ஒப்புரவாகுதல் 2
Fri Feb 12, 2016 9:45 am
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் அன்பின் வாழ்த்துகள்;. ஒப்புரவாகுதல் என்ற தலைப்பில் ஆண்டவர் என்னோடு பேசின காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த சிலாக்கியத்தை தந்த ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.
ஒப்புரவாகுதல் என்பது பிரிந்துள்ள உறவை புதுப்பித்துக்கொள்ளுதல் அல்லது உடைந்த உறவை இணைத்துக் கொள்ளுதல்.
உறவு ஏன் முறிந்து போகின்றது என்ற காரணங்களைப் நாம் பார்ப்போமானால், இரண்டு நபர்களுக்குள்ளான உடன்படிக்கை மாறும்பொழுது கருத்து வேறுபாடாக தோன்றி அது கசப்பு, வெறுப்பு, விரோதம், வைராக்கியம், கோபம் போன்ற மாம்சத்தின் கிரியைகளினால் உண்டாகி சுமூகமான உறவு முறிந்து போகிறது.
உதாரணமாக நமது ஆண்டவர் ஏதேன் தோட்டத்திலே ஆதாமோடு ஏற்படுத்தின உடன்படிக்கையை அவன் மீறின பொழுது அங்கே உறவு முறிந்து போகிறது. பேதுரு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்தும் அவரை தெரியாது என்று பொய் சொன்ன பொழுது அந்த உறவிலே வந்த குறையை தீர்க்கும்படியாக மனம் கசந்து அழுது ஒப்புரவாவதை நாம் பார்க்க முடியும். யூதாஸோ ஆண்டவரை காட்டி கொடுத்த பின் ஒப்புரவாகாமல்...குற்ற உணர்வால் குத்துண்டு தானும் மறித்து தன் ஆத்துமாவையும் மரிக்கப் பண்ணினான். இப்படியாக அருமையானவர்களே உங்களுக்கும் ஆண்டவருக்கும் உள்ள உறவு எப்படியாக உள்ளது! உங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் உள்ள உறவு எப்படி உள்ளது!
கர்த்தரோடு உள்ள உறவுக்கு தடையாக இருப்பது பாவம் என்பதையும் அதை எப்படியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாக ‘பாவமான சுமை’ என்ற இதழ் முலமாக உங்களோடு பகிர்ந்து கொண்டேன். அவ் வண்ணமே மனுஷர்களோடு உள்ள உறவு எவ்வளவு முக்கியம் என்பதையும் அதினால் கிடைக்கும் ஆசீர்வாதங் களையும், அதிலிருந்து தவறும் போது எத்தனை காரியங்களை இழக்கிறோம் என்பதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மத் 6:14 ல்
“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.”
ஓப்புரவாகுதலினால் வரும் ஆசீர்வாதங்கள்;
இவ்வுலகத்தின் ஆசீர்வாதங்கள்
முதலாவதாக மத்தேயு 5:23,24 ல் இயேசு இப்படியாகச் சொல்கிறார். “நீ பலி பீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்த போது உன் சகோதரனுக்கு உன் பேரில் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்து விட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து.”
இந்த வசனத்தை மறுபடியும் நன்றாக கவனித்து வாசித்துப் பாருங்கள். நம் ஆண்டவர் நம்மிடம் காணிக்கையை விட ஒப்புரவாகுதலைத் தான் அதிகம் விரும்புகிறார். ஒப்புரவாகுதல் இல்லையென்றால் நம் காணிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நம்முடைய காணிக்கையை ஆண்டவர் அங்கீகரிக்கவில்லையென்றால், பின் எப்படி பொருளாதார ஆசீர்வாதங்கள் வானத்தின் பலகணிகளைத் திறந்து வரும். மல்கியா 3:10 படி ஆண்டவர் நம்மோடு சவால் விட்டதின் நிமித்தமாய், தசமபாகம் கொடுத்தால் ஆண்டவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வாத மழையை வருஷிப்பார் என்று விசுவாசிக்கின்றோமே! இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது தான் கர்த்தருக்கு பிரியம்.
கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கப்போகிறார். ஆனால், வானத்தின் பலகணிகள் திறக்கக் கூடாதபடிக்கு மற்றவர்களோடு உள்ள உறவிலே உங்களுக்கு குறைவிருக்கிறதா? தனியாக ஒரு இடத்திற்கு சென்று உங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த ஒவ்வொருவரையும் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். ஒப்புரவாகி சீர்பொருந்துங்கள். உன்னதத்திலிருந்து ஆசீர்வாதம் வருகிறது.
இரண்டாவதாக, இப்படிப்பட்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிந்தால், இயேசு நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசமுடியும். அப்படி பரிந்து பேசாவிட்டால் நம் ஜெபங்களும் கேட்கப்படமாட்டாது. யோவான் 15:7 ல் “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”
நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் தான், அவருடைய வார்த்தைகள் நம்மில் நிலைத்திருப்பதாக பொருள்படும். இல்லையேல் நாம் ஜெபிக்கும் ஜெபங்கள், உபவாசங்கள் எல்லாம் வீணாகப் போய்விடும்.
பரலோக ஆசீர்வாதங்கள்;
நமக்கு ஒரு நபரிடம் மனக்கசப்பு வரும் போது அது கொஞ்சம், கொஞ்சமாக ரூபமெடுத்து கோபம், சண்டை, பகை, விரோதம், வைராக்கியம், பிரிவினை, பொறாமை, புறங்கூறல் போன்ற மாம்சகிரியைகள் ஆரம்பித்து விடும்.
உதாரணமாக யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை பகைத்தார்கள் (ஆதி 37:4) அது வளர்ந்து இன்னும் அதிகமாக பகைத்தார்கள் (37:5) இன்னும் வளர்ந்து அதிகமாக பகைத்தார்கள் (37: அது பொறாமையாக மாறியது(37:11) அது உச்சக்கட்டத்தல் சென்று கொலை வெறியாக மாறியது 37:18,20) இப்படிப்பட்ட கிரியைகள் எல்லாம் மாமிசத்தின் கிரியைகள் கலா 5:20. ‘ஆனாலும்’ யோசேப்பு அவர்களோடு நல்ல உறவு வைத்திருந்தான். அதோடு மாமிசத்திற்குரிய செயல்களினால் யாரையும் அவன் தாக்கவேயில்லை.
ஆதி 41:51.ல் “யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனக்கு மனாசே என்று பேரிட்டான்” என்று பார்க்கிறோம்
அவன் தகப்பனுடைய குடும்பத்தினரின் நிமித்தமாய் அவனுக்கிருந்த வருத்தம் முற்றிலும் நீங்கும் வரைக்கும் தேவன் காத்திருந்தார். அதற்கு பின்தான் அவன் தகப்பன் காண வேண்டும் என்ற அவன் இருதயத்தின் வாஞ்சையை நிறை வேற்றினான். யோசேப்பினுடைய இருதயத்தில் தன் தகப்பன் வீட்டாரைக் குறித்து கசப்போ, வெறுப்போ, வருத்தம் இப்படிப்பட்ட ஒன்றும் இல்லாதபடியினால், அவன் வீட்டார் அவனுக்கு செய்த தீமையைக்கூட தேவன் நன்மையாக மாற்றினார்.
ஆதி 45:5-8 தன் சகோதரர்களை கண்ட பின்னும், அவன் இருதயத்தில் வருத்தமோ, கசப்போ இல்லாத படியால், அவன் தன் சகோதரர்களைப் பழித்தோ, குற்றப்படுத்தியோ ஒரு வார்த்தைகூட பேச வில்லை.
ஆண்டவர் அவனை ஆசீர்வதிக்கும் பொழுது ‘யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும்.’ (ஆதி 49:22). ஆகவே இதைப் படித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே ஆவிக்குரிய கனிகளை கொடுக்கும்படியாக ஆண்டவர் விரும்புகிறார். யாரிட மாவது பகை இருக்குமானல் அதை வளர விடாதீர்கள். அது நம்மையும் அறியாமல் வேரூன்றி, நம் உள்ளத்தில் வளர்ந்து, அதன் பின்னர், நாம் செய்ய வேண்டுமென்று நினைக்கின்ற, ஆவியின் கிரியைகளை கலா 5: 17-ன் படி நிறைவேற்ற விடாமல் தடுத்து விடும். ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்து விட்டு விட்டு யாரோடு பகை இருக்குமோ அவர்களோடு ஒப்புரவாகுங்கள். கனிதரும் செடியான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
ஓப்புரவாகுதல் இல்லாமையால் வரும் இழப்புகள்
சிறையிருப்பு...
ஒப்புரவாகுதலின் அவசியத்தைக் குறித்து, வேதத்தில் இயேசுவானவர் சொன்ன வசனங்களின் மூலமாய் தியானிப்போம்.
கர்த்தர் மன்னிப்பதில் தயை பெருத்தவர், மன்னிப்பதில் மகத்துவமுள்ளவர் என்று பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கிறோம். அது உண்மையே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன காரியங்களை கவனித்தீர்களா? மத் 6:14,15-ல் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.” “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.”
பிறர் நமக்குச் செய்த குற்றம் குறைகளை நாம் மன்னித்தோமானால், நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப்படும். நம் பாவங்கள் மன்னிக்கப்படாவிடில், என்னே பரிதாபம்! இம்மைக்குரிய ஆசீர்வாதமான வாழ்வு, ஆவிக்குரிய ஆசீர்வாதமான வாழ்வு, நித்திய வாழ்வு எல்லாம் நம்மை விட்டு பறி போய் விடும்.
இதை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஒரு உவமையின் வழியாக கற்பித்துள்ளார். மத்தேயு18:23-5ல், பதினாயிரம் தாலந்து கடன்பட்ட ஒரு ஊழியக்காரனை, அவனுடைய ஆண்டவன், மனதிரங்கி மன்னித்து விடுகிறான். ஆனால் அந்த ஊழியக்காரனோ, தன்னிடத்தில் நூறு வௌ;ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரனை மன்னிக்காமல் அவனைக் காவலில் போட்டுவித்தான்.
இதனையறிந்த அவன் ஆண்டவன், அவன் மேல் கோபம் கொண்டு, உடனே அவனை அழைத்து, நான் உனக்கு இரங்கினேனே.. நீயும் உன் உடன் வேலைக்காரருக்கு இரங்க வேண்டாமோ என்று சொல்லி, அவனை உபாதிக்கிறவனிடத்தில் ஒப்புக் கொடுத்தான். அருமையானவர்களே இதன் அர்த்தம் என்ன?. பாவத்தில் உழன்றும், சத்துருக்களாயும், பெலனற்ற நம்மை மன்னித்து மறந்து அவருடைய விலையேறப்பெற்ற பரிசுத்த இரத்தத்தால் கழுவி இரட்சிப்பை கொடுத்திருக்கிறாரே இத்தனை மகத்துவமான காரியம் கர்த்தர் செய்திருந்தும், நம் அயலாகத்தாரை மன்னித்து மறந்து ஏற்றுக்கொண்டு நல்ல உறவு வைத்துக் கொள்ளாமல் போனால்,
¨ மீண்டும் சிறையிருப்பின் அனுபவத்தின் ஊடாக கடந்து போக வேண்டியதாயிருக்கும்.
¨ அவருடைய கிருபையை இழந்து போகக்கூடாது. வேதம் சொல்லுகிறது ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கு யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பக் கூடாது எபி 12:15
¨ நித்திய ஜீவனை இழந்து…. நரகமே தஞ்சமாக மாற்றிவிடாதீர்கள்;.
எனக்கு அன்பானவர்களே, எபி 12:14 ல்
“யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்”
ஒப்புரவாகுவதற்கு உள்ள தடைகற்கள்;
ஓப்புரவாகுதல் எத்தனை இன்றியமையாதது என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுதும் ஒப்புரவாகுவதற்கு வரும் தடைகளையும் அவைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
1. நாம் செய்யாத தவறுக்கு தண்டனை வரும் பொழுது அதை நீங்கள் எப்படியாக எடுத்துக்கொள்கிறீர்கள்?
உண்மையிலேயே செய்யாத தவறுகளுக்கு அநேகர் தண்டனை பெறுவதையும், மனதை புண்படுத்துகிற அளவுக்கு வார்த்தைகளால் காயப்பட்டிருப்பதை நீங்கள்; பார்த்திருக்கக்கூடும் அல்லது அந்த வழியாக நீங்களும் இப்பொழுது கடந்து போய்க்கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம்முடைய எதிர்வினை அல்லது செயல், தண்டனை கொடுக்கிற அல்லது மனதை புண்படுத்துகிற மனிதரோடு எப்படி காணப்படுகிறது? ஒரு வேளை உங்களு டைய உயர் அதிகாரியாகவோ, பெற்றோர்களாகவோ, உயிர் நண்பர்களாகவோ கூட இருக்கலாம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்காக உங்களுக்காக சிலுவை மரணத்தை சகிக்கவில்லையா. அவர் என்ன தவறு செய்தார்! தேவதிட்டம் என்ன? அதை சகித்ததாலே நம்முடைய கிருபாதர பலியாக மாறினார். அதோடு அவரை மனதளவிலும், சரிர அளவிலும் வேதனைப்படுத்தின ஒவ்வொருவரையும் மன்னிக்கும்படியாக பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்டார்.
உங்களோடு நான் ஒரு தேவரகசியத்தை பகிர்ந்து கொள்கிறேன். யோசேப்பு போத்திபர் வீட்டிலே அவனு டைய வீட்டு விசாரணைக்காரனாக இருந்தான். அவன் செய்யாத ஒரு தவறுக்காக சிறைத் தண்டனையை கொடுக்கும் போது பொறுமையோடே அதை சகித்தான். போத்திபாரிடமோ அல்லது உன்னத தேவனிடத்திலோ அவன் முறுமுறுக் கவே இல்லை. கர்த்தருடைய உன்னதமான திட்டம் அவனை இன்னும் அதிகமாக உயர்த்தும் படியாகவே அமைந் திருந்தது. ஆகவே ஆண்டவர் அவனை சிறைச்சாலைக்கு கொண்டு போனார். தேசத்திலே உயர்த்தினார். பார்வோனு க்கு நிகராக வைத்தார். அருமையானவர்களே இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே சகிப்பு தன்மை நம்மிடத்தில் காணப்படு கிறதா?
“நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரிதியாயிருக்கும்.”
பேதுரு 2.20
2. நம்மை விட சிறியவர்களிடத்தில் நம்மால் மன்னிப்பு கேட்க முடிகிறதா?
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தராகிய இயேசுவை தரித்துக்கொண்டிருக்கிற நாம் அவரை பிரதிபலிக்கிற பிள்ளைகளாக காணப்பட வேண்டும். அதாவது ஆதியிலே இழந்து போன சாயலை கர்த்தர் மறுபடியும் கிருபையாக நமக்கு ஈந்திருக்கிறார். ஆகவே அவருடைய சாயலை உடையவர்களாகிய நாம் அவரை வெளிப்படுத்த வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவரும் கர்த்தருடைய கிருபை என்பதை மறந்து விடக் கூடாது. ஆகவே அவருடைய பார்வையில் நாம் அனைவரும் ஒன்று தான் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்வோம். ஏனென்றால் தேவ அன்பு நம்மை நிறைத்திருக்கிற படியினாலே (ரோ5:5) மேற்ப்பட்ட காரியங்களிலே கவனமாகயிருக்க வேண்டும். விழுந்துப் போனவன் கொண்டுவரும் தந்திரமான ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து, ஒருங்கிணைந்து கர்த்தருடைய இராஜ்யத்தை கட்டுவோம்.
மனத்தாழ்மையும் உண்மையான அன்பையும் காட்டும்படியாகத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீஷர் களின் கால்களை கழுவினார். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக் காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்.
ஆகவே உண்மையான அன்பு நம்மிடத்தல் காணப்பட்டால் வயது வரம்பு எதுவும் இல்லாமல் நம்மை தாழ்த் தவும் மற்றவர்களோடு ஒப்புரவாகவும் முடியும். இப்படியாக கொலோ 3:12,13,14 ல் சொல்லுகிறது
; “மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்.”;
3. நான் முதலில் போய் மன்னிப்பு கேட்டால் என் மதிப்பு (prestige) என்னாவது? அவர்;கள்; வந்து என்னிடம் கேட்கட்டுமே என்ற எண்ணம் உள்ளதா?
இப்படிப்பட்ட சிந்தனைகளை நமது உள்ளத்திற்கு கொண்டு வருவது யார் தெரியுமா? நமது எதிராளியாகிய பிசாசு. (1பேதுரு 5: இப்படிப்பட்ட ஈகோ (Ego) பிரச்சினையை மட்டும் தூக்கி எறிந்து விட்டால் போதும், பிசாசை எளிதாக நாம் மேற்கொள்ள முடியும். உங்கள் மீது தவறு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இருவருக்குள் மனக்கசப்பு வந்து விட்டால், மன்னிப்புக் கேட்பதில் முந்திக் கொள்பவர் நீங்களாக இருக்க வேண்டு;ம். நீங்கள் இவ்வாறு செய்யும் போது ஆண்டவர் உங்களில் எவ்வளவாய் மகிழுவார் தெரியுமா? உங்கள் பெருமைகளை களைந்து உங்களை நீங்கள் தாழ்த்தும் போது, ஆண்டவர் அந்த இடத்தில் உங்களை மகிமைப்படுத்துவார். கர்த்தருடைய கிருபை உங்களை சூழ்ந்து கொள்ளும். தாழ்மை, கர்த்தருக்குப் பிரியமான ஒன்று. தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்பதுபோல நீங்கள் முந்தி கொள்ளுங்கள். எதிராளி, உங்கள் ஒப்புரவாகுதலை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுககொள்ளாவிட்டாலும், ஆண்டவர் உங்கள் இருதயத்தைப் பார்க்கிறார். உங்களின் இந்த தாழ்மையை ஆண்டவர் கனப்படுத்துவார். கர்த்தர் உங்களுக்கு பலன் தருவார்.
“உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.” நீதி 25:21,22
4. ஒரு வேளை நான் மன்னிப்பு கேட்கும் பொழுது அந்த நபர் அதை ஏற்றுக் கொள்வாரா?
இப்படிப்பட்ட கேள்விகள் நம்முடைய உள்ளத்தில் எழும்பி ஒப்புரவாகுவதற்கு தடையை உண்டு பண்ணு கிறது. இப்படிப்பட்ட பயம் அல்லது சந்தேகம் பிசாசானவனிடத்திலிருந்து வருகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்த காரியங்களிலிருந்து ஜெயம் பெறுகிறவர்களாக மாற வேண்டும். உதாரணமாக வேதாகமத்தில் உங்களுக்கு தெரிந்த பாத்திரங்களான ஏசாவும், யாக்கோபும் தான். ஏசாவை ஏமாற்றின யாக்கோபு, அண்ணன் தன்னை கொலை செய்துவிடுவான் என்று சொல்லி ஊரை விட்டே ஓடினவன். ஏசாவை சந்திக்கும் படியாக நேரம் வந்த பொழுது, தன் அண்ணன் தன்னை கொன்று விடுவானோ என்று பயந்தான். அது மட்டும் அல்ல ஒப்புரவாகுவதற்கு முன்பு பல கோணங்களில் சிந்தித்து இது நடக்குமோ அல்லது அது நடக்குமோ என்று கவலையுற்றிருந்தார்கள். ஆனால் அந்த பயத்தை விட்டு எழும்பி ஒரு அடி எடுத்து வைத்த பொழுதோ நடந்தது என்ன? அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். இப்படியாக ஒப்புரவானார்கள்.
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக் கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். சமாதானத்தின் தேவன் தாமே உங்களோடிருப்பாராக. ஆமென் கலா 5:24,25
சாட்சியாக….
கர்த்தருடைய ஊழியத்தை 35 வருடங்களாக செய்து வருகின்ற ஒரு குடும்பத்தை நாங்கள் அறிவோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சாட்சியைப் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அது எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. உங்களுக்கும் அது ஆசீர்வாதமாக அமையும் படி பகிர்ந்து கொள்கிறேன்;. அந்த சகோதரிக்கு சுமார் 55 வயதுக்கு மேல் இருக்கும். திடீரென்று அவர்களுக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து, மருத்துவர்களால்; கைவிடப்பட்டனர். மருத்துவர்கள் சொன்னது என்னவென்றால் ஆப்ரேஷன் செய்தால் 90% பிழைக்க முடியாது. 10% ஒருவேளை கடவுள் அனுக்கிரகம் பண்ணுவாரேயானால் பிழைக்க வாய்ப்பு உள்ளது.
ஆப்ரேஷன் செய்து கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்து விடும் அபாயமும் உள்ளது. நீங்கள் சரி என்று சொன்னால் செய்யலாம் என்றார்களாம். அந்த சகோதரியின் கணவரும், பிள்ளைகளும் சரி என்று கூறி தேவனிடம் மன்றாட ஆரம்பித்தனர். ஆப்ரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது, இவர்கள் ஆப்ரேஷன் தியேட்டரின் கதவுக்கு முன்னால் இருந்து தேவனை துதித்துக் கொண்டு இருந்தார்களாம். ஆப்ரேஷன் செய்து கொண்டிருக்கும் வேளையில் சகோதரியின் உயிர் பிரிந்தது…..
அதற்கு பின் நடந்தது என்ன என்று அந்த சகோதரியே எங்களிடம் சென்னார்கள்;. இவர்களின் ஆத்துமா பல மைல் தூரம் மின்னல் வேகத்தில் வானங்களுக்கு மேலாக சென்றதாம். அங்கே சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. தேவனுடைய முகத்தை பார்க்க முடியாத படி அப்படி ஒரு பிரகாசம். விவரிக்க முடியாத அளவு சூரியனை விட பல மடங்கு பிரகாசமானவராய் இருந்த மனுஷ குமாரனுடைய ரூபம் தெரிந்ததாம். எங்குப் பார்த்தாலும் பரிசுத்தம், பரிசுத்தம் என்றிருந்ததாம். அந்த தெய்வீக பிரசன்னத்தில் அவர்களின் ஆத்துமா நடுநடுங்கிக் கொண்டே இருந்தது. ஆண்டவர் இரண்டு கேள்விகளை கேட்டார்.
1. இன்றைக்கு நீ பரிசுத்தமாயிருக்கிறாயா? (Holiness Today?)
2. பூமியிலுள்ள யாவரையும் நீ மன்னித்து விட்டாயா?
அவர்களால் என்ன சொல்வதென்றே அறியாத படிக்கு நடுங்கிக் கொண்டே இருந்தார்களாம். ஆண்டவர் கிருபையாக மறுபடியும் அனுப்பிவிட்டார். சுமார் 4 நிமிடங்கள் கழித்து மறுபடியும் உயிரைப் பெற்றுக் கொண்டார்கள். இன்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும், எனக்கும் ஒரு எச்சரிப்பாய் இருக்கும் படிக்கு தேவன் அவர்களுக்கு மறுபடியும் உயிரைக் கொடுத்தார். இன்று அவர்கள் பார்க்கும் எல்லோரிடமும் தன் சாட்சியை அறிவித்து வருகின்றார்கள். 35 வருடங்களுக்கும் மேலாக ஊழியம் செய்கிறேன். தீர்க்கதரிசனவரத்தால் அநேகரை ஆறுதல் படுத்தி, குணமாக்கும் வரத்தால் அநேகருடைய நோய்களை குணமாக்கி, தேவனுடைய வார்த்தையால் அநேகரைத் தேற்றி, பிசாசுகளைத் துரத்தி தேவனுடைய இராஜ்யத்துக்கென்றே குடும்பமாய் ஒப்புக்கொடுத்து உழைக்கிறோம்.
தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் இத்தனை வருடங்கள் ஊழியம் செய்தும், தேவனுடைய பிரசன்னத்தில் நிற்கும் போது இவை ஒன்றும் என் நினைவிற்கு கூட வரவில்லை. ஒரு சாதாரண விசுவாசியாகத் தான் காணப்பட்டேன். தேவன் முதலாவதாக பார்த்தது என்னுடைய ஊழியத்தை அல்ல. என்னுடைய ஜீவியத்தை தான்.
ஆம் பிரியமானவர்களே! தேவனுடைய நியாயசனத்திற்கு முன்பாக நீங்களும், நானும் ஒரு நாள் நிற்க நேரிடும். அன்று ஆண்டவர் நம்மிடம் முதலாவதாக பார்ப்பது, அவருடைய வல்லமையைக் கொண்டும், அபிஷேகத் தைக் கொண்டும் செய்த ஊழியத்தை அல்ல, நாம் அவருக்கென்று வாழும் பரிசுத்த ஜீவியத்தைத் தான். இதனால் ஊழியம் செய்வதால் பலன் இல்லை என்பதல்ல. “பரிசுத்தமில்லாமல் நாம் ஒருவரும் தேவனை தரிசிக்க முடியா தென்று” வேதம் கூறுகின்றது. பரிசுத்த ஜீவியம் செய்தால் தான்; தேவனை தரிசிக்க முடியும்.
முதலாவது நம்முடைய ஆத்துமா பரலோகத்துக்கு செல்ல வேண்டும். நாம் தேவனை தரிசித்தால் தான் நாம் ஊழியத்துக்கேற்ற பலனை நாம் பெற்றுக் கொள்ள முடியும். பரிசுத்த ஜீவியமும், மன்னிக்கின்ற தன்மையோடு வாழ் வதும் எவ்வளவு முக்கியமென்று உணர்ந்து கொண்டீர்களா?
கடைசியாக….
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை பாருங்கள். அவரின் சிலுவை பாடுகளில், எவ்வளவாய் (லூக்கா 22:50-52;;: 63-64. மாற்கு 15:17-19-களில்) பாவமே இல்லாத அவரை துப்பி, முள்முடி சூடி, கன்னத்தில் அறைந்து, ஆணிகளினால் கைகளிலும் கால்களிலும் அறைந்து, விலாவில் குத்தி, சாட்டையால் அடித்து காயப்படுத்தினர். மனதளவிலும், உடலிலும் காயப்பட்டார்; ஆனால் நம் இயேசு கிறிஸ்து என்ன சொன்னார் தெரியுமா? லூக் 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று அந்த ஜனங்களுக்காக பரிதபித்தார்.
ஆனால் அவ்வளவு தூரம் நாம் பாடு அனுபவித்திருக்கவே மாட்டோம். பாவமே இல்லாத கிறிஸ்து பிறர் குற்றங்களை மன்னித்தார். அவரைப் போல கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுகிற நாமும், கிறிஸ்துவை பின்பற்று கிறவர்கள் அல்லவா. அதனால் இந்தக் காரியத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுவோம். கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப் படுத்துவோம்.
இன்று நம் வாழ்க்கையில் ஊழிய அழைப்பு இருக்கலாம். அதிகாரமும், வல்லமைகளும், வரங் களும் இருக்கலாம். தேவராஜ்யத்துக்கென்று பலரை ஆதாயப்படுத்தியும் இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தில் குடும்ப உறவினரோடும், மனைவியோடும், கணவரோடும், பிற ஊழியக்காரர்களோடும் சுமூக உறவு இல்லாதபடி, மன்னிக்கின்ற தன்மை இல்லாதவாறு கசப்பையும், வெறுப்பையும் வைத்திருந்தோமானால், நம் அழைப்பு, அதிகாரம், வல்லமை, வரங்கள், நாம் செய்த ஊழியம் யாவும் வீணாய்ப் போய்விடும் என்பதை நம் மனதில் நன்கு பதித்துக் கொள்வோம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum