ஜெருசலேம் - தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது ஏன்?
Fri Dec 08, 2017 8:21 am
"ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. டெல் அவிவ் நகரத்திலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’, என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில கணங்களிலேயே உலகம் சூடேறத் தொடங்கியது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகளும், ‘இது நிச்சயம் அமைதி என்பதே இனி இஸ்ரேல்-பாலஸ்தீனிய மண்ணில் உருவாகாமல் பார்த்துக்கொள்ளும்’, என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒரு நகரத்தை, அதுவும் தற்போது ஒரு நாட்டின் ஆளுகைக்குக் கீழிருக்கும் அந்த நகரத்தை, அதே நாட்டின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது ஏன்?. இத்தனை எதிர்ப்புகளையும், வேதனைக் குரல்களையும் எழுப்பி விட்டிருப்பதற்கான ஒரே காரணம், ஜெருசலேம்.
ஜெருசலேம் நமக்கெல்லாம் ஒரு பழைமையான நகரம், பார்ப்பதற்கு நிறைய தேவாலயங்களும், மசூதிகளும் அங்கு உள்ளன, அவ்வளவு தான். ஆனால், யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் 'ஜெருசலேம்' என்பது புனிதம், அவர்களின் சொத்து, உரிமை. ஜெருசலேம் என்பது அவர்களின் உணர்வு. அந்த மண்ணுக்காகத்தான் காலம் காலமாக துரோகங்களும், யுத்தங்களும், கதறல்களும் நடந்தேறி வருகின்றன. இஸ்ரேல் என்ற நாடு தோன்றியதற்கும் இன்று வரை பாலஸ்தீனியர்கள் தனிநாடு என்ற ஒன்று கிடைக்கப்பெறாமல் போராடுவதற்கும் ஒரே காரணம் ஜெருசலேம்.
கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘கானான் தேசம்’ என்று கூறப்பட்ட இன்றைய பாலஸ்தீன் மண்ணில் யூதர்கள் நிரம்பியிருந்தார்கள். ‘மெசொப்பொத்தேமியா’ என்று கூறப்பட்ட இன்றைய ஈராக்கில் வாழ்ந்த ‘யூதர்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஆபிரஹாம், கடவுளின் விருப்பத்திற்கேற்ப ஈராக்கிலிருந்து பாலஸ்தீனிற்கு இடம்பெயர்ந்தார். இது பைபிள், யூதர்களின் புனிதநூலான 'தோரா' கூறும் வரலாறு. ஆகவே, பாலஸ்தீன்(கானான்) என்பது அவர்களுக்குக் கடவுள் கொடுத்த நாடு என்பது அவர்களின் நம்பிக்கை. பல ஆயிரம் வருடங்களுக்கு அங்கு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பிற்பாடு பாலஸ்தீன் பல்வேறு வலிமை வாய்ந்த சாம்ராஜ்ஜியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, யூதர்கள் அடக்குமுறைக்கும், நாடு கடத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டபோது யூதர்கள் பாலஸ்தீனிய மண்ணை விட்டு வெளியேறினார்கள். பல்வேறு நாடுகளில் பிழைப்புக்காகத் தங்கிக்கொண்டார்கள். ஆனாலும், சொந்தநாடு ஒன்று வேண்டும் என அவர்கள் எண்ணும்போதெல்லாம் அவர்கள் நினைப்பில் வந்து ஒட்டிக்கொள்வது பாலஸ்தீன். காரணம் ஜெருசலேம், அவர்களின் புனித நகரம். அங்குதான் முதல்முறையாகத் தங்களது கடவுளுக்கு அவர்கள் ஒரு கோவில் (சினகா) கட்டினார்கள். இன்று ஒரு பழம்பெரும் சுவர் மட்டுமே அங்கு மிஞ்சியிருக்கிறது. அந்தச் சுவரில் (அழுகைச் சுவர்) முகத்தைப் புதைத்து அழுது கொண்டுதான் அவர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.
பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் உலகம் முழுக்க சுற்றியிருக்கிறார்கள், நாடு என்ற ஒன்றே இல்லாமல். 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் யூதர்கள் தங்களுக்கு என ஒரு நாடு இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்கள். 'பாலஸ்தீன் வேண்டும்' என முடிவெடுத்தபோது அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் 'ஜியோனிஸம்'. உலகமெங்கும் வாழும் யூதர்களிடமிருந்து பணம் திரட்டி, நில வங்கி என்னும் ஒன்றைப் பாலஸ்தீனிய மண்ணில் ஏற்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலஸ்தீனிய மக்களின் நிலங்களை வாங்கி, அவற்றில் யூதக் குடியிருப்புகளை நிறுவுவதுதான் ஜியோனிஸத் திட்டம். இந்த நடவடிக்கையின் மூலமாகப் பெருமளவு பாலஸ்தீன நிலம் யூதர்களுக்குச் சொந்தமானது. இந்தத் திட்டத்தை உருவாக்கியதும், நடைமுறைப்படுத்த வழிவகுத்ததும் தியோடர் ஹெசில் என்னும் யூதர். எந்த இனக்குழுவும் இத்தனை ஒற்றுமையுடன், இனஉணர்வுடன் இப்பேற்பட்ட காரியத்தை ஆற்றியதில்லை என்று வியப்புடன் குறிப்பிடுகிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், பாலஸ்தீனியர்கள் திடீரென்று ஒரு நிலவங்கி உருவானதையோ, யூதர்கள் குடியமர்த்தப்பட்டதையோ சந்தேகிக்கவே இல்லை. முடிந்தவரை லாபம் எனத் தங்களின் நிலங்களை யூதர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த அறியாமையைத்தான் யூதர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.
இன்னொருபுறம், மற்ற நாடுகளில் பொருளாதார ரீதியில் உயர்ந்துவிட்ட யூதர்களின் மூலமாக அந்தந்த நாடுகளில் தங்களுக்கான ஆதரவைப் பெறுவதிலும் தீவிரமாக இருந்தார்கள். அப்படித்தான், முதல் உலகப்போர் சமயத்தில் பாலஸ்தீனில் பிரிட்டிஷ் மற்றும் ஃபிரஞ்சுப் படைகளின் படையெடுப்பு நிகழ்ந்தது. வெற்றிகரமாகப் பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீனைக் கைப்பற்றியதும், இங்கிலாந்து புகழ்பெற்ற பால்ஃபர் பிரகடனத்தை வெளியிட்டது. அதன் மூலம் பாலஸ்தீனில் யூதர்களுக்கு எனத் தனிநாடு ஒன்று உருவாவது உறுதியானது. அறிக்கையில் ‘பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதவர்களின் பொது உரிமைகளும், மத உரிமைகளும் காக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரகடனத்தின் மூலம் பாலஸ்தீனில் காலங்காலமாக வசித்துவரும் இஸ்லாமியர்கள் அல்ல, யூதர்களே பூர்வகுடிகள் என நிலைநிறுத்தப்பட்டது. கலங்கி நின்றார்கள் பாலஸ்தீனியர்கள்.
சிறிது சிறிதாக யூதக் குடியேற்றம் பாலஸ்தீனில் நடந்துவந்தது. இரண்டாம் உலகப்போர் சமயங்களில், யூதர்கள் பல்வேறு கொடூரங்களை அனுபவித்தார்கள். ஹிட்லர் இறந்து, போர் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, உலகமெங்கும் யூதர்களின்பால் அனுதாப அலை எழுந்தது. மே 14, 1948 அன்று இஸ்ரேலும் பிறந்தது. அதற்கு முன்பு, ஐ.நா சபை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, பாலஸ்தீன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பாதி யூதர்களின் இஸ்ரேல், மற்றொன்று அரேபியர்களின் பாலஸ்தீன். ஜெருசலேம் மட்டும் ஐ.நாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ‘யார் நாட்டை யார் கூறு போடுவது’ எனக் கொந்தளித்தார்கள் பாலஸ்தீனியர்கள்.
பெரும்பாலான நாடுகள் அன்று யூதர்களுக்குப் பாலஸ்தீன் நிலத்தை வழங்க ஆதரவு தெரிவித்ததின் முக்கிய காரணம், பாலஸ்தீனியர்கள் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்ததுதான். இங்கிலாந்து யூதர்களுக்குத் தனிநாடு அளிப்பதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவர்கள் அந்த முடிவினை எடுத்தார்கள். அந்த ஒரு முடிவின் காரணத்தினாலேயே பாலஸ்தீனியர்கள்பால் இரக்கம் காட்ட யாரும் முன்வரவில்லை. அதுமட்டுமல்லாது, இஸ்ரேலை வைத்துக்கொண்டு மத்தியக்கிழக்கில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் ஆசைப்பட்டன. அதனால், பாலஸ்தீனியர்களின் உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டது. எது எப்படியோ, பாலஸ்தீன் பிரிக்கப்பட்டுவிட்டது, ஜெருசலேம் ‘இல்லை’ என்றானது.
இஸ்ரேல் உருவான அடுத்த நாளே, யுத்தம். யூதர்களை எதிர்த்து பாலஸ்தீனியர்களுக்கு ‘ஆதரவாக’ எகிப்து, ஜோர்டான், சிரியா முதலிய அரபு நாடுகள் களம் இறங்கின. ஆனால், யுத்தம் முடிந்த பிறகு, ஒவ்வொரு நாடும் தாங்கள் முன்னேறி பாலஸ்தீன் எல்லைக்குள் வந்து ஆக்கிரமித்தப் பகுதிகளுடன் ஒதுங்கி விட்டனர். கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகள், காஸா, ஜோர்டானுக்கும் எகிப்துக்கும் என்றானது. இஸ்ரேல்தான் முன்னேறி வந்து ஆக்கிரமித்த மேற்கு ஜெருசலேமைத் தன் நிலப்பகுதி எனக் கூறிக்கொண்டது. இடையில், பாலஸ்தீனியர்கள் துண்டு நிலம் என்பதே இல்லாமல் அகதிகளாக்கப்பட்டனர். 1967 யுத்தத்தில் அந்தப் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. தொடங்கியது, ஜெருசலேம் பிரச்னைகள்.
ஜெருசலேம், 3 மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் புனித நிலம். அங்கு, அல் அக்ஸா என்றொரு பள்ளிவாசல் இருக்கிறது. அது முகமது நபியின் பாதங்கள் பட்ட இடம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அங்கு கைவைத்தது, இஸ்ரேல். அங்குதான் மன்னர் சாலமோன் கட்டிய தங்கள் கோவில் இருந்தது என்று கூறி மசூதியைத் தோண்டத் தொடங்கினர். அஸ்திவாரம் பலவீனமானது. இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் மிகவும் காலதாமதமாகத்தான் பாலஸ்தீனியர்களுக்குத் தெரிந்தது. தெரிந்தவுடன், அவர்களுக்கு இஸ்ரேல் தங்கள் நெஞ்சில் கைவைத்தது போல்தான் இருந்தது. அலறிப் புடைத்துக் கொண்டு, அவர்கள் அல் அக்ஸாவுக்கு வந்தார்கள். கலவரங்கள் தொடங்கின.
இன்றுவரை, ஜெருசலேமை இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனுடைய தலைநகரமாக உலகநாடுகள் அங்கீகரித்தது கிடையாது. அதனால்தான் ட்ரம்பின் அறிவிப்பு உலக நாடுகளை ஸ்தம்பித்துப் போகச் செய்தது. ‘இது ஓஸ்லோ உடன்படிக்கைக்கு எதிரானது, நிச்சயம் இஸ்ரேல் - பாலஸ்தீனிய மண்ணில் இனி அமைதி என்பதே இல்லாமல் போய்விடும்’ என்ற பயக்குரல்கள் எழுகின்றன. செப்டம்பர் 13, 1993 அன்று ஒஸ்லோ ஒப்பந்தம் (ஒஸ்லோ ஒப்பந்தம் என்பது பாலஸ்தீனுக்குத் தன்னாட்சி உரிமை அளிக்கும் ஒப்பந்தம்) பி.எல்.ஓவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கையெழுத்தான போது, நிஜமாகவே அமைதி பிறந்துவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர். யாசர் அராஃபத் இறந்த பின்பு அந்த நம்பிக்கை அழிந்து வந்த நிலையில், அமெரிக்கா இத்தகைய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மதம் அரசியலுடன் கலந்தால் ஏற்படும் விளைவுகளே மிக மோசமாக இருக்கும். இங்கு ஜெருசலேம் மண்ணில் மதம், உணர்வுகள், புனிதம், தெய்வீக நம்பிக்கைகள், உரிமைகள், அரசியல் என அனைத்தும் கலந்திருக்கின்றன. பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமை கிடைக்குமா, அந்த மண்ணில் அமைதி என்ற ஒன்று ஏற்படுமா? என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum