ரஷ்யாவில் படிக்க நாளை நேரடி மாணவர் சேர்க்கை.
Sat Jun 04, 2016 12:30 pm
இந்திய மாணவர்கள், ரஷ்யா சென்று படிப்பதற்கான, நேரடி மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கண்காட்சி, சென்னையில் நாளை துவங்குகிறது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மைய இயக்குனர் மைக்கேல் ஜே. கோர்படோவ் மற்றும் 'ஸ்டடி அப்ராட்' கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன்ஆகியோர், நேற்று அளித்த பேட்டி:
ரஷ்யாவில், 640 பல்கலைகள் உள்ளன; இவற்றில், 57 பல்கலைகள் மருத்துவம் சார்ந்த படிப்பை வழங்குகின்றன. இவற்றில் ஆண்டுதோறும், 90 லட்சம் பேர் பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கின்றனர். அதில், இரண்டு லட்சம் பேர், வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.அவர்களிலும், 8,000 பேர் இந்திய மாணவர்கள்.
இந்திய மாணவர்களில், 70 சதவீதம் பேர், மருத்துவ படிப்புக்கே ரஷ்யாவுக்கு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு, 1,200 பேர் ரஷ்யாவில் பட்டம் பெறுகின்றனர். ரஷ்யாவில் மருத்துவம் படிக்க செல்லும் முன், இந்திய மருத்துவ கவுன்சிலில் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன், ரஷ்ய பல்கலையில் மருத்துவம் கற்றுத் தரப்படுகிறது. அங்கு ரஷ்ய பாடத்திட்டமே கற்பிக்கப்படும். ஆனால், அங்கு வழங்கப்படும், 'எம்.டி., டாக்டர் ஆப் மெடிசின்' மருத்துவ பட்ட சான்றிதழ், இந்தியாவின் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இணையானது.
ரஷ்யாவில் மருத்துவம் படித்து முடித்த இந்தியர்கள், இந்தியமருத்துவ கவுன்சிலின் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்காக, ரஷ்யாவில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.இந்த ஆண்டு முதல், இந்திய மருத்துவ பல்கலைகள், மருத்துவ மனைகளின் பேராசிரியர்கள், ரஷ்யாவுக்கு சென்று, அங்குள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மருத்துவ பட்டம் படிக்க, விமான செலவுடன் சேர்த்து ஆண்டுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். அதேபோல், அணுமின் சக்தி குறித்த படிப்பு, 'மெக்கட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல்' என, பல வித இன்ஜி., படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளையும் ரஷ்யாவில் படிக்கலாம்.
இதற்காக, ஜூன், 4, 5ம் தேதிகளில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, ரஷ்ய கலாசார மையத்தில், கல்வி கண்காட்சி நடக்கிறது. கோவையில் ஓட்டல் ரெசிடென்சியில், ஜூன், 6ல் கண்காட்சி நடக்கும்.
இதில், சான்றிதழ்களுடன் வரும் மாணவர்கள், ரஷ்ய பல்கலைகளின் அதிகாரிகளை நேரில் சந்தித்து, உடனடி மாணவர் சேர்க்கை பெறலாம். விசா, விமான வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரஷ்ய கலாசார மையத்திலேயே செய்து தரப்படும். இதற்காக ஏஜன்டுகளை தேட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum