இந்த புகைப்படத்திலிருக்கும் வலியை எந்த வார்த்தைகளாலும்
Sun Dec 17, 2017 9:14 am
எந்த வார்த்தைகளாலும் இந்த புகைப்படத்திலிருக்கும் வலியை கடத்திவிட முடியாது..
ஒரு பேரழிவை தமிழகம் சந்தித்திருக்கிறது.. ஆனால் கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இல்லாத ஆட்சியாளர்கள் ஆர்.கே.நகரில் பணத்தை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள்..
ரத்த களறியில் முடித்து வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் கடலை நோக்கி ஓடிய மக்களுக்காக தண்ணீர் கேனை தூக்கி கொண்டு ஓடியதால் அடித்து துவைக்கப்படு வீடுகள் சூறையாடப்பட்ட மீனவர்களும் மீனவ பெண்களும் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறார்கள்.
சமவெளி சமூகத்தின் எல்லா போராட்டங்களிலும் அந்த மக்கள் துணை நிற்கிறார்கள். ஆனால் பதிலுக்கு அந்த மக்களுக்கு நாம் நன்றியோடு இருக்கிறோமா..
``புயல் எச்சரிக்கை விட்டப்பிறகும் எதுக்கு இவங்க கடலுக்குள்ள போனாங்க’’ என்று கேள்வி எழுப்பும் அளவுக்கே சமவெளி மக்களின் புரிதல் இருக்கிறது.
சமவெளி சமூகத்திற்கு மீனவ மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. எச்சரிக்கைக்கு முன்பே கடலுக்குள் சென்றவர்கள் தான் மாட்டிக்கொண்டார்கள் என்ற எளிய உண்மை தெரியவில்லை. கடற்புரத்து சமூகத்திற்கும் சமவெளி சமூகத்திற்குமான இடைவெளி பெரிதாக இருக்கிறது.
விவசாயிகளின் போராட்டம் என்றால் பொதுவானது என்று ஏற்கும் மனது மீனவர்களின் போராட்டத்தை அப்படி ஏற்க முடியவில்லை.
இந்தியாவின் நட்பு நாடால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது சமவெளி சமூகத்திற்கு வெறும் சிங்கிள் காலம் செய்தி..
ஊடகங்களை வர வைத்து கடற்புரத்து மக்களின் வலியை சமவெளி சமூகத்திற்கு சொல்ல பத்திரிகையாளர் அருள் எழிலன் உள்ளிட்ட சில நண்பர்கள் தவித்த தவிப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
மீனவர்களை சந்திக்க குமரி சென்று வந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.. அங்கு நடந்திருப்பது ஒரு பெரும் பேரழிவு.. சொல்லப்போனால் இந்திய ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நடந்த ஒரு இனப்படுகொலை.
தமிழ்நாடு வெதர் மேன் என்ற பிரதீப் ஜான் என்ற தனி நபர் கொடுக்கும் அறிவிப்பை கூட ஒரு நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையத்தால் செய்ய முடியவில்லை.
ஆனால் வல்லரசு பிற்றலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
மீனவ கிராமங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொருவர் வீட்டிலும் கணவனோ அண்ணனோ அப்பாவோ தம்பியோ காணாமல் போயிருக்கிறார்கள்.
அதிக பட்சம் ஒரு மனிதனால் கடலுக்குள் இரண்டு நாட்கள் உயிரோடு தாக்குப்பிடிக்க முடியும்..
அதன்பிறகான காலம் என்பது சிறுக சிறுக கொல்லப்படுவதுதான். ஐந்து நாட்களுக்குள் கடற்படை முழுமையான அக்கறையுடன் தேடியிருந்தார்கள் என்றால் உயிருடன் மீட்க முடியாத மீனவர்களை.. வெறும் உடலாகவாவது மீட்டிருக்கலாம்.
ஆனால் கடற்கரையிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்த விரும்பு ஆட்சியாளர்கள் எப்படி அதை செய்வார்கள்.
மீட்பு பணியில் ஈடுபட்டதாக சொன்னவர்கள்.. டீசல் அளவை காரணம் காட்டி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக மாட்டோம் என்று சொல்வது எவ்வளவு கேவலமானது.
எதிர்கட்சித்தலைவர் வந்துவிட்டு போனதும் வேறு வழியில்லாமல் பிரதமர் வரப்போகிறாராம்.. ஒருவேளை குமரி வெளிநாட்டில் இருக்கிறது என்று சொல்லியிருந்தால் உடனே விமானத்தில் பறந்து வந்திருக்க கூடும்.
இப்போது குமரியின் ஒவ்வொரு மீனவ கிராமங்களும் குமுறிக்கொண்டிருக்கும் எரிமலையைப்போல் இருக்கிறது.
டிசம்பர் 25 கிறிஸ்த்துமஸ் வரை அந்த எரிமலையின் அமைதி இருக்கும். காணமல் போன மீனவர்கள் எப்படியாகிணும் அந்த நாளில் வீடு வந்துவிடுவார்கள் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள்.
ஒருவேளை அவர்கள் வரவில்லை என்றால் அதன் விளைவு வேறுமாதிரியாக இருக்கும்..
கடலில் மிதக்கும் உடல் தன் அண்ணன் உடலாக இருந்துவிடுமோ.. கணவன் உடலாக இருந்துவிடுமோ.. என்று கடற்கரையில் ஒவ்வொரு பெண்களும் கலக்கத்துடன் காத்திருக்கும் வலியை ஆர்.கே.நகரில் பணத்தை அள்ளிவிட்டு ஓட்டு வேட்டையாடும் மானங்கெட்டவர்களால் புரிந்து கொள்ள முடியாது..
அந்த வலியை புரிந்து கொள்ளவேண்டுமானால் அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்..!
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
16-12-17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum