உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!
Wed Jun 08, 2016 5:30 pm
'பெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து அழுதுவிடுவார்கள்' என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிட்டிவ்தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள்.
அதனால், 'ஆண் குழந்தைகளிடம் கட்டாயம் பெற்றோர் சொல்லக்கூடாத 6 வாக்கியங்கள் உள்ளன' என்கிறார் சென்னையை சேர்ந்த குழந்தைகள் மன நல மருத்துவர் ரொகாயா
பொண்ணு மாதிரி அழாத – அழுதால் என்ன?
கண்ணீர் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? அவர்களுக்கும் துக்கம் இருக்கும். அதை அழுது வெளிக்கொண்டு வருவதில் என்ன தவறு? இப்படி அவர்களது அழுகைகளை சிறு வயதிலிருந்தே தடுத்தால் அது மனதில் அழுத்தமாய் சேர்ந்துகொண்டே இருக்கும். மேலும் பெண் குழந்தைகளை இழிவுப்படுத்த உங்கள் மகனுக்கு மறைமுகமாக கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். ஒருபோது அந்த தவறை செய்யாதீர்கள்.
நீ வளர்ந்துட்ட... பொறுப்பா இரு
சிறு குழந்தையில் ஆரம்பித்து 10 வயது ஆகிவிட்ட மகன் சேட்டையில் ஈடுபட்டால், பெற்றோர் சொல்லும் வார்த்தை இது. இந்த வயதில் ''பி ய மேன்” என்பதற்கு இதில் என்ன இருக்கிறது? இப்படி சொல்லியே வளர்த்தால் பிள்ளைகள் தங்களது குழந்தை பருவத்தில் பாதியை இழந்து வலுக்கட்டாயமாக மனதளவில் வளர்கிறார்கள்.
உனக்கு எப்படி ஸ்போர்ட்ஸ் பிடிக்காம இருக்கு?
'நீ ஏன் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற? உன் ஃப்ரெண்ட்ஸ பாரு.. சூப்பரா விளையாடுறாங்க' என்று நச்சரிக்காதீர்கள். அது அவர்களின் விருப்பம். நீங்கள் ஓயாமல் சொல்லும் போது ''ஓ பையன்னா கண்டிப்பா விளையாடனும் போல, அப்போ என்கிட்ட ஏதோ குறை இருக்கோ" என்று தனக்குள் அவர்கள் குழம்பிப்போக வைக்காதீர்கள்.
உன் அக்கா மாதிரி/ தங்கை மாதிரி இரு
பொதுவாக பெண்கள் ஆண்களை விட மிக விரைவில் மனதளவில் பக்குவம் அடைந்து விடுவார்கள். இதை உணராமல் பெற்றோர்கள் பேசுவது, உடன் பிறந்தவர்களுடன் நாமே போட்டிக்கான சூழலை அவர்களிடம் விதைப்பது போலாகும்.
சங்கடப்படுத்திட்ட....
உங்கள் மகன் செய்யக்கூடாத தவறை செய்திருந்தால் கூட இது போன்ற சொற்களை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு கொடுங்கனவு போல் தூங்க விடாது. எங்கே தனது பெற்றோரின் அன்பை, பாசத்தை இழந்துவிடுவோமோ என்ற குற்றவுணர்ச்சியில் தவிப்பார்கள். நீங்கள் உடன் இருந்தாலும் தனிமை அவர்களை வாட்டும்.
நீ பொண்ணா பொறந்திருக்க வேண்டியது
அஞ்சு வயசானாலும் சரி, அம்பது வயசானாலும் சரி, அவனுக்கு அம்மா என்பது அம்மாதான். அக்கா என்பது அக்காதான். பத்து வயசானாலே போதும், 'அம்மாகூட படுக்காத, அக்காகூட படுக்காத. ஏண்டா... எப்ப பார்த்தாலும் அம்மா முந்தானையே புடுச்சிகிட்டு சுத்துற. நீ பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்' என்று சொற்களை தயவு செய்து பிரயோகிக்காதீரக்ள்.
மொத்ததில் உங்கள் பிள்ளைகள் மனதில் ஆறாத வடுவை, ரணத்தை, குற்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்திவிடாதீர்கள். அதை எதைக் கொண்டு அழிக்க முடியாது,
- க.பூபாலன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum