வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:09 pm
1. ஃபிளாஸ்க்கைப் பராமரிப்பது எப்படி?
ஃபிளாஸ்க்கைக் கழுவும்போது வெந்நீரைப் பயன்படுத்துங்கள். ஃபிளாஸ்க்கைப் பயன்படுத்தாத பொழுது கப், மூடி ஆகியவற்றைத் திறந்து வையுங்கள்.
ஃபிளாஸ்கில் எதை ஊற்றினாலும் ஓர் அங்குலத்திற்குக் கீழ் நிற்கும் வரை ஊற்றினால்தான் நல்ல பாதுகாப்பு இருக்கும்.
பாலைப் பாதுகாப்பதற்கு, கொதிக்கும் நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ ஊற்றி வையுங்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும்.
சூடான பானம் வைப்பதற்கு முன் ஃபிளாஸ்கை வெந்நீரால் கழுவுங்கள். அவ்வாறே ஐஸ் வாட்டர் வைக்கும் பொழுது குளிர்ந்த நீரால் கழுவுங்கள்
ஃபிளாஸ்கை கையில் சற்று சாய்வாகப் பிடித்து கொண்டு சூடான திரவத்தை ஊற்றினால் ஃபிளாஸ்க் உடையாது தவிர்க்கலாம்.
உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.
நன்றி: கீற்று
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:11 pm
2. கிரைண்டர் பராமரிப்பது எப்படி?
• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.
• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.
• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.
• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.
• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.
• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.
• கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.
• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.
• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.
• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.
• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:12 pm
3. குளிர்சாதனப் பெட்டியை பராமரிப்பது எப்படி?
1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:13 pm
4. கடிகாரம் பராமரிப்பது எப்படி?
1. கைக் கடிகாரம் வாங்கிய தேதியிலிருந்து அதன் பாட்டரி ஆயுளைக் கணக்கிடக்கூடாது. கடையிலிருந்த நாட்களிலும் பாட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
2. பாட்டரியின் ஆயுட்காலம் முடிந்தவுடன் கைக் கடிகாரத்திலிருந்து உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும்.
3. இரசாயனப் பொருட்களோ, வாயுக்களோ அதிகம் வெளிப்படும் இடங்களில் கைக் கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு வேலை செய்யக் கூடாது.
4. கைக் கடிகாரத்திற்குள் நீர்க்கசிவு இருப்பது போல் தெரிந்தால் உடனடியாகச் சரி பார்க்க வேண்டும்.
5. கைக் கடிகாரத்தை வோல்டேஜ் ஸ்டெபிலைசர் போன்ற காந்த சக்தி அதிகமுள்ள பொருள்களின் அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:13 pm
5. மிக்ஸியை பராமரிப்பது எப்படி?
1. லோவோல்டேஜ் ஆக இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.
2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.
3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப்படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடும்.
4. ஜாரில் போட்டு அரைத்ததும் உடன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரம் கழுவும் போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.
5. மிக்ஸி பிளேடுகளை சாணை வைக்ககவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் பொறுத்தே நைசாக அரைக்கும்.
6. மிக்ஸின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் ஓட்டவும். பிளேடுகல் கூர்மையாகிவிடும்.
7. ஜார்களில் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.
8. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.
9. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.
10. மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும்.
11. அரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும்.
12. மிக்ஸியில் ஜாரின் அடிப்பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதாகிவிடும்.
13. அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம்.
14. மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது.
15. இட்லிக்கு மிக்ஸியில் புழுங்கல் அரிசி அரைக்கும் போது இரவே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:14 pm
6. தொலைக்காட்சியை பராமரிப்பது எப்படி?
- தொலைக்காட்சிக்கு வோல்டெஜ் ஸ்டெபிலைசர் மிக அவசியம்.
- தொலைக்காட்சியை நிறுத்தும்போது முதலில் தொலைக்காட்சியில் உள்ள சுவிட்சை அணைத்து விட்டுப் பிறகு மின் இணைப்பைத் துண்டிக்கும் சுவிட்சை அணைக்க வேண்டும். தொலைக்காட்சியை இயக்க விரும்பும்போது முதலில் மின் சப்ளை சுவிட்சைப் போட்டு விட்டுப் பிறகு தொலைக்காட்சி. சுவிட்சைப் போட வேண்டும்.
- அதிக வெளிச்சம் உள்ள இடத்திலும் வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள இடத்திலும் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. அறையிலுள்ள விளக்கு 40 முதல் 60 வாட் பல்புகளுக்கு மேற்பட்டதாக இருக்கக் கூடாது.
- சுவற்றை ஒட்டினாற் போல் தொலைக்காட்சியை வைக்கக் கூடாது. அரை அடி இடைவெளியாவது அவசியம். அப்போது தான் செட்டுக்குள் காற்றோட்டம் இருக்கும். அழகான காபினட்களில் சிலர் தொலைக்காட்சியை வைத்திருப்பார்கள். அதன் பின்புறம் திறந்தபடி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
- தண்ணீர் டம்பளர் போன்றவற்றை தொலைக்காட்சி மேல் வைக்கக் கூடாது. ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடும்.
- ரேடியோ, டேப்ரிகார்டரை கலர் டி,வி மீது வைக்கக் கூடாது. ஸ்பீக்கரின் காந்தம் தொலைக்காட்சியில் கலர்ப்புள்ளிகள் தோன்றச் செய்யும்.
- ஆன் செய்த நிலையில் தொலைக்காட்சியை நகர்த்தக் கூடாது.
- தொலைக்காட்சி மேல் நட், ஸ்குரூ போன்றவற்றை வைக்கக் கூடாது. அவை தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் தொலைக்காட்சி பழுதடையும்.
- ரிமோட் கன்ரோல் வைத்திருப்போர் அதையே பயன்படுத்தவும்.
- புயல், மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி ஒயரின் இணைப்பை துண்டித்து விட வேண்டும்.
- மின்சாரம் தடைபடும்போது உடனடியாக தொலைக்காட்சியை அணைத்து விட வேண்டும்.
- தொலைக்காட்சியை துணி அல்லது அதற்குரிய கவரால் மூடும்போது தொலைக்காட்சியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் தொலைக்காட்சியை வைக்க வேண்டும்.
- எப்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் 10 அடிகள் விலகி அமர்ந்து பார்ப்பது கண்களுக்குப் பாதுகாப்பானது.
- தொலைக்காட்சியை ஜன்னல் அருகில் வைப்பதை தவிர்ப்பதன் மூலம் மழை, இடி, மின்னல் ஆகியவற்றிலிருந்து தொலைக்காட்சியை காக்கலாம். தொலைக்காட்சியின் பிரதானப் பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாக பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். தொலைக்காட்சியும் அடிக்கடி பழுதாகாது.
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:15 pm
7. குக்கர் பராமரிப்பது எப்படி?
1. கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும்.
2. குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைத்ததினால் அடியில் உப்புக் கறை போல் ஏற்பட்டு விடக் கூடும். அதைத் தவிர்க்கப் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது.
3. குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்களை அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப் வழியாக நீராவி வருவதைப் பார்த்த பிறகே குண்டு போட வேண்டும். நீராவி வரவில்லையென்றால் அடுப்பைச் சிறிய அளவில் வைத்து விட்டு குக்கர் மூடியில் உள்ள வெண்ட் பைப்பில் பொருள்கள் அடைத்து இருந்தால் சுத்தம் செய்துவிட்டு குண்டு போட வேண்டும்.
4. குக்கரில் கைப்பிடி உடைந்து விட்டால் உடனடியாகப் புதியது மாற்றி விட வேண்டும். ஏனென்றால் குக்கரில் பொருள்களை வைத்து மூடுவதற்கும் திறப்பதற்கும் கஷ்டமாக குக்இருக்கும். அதோடு அழுத்தத்தில் இருக்கும் நீராவி நம் உடம்பின் மீது படுவதற்கும் வழியாக இருக்கும்.
5. பிரஷர் குக்கரில் உள்ள ‘காஸ்கெட்’டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டுவிட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
6. புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
7. குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப் பிடிக்காமல் இருக்கும்.
8. குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
9. குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் குறையல்ல. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
10. குக்கரில் காய்கறி வேகும் போது அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
11. குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக் கறையுள்ள அளவு ஊற்றி 2,3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:16 pm
8. காஸ் சிலிண்டரை பராமரிப்பது எப்படி?
- சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
- ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.
- அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.
- அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள், அடுப்பை அணைத்து வெளி வரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம்.
- காஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ் குழாயைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸ் குழாயில் குழந்தைகள் விஷமம் செய்வதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
- அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.
- சுய ரிப்ப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் காஸ் உபகரணங்களைப் பழுது பார்க்க அனுமதுக்கக் கூடாது. விறபனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும்.
- மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். மின்சார இணைப்புகள் இயங்க கூடாது.
ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெயில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.
அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெது வெதுப்பான் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்.
குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றைச் சூடாக இருக்கும்போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
பெயிண்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும் போது நனைந்த துணியால் துடைக்கக் கூடாது. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் மாறலாம்.
காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிதைத் தடுக்கும்.
மண்ணெண்ணெய் ஸ்டவ்களைப் பயன்படுத்துபவர் அது எரிந்துக் கொண்டிருக்கும் போது அதற்கு எண்ணெய் ஊற்ற முயலக்கூடாது. ஸ்டவ்வின் எல்லாப் பகுதிகளும் சூடேறி இருப்பதால் எண்ணெய் பட்டவுடன் திடீரென அது பற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
டாங்கில் எவ்வளவு மண்ணெண்ணெய் நிரப்ப வேண்டும் என்றா குறியீடு எல்லா ஸ்டவ்களுலும் இருக்கும். அதற்கு மேல் மண்ணெண்ணெய் ஊற்றக்கூடாது.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஸ்டவ் திரிகளைச் சமன்படுத்தி உயரமாக இருக்கும் திரிகளை மட்டும் நறுக்கி விடவும். டாங்கில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு மணி நேரம் ஆனப் பின்பே புதிய ஸ்டவ்வை முதல் முறையாகப் பயன்படுத்த முடியும்.
நீரைத் தெளித்து அடுப்பை அணைப்பது தவறு. அப்போது வெளிப்படும் வாயு உடலுக்கு கேடு செய்யும்.
Re: வீட்டுப் பொருட்களை பராமரிப்பது எப்படி?
Thu Aug 08, 2013 10:17 pm
9. பட்டுத் துணிகளை பராமரிப்பது எப்படி?
1. பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது. அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.
2. பட்டுத் துணிகளை துவைத்து உலர்த்தும் போது வெயிலில் உலர்த்தாமல், நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது.
3. பட்டுப்புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.
4. பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விடக் கைகளால் துவைப்பதே நல்லது.
5. பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளைப் பட்டுப் புடவையின் மேல் போட்டு வைக்க கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போவதற்கு அது ஒரு காரணமாக அமைகிறது.
6. ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும் பட்டுப் புடவையை துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்தியப் பின்பு காற்று படும் இடத்தில் புடவையை அவிழ்த்துப் போட்டு விட்டுப் பின்பு இஸ்திரி போட்டால் போதும்.
7. ஒரு படித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டு துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.
8. பட்டுப் புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தைக் கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum