அஞ்சல் துறையின் - தந்தி சேவை - நிரந்தரமாக நிறுத்தம்
Mon Jul 01, 2013 12:27 pm
மரணத்தின் மடியில் போராடிக் கொண்டிருந்த எத்தனையோ பேரின் நிலைமையை நான்தான் அவர்களின் சொந்தபந்தங்களுக்குப் போய்ச் சொல் வேன். மரணச் செய்திகளைக்கூட நான்தான் சுமந்து செல்வேன். இன்று நானே மரணப்படுக்கையில் கிடக்கிறேன். என் மரணச் செய்தியையும் நானே உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
எனக்கு நாள் குறித்துவிட்டார்கள். ஜூலை 15 ஆம் தேதியுடன் என் ஆயுள் முடி வடையப் போகிறது. இப்போது நான் யார் என்பதை அநேகமாக நீங்கள் யூகித் திருப்பீர்கள். நான்தான்... ... ... தந்தி. அஞ்சல் துறையின் மிக முக்கியமான சேவை நான் தான். பொதுமக்களின் நல்லது, கெட்டது, அவசரம் எதுவாக இருந்தாலும் என்னைத்தான் தேடி வருவார்கள்.
நான் வெள்ளைக்காரர்களால் இந்தியாவுக்குள் வந்தவன் என்றாலும் தமிழ் உள்பட பல மொழிகளிலும் வாழ்த்துச் செய்திகளை சுமந்து சென்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய அடிப்படை மொழி கட்.. கடா.. கட்.. கடாகட் என்கிற ஓசை மட்டும்தான். ஷில்லிங் என்பவரால் 1832 இல் நான் உருவாக்கப்பட்டேன். அவசர செய்திகளை மிகச் சுருக்கமான மின் சொற்களாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்புவதற்கு வசதியாகத்தான் என்னை உருவாக்கினார் அவர்.
1850 இல் டல்ஹவ்சி வைசிராயாக இருந்தபோது இந்தியாவுக்கு என்னை அழைத்து வந்தார்கள். கொல்கத்தாவுக்கும் அதன ருகிலுள்ள டயமண்ட் ஹார்பருக்கும் இடையில்தான் நான் முதலில் இயங் கினேன். 1851 பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனிக்காக சேவையாற்றத் தொடங் கினேன். 1853 இல் எனக்கெனத் தனித் துறை உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேவையாளனாக மாறினேன். 1854 இல் நான்காயிரம் மைல் நீளத்திற்கு மின் கம்பிகள் அமைக்கப்பட்டு என்னுடைய சேவை வளர்ந்தது. 1902 இல் கம்பி யில்லாமலேயே ஒயர்லெஸ் மூலமாக இயங்கத் தொடங்கினேன்.
1927 இல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வான் அலைவரிசை மூலமாக செயல்பட ஆரம்பித்தேன். சுதந்திர இந்தியாவில் கிராமப்புறங்கள் வரை என் கால்படாத இடமே கிடையாது என்கிற அளவில் சேவையாற்றினேன். திருமண வீடுகளுக்கு நான் சுமந்திருக்கும் வாழ்த்துச் செய்தி யுடன் என்னை தபால்காரர் சுமந்து செல்வார். அந்த செய்தியைப் பார்த்ததும் குடும்பத்தினர் முகத்தில் ஏற்படும் மலர்ச் சியைக் கண்டு நான் மகிழ்வேன். என்னை சுமந்து சென்ற தபால்காரருக்கு அன் பளிப்பாக சிறுதொகை கொடுத்து அவர்கள் மகிழ்வார்கள்.
ஆனால், பொது மக்களிடம் அதிகளவில் நான் கொண்டு சென்றது சோகச் செய்திகளைத்தான். வெளியூரில் இருக்கும் உறவினருக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்பதையும், விபத்தில் இன்னார் இறந்து விட்டார் என்பதையும் சுருக்கமான செய்தியாக நான் சுமந்திருப்பேன்.
அப்போது என்னை சுமந்துசெல்லும் தபால்காரரின் நிலையைப் பார்க்கவேண்டுமே! ஊர்ப்புறங்களில் பலருக்கு படிக்கவே தெரியாத காலம் அது. தபால்காரர்தான் நான் சுமந்திருக்கும் சோக வாசகங்களைப் படிப்பார். அதைக் கேட்ட வேகத்தில் அதிர்ச்சியும் கோபமுமாக அவரது கன்னத்தில் அறைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். தந்தி என்ற என் பெயரைக் கேட்டாலே, அய்யய்யோ.. யாருக்கு என்னாச்சி என்று கதறக்கூடிய அளவுக்கு அப்போது மக்களின் மனநிலை இருந்தது. நான் வருகிறேன் என்றாலே பொதுமக்கள் பதறுவார்கள்.
[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]மரணப் படுக்கையில் நான்...[/b]
என்னை சுமந்து சென்றதற்காக அடியும் உதையும் வாங்கிய தபால்கார சகோதரர்களை மரணப்படுக்கையில் கிடந்தபடி நினைத்துப் பார்க்கிறேன். வேதனையாக இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நானும் அவர்களும் சேவையாற்றிக்கொண்டே இருந்தது தான் நினைவுக்கு வருகிறது.
வரலாற்றின் பக்கங்களில் எனக்கெனத் தனி இடம் இருப்பதில் ஒரு சிறு ஆறுதல். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி உள்பட எத்தனையோ தலைவர்கள் என் மூலமாக அவசரச் செய்திகளை அனுப்பி போராட்டத்தை வேகப்படுத்தினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்குவதை எதிர்த்து காந்தி பட்டினிப் போராட்டம் இருந்ததால், அம்பேத்கர் தன் கோரிக் கையை கைவிடும் வகையில் புனே ஒப்பந்தத்திற்கு முன்வந்தார். அப்போது, ஒரு காந்தியாரைவிட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல.
அவர்களின் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஏமாந்து போகாதீர்கள் என்று அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்த தந்தை பெரியார் அம்பேத்கருக்கு என் மூலமாகத்தான் செய்தி அனுப்பினார். அந்த நெருக்கடியான நேரத்தில், அம்பேத்கருக்கு பெரும் ஆதரவாக நின்ற ஒரே தலைவரான பெரியாரின் செய்தியை சுமந்து சென்றதில் எனக்கு இன்றளவும் பெருமிதம் உண்டு.
ஈழத்தமிழர் உரிமை களுக்காக, மரண தண்டனைக்கு எதிராக, இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்காக எனத் தமிழக அரசியல் களத்தில் என் மூலமாக டில்லியை முற்றுகையிட்ட போராட்டங்கள் நிறைய உண்டு. எத்தனையோ தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி, அவர்களின் மரணத்தில் இரங்கல் செய்தி என்று என் தோள்கள் சுமந்தவை ஏராளம்... ஏராளம். ஆனால், இன்று நான் துவண்டு கிடக்கிறேன்.
[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]காலவெள்ளம்....[/b]
காலவெள்ளம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டபடியே ஓடும் வல்லமை மிக்கது. 1995 இல் இந்தியாவுக்குள் இணையதளம் என்ற அதிநவீனத் தகவல் தொடர்பு வசதி நுழைந்தது. அதன்பின் எத்தனை வேக மான வளர்ச்சிகள். மின்னஞ்சல், செல்போன் குறுஞ்செய்திகள், முகநூல், ட்விட்டர் என உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஏராளமான தளங்கள் வந்துவிட்டன.
என்னை கண்டுகொள்ள ஆளில்லை. என் காலம் முடிந்துவிட்டது. அரசர்கள் காலத்தில் புறாக்கள் சுமந்து சென்ற செய்திகளைவிட, ஆங்கிலேயர்கள் காலத்தில் நான் சுமந்து சென்ற செய்திகள் வேகமாக சென்றன. என்னைவிட பலமடங்கு வேகமாக இன்று உலகத்தின் எந்த மூலைக்கும் உடனுக்குடன் செய்தி களை அனுப்பமுடிகிறது.
நவீனத் தகவல் தொழில்நுட்பங்களெல்லாம் என் பேரன் பேத்திகள்தான். தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார் திருவள்ளுவர். என் வழிவந்த மக்களாகிய நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி கண்டு மகிழும் தாத்தாவாக நான் மரணப் படுக்கையில் கிடக்கிறேன். உலகத்தை இணைக்கும் சக்தியாக விளங்குங்கள்.
மக்களுக்குத் துணையாக இருங்கள். சமுதாயத்தை மேம்படுத்த உதவுங்கள். சீரழிவுகளுக்குத் துணை போகாதீர்கள்- என் பேரன் பேத்திகளான புதிய தகவல் தொழில்நுட்பங்களுக்கு நான் எழுதும் இந்த உயில்தான் என்னுடைய கடைசி செய்தி. போய்வருகிறேன்.''
[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]கட்... கடா... கட்... கடா... கட்.[/b]
[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"](ஜூலை 15 ஆம் தேதியுடன் இந்திய அஞ்சல் துறையின் தந்தி சேவை நிறுத்தப்படவிருப்பதாக அறிவிப்பு)
லெனின்[/b]
லெனின்[/b]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum