3 ஆண்டு சிறை, 3 லட்சம் அபராதம்! -இது டோரன்ட் எச்சரிக்கை!
Mon Aug 22, 2016 3:35 pm
இதுவரைக்கும், இந்திய அரசின் உத்தரவின் பேரிலும், நீதிமன்ற உத்தரவின் பேரிலும் எத்தனையோ இணையதளங்கள் கடந்த ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளன. 2015-ல் மட்டும் 857 ஆபாச இணையதளங்களை முடக்கியது அரசு. அதற்குப் பின்னும், பல இணையதள முகவரிகள், முடக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது புதிதாக எழுந்துள்ளது ஒரு சிக்கல். ஏதேனும் டோரன்ட் சைட்டைத் திறக்கும் போது, "இந்த இணையதளத்தை பார்த்தால், 3 ஆண்டுகள் சிறை மற்றும் 3 லட்சம் அபராதம்" என அதிர்ச்சி தருகிறது ஒரு எச்சரிக்கை!
ஏதேனும் ஒரு டோரன்ட் இணையதளத்தை திறக்கும் போது, "இந்த இணைய முகவரி, அரசு அல்லது நீதிமன்ற உத்தரவால் முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை பார்ப்பதோ, இதில் இருந்து சட்டவிரோதமான விஷயங்களை, டவுன்லோட் செய்வதோ, நகல் எடுப்பதோ இந்திய சட்டத்தின் படி குற்றமாகும். இதன்படி 3 ஆண்டுகள் சிறை மற்றும் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த இணையதளத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது ஏதேனும் சட்டவிரோத இணைய முகவரியை முடக்க, urlblock@tatacommunications.com என்ற முகவரியை அணுகலாம். 48 மணி நேரத்தில் அதுபற்றிய நடவடிக்கைகள் பற்றி கூறப்படும்" என்ற மெசேஜ் மட்டும் காட்டப்படுகிறது. இதுதான் தற்போது பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் காரணம்.
இதற்கு முன்னர், தடை செய்யப்பட்ட அல்லது முடக்கப்பட்ட இணையதளங்களை நாம் பார்வையிடும் போது, "இந்த இணையதளம் நீதிமன்ற உத்தரவால் முடக்கப்பட்டுள்ளது" என்று மட்டுமே காட்டப்பட்டது. சமீபத்தில் 'கபாலி' பட விவகாரத்தில் பல இணையதளங்கள் முடக்கப்பட்ட போதும், மேற்கண்ட அறிவிப்புதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நம் இந்தியாவை பொறுத்தவரையில், இணையதளங்களை முடக்குவது என்பது 'இணையதள வசதி தரும்' (Internet Service Providers) நிறுவனங்களை சார்ந்தே அமைகிறது. உதாரணமாக இந்தியாவில் ஒரு இணையதளத்தை முடக்க வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் இணைய முகவரி (DNS) எல்லா இணைய நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அந்நிறுவனங்கள் அந்த முகவரியை (DNS) தங்கள் சர்வரில் இருந்து ப்ளாக் செய்துவிடும். இதன் மூலம், அந்த சைட்டை வாடிக்கையாளர்கள் திறக்க முடியாது. ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. இதற்கு DNS-filtering என்று பெயர். இதை வைத்துத்தான் இந்தியாவில், ஒவ்வொரு முறையும் இணையதளங்கள் முடக்கப்படுகின்றன. இதுவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நம்முன் தற்போது சாதரணமாக எழும் கேள்விகள் இவைதான்!
1. தற்போது டோரன்ட் இணையதளங்களில் வரும் எச்சரிக்கை அரசின் தரப்பில் இருந்துதான் வருகிறதா?
2. இது பற்றிய எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசிடம் இருந்தும் வரவில்லையே? அரசு எல்லா இணையதளங்களையும் எப்படி கண்காணிக்கப் போகிறது?
3. தடை செய்யப்பட்ட இணையதளங்கள் குறித்தும், இந்த அறிவிப்பு குறித்தும் எதுவும் அறியாத ஒருவர், இந்த இணையதளங்களை திறந்தால் அவரும் குற்றவாளிதானா?
எனப் பல சந்தேகங்கள் வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. விரைவில் விளக்கமளிக்க வேண்டும் அரசு!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum