போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்
Thu Aug 15, 2013 9:34 am
ரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்
அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
உன்னுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நீ ஆரோக்கியமாக இருப்பதாகவும், நீ கடந்த மூன்று வாரங்களாக கடைபிடித்து வரும் நோன்பு உன்னை ஆரோக்கியமானவனாக வைத்திருக்கிறது என்றும் கூறியிருந்தாய். உனக்கு இருந்த சில வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த ரமளான் காலகட்டத்தில் காணப்படாமல் போய்விட்டது என்று நீ குறிப்பிட்டு இருந்தாய், மேலும் நீ அந்த பிரச்சனைக்காக பயன்படுத்தும் மாத்திரைகளும் பயன்படுத்தும் அவசியம் இந்த மாதத்தில் வரவில்லை என்று நீ எழுதியிருந்தாய். உன் ஆரோக்கியம் குறித்து நீ சொன்ன விவரங்கள் அனைத்தையும் கேட்டு நான் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவிற்கு, அப்பாவிற்கும் இதனை நான் தெரிவித்த போது, அவர்களும் உன் சரீர சுகச்செய்தி கேட்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். அவ்வப்போது உன் சுகச்செய்திகளை தொடர்ந்து பகிர்ந்துக்கொள்.
நேற்று நான் எழுதிய விவரங்களை படித்தவுடன், நீ தாமதமில்லாமல், எனக்கு பதில் எழுதியிருந்தாய். நேற்று நான் முஹம்மது பற்றி சொன்ன விவரங்களை பற்றிய ஆய்வை பிறகு செய்வேன், ஆனால், என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன? என்று என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தாய். அதாவது போரில் பிடிபடும் பெண் அடிமைகளை மிகவும் கொடுமையாக நடத்தும் படி பழைய ஏற்பாடு கூறுகிறது என்று குற்றம் சாட்டினாய், ஆனால், பெண் அடிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி குர்-ஆன் கூறுகிறது, அதாவது அவர்களுக்கு ஒரு ஆண் துணை தேவை, அவர்களுக்கு உணவு, உடை இருப்பிடம் இம்மூன்றும் தேவை என்பதை கவனத்தில் கொண்டு, அல்லாஹ் வசனங்களை இறக்கியுள்ளான், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் இவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். பெண்களுக்கு கவுரவம் கொடுப்பதில் குர்-ஆனும் இஸ்லாமும் கவனமாக இருக்கிறது, ஆனால், பைபிளோ அப்படிப்பட்ட பெண்ணுக்கு மொட்டை அடிக்கச் சொல்லி அவளை அவமானப்படுத்துகிறது. இந்த விவரம் பற்றி என்னுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தாய்.
தம்பி, நீ மேற்கண்ட விவரங்களை எனக்கு எழுதும் போது, உன் கேள்விகளுக்கு அடிப்படையாக இருக்கும் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனங்களை குறிப்பிடாமல் எழுதியிருந்தாய். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நீ அவசரத்தில் எழுதுகிறாய், மற்றும் உன் இஸ்லாமிய சகோதரர்கள் சொன்ன விவரங்களை சரி பார்க்காமல், அப்படியே என்னிடம் கேட்டுள்ளாய்.
நான் இப்போது இந்த கடிதத்தில் நீ பைபிள் பற்றி கூறிய குற்றச்சாட்டிற்கு முதலில் பதில் எழுதுகிறேன், மற்றும் குர்-ஆன் எப்படி அடிமைப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது, கவுரப்படுத்துகிறது என்பதைப் பற்றி நாளைக்கு உனக்கு எழுதுவேன்.
1) பெண் போர்க்கைதிகளை திருமணம் செய்துக்கொள்ளுதல்:
பழைய ஏற்பாட்டில் யூத மக்களை எகிப்திலிருந்து கொண்டு வந்து கானானை அவர்களுக்கு கொடுக்கும் போது, சில கட்டளைகளை தேவன் கொடுத்தார். அவர்கள் ஒரு புதிய நாட்டில் வாழப்போகிறவர்கள் என்பதாலும், அவர்கள் பல ஆண்டுகளாக அடிமைகளாக எகிப்தில் வாழ்ந்தபடியினாலும், அவர்களுக்கு தேவையான சட்டங்களை தேவன் மோசே மூலமாக கொடுத்தார். அவைகளில் சில சட்டங்கள், நாடு, அரசாங்கம், சட்ட ஒழுங்கு மற்றும் குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனைகள் போன்றவைகள் பற்றி இருந்தது. இன்னும் சில சட்டங்கள் அவர்கள் எப்படி தங்கள் மார்க்க விஷயங்களை கடைபிடிக்கவேண்டும், தேவனை எப்படி தொழுதுக்கொள்ளவேண்டும் என்பவைகள் பற்றி கொடுக்கப்பட்டது. இவைகள் மட்டுமல்லால் பொதுவாக எப்போதும் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளையும் கொடுத்தார், உதாரணத்திற்கு பத்து கட்டளைகளைச் சொல்லலாம்.
இப்படிப்பட்ட சட்டங்கள் தரப்படும் போது, போரில் பிடிப்பட்ட பெண்களை, ஆண்களை எப்படி நடத்தவேண்டும் என்று அனேக கட்டளைகளையும் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தைப் பொருத்தமட்டில், பெண் அடிமைகளை திருமணம் செய்துக்கொள்ளுதல் பற்றி மட்டுமே நான் விளக்குகிறேன். அடிமைகள் பற்றிய கட்டளைகளை நாம் பைபிளில் கண்டோமானால், நம் தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும் தெரியுமா? ஆனால், குர்-ஆனும், இஸ்லாமும் அடிமைகள் பற்றிச் சொல்லும் விவரங்களை கண்டால் நிச்சயமாக இவர் ஒரு இறைவன் தானா என்று எண்ணத்தோன்றும், தேவைப்பட்டால் இந்த விவரங்கள் பற்றி இன்னும் அதிகமாக வருங்காலங்களில் நான் உனக்கு எழுதுவேன். ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது போல, இந்த இரண்டு கடிதங்கள், இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ்வின் உள்ளத்தையும், யெகோவா தேவனின் உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டும்.
சரி தம்பி, உன் கேள்விக்கான பைபிள் வசனங்களை இப்போது படிப்போமா? உபாகமம் 21:10 லிருந்து 14ம் வசனம் வரைக்கும் படிப்போம்.
21:10 நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
21:12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,
21:13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். (உபாகமம் 21:10-14)
2) அடிமைப் பெண்ணை நீ விரும்பினால்:
குர்-ஆனுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே யெகோவா தேவன் "அடிமைப் பெண்ணை" நீ விரும்பினால், அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், அவளை மனைவியாக்கிக்கொண்ட பிறகே அவளுடன் திருமண உறவில் ஈடுபடலாம் என்று சொல்லியுள்ளார். ஆனால், இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்-ஆன் (அல்லாஹ்) இப்படி சொல்லவில்லை, திருமணம் செய்யாமலேயே அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறது.
திருமணத்திற்கு வெளியே உடலுறவு இல்லை என்பதை பைபிள் சொல்கிறது. வசனம் 11ம் படி, ஒரு அழகான அடிமைப்பெண்ணை கண்டு, அவளை விரும்பினால், நீ அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், இவ்வசனத்தின்படி, ஒரு யூத ஆண், ஒரு அந்நிய அடிமைப்பெண்ணை விரும்பினால், திருமணம் தான் அவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், இந்த வசனத்தை ஒரு முறை மறுபடியும் படிப்போம்:
21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
இந்த வசனத்தில், "அவளை விவாகம்பண்ண விரும்பி" என்று வருகிறது. அதாவது ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளவேண்டும் என்று விரும்பினால், முதலில் திருமணம் செய்யவேண்டும் என்பது தான் ஒரு யூதனின் மனதில் தோன்றவேண்டிய முதல் எண்ணமாக இருக்கவேண்டும். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், திருமணம் பந்தமில்லாமல் உடலுறவு பற்றி ஒரு யூதன் நினைக்கவே கூடாது. ஆனால், ஒரு முஸ்லிமின் நிலை இதற்கு எதிர் மறையாக உள்ளது, இதனை அடுத்த கடிதத்தில் விவரமாக பார்ப்போம்.
3) பழயவைகளை மறந்து, தன் குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள்:
ஒரு யூதன் ஒரு அடிமைப்பெண்ணை விரும்பினால், முதலாவது அவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும், குர்-ஆன் சொல்வது போல அவளை திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவு கொள்ளக்கூடாது. இது மட்டுமா, தன் குடும்பத்தை இழந்த அந்தப் பெண் திருமண வாழ்விற்கு உடனே தயாராகிவிடுவாளா? நிச்சயமாக இல்லை. பைபிளின் படி:
அ) அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துகொண்டு வந்து, அவளை சுத்திகரித்து (அவளுடைய தலைமயிரை சிறைத்து, நகங்களை சுத்தப்படுத்தி, அப்பெண் பிடிபட்டபோது அணிந்து இருந்த பழைய உடைகளை நீக்கி, வேறு ஆடைகளை ஆடைகளை உடுத்தி) அவள் தன்குடும்பத்திற்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அவளுக்கு தரப்படவேண்டும். (துக்கம் கொண்டாடுவது என்பது மனிதனுக்கு நல்லது, அவனுடைய காயப்பட்ட மனம் சுகமாக்கப்படும்). தன்னையும் மதித்து தனக்கு கொடுக்கப்பட்ட இந்த காலகட்டத்திற்காக அந்தப்பெண் நன்றியுள்ளவளாக இருப்பாள்.
ஆ) பழயவைகள் அனைத்தையும் அதாவது தான் ஒரு அடிமைப்பெண் என்பதை மறக்கவைத்து, தனக்கும் ஒரு யூதப்பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையைப்போன்ற உரிமை உண்டு என்பதை நிலை நாட்ட, அந்தப் பெண் அடிமையாக பிடிக்கப்பட்டபோது அணிந்திருந்த உடைகளை நீக்கி, நல்ல உடைகளை உடுத்துவிக்கப்படவேண்டும். தன் குடும்ப நபர்களுக்காக துக்கம் கொண்டாட 30 நாட்கள் அனுமதிக்கப்படவேண்டும்.
இ) இந்த முப்பது நாட்கள், அந்த ஆண் இந்த பெண்ணை தொந்திரவு செய்யக்கூடாது, இவளுக்கு பாதுகாப்பு அவனே தரவேண்டும்,உடவு உடை இருப்பிடன் இந்த மனிதனே கொடுக்கவேண்டும், அவனுடைய வீட்டிலேயே இந்த பெண் 30 நாட்கள் இருக்கவேண்டும்.
ஈ) இப்படி முப்பது நாட்கள் அந்த பெண் புது வாழ்விற்கு தயாராகிறாள், அந்த ஆணின் மீது சிறிது சிறிதாக அன்பு வர ஆரம்பிக்கும்.
உ) இந்த கட்டளை இல்லையென்றால், அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை, அடிமைபெண் தானே, நான் விலைக்கொடுத்து வாங்கினேன் என்றுச் சொல்லி, அவளை கற்பழிக்க மனிதன் முயலுவான் ( இதனைத் தான்குர்-ஆன் அனுமதிக்கிறது). ஆனால், யெகோவா தேவன் இதனை கட்டளையாக கொடுத்து இருப்பதினால், அவளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குறைந்தபட்சம் 30 நாட்கள் அவளுக்கு கிடைக்கிறது.
ஊ) தம்பி, இப்போது நீ "ஏன் மொட்டை அடிக்கவேண்டும்?" என்று கேள்வி எழுப்பலாம். இந்த வசனத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நீ கவனித்தால், ஒரு மணப்பெண்ணை தயார் படுத்துவது போல காணப்படும். அதாவது, புதிய வாழ்வு வருகிறது, ஒரு புதிய ஆரம்பம் வாழ்வில் தொடங்கப்போகிறது, எனவே, தலை மயிரை சிறைப்பது ஒரு புதிய ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது. தலைமயிர் மட்டுமல்ல, நகங்களையும் களையவேண்டும் என்றும் வசனம் கூறுகிறது. இந்த செயல் அப்பெண்ணை அவமானப்படுத்துவதற்கு அல்ல, அவளுக்கு ஒரு புதிய ஆரம்பத்தைப் பற்றிய மகிழ்ச்சியை அல்லது மாற்றத்தை தெரிவிக்க இப்படி சொல்லப்பட்டுள்ளது. அப்பெண் அந்த குடும்பத்தில் தொடர்ந்து மொட்டை அடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வசனம் சொல்லவில்லை, ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செய்யப்படவேண்டும். மனதளவில் தான் ஒரு புதிய வாழ்விற்குள் நுழையப்போகிறாள் என்ற உணர்வு அவளுக்கு வருகிறது.
4) இப்போது கணவன் மனைவி என்ற உறவு முறையில் புதிய வாழ்வை தொடங்கலாம்:
அந்த முப்பது நாட்கள் அவளை இந்த ஆண் நெருங்கக்கூடாது, அவள் தன் துக்கத்தை நினைத்து அழுது, தன் குடும்ப நபர்களை பிரிந்த துக்கத்தை நினைத்து, அழுது, மன சாந்தி அடையவேண்டும். அதன் பிறகு, அந்த யூதன் அவளுக்கு கணவனாக இருக்கவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும். ஆனால், குர்-ஆன் என்ன சொல்கிறது? திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அப்பெண்ணோடு உடலுறவு கொள்ளலாம். அந்தோ பரிதாபம்.
21:13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
நன்றாக கவனித்துப்பார் தம்பி, "அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாக இருப்பாள்", என்று வசனம் சொல்கிறது, கணவன் மனைவி உறவுக்குள் மட்டுமே தாம்பத்திய உறவு, அதற்கு வெளியே அது விபச்சாரம் எனப்படும். எப்படி பைபிள் ஒரு அடிமைப் பெண்ணுக்காக பேசுகிறது என்பதை கவனி, எப்படி இந்த அந்நிய நாட்டுப் பெண் ஒரு யூதனுடைய வீட்டிற்குள் நடத்தப்படுகிறாள் என்பதை கவனி.
5) அவளை மறுபடியும் விற்கும் உரிமை உனக்கு இல்லை:
தம்பி, யெகோவா தேவன் எப்படி தன்னை தொழுதுக்கொள்ளும் ஆண்கள் நடந்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார் என்பதைப் பார். இந்த பெண் நான் விலைக்கொடுத்து வாங்கிய அடிமை தானே என்றுச் சொல்லி, அவளோடு அனேக நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, மறுபடியும் அவளை அடிமையாக விற்க உனக்கு உரிமை இல்லை. எனவே, உனக்கு அவள் பிரியமானவளாக இல்லாமல் போனால், அவளை அப்படியே விடுதலையாக போகவிட்டுவிடு, மறுபடியும் விற்று அவளை அடிமையாக்காதே.
21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். (உபாகமம் 21:14)
அவள் உனக்கு மனைவியாக இருந்தாள் நீயும் புருஷனாக இருந்தாய். அவளோடு நீ உடலுறவு கொண்டபடியினாலே "நீ அவளை தாழ்மைபடுத்தினாய்", இதற்கு உனக்கு தண்டனையாக, நீ மறுபடியும் அவளை விற்று லாபம் சம்பாதிக்க உனக்கு உரிமை இல்லை.
தம்பி, அல்லாஹ் இந்த விஷயம் பற்றி என்ன சொல்கிறார்? வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட பெண்களை அனேக ஆண்டுகள் கற்பழித்துவிட்டு, மறுபடியும் அவளை விற்க அல்லாஹ் அனுமதி தருகிறார், இதுவா அடிமைப்பெண்கள் பற்றி அல்லாஹ் கொண்ட அக்கரை.
தம்பி, இதுவரை படித்த விவரங்கள் ஏதோ இரகசியம் அல்ல. தமிழில் அந்த நான்கு வசனங்களை நீயே படித்து இருந்தால், புரிந்துக்கொண்டு இருப்பாய். ஆனால், இஸ்லாமியர்களின் சொற்களைக் கேட்டு, நீ ஆய்வு செய்யாமல் கேள்வி எழுப்புகிறாய். யெகோவா தேவன் எப்படி ஒரு அந்நியப்பெண்ணைப் பற்றி எழுதியுள்ளார் என்பதை நீயே கவனித்துப் பார்.
1) ஒரு யூதன் திருமணம் செய்யாமல் அடிமைப்பெண்ணை தொடக்கூடாது,
2) அந்த பெண்ணுக்கு 30 நாட்கள் தன் குடும்ப நபர்களை நினைத்து துக்கம் கொண்டாட தன் வீட்டிலேயே அனுமதி அளிக்கவேண்டும்.
3) இந்த 30 நாட்களிலும் அவளை தொடக்கூடாது.
4) அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு, அவளுக்கு புருஷனாக அவளோடு வாழவேண்டும், அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.
5) மேலும், அவளை மறுபடியும் விற்க இந்த யூதனுக்கு அனுமதி இல்லை, அந்தப் பெண் விடுதலையான பெண்ணாக வாழ விட்டுவிடவேண்டும்.
பார்த்தாயா தம்பி, பைபிளின் தேவன் எப்படி அந்நிய பெண்ணுக்காக கட்டளைகளை கொடுத்துள்ளார், இவர் தான் உண்மையான தெய்வம். இப்படிப்பட்டவரை தொழுதுக்கொள்வதில் கிறிஸ்தவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால், நீ தொழுதுக்கொள்ளும் அல்லாஹ் அடிமைப்பெண்களின் திருமணம் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அடுத்த கடிதத்தில் விவரிக்கிறேன்.
நான் சொன்ன விவரங்களை ஒரு முறை பரிசோதித்துப் பார். யேகோவா தேவன் அடிமைப்பெண்கள் விஷயத்தில் கரிசனை உள்ளவராக இருக்கிறார். அல்லாஹ் அடிமைப்பெண்களை அவமானச் சின்னங்களாக மாற்றுகிறார்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum