காசுக்காக ஊழியம் செய்தால்
Fri Jul 17, 2015 10:34 pm
ஊருக்கு நடுவிலே ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்திடம் ஏதோ பெரிய சக்தி இருப்பதாக ஊர்மக்கள் நம்பினர். எனவே அதற்குப் பட்டாடை உடுத்தி பலி செலுத்தினர். இதையெல்லாம் பார்த்த ஒரு இளைஞனுக்கு மிகவும் ஆத்திரம் வந்தது.
கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மரத்துக்கு செலுத்தும் மக்களைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தான். ஒரு நாள் யாரும் இல்லாத இரவு வேளையில் அந்த மரத்தை வெட்டி சாய்க்கக் கோடறியுடன் புறப்பட்டான். மரத்தை வெட்டக் கோடறியை ஓங்கினான். அடுத்த நொடியே பிசாசு அவனுக்கு முன்னால் குதித்து அவனைத் தடுத்தான். இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கும்போது பிசாசு அவனைத் தாக்கத் தொடங்கினான். இளைஞன் பொறுமை இழந்தான். இரண்டே அடியில் அவனை வீழ்த்தி விட்டான்.
பிசாசு உடனே அவன் காலைப் பிடித்துக் கொண்டு மரத்தை வெட்ட வேண்டாமென்று கெஞ்சினான். இளைஞன் மரத்தை வெட்டி சாய்ப்பதிலேயே குறியாக இருந்தான். இப்போது பிசாசு ஒரு பெரிய மூட்டையை அவனிடம் கொடுத்தான். அது முழுவதும் பணம்.
" இதை நீயே வைத்துக் கொண்டு மரத்தை விட்டு விடு" என்றான். இளைஞன் யோசித்தான்.
" சரி! இப்போதைக்கு விட்டு விடுவோம். இன்னொரு நாளைக்கு வந்து வெட்டிக் கொள்ளலாம். நமக்கும் நிறையப் பணம் கிடைக்கும் ". என்று எண்ணியபடி மூட்டையை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் போனான்.
நாட்கள் ஓடின. பிசாசு கொடுத்த பணமெல்லாம் தீர்ந்து போனது. மீண்டும் பணத்தேவை வந்தது. அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
" மீண்டும் அந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தால் பிசாசு வந்து பணம் கொடுப்பானல்லவா ?"
எண்ணம் வந்தவுடனே கோடறியுடன் கிளம்பிவிட்டான்.
மரத்தை நெருங்கி அதை வெட்ட முயற்சித்தான். மீண்டும் பிசாசு வந்து அவனைத் தடுத்தான். இளைஞன் மீண்டும் கோடறியை ஓங்கினான். பிசாசு முன்பு போலவே அவனைத் தாக்கினான். இளைஞனும் திரும்பத் தாக்கினான். ஆனால் இம்முறை பிசாசு அவனை ஒரே அடியில் வீழ்த்தி விட்டான். இளைஞனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"கடந்தமுறை தோல்வியடைந்த பிசாசு இன்று எப்படி ஜெயித்தான் ? " என்று குழம்பினான். இப்போது பிசாசு சொன்னான், " முன்பு கர்த்தருக்காக வைராக்கியமாய் என்னுடன் சண்டையிட்டாய். ஜெயித்தாய். இப்போது காசுக்காக என்னிடம் சண்டையிட்டாய். மண்ணைக் கவ்வினாய்".
செல்லமே! கர்த்தருக்காக ஊழியம் செய்தால் ஜெயம். காசுக்காக ஊழியம் செய்தால் கிடைப்பதோ அவமானம். நீ எப்போதும் ஜெயமெடுக்கிற பிள்ளையாகவே இருப்பாயா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum