ஊழியர்கள் விரும்பும் பாஸாக மூன்று வழிகள்
Thu Aug 25, 2016 11:11 am
பாஸை குறைசொல்லாத பணியாளர்கள் இந்தக் காலத்தில் ரொம்ப குறைவு. அதிகரிக்கும் போட்டி, அசரடிக்கும் டார்கெட், ஆளைச் சாய்க்கும் கடுமையான வேலை போன்றவை பாஸுக்கும் பணியாளர்களுக்கும் இடையே எக்கச்சக்க இடைவேளையை ஏற்படுத்தி விடுகின்றன. நிர்வாகத்தின் டார்கெட்டுகளால், அனுதினமும் சந்திக்க வேண்டிய நபராக இருந்தாலும் போலியான நடிப்பை வழங்குபவர்களாக பாஸும், பணியாளர்களும் மாறி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை தரக்கூடியதாக மாறிவிடுகிறது. இதை தவிர்க்க என்ன வழி, பணியாளர்களுடன் நல்லுறவை பேண ஒரு பாஸ் என்ன செய்ய வேண்டும்?
1. நண்பன் பாதி ஆசிரியர் மீதி!
ஒரு பாஸ் தன்னுடைய பணியாளர்களிடமிருந்து அவர்களின் பெஸ்ட்டை வாங்க வேண்டுமென்றால் கொஞ்சம் நண்பனாகவும்,மீதி ஆசிரியராகவும் இருக்கவேண்டியது அவசியம். அதிகாரத்தொனி என்பது இருதரப்பிடமும் நல்லுறவை எப்போதும் வளர்க்காது . ஒரு குழுவுக்கு தலைவராக இருப்பவர், பணியாளர்களை தனித்தனியாக சந்தித்து அடிக்கடி ஊக்கப்படுத்த வேண்டும். பணியாளர்கள் செய்யும் தவறை ஒரு நல்ல ஆசிரியன் என்ற முறையில் பொறுமையாக சுட்டிக்காட்ட வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புகள் இல்லாமல் ஆரோக்கியமான அலுவலக நட்பை வளர்த்துக்கொண்டாலே உங்களிடம் இருக்கும் பணியாளர்களிடம் இருந்து சிறப்பான அவுட்புட்டை உங்களால் வாங்கிவிட முடியும்.
2. ரோல்மாடல் பணியாளனாக இருங்கள்!
அலுவலகத்தில் முதலில் நீங்கள் நம்பர் ஒன் பணியாளராக இருந்து மற்ற பணியாளர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தால் தான் நீங்கள் ஒரு நல்ல பாஸ். நல்ல பணியாளன் என்பது அலுவலகத்தை பற்றி மட்டுமே எந்நேரமும் சிந்திக்க வேண்டும்; எப்போதும் அலுவகலமே கதியென இருக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கான நேரத்தில் உங்களுக்கான டார்கெட்டுகளை திறமையோடு முடிப்பது, அலுவலகத்தில் சொந்த வேலைகளை பார்க்காமல் அலுவல் வேலைகளை மட்டுமே கவனிப்பது, குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவது, இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுப்போடு இருந்து பணிகளை முடிப்பது போன்றவை தான். நீங்கள் உதாரணமாக பெர்பெக்ட்டானவராக இருந்தாலே உங்கள் குழுவில் உள்ள பணியாளர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் பணியாளர்கள் உங்களை ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நேர்மையாக உழையுங்கள்.
3. இன்சென்டிவ்களை மறக்காதீர்கள்!
இன்சென்டிவ் என்றவுடன் அப்ரைஸல் பற்றியோ என நினைக்காதீர்கள். உங்கள் குழுவில் உள்ள ஊழியர் ஒரு வேலையை சிறப்பாகச் செய்தால் மனதார மற்ற ஊழியர்கள் முன்பு பாராட்டுங்கள். உங்கள் வசதியை பொறுத்து ஒரு டீக்கடைக்கோ ஒரு காபி ஷாப்புக்கோ அழைத்து ஸ்பான்சர் செய்யுங்கள். சின்ன சின்ன பாராட்டுக்கள் உங்கள் பணியாளர்களை உற்சாகமூட்டும். பணியாளர்கள் எதாவது தவறு செய்திருந்தால் அவரை தனியாக கூப்பிட்டு தேவைப்பட்டால் கண்டியுங்கள். " ஒரு வேலையை சரியாகச் செய்தால் எப்படி பாஸ் நம்மை பாராட்டுகிறாரோ அப்படித்தான் ஒரு வேலையை சரியாகச் செய்யவில்லை என்றால் நம்மை கண்டிக்கிறார்" என உங்கள் ஊழியர்கள் உங்களை புரிந்துகொண்டால் அது தான் உங்களின் வெற்றி.
- பு.விவேக் ஆனந்த்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum