நம்முடைய பக்தி இப்படி சீர்கெட்டு இருக்கிறது
Mon May 16, 2016 5:29 am
இது கொஞ்சம் சிந்திக்க வைக்கும் கதை
ஒரு கிறிஸ்தவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றார். அங்கே வாரம் முழுக்க கடுமையாக வேலை செய்து விட்டு, ஞாயிறு கிழமை அன்று ஹோட்டலில் ஓய்ந்து தூங்கி கொண்டு இருந்தார். திடீரென ஜன்னல் வழியாக ஒரு இன்னிசை கேட்டது,
அட...அது ஒரு தமிழ் கிறிஸ்தவ பாடல்.
அதை கேட்டவுடன் படுக்கையில் இருந்து துள்ளி குதித்தார் !
இங்கே ஏதோ ஒரு தமிழ் சபை தேவனை ஆராதனை செய்கிறார்கள், என் இயேசுவை இன்று என் மொழியிலேயே ஆராதிப்பேன், ஆண்டவரே இப்போதே வருகிறேன்..என உடைமாற்றி கொண்டு அந்த சபையை தேடி ஓடினார்.
அந்த சபையின் வாசலில் இரண்டு ஆஜானுபாகுவான மனிதர்கள் நின்று இருந்தார்கள். இவர் சபையில் நுழைய முயன்றதும், இவரை நிறுத்தி, நீங்கள் எங்கள் இனத்தை சேர்ந்தவரா ? என்று கேட்டனர்.
அந்த சபை ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவின் அமைப்பை சேர்ந்ததாக இருந்தது. இவர் விஷயத்தை அறிந்தவுடன் நொந்து கொண்டார். இவர் கெஞ்சி பார்த்தார், ஆனாலும் விடவே இல்லை...அவர்கள் இவரை வெளியே தள்ளி விட்டனர். இவர் மனமுடைந்து சபை நுழைவு வாயிலில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து, ஆராதனைபாட்டையாவது இங்கிருந்தே கேட்போம் என நினைத்தார்.
அங்கே நாற்காலியில் இன்னொரு மனிதர் தலைகுனிந்து உட்கார்ந்து இருப்பதை கண்டார்.
அவரை பார்த்து "ஐயா யார் நீங்க ? " என்றவுடன், அந்த முகம் திரும்பியது
இவர் அதிர்ந்து போனார், அது வேறு யாருமில்லை இயேசப்பா தான்.
இயேசப்பா..... அங்க உங்கள ஆராதிக்கிறாங்க, இங்க என்ன பண்றீங்க ? ஆராதனை முடிய போகுது... உள்ள போங்க !
நானும் உள்ள போக நினைச்சேன், அவங்க என்னையும் கேள்வி கேட்டு வெளிய தள்ளி விட்டுட்டாங்க பா !, என்ன அவுங்களுக்கு அடையாளமே தெரில... என்றார்
இது ஒரு கதை தான்....ஆனாலும்
இன்று சபைக்கு வருபவர்களை யாரும் எந்த காரணம் கொண்டும் தடுத்து நிறுத்துவதில்லை, ஆனால் சபையில் இருப்பவர்களை வெளியே அனுப்பும் வல்லமைகள் ஏராளம் இருக்கின்றன. வாக்குவாதம், போட்டி, தவறான போதனை, ஊழியர்கள்/விசுவாசிகளின் நடத்தை, பொறாமை, கீழ்படியாமை, தவறான புரிந்துகொள்ளுதல் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு மனிதன் சபையை விட்டு ஓடிபோக பல காரணம் இருக்கலாம், ஆனால் ஓடுவதற்கு காரணம் நாமாக இருக்கவே கூடாது.
இப்படி நம்முடைய சபைகளை விட்டு சென்றவர்களின் கதி என்ன என்பதை யாரும் திரும்பி பார்ப்பதில்லை. இதில் மிக மோசமான கொடுமை என்னவென்றால் சபையில் சக விசுவாசியின் பெயர்களை கூட நாம் தெரிந்து வைப்பதில்லை. நம்முடைய பக்தி இப்படி சீர்கெட்டு இருக்கிறது. ஆனால் நித்தியம் முழுவதும் அவர்களோடு தான் வாழ போகிறோம் என வேதம் சொல்லுகிறது.
நாம் எல்லாரையும் கிறிஸ்துவிடம் சேர்க்கிறோமா அல்லது சிதறடிக்கிறோமா என்பதை சிந்தித்து பார்ப்போம்.
சபைகளை விட்டு ஓடுபவர்கள், ஓநாய்களிடம் சிக்கி அழிந்து போகும் முன், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பை செலுத்துவோம்.
தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். ரோமர் 15:7
ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17:23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum