மோசேவின் வாழ்க்கையில் மூன்று பெண்கள்
Sat Aug 08, 2015 6:15 pm
மோசேவின் வாழ்க்கையில் மூன்று பெண்கள் – 1
குழந்தை பருவத்தில் காப்பாற்றிய தாய் யோகெபேத்
அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள். எண்ணா 26:59
யோகெபேத் என்ற பெயருக்கு அர்த்தம் “யெகோவாவிற்கு மகிமை” ஆகும். தனது பெயரைப் போலவே கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை சேர்க்கும் வண்ணமாய் அவளுடைய மூன்று பிள்ளைகளும் தேவனுடைய பணிவிடைக்காரர் ஆயினர். மோசே அந்த ஊழியத்தின் தலைவனாகவும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசாரியராகவும், மிரியாம் தேவனுடைய முதல் தீர்க்கதரிசியாகவும் ஆயினர். மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் ஆவார். அப்படிப்பட்ட மோசே குழந்தையாய் இருந்த பொழுது, அழிவிலிருந்து காப்பாற்றியர் அவரது தாயாகிய யோகெபேத் ஆவார்.
இஸ்ரவேல் மக்களின் மீட்பின் கதையை வாசிக்கும்போது, அவனுடைய தாய் யோகெபெத் செய்த நாணற்ப்பெட்டிக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது. “அவள் அதை (மோசேவை) அப்புறம் ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்ப்பெட்டியை எடுத்து, அதற்கு பிசினும், கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள் (யாத்தி: 2: 3). நைல் நதியண்டை கிடைக்கிற சாதாரண நாணல் என்னும் புல்லைக் கொண்டு, ஒரு பேழையை செய்தாள். அதில் தன் செல்ல மகனுக்கு மூச்சு விட காற்றும் வேண்டும், அதே சமயத்தில் அதற்குள் நீர் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக பக்குவமாக அதின் அடிப்புறம் பிசினும், கீலும் பூசினாள்! எத்தனை திறமையாக இந்தப் பெண் இதை படைத்திருக்க வேண்டும்! இதை அவள் சரிவர செய்யாமலிருந்திருந்தால் அவள் குழந்தை மூச்சு திணறி இறந்திருப்பான். அல்லது நீரில் மூழ்கியிருப்பான். தன்னுடைய குழந்தையை காப்பாற்ற அவளுடைய திறமையை வெளிப்படுத்துகிறாள் யோகெபெத்.
யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் வாழ்ந்த இந்த இளம் தாய் தன் பிள்ளைகளுக்கு , ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய கர்த்தரின் வழிகளை போதித்தாள். அவர்களை வளர்க்கும்போது வல்லமையுள்ள தேவனைப் பற்றியும், அவர் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வல்லவர் என்றும் போதித்தாள். மோசே பெரியவனானபோது அவன் தன் சகோதரர் சுமை சுமந்து கஷ்டங்கள் அனுபவிப்பதை பார்த்து, ஒரு எகிப்தியனை வெட்டிப் போட்டு விட்டு, அது பார்வோன் செவிகளுக்கு எட்டியபடியால், எகிப்தை விட்டு ஓடி மீதியான் தேசத்தில் 40 வருடங்கள் ஆடு மேய்த்து அலைந்து திரிந்த போதும் அவள் மோசே மேல் கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை.
40 வருடங்களுக்கு பின்னர், யோகெபெத் தன் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திய அதே தேவனானவர், அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். ஆம் யோகேபெத்தை எத்தனை அருமையான ஒரு தாயாகப் பார்க்கிறோம். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு சொத்து சுகம் தேடிக் கொடுத்தால் மட்டும் போதாது, அவர்களை கர்த்தரின் வழிகளில் நடத்த வேண்டும். நாம் தேடி வைக்கிற பணத்தினால் நம் பிள்ளைகள் நம்மை நினைவு கூற மாட்டார்கள். நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தோம் என்பதைக்கொண்டு தான் நினைவு கூறுவார்கள். உங்கள் குழந்தைகளை விடுதலை வீரர்களாக பாருங்கள். ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் தரித்திருந்து பொறுமையோடும் அன்போடும் ஒரு நல்ல முன் மாதிரியான வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் பிள்ளைகளும் சாதிப்பது நிச்சயம்.
ஜெபிப்போம்:
எங்கள் அன்பின் தகப்பனாம் இயேசுவே, விடுதலை வீரர்களை உருவாக்கிய யோகெபேத்தைப் போல ஒவ்வொரு தயார்களையும் உருமாற்றும். வெறும் நாணல் பெட்டியை வைத்து மோசேவைக் காப்பாற்றியது போல, ஒவ்வொரு பெண்களுக்கும் உருவாக்கும் திறனையும், அதின் மூலம் தனது குடுமபத்தைக் காப்பாற்றும் ஞானத்தையும் கொடுக்கும்படியாக வேண்டுகின்றேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum