முயற்சி திருவினையாக்கும்....!!!
Tue Jul 28, 2015 1:27 pm
[size]
[/size]
இளங்கலைப் பட்டம் படித்து முடித்த கையோடு அப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது..! திருமணம் முடிந்த அன்று தன் கணவனுடன் ஆவலாகப் பேச வந்த தன் மனைவியைப் பார்த்த கணவன், தன் மனைவி தன்னிடம் காதல் மொழி பேசப் போகிறாள் என்று எண்ணியே கனிவோடு காத்திருக்க, அவளோ "நான் மேற்படிப்புப் படிக்க ஆவலாக உள்ளேன். எனக்கு நீங்கள் ஆதரவு கொடுத்து உதவ வேண்டும்" என்கிறாள்..! உடனே அவன், “நீ மேற்படிப்புப் படித்தால் எனக்கு அது பெருமையே" என்கிறான். தன் மனைவியின் பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பத்தைப் பல்கலைக் கழகத்தில் அவனே சேர்த்துக் காத்திருக்கிறான்.
அப் பல்கலைக் கழகத்தில் அந்த வருடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மேலாண்மையியல் முதுகலைப் பட்டப் படிப்பிற்கு (MBA) தன் மனைவியும் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அறிந்து ஆனந்தம் கொள்கிறான். ஆனால், அவனுடைய ஒரு சில உறவினர்களோ அவனிடம், “உன் மனைவி உன்னை விட அதிகக் கல்வித் தகுதி பெறுவது சரியெனப் படவில்லை " என்று சொல்லித் தடை போட முயல்கிறார்கள். அவனோ தன் உறவினர்களிடம், “நான் உயர் கல்வி கற்க இயலாமல் தடுத்தது என் ஏழ்மை. என் மனைவி அந்தப் பெருமையைப் பெறட்டும்" எனக் கூறி மனைவியைத் தானே பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச் சென்று கட்டணங்களைச் செலுத்தி வகுப்பறையில் அமர வைத்து விட்டு வீட்டிற்கு வருகிறான்.
வீட்டிற்கு வந்த இரண்டு மணி நேரத்தில் வாசலில் நிழலாடவே சட்டென்று எட்டிப் பார்க்கிறான். அங்கே வாயிலருகில் தன் மனைவி கையில் புத்தகங்களை அணைத்தவாறு வருத்தம் தோய்ந்த முகத்துடன் நிற்கிறாள். கணவனோ.... சற்றே பதறி என்ன ஏது என்று வினவ, மனைவியோ அவனிடம் "என்னால் இந்த முதுகலை மேலாண்மையியல் படிப்பைத் தொடர இயலாது. என்னை மன்னியுங்கள்" என்கிறாள்...! கணவன் அவளிடம் "என்ன காரணம்.....? இன்றுதானே முதல் நாள்.. ஏதும் பிரச்சனையா?” என்று வினவ, மனைவி அவனிடம் "வகுப்பறையில் அனைத்து மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார்கள், எனக்கு ஆங்கிலம் அவர்கள் அளவிற்குப் பேசத் தெரியாது, என்னால் நிச்சயம் இந்தப் பட்ட மேற்படிப்பைப் படிக்க இயலாது, உங்களின் சொல் மீறியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என்கிறாள்.
கணவன் அவளிடம், “உன் வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் பெருநகரங்களிலும், வேறு மாநிலங்களிலும் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றவர்கள். நீயோ மேல்நிலை வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்றவள். அதனால் ஆங்கிலம் உனக்கு சிரமமான ஒன்றாகத் தெரிகிறது. ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே.....! உன்னால் நிச்சயம் இக் கல்வியில் சாதனை செய்ய இயலும், நீ உன் படிப்பை எந்தவித அச்சமுமில்லாமல் தொடர வேண்டும். மேலும், பல்கலைக் கழகத்தில் இப் படிப்பு ஆரம்பித்த முதல் தொகுப்பிலேயே (BATCH) உனக்கு இடம் கிடைத்திருக்கிறது. நீ நிச்சயமாக நன்றாகப் படித்து தேர்ச்சி பெறுவாய்" என்கிறான். ஆனால், அவன் மனைவியோ, “தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்.. என்னால் நிச்சயம் இயலாது" என்கிறார். கணவன் தன் மனைவியின் பதிலைக் கேட்டு அதிகம் மன வருத்தம் அடைகிறான்..!
அன்றைய தினம் வெள்ளிக் கிழமை..! அவன் தன் மனைவியிடம் " இன்று வெள்ளிக் கிழமை..... திங்கள் கிழமை உனக்கு மீண்டும் கல்லூரி வகுப்பு காத்திருக்கிறது. அதற்குள் நீ கல்லூரிக்கு மீண்டும் செல்லும் ஒரு நல்ல முடிவை எடுப்பாய் என நம்புகிறேன்" என்று கூறி மனைவியுடனான பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்ததோடு அல்லாமல் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் கவலை கொண்டு தன் மனைவியுடன் பேசுவதைத் தவிர்க்கிறான். திங்களும் பிறந்தது. காலை ஆறு மணிக்கெல்லாம் தன் மனைவி தன்னைப் படுக்கையில் இருந்து எழுப்புவதைக் கண்டு சற்றே வியந்து "என்ன செய்தி" என்கிறான். உடனே, “நான் இன்று முதல் கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்து விட்டேன்" என மனைவி கூறுவதைக் கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு. உடனே துரிதமாகப் படுக்கையில் இருந்து எழும்பித் தன் மனைவியை கல்லூரி வகுப்பறையில் கொண்டு வந்து சேர்க்கிறான்.
தன் மனைவியின் இரண்டாம் வருடப் படிப்பும் முடிந்தது. தேர்வு முடிவுகள் வருகின்றன. ஆங்கிலம் பேசிய சக மாணவர்களை விட அனைத்திலும் நல்ல மதிப்பெண் பெற்று அப்பெண் தேர்வாகிறாள். அடுத்த சில ஆண்டுகள் உள்ளூரிலேயே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி கிட்டிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் தான் படித்த அதே கல்லூரியில் அதே துறையில் விரிவுரையாளராகப் பணி கிடைக்கிறது அப் பெண்ணுக்கு. தனக்குக் கற்பித்த பேராசிரியர்களுடன் சக பேராசிரியையாய்ப் பணிபுரிகிறார். பணிக் காலத்தின் ஊடே அவர் கற்பிக்கும் படிப்பிலேயே ஆராய்ச்சி மாணவியாய்த் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆராய்ச்சிப் படிப்பிலும் தேறி தன் பெயரின் முன்னே முனைவர் எனும் பட்டத்தையும் இன்று (27/07/2015) முதல் இணைத்துக் கொள்கிறார்.
இந்தப் பெண்மணி வேறு யாரும் அல்ல. காரைக்குடி அழகப்பா பல்கலையில் பணியாற்றும் என் மனைவியேதான்......! என் மனைவி இந்தக் காதத் தொலைவை எட்டியதற்கு நான் ஒரு ஊக்க சக்தி மட்டுமே.....! இவ்வளவு திறமையையும் அவர் தன்னுள்ளே கொண்டிருந்தார் என்பதை நான் நன்கே அறிவேன்....! அதை வெளிக் கொணர மட்டுமே நான் உதவினேன்...! பல்கலையில் அவர் சார்ந்த துறைரீதியாக நடக்கும் விழாக்களில், நமது துறையில் முதல் பேட்ஜில் பயின்ற மாணவி இன்று நம்முடன் சக பேராசிரியையாகப் பணிபுரிகிறார் என்று அறிமுகப்படுத்தும் போது பெருமையாக உள்ளது. அவர் தம் கல்விப் பணியில் இன்னும் பல காதத் தொலைவுகளை எட்டி சாதனைகள் பல படைக்க இனிதே வாழ்த்துகிறேன்....!
என் மனைவி முனைவர் பட்டம் பெற உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) ஐயா கலியமூர்த்தி மற்றும் சக பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ மாணவியர் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்...! இன்று பல்கலையில் நடந்த விழாவிற்கு வருகை தந்திருந்த சான்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளும், வணக்கங்களும்....!
வாழ்த்துகள்.......... டாக்டர் சுதமதி பிரேம்நாத்....!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum