100 கிறிஸ்தவ பழங்குடியினர் இந்துக்களாக மதமாற்றம்
Mon Dec 22, 2014 6:05 am
தெற்கு குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 100 கிறிஸ்தவ பழங்குடியினர் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ள பழங்குடியினர் முன்னதாக இந்துக்களாக இருந்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர், தற்போது அவர்கள் தங்களது சொந்த மதத்திற்கு திரும்புள்ளனர் என்று விஸ்வ இந்து பரிஷத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களாகவே மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். யாரும் வற்புறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களாக மக்கள் மதம் மாறுவதற்கு வசீகரிக்கும் விதமாக பொருட்கள் வழங்கப்படுகிறது என்ற தகவலை விஸ்வ இந்து பரிஷத் மறுத்துள்ளது.
"இந்துவாக இருந்தவர்கள், கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்ட போது, அவர்களை வசீகரிக்கும் விதமாக உணவோ அல்லது கல்வியோ வழங்கப்படவில்லை. அனைத்து கிறிஸ்தவர்களும், இந்துக்களாக மாறும் வரையில் இந்த பணி தொடர்ந்து நடைபெறும்." என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அஜித் சோலாங்கி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவ்விவகாரத்தில் மாநில அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. தன்னார்வத்துடன் மக்கள் தங்களது மதத்தை மாற்றிக் கொண்டால் இதில் அரசின் பாத்திரம் எதுவும் இல்லை என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மதமாற்றம் கட்டாயமாக செய்யப்படுகிறது என்பது தொடர்பாக நாங்கள் எந்தஒரு தகவலையும் பெறவில்லை. மக்கள் எந்தஒரு மதத்தையும் பின்பற்ற சுதந்திரம் உள்ளது," என்று குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள், இந்துக்களாக மதமாற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக புனித சடங்குகள் நடைபெற்றுள்ளது. அப்போது அவர்களுக்கு பகவத் கீதை பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 3000 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7–ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் புகாரின்பேரில் ஆக்ரா போலீசார், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் தர்ம ஜக்ரிதி மஞ்ச் அமைப்பின் நிர்வாகியுமான நந்தகிஷோர் வால்மீகியை தேடி வந்தனர். தொடர்ந்து நடந்த வேட்டையில் வால்மீகி சிக்கினார். விசாரணையில் குண்டர் சட்டத்தில் கைதான அவர் தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார் என்பது தெரியவந்தது. மத மாற்ற வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மதமாற்ற சம்பவம் பாராளுமன்றத்தில் தொடர்ந்து புயலை கிளப்பி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மதமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி டெல்லி மேல்–சபையில், விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் சிலரது பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள், வரம்பு மீறக்கூடாது என பிரதமர் மோடி கண்டிப்புடன் கூறினார். இதற்கிடையே அலிகாரில் மதமாற்றம் தொடர்பான நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மதமாற்றம் நிகழ்ச்சியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்தி வருகிறது.
நன்றி: தினத்தந்தி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum