எலிசபெத் ஃப்ரை - Elizabeth Fry (21 July 2014)
Tue Jul 22, 2014 7:01 pm
குற்றம் செய்ததால் பிடிக்கப்பட்டு, தண்டனை கிடைத்ததால் அடைக்கப்பட்டு, சிறைச் சாலையில் காலங்களைக் கழிப்பவர்களை சமூகம் பொருட் படுத்துவதில்லை. ஆனால் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அவர்களை மறப்பதில்லை. இன்று சிறை ஊழியம் பல நாடுகளிலும், பல சபைகளிலும் தொடர்ந்து நடத்தப்ப்ட்டு வரும் உன்னத ஊழியம். அவைகள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது எலிசபெத் ஃப்ரை ஆரம்பித்த ஊழியமே.அகில உலகுக்கு எலிசபெத் ஃப்ரை ஒரு சிறை சீர்திருத்தக்காரர் என்று மட்டுமே தோன்றினாலும் கிறிஸ்தவ வட்டாரத்தில் அவர் சிறைக் கைதிகளின் மிஷனெரி என்றே கருதப்படுகிறார்
இங்கிலாந்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த எலிசபெத் வாலிபப் பருவத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டார். நார்விக் பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் நார்விக் நகரின் ஏழை எளியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்றுக் கொடுப்பதும், ஏழைக் குழந்தைகளுக்கு ஞாயிறு பாட சாலை நடத்துவதும் அவருடைய ஊழியமாக இருந்தது. திருமணமான பின்பு எலிசபெத் ஃப்ரை எஸ்ஸெக்ஸ் என்னும் நகரில் ஊழியத்தைத் தொடர்ந்தார். சுகவீனர்களைப் பராமரிக்கவும். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் துவங்கினார். ஆனால் அந்த ஊழியத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூகேட் என்று அழைக்கப்ப்டும் சிறைச்சாலையில் சீர்கெட்ட நிலைமைகள் இருப்பதாக அறிந்த எலிசபெத் உடனே செயல்பட ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் மிகச்சிறிய அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். எவ்வித சுகாதாரமும் இல்லாமல் அழுக்கிலும், பயங்கரக் குளிரிலும் அவர்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், எலிசபெத் நகரத்தின் மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அதுவரை கைதிகளைப் பற்றிய அக்கறை யாருக்குமே இல்லை. நாளடைவில் எலிசபெத்தின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. சிறைச்சாலையின் நிலைமையில் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.
ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் குறித்த நேரத்தில் ஜெபமும், வேத வாசிப்பும் நடத்தப்பட்டது. தையற் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதுவரை வாழ்வை விரக்தியுடன் கழித்த கைதிகள் தையற் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். அதில் கிடைத்த வருமானம் அவர்களை நேர்மையுடனும், சுய மரியாதையுடனும் நடக்க உதவியது. எலிசபெத் ஃப்ரை செய்த மற்றுமொரு முக்கிய சீர்திருத்தம் உண்டு. அந்த நாட்களில் லண்டன் நகரிலிருந்து கைதிகளைக் கப்பலில் ஏற்றி வெகு தூரத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள சிறைகளுக்குக் கொண்டு போய் விடுவது வழக்கம். அப்படிக் கொண்டு போகும் போது பெண் கைதிகளை அதிகாரிகள் மிகவும் ஈனமாக நடத்தினார்கள். நீண்ட கடல் யாத்திரையின்போது கூட கைதிகளின் விலங்குகளைக் கழற்றவில்லை. நோயுள்ளோருக்கு எந்தவித மருத்துவ சிகிட்சைகளையும் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவை அடைந்த பின்பும் கைதிகள் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.
இவைகளை அறிந்த எலிசபெத் ஃப்ரை அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட ஆரம்பித்தார். அவருடைய விடாமுயற்சியினால், மேலே கூறப்பட்ட கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. நியூகேட்டில் ஆரம்பித்த சிறை சீர்திருத்தங்கள் விரைவில் நாட்டிலுள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் வலியுறுத்தப்பட்டது. எலிசபெத் ஃப்ரையின் கனிந்த இதயத்தைக் கைதிகள் கண்கூடாகக் கண்டனர். ஒவ்வொரு தடவையும் கைதிக் கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போது, எலிசபெத் அங்கு சென்று எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு வேதாகமமும், கம்பளி உடைகள் பின்னுவதற்கு வேண்டிய நூல்களையும், ஊசிகளையும் கொடுத்து அன்புடன் வழியனுப்பிவிட்டு வருவார். இப்படி ஒன்றிரண்டு தடவைகள் அல்ல, 25 வருடங்களாக ஊழியம் செய்தார்.
பெண்கள் அதிகமாக வெளியே செல்வதை சமுதாயம் விரும்பாத காலக் கட்டத்தில் எலிசபெத் ஃப்ரையைத் துணிச்சலுடன் செயல்பட வைத்தது, கர்த்தர் மீது அவர் வைத்த அளவற்ற அன்பும், பயனுள்ள சேவையைச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் தான். அவரை அவ்வாறான ஊழியத்திற்கு அழைப்பித்தது. கட்டுண்டவர்களை விடுதலையாக்க வந்த கர்த்தராகிய இயேசுவை காவலில் அடைக்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவிக்கும்போது, ‘காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்லி மகிழுவார். சிறை ஊழியங்களுக்காக ஜெபிப்போம்!
நன்றி – சகோ. கிறிஸ்டோ செல்வன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum