத் தகவல்கள், ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
சாமை
மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில்தான் இரும்புச்சத்து அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தாதுப் பொருட்களை உடலில் அதிகரிகக்ச் செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக்கொண்டாலும் ஆபத்து இல்லை.
பலன்கள்
மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்னைகள் தீரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. உடலில் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் சாமையை, தினமும் காலை உணவாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
சாமை பொங்கல்
சாமையில் சாதம், உப்புமா, இட்லி, இடியாப்பம், பொங்கல், தோசை, புட்டென வெரைட்டியாக ருசியாகச் சமைக்கலாம்.
ஒரு கப் சாமைக்கு, கால் கப் பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். குக்கரில் பால் ஒரு கப் மற்றும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, வறுத்த சாமை, பருப்புச் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி அரை டீஸ்பூன் போட்டு வதக்கவும். கடைசியாக, முந்திரியை வறுத்து, பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதற்குத் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.
வயோதிகர்கள், சர்க்கரை நோயாளிகள் நெய், முந்திரியைத் தவிர்த்துவிடுங்கள்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:34 am
தினை ரெசிப்பி
தினைக்கு ஆங்கிலத்தில், 'இத்தாலியன் மில்லட்' என்று பெயர். உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானிய வகைகளில் ஒன்று. இனிப்புச் சுவைகொண்டது.பலன்கள்
தினையோடு, எள் சேர்ப்பதால், கால்சியம் நிறைவாகக் கிடைக்கும். இதனால், எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். தேவையான புரதச்சத்து கிடைப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும்.
தினை, எள் சாதம்
ஒன்றரை கப் தினையை இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள், 5 காய்ந்த மிளகாய், 50 கிராம் உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அரை டீஸ்பூன் கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, 50 கிராம் வேர்க்கடலையைப் போட்டுத் தாளிக்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:35 am
குதிரைவாலி ரெசிப்பி
சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
பலன்கள்
குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து உடலில் கொழுப்பைக் குறைத்துவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.
குதிரைவாலி பிரியாணி ரெசிப்பி
300 கிராம் - பீன்ஸ், கேரட், 100 கிராம் - வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 4 கப் குதிரைவாலி அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு, ஏலக்காய், லவங்கப்பட்டை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், டீஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதில், அரிசியைக் கொட்டிக் கிளறி, ஏழரை கப் தண்ணீர் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவைக் கலந்து கிளறி, குக்கரை மூடவும். மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கி நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:36 am
வரகு ரெசிப்பி
பண்டை தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வரகின் பலன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் அப்பம், வெல்லப் பணியாரம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலுவைக் கூட்டலாம்.பலன்கள்
நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.
வரகு கஞ்சி
சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும். பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு பல் 10, ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள, கறிவேப்பிலை துவையல் அருமையாக இருக்கும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:38 am
சிறுதானிய கார அடை
குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம்.செய்முறை:
கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை ரெடி!
பலன்கள்:
கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:39 am
சோளம் ரெசிப்பி
அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சோளத்துக்கு முக்கிய இடம் உண்டு. சோளத்தை முழுதாக அல்லது உடைத்து, வேகவைத்து சாதமாகச் சாப்பிடலாம். அரைத்து மாவாக்கி, சப்பாத்தியாகவும் செய்யலாம்.அதிக மாவுச்சத்து, கொழுப்பு, புரதச்சத்து நிறைந்து இருப்பதால், வெளிநாடுகளில் சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றனர்.
உடலுக்கு உறுதியைத் தந்து, ஆரோக்கியத்தைத் தக்கவைக்கும் சோள உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வது நல்லது.
சோள ரவை கொழுக்கட்டை
செய்முறை:
கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில், கறிவேப்பிலைச் சேர்த்து, மூன்று கப் தண்ணீரை விடவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், ஒரு கப் சோள ரவையைப் போட்டு, அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.
மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆறவைத்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுக்கவும்.
பலன்கள்:
சோளத்தில் புரதம், மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோடின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். சிறுநீரைப் பெருக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மூல நோய் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்ப்பது நல்லது.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:40 am
ராகி வேர்க்கடலை அல்வா
ஒரு கிலோ கேழ்வரகை நீரில் ஊறவைத்து, வடித்து, முளைக்கட்டிய பின் காயவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளைச் செய்யலாம். முழுமையான சத்துக்கள் சேர்ந்து, உடலுக்கு வலுவைக் கூட்டும்.ராகி வேர்க்கடலை அல்வா
100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கப் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ சர்க்கரை, கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் தோல் நீக்கிய 100 கிராம் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.
பலன்கள்
நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகச் செய்து தரலாம். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இளம் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். ரத்தசோகையைத் தடுக்கும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:41 am
கேழ்வரகு இட்லி
ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.கேழ்வரகு இட்லி
செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, இட்லி தட்டில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
பலன்கள்
கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானோர் என அனைவரும் சாப்பிடலாம்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:43 am
மல்டி கிரெய்ன் ரொட்டி
இன்று பெரும்பாலான வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்திதான் உணவாக இருக்கிறது. இதயநோய், சர்க்கரை நோய், ஒபிசிட்டி என நோயின் பாதிப்புகள் அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம்.கோதுமையைப் பயன்படுத்தி மட்டுமே சப்பாத்தி செய்யாமல், சிறுதானியங்கள், பயறு வகைகளையும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி செய்வது உடலுக்கு வலுவைக் கூட்டும். இதனுடன் காய்கறி கலவைச் சேர்த்துக்கொண்டால், ஒட்டுமொத்த சத்தும் உடலில் சேரும்.
மல்டி கிரெய்ன் ரொட்டி
தேவையானவை: முழு கோதுமை, மக்காச்சோளம், முளைக்கட்டி காயவைத்த கேழ்வரகு, தோல் நீக்காத கறுப்புக் கொண்டைக்கடலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
கொடுத்துள்ள தானியங்களை சம அளவு எடுத்து, நைஸாக அரைத்து மாவாக்கவும். இதை நன்றாகச் சலித்துக்கொள்ளவும். இந்த மாவைத் தேவையான அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து சப்பாத்திகளாக இடவும். தோசைக் கல்லில் சிறிது எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையும் சத்தும் நிறைந்த இந்த மல்டி கிரெய்ன் ரொட்டியை, குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறிக் கலவையைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.
பலன்கள்
ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். கோதுமையில் தாது உப்புக்களும், முக்கியமான அமினோ அமிலங்களும் உள்ளன. சோளத்தில் வைட்டமின்கள், கேழ்வரகில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள், பருப்பு வகைகளில் புரதம் என மல்டி கிரெய்ன் ரொட்டியின் மூலம், அனைத்துச் சத்துக்களும் உடலுக்குக் கிடைத்துவிடும். அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்றது. வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம், நிறைவான ஊட்டச்சத்தை அவர்களுக்கு வழங்கலாம்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:44 am
குதிரைவாலி கேப்பைக் கூழ்
வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள், தினமும் காலையில் குடிக்கும் தேவாமிர்தம் என்ன தெரியுமா? பழைய சோறும் கேப்பைக்கூழும்தான். காலம் காலமாக நீராகாரமாக அருந்தும் இந்த உணவுகள், உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாது.குதிரைவாலி கேப்பைக் கூழ்
செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.
50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும்.
பிறகு, கால் கப் தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.
பலன்கள்
கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:45 am
கம்பு வெஜிடபிள் கஞ்சி
உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கும் தானியம் கம்பு. இதில் அதிக அளவு புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், பீட்டாகரோட்டின், நியாசின், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் இருக்கின்றன. தினமும் கம்பை சமைத்துச் சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் மற்றும் சத்துக்குறைப்பாட்டைப் போக்கலாம். ஆரோக்கியத்தைக் கூட்டலாம்.பலன்கள்
ரத்தசோகை இருப்பவர்களுக்கு சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். டீன் ஏஜ் பெண்கள், வளரும் குழந்தைகள், அடிக்கடி கம்பு உணவை சேர்த்துக்கொண்டால், உடல் நன்கு வலுப்பெறும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைச் சீராக்கும். சர்க்கரை நோயாளிக்கும் ஏற்றது. பார்வைத்திறன் மேம்படும். உடல் சூட்டைத் தணிக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புண்கள், குடல் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.
கம்பு வெஜிடபிள் கஞ்சி
அரை கப், கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். இதனுடன், மூன்று கப் வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது) அரை டீஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு, 1 பிரியாணி இலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததும், பிரியாணி இலையை எடுத்துவிட்டு, கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அரை டீஸ்பூன் கடுகு மற்றும் மூன்று பல் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளலாம். இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:47 am
ராகி மசாலா ரிப்பன்
குழந்தைகளுக்கு டிபனைவிட, நொறுக்குத் தீனியின் மீதுதான் ஆசை அதிகம். வீட்டில் செய்யவில்லை என்றால், சுகாதாரமற்ற எண்ணெயில் செய்த கடைப் பலகாரங்களை வாங்கி, வயிற்றைக் கெடுத்துக்கொள்வார்கள். சிறுதானியங்களில் நொறுக்குத் தீனியை செய்து கொடுங்கள். சுவையும் அபாரமாக இருக்கும். உடலும் நலம் பெறும்.செய்முறை
2 கப் கேழ்வரகு மாவு, அரை கப் பொட்டுக்கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் பூண்டு (அ) வெங்காய விழுது, பெருங்காயத் தூள், சோம்புத் தூள் தலா கால் டீஸ்பூன் சேர்த்து, உப்புப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து, முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் பொருத்தி, மாவைப் போட்டு, காயும் எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்ததும் எடுக்கவும்.
பலன்கள்
கேழ்வரகில் இரும்புச்சத்து, கால்சியம், அமினோ அமிலங்கள் அடங்கி இருக்கின்றன. சர்க்கரை நோயிலிருந்து விடுபடவும், உடல் வலுப்பெறவும், குடல் புண்ணை ஆற்றவும், பித்தம் தொடர்பான நோய்களைப் போக்கவும் கேழ்வரகு உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணித்து, சருமத்தைப் பளபளப்பாக்கும். கேழ்வரகுடன், பொட்டுக் கடலை மாவையும் சேர்ப்பதால், குழந்தைகளின் வளர்ச்சி அதிகரித்து, உடல் நல்ல உறுதியைப் பெறும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:49 am
சாமை புட்டு
சத்தான சிறுதானியங்களில் தினமும் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு சாமை. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ட்ரைகிளசரைடு என்ற கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளது.பலன்கள்
சாமையை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால், செல் சிதைவடைவது கட்டுப்படுத்தப்படும். பொதுவாக வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைதான் பெரிய சிக்கலாகவே இருக்கிறது. உடலிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணியாக அமைந்துவிடும்.
சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள், மலச்சிக்கலைத் தடுப்பதுடன் வலுவைக் கூட்டும் உணவாகவும் இருக்கிறது. வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைக்கும் சாமை அரிசி சிறந்த மருந்தாக இருக்கிறது. ரத்தசோகையைத் தடுக்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில், சாமை முக்கியப் பங்கு வகிக்கிறது.
செய்முறை
500 கிராம் சாமை அரிசி மாவைச் சலித்து, ஒரு டீஸ்பூன் சீரகம், தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தண்ணீர் சேர்த்து, புட்டு பதத்துக்குப் பிசைந்து ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறிது கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, 4 வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 4 காய்ந்த மிளகாய், 1 தக்காளி (பொடியாக நறுக்கியது), சிறிது உப்பு சேர்த்து நன்றாகச் சுருள வதக்கவும். பிறகு, வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி, வேகவிட்டு எடுக்கவும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:50 am
சிறுதானியக் கஞ்சி
ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை.
பலன்கள்
அரிசி, கோதுமை தராத சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய, உணவாக அமைவதால் உடல் வலுபெறும். நோய் நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும்.
அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து. குடல்புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும். இளைத்த உடல் வலுவாகவும் உடல் எடை கூடவும் தினை உதவுகிறது.
வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க, தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (Chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைகொடுக்கும்.
பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்துள்ளன. இதனால், வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (Angular cheilitis) குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். புரதம் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.
கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு, கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது.
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது. கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரைமரி காம்ப்ளெக்ஸை (Primary complex) கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
செய்முறை
தினையோ, சாமையோ எதுவானாலும் மிக்ஸியில் ஒரு முறை சுற்றி, இரண்டாக உடைத்துக்கொள்ளவும். அரை டம்ளர் தானியத்துக்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக வேகவைத்து, மலர்ந்ததும் இறக்கவும். இனிப்பு வேண்டுமானால், பனை வெல்லத்தைக் காய்ச்சி, வடிகட்டி, அந்தப் பாகைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்துப் பரிமாறுங்கள். இல்லையெனில், மோர் சேர்த்து, சின்ன வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகலாம்.
இதற்கு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கொள்ளு எனச் சுவையான துவையல்களைத் தொட்டுக்கொள்ளலாம். தினம் ஒரு கீரைகூடச் சேர்த்துக்கொள்ளலாம்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:52 am
ராகி வெங்காய தோசை
உடலுக்கு முழுமையான சத்துக்களை அள்ளித்தருவதில் முளைக்கட்டிய தானியத்துக்குத்தான் முதலிடம்.முளைகட்டிய தானியத்தில் செய்யும் பால், சாலட், கஞ்சி, பாயசம் என சகல உணவுகளும் சப்புக்கொட்டி சாப்பிடும் அளவுக்கு அபார ருசியுடன் இருக்கும். முளைகட்டிய கேழ்வரகு மாவில் செய்யும் இந்த தோசையை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
பலன்கள்
கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும். அதிகம் எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்துச் சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். நார்ச்சத்து இருப்பதால் எளிதில் செரிமனமாகும். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
ராகி வெங்காய தோசை
செய்முறை: 2 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ளவும். ராகி மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தோசை மாவுடன் கலந்து தோசைக்கல்லை காயவைத்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கும்போது, தோசையின் நடுவில் வதக்கிய வெங்காயத்தை வைத்து, சுட்டு எடுக்கவும்.
குறிப்பு
முளைகட்டிய கேழ்வரகை மாவாக அரைத்துப் பயன்படுத்தினால், தோசை வாசனையாக இருக்கும். சத்தும் சுவையும் கூடும். முந்தைய நாள் இரவே, ஒரு கப் கேழ்வரகு மாவைக் கரைத்து வைத்து, மறுநாள் பயன்படுத்தலாம். ஆனால், காலையில்தான் தோசை மாவைச் சேர்க்க வேண்டும். தோசை மாவுக்குப் பதிலாக, கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்து, ராகி மாவுடன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:53 am
கேழ்வரகு மிக்சர்
இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து!பலன்கள்
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு வலுவைக் கூட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறது. இதுதவிர, பீட்டா கரோட்டின், நியாசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகையை தடுக்கிறது. தோல் அலர்ஜியை நீக்கும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடலுக்கு வலிமை தரும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கேழ்வரகு மிச்சர்
200 கிராம் கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அதில், தேவையான உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அந்த மாவை மிக்சர் பிழியும் நாழியில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், தலா 50 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்தஅவல் சேர்த்து கிளறவும். கேழ்வரகு மிக்சர் ரெடி!
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:55 am
தினை லாடு
உலகிலேயே அதிகம் பயிரிடப்படுகிற இரண்டாவது வகை தானியம் தினை. இதற்கு இறடி, ஏளல், கங்கு எனப் பல பெயர்கள் உள்ளன. நம் முன்னோர்கள், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை என நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு, உடலை திடகாத்திரமாக வைத்திருந்தனர்.ஆனால், இன்றோ தவிடு நீக்கி, பாலீஷ் செய்த அரிசியை மட்டுமே சாப்பிட்டுவருவதால், உடலில் போதிய வலுவின்றி, நோய்களுக்கு ஆளாகித் தவிக்கிறோம். தெவிட்டாத தேனும் தினை மாவும் கலந்து செய்யும் இந்த லாடுவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்; ஆரோக்கியம் கூடும்.
பலன்கள்
அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்தைகளுக்கு ஒரு தினை லாடு கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்துக்கு துணைபுரியும். இதயத்தைப் பலப்படுத்தும்.
உடல் வலு பெறும். பசியை உண்டாக்கும்.
தினை லாடு
வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு ஆழாக்கு தினையை வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கட்டி அல்லது தேவையான அளவு வெல்லத்தைத் தூளாக்கிக்கொள்ளவும். தினை மாவு, வெல்லத்தூளுடன், தேன், தேங்காய்த் துருவல் தலா 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சிறிது தண்ணீர் விட்டு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:56 am
கம்பு ரொட்டி பிரட்டல்
அதிக அளவில் பயிரிடப்படும் சிறு தானியங்களில் கம்புதான் முதல் இடம். வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கொண்டது. கால்சியம், இரும்புச்சத்து மிக அதிகம்.
பலன்கள்
கம்பில் இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால், உடலுக்கு அதிகம் வலு சேர்க்கும்.
சருமம், பார்வைத்திறன் மேம்படத் தேவைப்படும் வைட்டமின் A உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டீன் இதில் அதிகம் இருக்கிறது. அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு இரும்புச்சத்து கம்பில் உள்ளது. ரத்தசோகை வராமல் தடுக்கும். அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால், வைட்டமின் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோயைச் சரி செய்கிறது.
வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு மிகவும் ஏற்றது. பற்கள், எலும்புகள் நல்ல உறுதியாக இருக்க உதவுகிறது. வயிற்றுப் புண், குடல் புண், அஜீரணக் கோளாறு நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.
கம்பு ரொட்டிப் பிரட்டல்
300 கிராம் கம்பு மாவை, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, பதமாக இட்டு, தோசைக் கல்லில் இருபுறமும் ரொட்டி போல் சுட்டு எடுக்கவும். பிறகு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், 3 கீறிய பச்சை மிளகாய், 2 நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், 2 நறுக்கிய தக்காளி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும். நறுக்கி வைத்துள்ள கம்பு ரொட்டி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். சுவையான கம்பு ரொட்டிப் பிரட்டல் தயார்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 8:59 am
ராகி உருண்டை
கேழ்வரகு வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. கேழ்வரகுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, கஞ்சி போல தயார் செய்து, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களிலிருந்து தாய்ப்பாலுடன் துணை உணவாகக் கொடுக்கலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் வாரத்துக்கு மூன்று நாட்கள் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.பலன்கள்
சத்துமாவு மாலை நேரச் சிற்றுண்டி. கேழ்வரகில் கார்போஹைட்ரேட், கால்சியம் சத்து மிக அதிகமாக உள்ளன. பொட்டாசியம், தையமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மக்னீஷியம், துத்தநாகம் ஓரளவு இருக்கின்றன. உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். எளிதில் ஜீரணமாகும். வேர்க்கடலையில் உள்ள புரதம், வெல்லத்தில் இரும்புச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உறுதுணைபுரியும்.
ராகி உருண்டை
200 கிராம் கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு அடைகளாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். மிக்ஸியில் ஆறிய கேழ்வரகு அடைகளைப் போட்டு, இரண்டு சுற்று சுற்றவும். இதில், வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து, மேலும் 2 முறை சுற்றி எடுக்கவும்.
இந்த கலவையை உருண்டைகளாகப் பிடித்து, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இனிப்பு பிடிக்கவில்லை என்றால், வெல்லத்துக்குப் பதிலாக கேரட், கொத்தமல்லி, உப்பு சேர்த்து செய்யலாம்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 9:01 am
குதிரைவாலி தக்காளி தோசை
சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. புழுங்கல் அரிசியில் தோசை வார்த்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், குதிரைவாலி அரிசியில் தோசை செய்து சாப்பிட்டுப்பாருங்கள்... சுவையும், சத்தும் அற்புதமாக இருக்கும்.பலன்கள்
இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை வராமல் தடுக்கும். நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் சாப்பிட உகந்தது.
குதிரைவாலி தக்காளி தோசை
4 கப் குதிரைவாலி அரிசியுடன் ஒரு கப் உளுந்து, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.
4 தக்காளி, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, விழுதாக அரைத்த மாவுடன் கலக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாகச் சுட்டு, கொத்தமல்லிச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 9:02 am
'கமகம' கம்பு தயிர் சாதம்
சிறு தானியங்களிலேயே அதிக அளவு புரதச்சத்து இருப்பது கம்பில்தான். எண்ணெய் சத்தான, உடலுக்கு உகந்த நிறைவுறாக் கொழுப்பு அமிலம் இதில் உள்ளது. பலன்கள்
கம்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான சருமத்துக்கு நல்லது. கண் பார்வை தெளிவடையும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். வாய்ப்புண், மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
'கமகம' கம்பு தயிர் சாதம்
ஒரு கப் கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் போட்டு 'விப்பர்' பட்டனைக் கொண்டு, இரண்டு முறை சுற்றி எடுக்கவும். பிறகு கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதி, தோலை நீக்கவும். பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.
உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நான்கைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, ஒன்றரை கப் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
கடாயைக் காயவைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, 2 காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போடவும். 2 பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதைக் கம்பு சாதத்துடன் சேர்க்கவும்.
கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 9:04 am
சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம்
ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கேழ்வரகு, இன்று நோய்களை விரட்டும் வரமாக இருக்கிறது.தீட்டப்படாத அரிசி, சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் தவிடு. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
பலன்கள்
வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல உணவு. எனவே, காலை அல்லது இரவு வேளைகளில் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் அனைவரும் சாப்பிட ஏற்றது. கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் பல், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
சிவப்பு அரிசி - கேழ்வரகு இடியாப்பம்
கால் கிலோ சிவப்பு அரிசி மாவு, கால் கிலோ கேழ்வரகு மாவு இரண்டையும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, இலகுவான பதத்தில் பிசையவும். இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும். பிறகு, குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ வைத்து வேகவிடவும். சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.
Re: சிறுதானிய ரெசிப்பி க்கள்
Mon Aug 10, 2015 9:06 am
தினை அதிரசம்
தினை என்றாலே தெவிட்டாத சுவைதான். தினையில் செய்யும் இந்த அதிரசம் அதிகம் சாப்பிட்டாலும் திகட்டாது.
பலன்கள்
தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருப்பதால் வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. கபம் தொடர்பானப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். வாயுத் தொல்லையைச் சரிசெய்யும்.
தினை அதிரசம்
ஒரு கப் தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு, ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்திப் பொடிக்கவும். பனை வெல்லத்தில் பாகு காய்ச்சவும். தினை அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் எள், சிட்டிகை ஏலக்காய்த் தூள் சேர்த்து, பாகில் ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்து வைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் சிறிது நெய் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum