தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Empty யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

Wed Feb 03, 2016 11:12 pm
யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Jonathan_goforth

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

பிறப்பும், இளமைக் காலமும்
ஜாண் கோபோர்த் என்பவர் இங்கிலாந்திலுள்ள யார்க்ஷையரிலிருந்து கனடா தேசத்தின் மேற்கு ஒண்டேரியோ என்ற இடத்திற்கு 1840 ஆம் ஆண்டு ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவராக வந்து குடியேறினார். அவருடைய மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார்கள். எனவே, அவர் தனது மூன்று மகன்களான ஜாண், சைமன், பிரான்சிஸ் என்பவர்களையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். மகன் பிரான்சிஸ் வடக்கு அயர்லாந்திலுள்ள ஜேன் பேட்ஸ் என்ற இளம் பெண்ணை மணம் புரிந்தான். ஒண்டேரியாவின் இலண்டனுக்கு (இங்கிலாந்தின் லண்டன் அல்ல) அருகாமையிலுள்ள ஒரு பண்ணையில் அவர்கள் குடியேறினார்கள். யோனத்தான் கோபோர்த் அவர்களின் ஏழாவது பிள்ளையாவான். தனது தகப்பனாரின் தாண்டேல் என்ற இடத்திற்கு சமீபமாகவிருந்த பண்ணையில் யோனத்தான் கோபோர்த் 1859 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் நாள் பிறந்தான்.

11 பிள்ளைகளைக் கொண்ட மிகப் பெரிய குடும்பம் ஆனதால் தாயும், தகப்பனும், ஏன்? ஆண் மக்கள் 10 பேர்களும் கூட அந்த கஷ்டகால கடினமான நாட்களில் கடினமாக பாடுபட்டு உழைக்கவேண்டியதாக இருந்தது. ஆண் மக்கள் அக்கம் பக்கங்களிலுள்ள விவசாயிகளுக்கு வேலை செய்து கொடுத்து பணம் சம்பாதித்ததுடன், வழக்கத்துக்கு மாறான அற்பமாக எண்ணப்பட்ட பணிகளையும் கூட செய்து கொடுத்து பணம் தேடினார்கள். "கோபோர்த் பையன்கள் நல்ல சுறுசுறுப்பான, எந்த ஒரு வேலையையும் செய்ய அஞ்சாத திறமைசாலிகள்" என்று அந்தப் பகுதியிலுள்ளவர்கள் எல்லாரும் அவர்களைக் குறித்துப் பேசினார்கள். யோனத்தான் கோபோர்த் அதைக் குறித்துப் பேசும்போது "ஹாமில்டன் என்ற இடத்திலிருந்து இலண்டனுக்கு அருகில் நாங்கள் வசித்த இடம் வரையான 70 மைல்கள் தூரத்தை எனது தகப்பனார் தனது முதுகில் ஒரு சாக்கு மூட்டை மாவுடன் நடந்து வந்திருக்கின்றார். அவர் நடந்து வந்த பாதை அந்த நாட்களில் முட்புதர் செடிகொடிகள் மண்டிக்கிடந்த பாதையாகும்" என்று கூறுவார். அதை யோனத்தானுடைய தகப்பனாரே அவரிடம் சொல்லியிருக்கின்றார்.

"எனது அருமைத் தாயார் பிள்ளைகளாகிய நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்களுக்கு தேவனுடைய வசனங்களைப்போதிப்பதிலும், எங்களோடு கூட சேர்ந்து ஜெபிப்பதிலும் மிகவும் கருத்தோடிருந்தார்கள். எனது வாழ்க்கையின் பின் நாட்களில் நான் கண்டடைந்த பெரிய தேவ ஆசீர்வாதத்திற்கு காரணம் நான் எனது தாயாருக்கு சங்கீதங்களின் புத்தகத்தை வாசித்ததுதான். நான் ஐந்து வயதினனாக இருந்த அந்தச் சமயத்தில் எனது தாயாருக்கு சங்கீதங்களை பிழையின்றி சப்தமாக வாசிப்பேன். சப்தமாக வாசித்து, வாசித்து தேவனுடைய வார்த்தைகள் மேல் எனக்கு ஒரு பரலோக இன்பமே ஏற்பட்டுவிட்டது. அதின் காரணமாக ஏராளமான தேவனுடைய வசனங்களை நான் மனப்பாடம் செய்தேன். நான் மனப்பாடம் செய்த வேத பகுதிகளை யாரிடமாவது ஒப்புவிக்க அந்த நாட்களில் நான் ஆசைப்படுவேன். ஆனால், எவரும் எனது ஒப்புவித்தலை அத்தனை பொறுமையோடு செவிமடுத்து கேட்க முன்வரவில்லை. அந்த சின்ன வயதிலேயே நான் என்னை ஆண்டவருக்கு ஒப்புவித்து ஒரு மெய்யான கிறிஸ்தவனாக வாழ அதிகமாக ஆசைப்பட்டேன். நான் ஏழு வயது சிறுவனாக இருந்தபோது ஒரு பக்தியுள்ள அம்மாள் எனக்கு ஒரு அழகிய சிறு வேதாகமத்தை அன்பனிப்பாகத் தந்தார்கள். கர்த்தருடைய வேதத்தை ஆர்வத்தோடு படிக்க அந்த அன்பளிப்பு வேதாகமம் எனக்குப் பெரிதும் உதவி செய்தது. நான் 10 வயது சிறுவனாக இருந்த சமயம் எனது தாயாரோடு ஒரு ஓய்வு நாள் தேவாலயத்திற்குச் சென்றேன். ஆலயத்தில் கர்த்தருடைய இராப் போஜனம் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. எனது தாயார் அதில் பங்குபெறச் சென்றுவிட்டார்கள். ஆலயத்தின் பக்கவாட்டு இருக்கை ஒன்றில் நான் தனிமையாக உட்கார்ந்திருந்தேன். அந்தச் சமயம் திடீரென ஒரு பலமான எண்ணம் முழுமையான அழுத்தத்துடன் என்னை வந்து தாக்கத் தொடங்கியது. தேவன் என்னை இந்த உலகத்திலிருந்து இந்த நிமிடம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் நான் ஆண்டவருடைய மோட்சத்துக்கு செல்ல முடியாது என்பதே அந்தக் கவலையின் எண்ணமாகும். என்னை கர்த்தருக்குள்ளாக வழிநடத்தவும், எனது ஆத்துமாவின் காரியமாக என்னோடு பேசவும் எவரும் இல்லாத காரணத்தால் நான் என்னை அப்பொழுது கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க இயலாது போய்விட்டது" என்கின்றார் யோனத்தான்.

கிட்டத்தட்ட 10 கல்வி ஆண்டுகள் யோனத்தான் தனது தகப்பனாருடைய பண்ணையில் ஏப்பிரல் மாதம் முதல் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரை ஒவ்வொரு வருடமும் பாடுபடவேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலை அவருக்கு இருந்தது. இலையுதிர் காலம் பள்ளிக்கு வரும் அவர் வசந்த காலத்திற்குள்ளாக தன்னுடன் படிக்கும் புத்திசாலி பையன்களுடன் போட்டியிடும் அளவுக்கு திறமை பெற்று விளங்கிவிடுவார்.

யோனத்தானுடைய வெகு ஆரம்ப கால பள்ளி தோழனான பண்டிதர் ஆண்ட்ரூ வைனிங் என்ற குருவானவர் யோனத்தானைக்குறித்து குறிப்பிடும் சில பிரகாசமான வரிகளைக் கவனியுங்கள்:-

"நான் அறிந்தவரை யோனத்தான் மிகுந்த மனமகிழ்ச்சியுடைய, நேர்மையான, அடக்கமும் பணிவுமுள்ள, தைரியசாலியான மாணவனாவான். அவனுடைய சிறந்த நேர்மைக் குணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. பள்ளியில் ஒரு வம்புக்கார மாணவன் என்னை எப்பொழுதும் கேலி பேசி வயதில் சிறுவனான என்னை கொடுமைப்படுத்தி வந்தான். இதைக் கவனித்த யோனத்தான் ஒரு நாள் அந்த போக்கிரி மாணவனைச் சந்தித்து அவனைக் கண்டித்து இனிமேல் என்னை அவன் தொந்தரவு செய்யாதபடி செய்துவிட்டான்.

யோனத்தானிடம் நான் கவனித்த ஒரு விசேஷமான காரியத்தை நான் என் வாழ்வில் என்றும் மறக்கவே மாட்டேன். பள்ளியின் இடை வேளை நேரங்களில் பள்ளிக்கூடத்தின் பிரதான வளாகத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் உலகப்படங்களின் முன்பாக அவன் நின்று அந்தப் படங்களையே வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். நாளுக்கு நாள் அவன் அப்படியே செய்து வந்தான். அவனது வயதில் வேறு எந்த ஒரு மாணவனும் அப்படிச் செய்ததே இல்லை. அவனுடைய இந்தச் செயல் என்னை சொல்லொண்ணா ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உலகப்படங்களில் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களை அவன் அதிகமாக கவனித்தது எனது நினைவுக்கு வருகின்றது. தான் பெரியவனாக வளரும் போது உலகத்தில் தான் செய்ய வேண்டிய தேவ பணிகளைக் குறித்த ஒரு ஆத்தும பாரத்தின் உணர்வு அப்பொழுதே அவனுக்கு கிடைத்துவிட்டது என்றே நான் திட்டமாகக் கூறமுடியும்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
யோனத்தான் கோபோர்த் உடைய தேவ ஊழிய டயரிகள் ஒன்றில் காணப்பட்ட அவருடைய குழந்தை பருவ நினைவு ஒன்றை அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே கீழே நாம் காணலாம்:-

"நான் சிறு பையனாக இருந்த நாட்களில் யாரோ ஒருவர் எனக்கு 5 பென்னி நாணயம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தார். இவ்வளவு பெரிய தொகையை நான் அதுவரை அன்பளிப்பாக பெற்றதே கிடையாது. எனக்கிருந்த சந்தோசத்துக்கு அளவில்லை. நான் என்னை ஒரு ஐசுவரியவானாக அன்று எண்ணிக் கொண்டேன். இந்த 5 பென்னி நாணயத்தைக் கொண்டு 6 பெரிய இனிப்பு மிட்டாய்களை வாங்கி விடலாமே என்ற எண்ணம் எனது மனதில் பொங்கி பூரித்து எழுந்தது. உடனே நான் எனது வீட்டுக்குச் சென்று எனது தாயாரிடம் எனக்கு கிடைத்த அன்பளிப்பு விபரத்தை கூறி எனக்கு கிடைத்த 5 பென்னிக்கும் மிட்டாய்களை வாங்கிக் கொள்ள நான் கடைக்குச் செல்லலாமா என்று கேட்டேன். மிட்டாய் வாங்கக்கூடிய கடை எங்கள் வீட்டிலிருந்து 2 மைல் தொலைவில் இருந்தது. உடனே எனது தாயார் "இல்லை மகனே, நேரம் பொழுதுபட்டுவிட்டது. கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளும் ஆரம்பிக்கப்போகின்றது. உனது விருப்பப்படி திங்கட்கிழமை நீ கடைக்குப்போய் மிட்டாய் வாங்கிக் கொள்" என்று சொல்லிவிட்டார்கள்.

எனக்கு ஞாயிற்றுக் கிழமை ஒரு நாளுக்குக் கூட பொறுத்திருப்பது என்பது வெகு கடினமாகவே இருந்தது. இதற்கிடையில் எனது குழந்தை உள்ளத்தில் யாரோ ஒருவர் "நல்லது சிறுவனே, உனது ஐந்து பென்னியையும் தெய்வ நம்பிக்கையில்லாதவர்களுக்குக் கொடுப்பது உனக்குச் சரியாகத் தெரிகின்றதா?" என்று என்னிடம் கேட்பது போல இருந்தது. அந்த எண்ணத்தை எனது மனதில் போட்டது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்து வரும் ஓய்வு நாளிலே தேவனுடைய சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்குச் சென்று சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரிகளுக்கு ஒரு விசேஷித்த காணிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே கர்த்தருடைய ஆவியானவர்தான் அந்த எண்ணத்தை எனது உள்ளத்திலே தோன்றச் செய்தார் என்று நான் திட்டமாக அறிந்து கொண்டேன். தேவன் என்னை பின் நாட்களில் ஒரு மிஷனரியாக ஆக்குவதற்கு திருவுளச்சித்தம் கொண்டிருக்கின்றார் என்ற ஆவல் அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. நானோ அதை ஏற்க விரும்பவில்லை. தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை கேட்காத மக்கள் வெகு தொலை தூரமான இடங்களில் இருக்கின்றனர். ஆனால், எனக்குத் தேவையான மிட்டாய் கடையோ 2 மைல்கள் தொலைவில் மாத்திரமேதான் இருக்கின்றது. எனவே, எனது மிட்டாய்களை எப்படியாவது நான் பெற்றுவிடவேண்டும் என்று நான் ஆவல் கொண்டேன். எனது போராட்டம் அத்துடன் முற்றுப்பெறவில்லை.

தேவனுடைய சுவிசேஷம் கேட்காத மக்களா அல்லது 5 பென்னிக்கு வாங்கக்கூடிய இனிப்பான மிட்டாய்களா? இறுதியாக நான் இந்தப் போராட்டத்தோடேயே எனது படுக்கைக்குச் சென்றேன். ஆனால், என்னால் தூங்கவே முடியாமற் போய்விட்டது. சுவிசேஷம் கேள்விப்படாத மக்கள் ஒரு பக்கம், எனது இனிப்பான மிட்டாய்கள் மறுபக்கம். ஒரு பக்கம் அன்பு அடுத்த பக்கம் சுயநலம். இவைகளின் கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பொதுவாக நான் படுக்கைக்குச் சென்று என் தலையை தலையணை மீது வைத்தால் போதும் அடுத்த கணமே குறட்டைப்போட்டு தூங்க ஆரம்பித்துவிடுவேன். ஆனால் அன்று எனது தூக்கம் பறந்து போய்விட்டது. இறுதியில் நான் அடுத்த நாள் ஞாயிறு வேதாகம பள்ளி ஆராதனையின் போது எனது 5 பென்னி நாணயத்தை காணிக்கை தட்டில் படைத்துவிடுவதென்ற திட்டமான தீர்மானத்தோடு எனது கண்களை மூடி அயர்ந்து நித்திரை செய்தேன். ஆனால், நான் காலையில் கண் விழத்ததும் மிட்டாய்கள் மேல் உள்ளதான எனது அளவற்ற ஆசையே திரும்பவும் தலை தூக்கி நின்றது. திரும்பவும் எனக்குள் போர் ஆரம்பமானது. எனினும், எனது ஓய்வு நாள் வகுப்புக்கு போவதற்கு முன்னர் சுவிசேஷம் கேள்விப்படாத மக்கள் மேல் உள்ளதான எனது அன்பே வெற்றி பெற்றது. அதற்காக சேகரிக்கப்படும் காணிக்கை தட்டு என்னைக் கடந்து சென்ற போது நான் எனது 5 பென்னி நாணயத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்த்தருக்கு கையளித்தேன்.

நீங்கள் நம்புவீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் அதைப் படைத்ததும் ஒரு கடையிலுள்ள அனைத்து மிட்டாய்களும் எனக்குக் கிடைத்துவிட்டதைப்போன்றதொரு ஆனந்த சந்தோசம் என் உள்ளத்தை முழுமையாக நிரப்பிற்று. ஆண்டவர் இயேசுவுக்காக இப்படி தீர்மானம் செய்கின்ற எந்த ஒரு பையனுக்கும் பெண் பிள்ளைக்கும் எனக்குக் கிடைத்த அந்த பேரானந்த மகிழ்ச்சி நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது"

அந்தப் புன்னகை ஒன்றே போதுமே!
யோனத்தான் கோபோர்த் 15 வயதினனாக இருந்தபோது அவரது தகப்பனார் "தேம்ஸ் போர்ட்" என்ற அவரது பண்ணை நிலம் ஒன்றை அவருக்குக் கையளித்தார். அந்தப் பெரிய பண்ணை நிலம் முட்புதர்களாலும், அடர்த்தியான களைகளாலும் மூடிக்கிடந்தது. "இந்த நிலத்தை நீ பண்படுத்தி, துப்புரவாக்கி விதை விதைப்புக்கு ஏற்றதாகச் செய்துவிடு. அறுவடை சமயத்தில் நான் திரும்பவும் வந்து இதை பார்வையிடுவேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். யோனத்தானுக்கு சற்று உதவியாக அவரது இளைய சகோதரன் ஜோசப் இருந்தான். இந்தக் கடினமான வேலையை அந்த இள வயதான 15 ஆம் வயதில் செய்வது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

யோனத்தான் கோபோர்த் தமது சுவிசேஷ நற்செய்தி கூட்டங்கள் பலவற்றிலும் அந்த தேம்ஸ் போர்ட் பண்ணையில் தான் தனது முழு பெலனையும், சரீர உழைப்பையும் எவ்வண்ணமாகச் செலவிட்டார் என்பதை தமக்கு முன்பாக குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாய் மேல் விரல் வைத்து ஆச்சரியத்துடன் கேட்கத்தக்கவிதத்தில் இப்படிக்கூறுவார்:-

"அந்த தேம்ஸ்போர்ட் பண்ணை நிலத்தின் முட்புதர்கள், களைகள் எல்லாவற்றையும் வேருடன் பிடுங்கி எறிந்து அவைகளை சுட்டெரித்த பின்னர் அந்த நிலத்தை ஒன்றுக்குப்பின் ஒன்றாக திரும்பத் திரும்ப உழுது அதைப் பண்படுத்தி முழு நிலத்தையும் விதைவிதைப்புக்குத் தயாராக்கினேன். நிலம் விதை விதைப்புக்குத் தயரானதும் அதில் விதைக்கக்கூடிய மிகவும் தரமான விதைகளை நான் வாங்கி வந்தேன். விதைவிதைப்புக்கு ஏற்ற பருவ காலமான கோடை காலத்தின் வரவுக்காக நான் ஆவலோடு காத்திருந்து அந்த கோடை காலத்தின் ஒரு அழகான காலை வேளையில் நான் உழுது பண்படுத்தியிருந்த அந்த நிலத்தில் விதைகளை அள்ளித் துவினேன். விதைத்த விதைகள் முளைத்து பயிராகி விரைவாக வளர்ந்து கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப ஆழமாக உழுததின் காரணமாக பயிர்களிலே தானிய மணிகள் செழுமையாக வெளிவந்து தொங்கிக் கொண்டிருந்தது.

சரியாக அறுவடை சமயத்தில் எனது தந்தை பண்ணைக்கு வந்தார். நான் எனது தந்தையை பயிர் விளைச்சலின் செழுமையை முழுமையாகப் பார்க்கும் விதத்தில் ஒரு மேடான பகுதிக்கு அழைத்துக் கொண்டு சென்றேன். விளைச்சலின் மாட்சியை என் தந்தை கண்டு பெரும் வியப்புற்று "என் மகனே, நீ நன்றாய்ச் செய்தாய்" என்ற வார்த்தையை கூறுவார் என நான் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கிக் காத்து நின்றேன். ஆனால், அவர் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் வெகு அமைதியுடன் பயிர் நிலம் முழுமையையும் சுற்றிப் பார்த்து ஏதாகிலும் களைகள் தென்படுகின்றதா என்று கவனித்துப் பார்த்தார். ஆனால், எந்த ஒரு களையையும் அவரால் காண இயலவில்லை. இறுதியில் எனது தகப்பனார் எனது முகமாகத்திரும்பி அப்படியே ஒரு முழுமையான புன்னகை புரிந்தார். எனது இரத்தம் சிந்தி உழைத்த என் கடினமான உழைப்புக்கும், பாடுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெகுமதி எனது தகப்பனாரின் அந்த புன்னகை மாத்திரமேதான். அந்த மனம் நிறைந்த புன்னகையை விட உலகில் வேறு எனக்கு என்ன வேண்டும்? அந்தப் புன்னகை எனது உள்ளத்தை நிறை பூரணமாக திருப்தி செய்து என்னைக் களிகூரப்பண்ணிற்று"

"அப்படியே நாமும் நமது பரம எஜமானர் நமது வசமாக ஒப்புவிக்கும் அவருடைய பரலோக பணிகளை நமது முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் உண்மையும், உத்தமமுமாக செய்து நிறைவேற்றி முடிப்போமானால் நமது பரலோக தந்தையின் உள்ளங் குளிர்ந்த புன்னகையை நிச்சயமாக ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளில் நாம் பெறுவோம்" என்று யோனத்தான் கோபோர்த் சொல்லுவார்.

யோனத்தான் கோபோர்த்தின் மனந்திரும்புதல்
யோனத்தான் கோபோர்த் இப்பொழுது 18 வயதான நல்ல சௌந்தரியமுள்ள வாலிபனாக இருந்தார். நல்ல உண்மையுள்ள, நேர்மையான, எல்லாருக்கும் உதவி செய்யக்கூடிய ஆட்ட சாட்டமான இளைஞனாக அவர் விளங்கினார். அவர் எல்லாராலும் அதிகமாக விரும்பப்பட்டார். சதா சந்தோசமுள்ள, நட்புள்ளம் கொண்டோனாக அவர் இருந்தபோதினும் அவரது ஆத்துமா இன்னும் மனந்திரும்பாமல் பாவ இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. இலண்டனில் ஒரு குறுகிய கால வர்த்தக கல்வி பெற்ற யோனத்தான் திரும்பவும் தனது உயர்நிலைப்பள்ளிக்கே வந்து சேர்ந்து தமது வீட்டுக்கு அருகாமையிலுள்ள அந்தப் பள்ளியில் படித்து வந்தார். தேம்ஸ்போர்ட் என்ற இடத்திலுள்ள குருவானவரான லாக்லன் கேமரூன் என்பவர் யோனத்தான் படித்துக் கொண்டிருந்த உயர்நிலைப்பள்ளிக்கு அடிக்கடி வந்து அங்கு வேதாகம வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்து வந்தார். குருவானவர் கேமரூன் மிகுந்த தேவபக்தியுள்ளவரும், தேவனுடைய திராட்சை தோட்டத்தில் ஓயாத உழைப்பாளியாகவும். மனந்திரும்பாத மக்கள் பால் அளவற்ற ஆத்தும பாரம் கொண்ட ஒரு தேவபக்தனாகவும் விளங்கினார்.

யோனத்தானிடம் காணப்பட்ட விசேஷித்த கலை ஆர்வம் குறிப்பாக அழகான எழுத்துக்கள் எழுதுவதில் யோனத்தானுக்கிருந்த திறமையைக் கண்ட கேமரூன் அவர் மீது தனி கவனம் செலுத்தினார். அத்துடன் யோனத்தானின் பாச உணர்வு, குருவானவர்கள் மேல் உள்ள அவரது அலாதியான அன்பு, கேமரூனை அசைப்பதாக இருந்தது. யோனத்தான் கோபோர்த் கர்த்தருக்குத் தன்னை ஒப்புக் கொடுத்த அந்த முதல் ஞாயிற்றுக் கிழமை தேவ ஆராதனையில் அவர் அமர்ந்திருந்த விதத்தைக் குறித்து ஒரு கர்த்தருடைய பிள்ளை இவ்விதமாகக் கூறினார்:-

"அந்தச் சம்பவம் நடந்து 60 ஆண்டு காலங்கள் ஓடி மறைந்துவிட்ட போதினும் அந்த ஞாயிறு ஆராதனையில் நான் கண்டதை மறக்கவே இயலாது. யோனத்தான் கோபோர்த் என்ற அந்த வாலிபன் குருவானவர் கேமரூனுக்கு நேர் முன்னதாகவே ஆலயத்தில் அமர்ந்திருந்தான். அவனது முகம் குருவானவருடைய வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு பிரசங்க வார்த்தையையும் ஆசை ஆவலோடு கவனித்துக் கொண்டே இருந்தது. அவனது முகத்தில் ஒரு ஒளி வீசிற்று"

குருவானவர் லாக்லன் கேமரூன் தனது ஒவ்வொரு பிரசங்கத்தையும் அழைப்பு விடுத்தே முடிப்பார். கர்த்தருக்கு தங்களை ஒப்புக்கொடுத்தோர் முன் எழுந்து வரலாம் என்ற அழைப்பு இல்லாமல் அவர் தனது எந்த ஒரு தேவச் செய்தியையும் முடிப்பதே கிடையாது. அந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த மனந்திரும்புதலின் அற்புதத்தை யோனத்தான் கோபோர்த்தின் சொந்த வாயின் வார்த்தைகளாலேயே நாம் கேட்டுவிடுவோம்:-

"அந்த ஞாயிறன்று குருவானவர் கேமரூன் என்னையே நேருக்கு நேர் பார்ப்பது போல பார்த்து நான் கர்த்தருக்கு என்னை ஒப்புக்கொடுக்கும் படியாக தமது பிரசங்கத்தின்போது பரிந்து மன்றாடுவதைப் போல எனக்குத் தெரிந்தது. அவருடைய வார்த்தைகள் எனது மனந்திரும்பாத கடின உள்ளத்தை ஊடுருவி வெட்டிக்கொண்டு சென்றது. "குருவானவர் தமது அழைப்பை விடுவதற்கு முன்பாக நான் என்னை கர்த்தருக்கென்று ஒப்புவித்து தீர்மானம் செய்துவிடவேண்டும்" என்று எனக்குள் நினைப்பதற்குள்ளாக அவர் தமது வழக்கத்திற்கு மாறாக பிரசங்கத்தை திடீரென முடித்து ஜெபிக்க ஆரம்பித்து விட்டார். அவர் ஜெபிக்கத் தொடங்கியதும் சாத்தானாம் பிசாசு என்னிடம் வந்து எனது காதிற்குள்ளாக "கர்த்தருக்கு உன்னை அர்ப்பணிக்கும் காரியத்தை அடுத்த வாரத்துக்கு தள்ளிப் போட்டுவிடு" என்று சொன்னான். இந்த நேரம் கேமரூன் தனது ஜெபத்திற்குப் பின்னர் பிரசங்க பீடத்தில் சாய்ந்திருந்த வண்ணமாகவே கர்த்தருக்கு தங்களை ஒப்புவிப்போரை முன்வரும் படியாக அழைத்தார். அவருக்கு முன்பாக உட்கார்ந்திருந்த நான் வெளிப்படையான எந்த ஒரு ஆரவாரமுமின்றி என் தலையை சாய்த்து முற்றுமாக என் ஆண்டவருக்கு ஒப்புவித்து முன் சென்று தேவ சந்நிதானத்தில் முழங்காலூன்றினேன்.

அந்த அர்ப்பணிப்பு எத்தனை முழுமையானது என்பதை யோனத்தானுடைய பின் வந்த வாழ்க்கை தெள்ளந் தெளிவாக எடுத்துக்கூறுவதாக இருந்தது. "எனது 18 ஆம் வயதில் என்னில் நடைபெற்ற எனது மனமாற்றம் முழுமையும் பூரணமுமான ஒன்றாகும். "கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன், ஆயினும் பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்................." (கலா 2 : 20) என்று கூறிய அப்போஸ்தலன் பவுலைப்போல அந்த எனது மனந்திரும்புதலின் நாளிலிருந்து எனக்காக தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து அன்புகூர்ந்த தேவ மைந்தனாம் இயேசு இரட்சகருக்கே நான் முற்றுமாக சொந்தமானேன்" என்று தமது வாழ்வின் கடைசி ஆண்டின் அதாவது தனது 75 ஆம் வயதில் தனது மகள் ஒருவரிடம் கூறினார்.

மனந்திரும்புதலின் வெளிப்படையான அறிகுறிகள்
"எனது மனந்திரும்புதலின் ஆரம்ப நாட்களில் நான் எனது சகோதரன் வில்லியத்தின் குடும்பத்தோடு தங்கியிருந்தேன். அவனுடைய வீடு எங்களுடைய வீட்டிலிருந்து 15 மைல்கள் தொலைவில் இருந்தது. எங்களுடைய பெற்றோர் எங்களைப் பார்க்க வேண்டுமென்று வந்து ஒரு மாத காலம் எங்களுடன் தங்கியிருந்தனர். சாப்பிடும் சமயத்தில் கர்த்தருக்கு நன்றி ஸ்தோத்திரம் சொல்லுவதிலிருந்து குடும்ப ஜெபம் வரை எனது தகப்பனாருக்கு இல்லாதிருந்தது. அந்தச் சமயம் குடும்ப ஜெபம் நடத்தும்படியாக தேவன் என் உள்ளத்தில் பலமாகத் தூண்டினார். எனவே, நான் ஒரு நாள் "இன்று இரவு நாம் குடும்ப ஜெபம் நடத்துவோம். ஆகையால் இராச்சாப்பாட்டுக்குப் பின்னர் ஒருவரும் நித்திரைக்காக பிரிந்து செல்ல வேண்டாம்" என்று கூறினேன். எனது தகப்பனார் என்ன சொல்லுவாரோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன்.

அன்று இரவு நாங்கள் குடும்ப ஜெபத்துக்காக ஒன்றாகக் கூடினோம். நான் ஏசாயா தீர்க்கத்தரிசியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்து, வாசித்த பகுதியில் இருந்து ஒரு சில விளக்கங்களையும் கூறினேன். பின்னர் நாங்கள் எல்லாரும் ஜெபத்துக்காக முழங்கால்படியிட்டோம். நான் ஜெபித்தேன். எனது தந்தை ஏதாகிலும் எதிர்ப்பு தெரிவித்து என்மேல் சாடுவாரோ என்று நான் பெரிதும் அஞ்சினேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் விதமாக எனது தகப்பனார் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இந்த குடும்ப ஜெபம் பின் வந்த நாட்களிலும் ஒரு நாள் கூட தவறாது நீடித்தது. சில மாதங்களுக்கு பின்னர் எனது தந்தை தன்னை கர்த்தருக்கு முற்றுமாக ஒப்புவித்து அவருடைய அடிமை ஆனார்கள்"

யோனத்தான் படித்துக்கொண்டிருந்த உயர்நிலைப்பள்ளியில் அவரது மனந்திரும்புதலுக்குப் பிறகு நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தை அவரே நமக்கு விளக்கிக்கூறுகின்றார்:-

"எனது வகுப்பு ஆசிரியர் "தேவன் ஒருவர் இல்லவே இல்லை" என்று சாதித்து நின்ற நாஸ்தீகன் டாம் பெயின் என்பவனின் கொள்கைகளை பின்பற்றிச் செல்லும் தீவிர பக்தனாக இருந்தார். தனது வகுப்பிலுள்ள எல்லா மாணவர்களுமே தனது நாஸ்தீக கருத்துகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அதற்கு நேர் விரோதமாக எதிர்த்து நின்ற என்னை அவரும் எனது வகுப்பில் பயின்ற மாணவர்கள் எல்லாரும் கேலி பரிகாசம் செய்ததடன் பற்பலவிதமான வாக்குவாதங்களையும் என் மீது தொடுத்து வந்தார்கள். அது தேவனுடைய அன்பில் களிகூர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்த எனக்கு தாங்கக்கூடாத பாரமான கவலையாக இருந்தது. நான் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து முக்காடிக்கொண்டிருந்தேன். எனது குருவானவரையோ அல்லது வேறு எந்த மனித உதவியையோ நான் இது சம்பந்தமாக நாடிச் செல்லாமல் தேவனுடைய வார்த்தைகளையே எனது வழிகாட்டியாக எடுத்து இரவும் பகலும் நான் அவைகளை ஆராயத் தொடங்கினேன். எனது படிப்பை ஒரு பக்கம் வைத்துவிட்டு நாஸ்தீக ஆசிரியரையும், அவருடன் சேர்ந்திருந்த மாணவர்களையும் தேவனுடைய வசனங்களைக் கொண்டே தேவ பெலத்தால் மடங்கடித்து வீழ்த்த என்னை பக்குவப்படுத்தலானேன். இறுதியாக நான் தேவனுடைய வசனங்களால் என்னை நன்கு இடைக்கட்டிக்கொண்டு அந்த உறுதியான அஸ்திபாரத்தின் மேல் நான் என்னை நிலைப்படுத்தி நின்றுகொண்டு ஆசிரியரை தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளுடன் சந்தித்தேன்.

என்ன ஆச்சரியம், தேவன் அதிசயம் செய்தார். வகுப்பு ஆசிரியரும் அவரது கொள்கைகளை ஏற்று ஆதரித்து அவரைப் பின்பற்றிச்சென்ற மாணவர்கள் யாவரும் தங்களது நாஸ்தீக கொள்கைகளிலிருந்து திரும்பி ஜீவனுள்ள தேவனிடம் வந்தார்கள். அந்த நாஸ்தீக எனது வகுப்பு ஆசிரியர் பின்னர் மாற்றம் பெற்று எனது ஜீவ கால நண்பர்களில் ஒருவரானார்"

இப்படியாக தேவன் அவரது மனமாற்றத்தின் ஆரம்ப நாட்களில் பலத்த காரியங்களை செய்த போதினும் யோனத்தான் கோபோர்த் ஒரு ஆண்டு காலமாக தான் ஒரு வழக்கறிஞராக ஆக வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். தேம்ஸ்போர்ட் பண்ணையின் வேலைகளை எல்லாம் கஷ்டப்பட்டு முடித்ததின் பின்னர் மாலை நேரம் சில மைல்கள் நடந்து சென்று ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்ளுவார். அவருடைய பண்ணை வீட்டுக்குப் பின் புறம் ஒரு சிறிய குளம் உண்டு. அந்தக் குளத்தின் கரையில் நின்று கொண்டு அவர் ஒரு அரசியல்வாதி போல பேசிப் பழகி வந்தார். அந்த குளத்தை ஒட்டிச் செல்லும் பெரிய ரஸ்தாவில் செல்லும் மக்கள் ஏதோ ஒரு பைத்தியக்காரன் புத்திக் கோளாறு காரணமாக பேசிக்கொண்டிருக்கின்றான் என்று தங்களுக்குள்ளாக நினைத்துச் சென்றனர். யோனத்தான் ஒரு பள்ளி ஆசிரியனாக ஆக வேண்டும் என்று அவரது தாயார் அடிக்கடி கூறி வந்தார்கள். ஆனால் "ஒரு நல்ல அரசியல்வாதியே இன்று நாட்டுக்குத் தேவை" என்று அவர் தனது தாயாருடன் விவாதிப்பார். இவர்கள் இருவருடைய எண்ணங்களுக்கும் மேலாக தேவ நோக்கம் ஒன்று இருந்தது. அதின்படி யோனத்தான் கோபோர்த் ஒரு எழுப்புதல் பிரசங்கியாராகி அநேக ஆயிரங்களை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்த வேண்டும் என்பதாக இருந்தது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Empty Re: யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

Wed Feb 03, 2016 11:14 pm
அழியும் ஆத்துமாக்களை ஆண்டவர் இயேசுவின் 
பாதம் சேர்ப்பதே வாழ்வின் ஒரே இலட்சியம்
ஒரு சனிக்கிழமை மத்தியானம் யோனத்தான் கோபோர்த் 15 மைல்கள் தூரத்திலுள்ள தனது சகோதரன் வில்லியத்தைப் பார்க்க தனது குதிரையில் சென்றார். அந்த நாளின் இரவில் அவர் அங்கு தங்கியிருந்துவிட்டு அடுத்த நாள் காலையில் புறப்பட்டார். அவர் புறப்படுகின்ற போது, சகோதரன் வில்லியத்தினுடைய பக்தியுள்ள மாமனார் படித்துப் பழமையாய்ப்போன "மர்ரே மச்செயினின் வாழ்க்கை வரலாறு" என்ற அருமையான பரிசுத்த புத்தகத்தைக் கொடுத்து "இளைஞனே, இந்த புத்தகத்தைப் படித்தப் பார். இது உனக்கு உனது பக்தி வாழ்க்கையில் மிகுதியும் நன்மை செய்யும்" என்று கூறினார். அந்தப் புத்தகத்தை தனது முதுகுக்குப் பின்னாலுள்ள குதிரையின் சேணப்பையில் வைத்துவிட்டு யோனத்தான் வீட்டை நோக்கிப் புறப்பட்டு வந்தார்.

வெயிலின் காட்டம் அதிகமில்லாத நல்ல இதமான அக்டோபர் மாதத்தின் நாள் அதுவாகும். குதிரையில் வெகு தொலைவு வந்த பின்னர்தான் தனக்குக் கொடுக்கப்பட்ட புத்தகத்தின் நினைவு அவருக்கு வந்தது. உடனே, அவர் அந்தப் புத்தகத்தை எடுத்து குதிரையை மெதுவாக ஓட்டிய வண்ணம் படித்துக்கொண்டே வந்தார். வழியில் ஒரு மரத்தோப்பைக் கண்டு அங்கே இறங்கி தனது குதிரையை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு தான் வசதியாக உட்கார்ந்து கொள்ள காய்ந்த மர இலைகளால் தனக்கு ஒரு இருக்கையை அமைத்து அதிலே சாவதானமாக உட்கார்ந்த வண்ணம் "மர்ரே மச்செயினின் வாழ்க்கை வரலாற்றை" ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார். மணிக்கணக்கான நேரங்கள் எப்படி பறந்து மறைந்தது என்பது அவருக்குத் தெரியாது. சூரியன் மேல் திசைக்கு சென்று மரங்களின் நிழல்கள் நீண்டிருப்பதை கவனித்த அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். அந்த மரங்களின் நிழலில் யோனத்தான் நேரம் செலவிட்டுப்படித்த அந்த புத்தகமானது அவரது வாழ்க்கையின் முழு குறிக்கோளையுமே மாற்றி அமைத்தது.

தேவ மனிதர் மர்ரே மச்செயினின் பரிசுத்த வாழ்க்கை, அவருடைய ஆவிக்குரிய போராட்டங்கள், தேவன் தெரிந்து கொண்ட ஜனமான யூத மக்களின் இரட்சிப்புக்காக அவர் எடுத்துக் கொண்ட அவரது வாழ்வின் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் அனைத்தும் யோனத்தானின் உள்ளத்தின் அடித்தளத்தில் பலமாக வேர்பிடித்து நின்று கொண்டது. இதுகாறும் தனது வாழ்வை அலைவாய் துரும்பு போல அலைசடி பண்ணிக் கொண்டிருந்த அற்பமான ஆசைகள், நோக்கங்கள், தேவையற்ற பிடிவாதங்கள் அனைத்தும் பகலவனைக்கண்ட பனி போல மாயமாய் மறைந்தொழிந்தது. அந்த இடத்தை அழியும் ஆத்துமாக்களை ஆண்டவர் இயேசு இரட்சகருக்காக ஆதாயம் பண்ண வேண்டுமென்ற ஒரே பரிசுத்த குறிக்கோளே வாழ்வின் உன்னதமான இலட்சியம் என்ற எண்ணம் சிறைப்படுத்திக் கொண்டது.

நாக்ஸ் இறையியல் கல்லூரி வாழ்க்கையும் தேவப்பணிகளின் ஆரம்பமும்
அக்காலத்தில் டொரண்டோவிலிருந்த இறையியல் கல்லூரியாகிய நாக்ஸ் கல்லூரியில் சேர ஆயத்தமாக தன்னை கர்த்தரண்டை வழிநடத்திய லாக்லன் கேமரூன் குருவானவரிடம் கிரேக்கு, இலத்தீன் மொழிகளை கோபோர்த் கற்றார். ஒவ்வொரு நாளும் வழக்கமாக படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்து வேதாகமத்தை ஆழ்ந்து வாசித்து தியானிக்க நேரம் தேடிக்கொண்டார்.

நாக்ஸ் கல்லூரியில் இறையியல் கற்பதற்கு யோனத்தான் கோபோர்த்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அவரும் அந்தக் கல்லூரியில் தான் சந்திக்கப்போகும் இரட்சிக்கப்பட்ட பரிசுத்தமான வாலிபரைப் பற்றியும், அவர்களோடு தான் ஐக்கியம் கொண்டு அனுபவிக்கப்போகும் ஆன்மீக அனுபவங்களைப் பற்றியும் கனவுகள் கண்டு கொண்டிருந்தார்.

ஆனால், அந்த இறையியல் கல்லூரி வாழ்க்கை அவருக்கு பெரிய ஏமாற்றத்தையே தந்தது. அவர் எதிர்பார்த்தபடியான கிறிஸ்தவ பரிசுத்த வாழ்க்கை அக்கல்லூரியில் பல மாணவருக்கு இருக்கவில்லை. வழி தவறிப்போன பாவ மாந்தரை தேவனுடைய மந்தைக்குள் கொண்டு வர யோனத்தான் எடுத்துக்கொண்ட முயற்சிகளை அந்த மாணவர்கள் கேலி பேசி ஏளனம் செய்தார்கள். கிராமப்புறத்தில் வாழ்ந்த அவருடைய பழக்கவழக்கங்கள், உடை, எளிமை இவையனைத்தும் அவரை அவர்கள் மத்தியில் ஒரு கேலிப் பொருளாக்கினது.

ஒரு நாள் இரவு கல்லூரி மாணவர்கள் அவருக்கு ஓர் "ஆரம்பச்சடங்கு" நடத்தினர். அவர் அதில் அநேக அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதெல்லாம் ஒரு கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் நடக்கின்றனவே என்று அவர் மிகவும் வேதனையடைந்தார். ஆனால், அவருடைய பரிசுத்த நடத்தை அவர் அக்கல்லூரியை விட்டுச் செல்லும் நாளில் அவருக்கு பெரும் மதிப்பைக் கொடுத்து அந்த துஷ்ட மாணவர்களையே மாற்றியமைத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.

அக்கல்லூரியில் அவர் கல்வி கற்ற காலம் முழுவதிலும் ஒரு ஞாயிறு தவறாமல் டொராண்டோ நகரிலுள்ள "டாண்" என்ற சிறைக்கூடத்திற்கு அவர் சென்று அங்கிருந்த கைதிகளுக்கு தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை கூறுவது வழக்கம். முதலில் அவருக்கு சிறைச்சாலையின் சபா மண்டபம் வரை செல்லத்தான் அனுமதி கிடைத்தது. பின்னர், அவருடைய அருமையான பரிசுத்த நடத்தையையும், தேவப்பணியையும் அறிந்து கொண்ட சிறைக்காவலர்கள், கைதிகள் இருந்த அறைகளின் உள் முற்றம் வரை அவர் சென்று தேவச் செய்தியை அறிவிக்க அனுமதித்தனர்.

அவர் அங்கு சென்றிருந்த ஒரு நாள் ஒரு சிறைக்கைதி மிகவும் பெருமையான குரலில் சப்தமாக அவரிடம் "கடவுள் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை" எனக்கூறினான். அதற்கு யோனத்தான் மிகுந்த தேவ அன்புடனும், பொறுமையுடனும் "உம்மைப்பற்றி என் கையிலுள்ள இப்புத்தகம் (தனது கரத்திலுள்ள வேத புத்தகத்தை சுட்டிக்காண்பித்து) என்ன கூறுகிறதென்று பார்ப்போம் என்று கூறி 14 ஆம் சங்கீதத்தை எடுத்து "தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்" என்று வாசித்தார். அருகிலிருந்த அனைவரும் உடனே கொல்லென சிரித்துவிட்டனர். அதன் பின்னர் யோனத்தான் அந்த தேவ வசனத்தின் பேரில் அருமையாக பிரசங்கித்தார். அன்று சில கைதிகள் மனந்திரும்பினர்.

இரண்டு ஆண்டுகள் அவர் "வில்லியம் வீதி சுவிசேஷப்பணி இயக்கத்தில்" சேர்ந்து தொண்டாற்றினார். அதற்கு அவருக்கு சம்பளம் எதுவும் கிடையாது. பல வேளைகளில் அவருக்கு ஒரு தபால் தலை வாங்கக்கூட காசு இராது. எனினும், தனக்குத் தேவையான யாவற்றிற்காகவும் அவர் தனது ஆண்டவரிடமே கேட்டு அற்புதமாக அவைகளைப் பெற்று வாழும் பழக்கம் அப்போதிருந்தே அவருக்கு ஆரம்பமாகியது.

கல்லூரியில் அவர் கற்றுக் கொண்டிருக்கும் பொழுதே அவர் தேவச்செய்தியை அளிப்பதற்கு ஆயத்தமாக இருந்தார். அருகிலுள்ள ஏழை மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளுக்குச் சென்று அங்கு வீடுவீடாகப் புகுந்து மக்களுக்கு கர்த்தருடைய செய்தியை கொடுத்து வருவதை கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே தனது வழக்கமாக்கிக் கொண்டார். இந்தப் பணியின் பாதையில் அவர் விலைமாதர்களின் வீடுகளுக்கும் கூடச் சென்று தேவனுடைய அன்பை அவர்களுடனும் பகிர்ந்து கொண்டார். இதற்காக அவர் அடிக்கடி தனது உடன் மாணவரால் ஏளனம் செய்யப்பட்டதும் உண்டு.

ஒரு சமயம் இரவின் பிந்திய மணி நேரம் பட்டணத்தின் மிக மோசமான பகுதியில் தேவனுடைய சுவிசேஷ பணியை முடித்து யோனத்தான் கோபோர்த் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் சென்று வந்த இடம் குடிகாரர்கள், குண்டர்கள் நிரம்பிய பகுதியாகும். அப்பொழுது ஒரு போலீஸ்காரர் அவரை சந்திக்க நேரிட்டது. "நீங்கள் எப்படி தனியாக அந்த இடத்திற்குச் சென்று வருகின்றீர்கள்? நாங்கள் கூட அந்தப் பகுதிக்கு செல்லுவதானால் இரண்டு அல்லது மூன்று பேராகச் சேர்ந்து போவோமே அல்லாமல் எந்த ஒரு நிலையிலும் தனிமையாகப் போவதில்லை" என்று கூறினார். "நான் மட்டும்தான் என்ன? உங்களைப்போலத்தான் எனது துணைக்கு ஒரு ஆளோடுதான் சென்று வருகின்றேன்" என்று சொன்னார். "உங்கள் வார்த்தை எனக்கு நன்றாகவே புரிகின்றது" என்று அந்த கிறிஸ்தவ போலீஸ்காரர் பதில் கொடுத்தார்.

அந்நாட்கள் ஒன்றில் அவர் ஒரு அடர்த்தியான காட்டை கடந்து செல்ல வேண்டியதாக இருந்தது. காட்டு ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்த அவரது பாதை கொண்டை ஊசி வளைவான ஒரு திருப்பத்தில் சென்றது. அந்த திருப்பத்தை அவர் கடந்து வந்தபோது ஒரு பெரிய கரடியை முகத்துக்கு முகம் சந்தித்தார். அவரைக் கண்ட கரடி சற்று தூரம் சென்று ரஸ்தா ஓரமாக தனது பின்னங்கால்களின் மேல் சாவதானமாக உட்கார்ந்து யோனத்தானை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட கோபோர்த்தும் சில வினாடிகளுக்கு அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். பளிச்சென்று அவருக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. "நான் எனது பரலோக எஜமானரின் தேவப்பணியில் சென்று கொண்டிருக்கிறேன். அவர் என்னை கரடியின் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவார்" என்ற எண்ணத்தில் மெதுவாக முன்னேறத் தொடங்கி ஏறக்குறைய கரடியின் அருகாமைக்கே நெருங்கி வந்து விட்டார். ஆனால் அந்தக் கரடி தான் உட்கார்ந்த இடத்தைவிட்டு அசைவதைப்போல தெரியவில்லை. நமது யோனத்தானும் துணிச்சலுடன் இன்னும் சில அடிகளை எடுத்து வைத்து முன்னேறவே கரடி மெதுவாக நகர்ந்து காட்டிற்குள் சென்றுவிட்டது.

நாக்ஸ் கல்லூரியில் யோனத்தானின் இறையியல் படிப்பு முடிந்து அவர் பட்டமேற்கும் விழா நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த விழாவில் உடுத்திக் கொள்ள அவருக்கு தரமான நல்ல ஆடை இல்லாதிருந்தது. தனக்கு, அந்த நாளுக்கு அணிந்து கொள்ள ஒரு தரமான நல்ல ஆடை வேண்டுமென அவர் கர்த்தரை நோக்கி உள்ளமுருகி ஜெபித்து வந்தார்.

தனது அத்தியந்த தேவையை மனதில் கொண்டவராக சற்று மன பாரத்தோடு அவர் யாங்கே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த தெருவில் இருந்த புகழ்பெற்ற தையல் கடை மேலாளர் தனது கடையின் வாசலில் நின்று கொண்டிருந்தார். கோபோர்த் அந்தக்கடையை கடந்து சென்றபோது கடையின் மேலாளர் பெர்க்கின்ஷா அவரை கைதட்டிக் கூப்பிட்டு தனது கடைக்கு வரும்படியாக அழைத்தார். கடைக்குச் சென்ற அவருக்கு முன்பாக புத்தம் புதிய கோர்ட், பேண்டை எடுத்து வைத்து அது எப்படி இருக்கின்றது என்று மேலாளர் கோபோர்த்தைக் கேட்டார். தனது மனதுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், ஆனால் அதை வாங்க தன்னிடம் பணம் எதுவுமில்லை என்றும் கோபோர்த் சொன்னார்.

பேண்டையும், கோட்டையும் கோபோர்த் போட்டுப் பார்க்க மேலாளர் அவரைக் கேட்டார். அது அவருக்கு முற்றிலும் பொருத்தமானதாக, அவருக்கென்று அளவு எடுத்து தைத்தது போலவே இருந்தது. "இதை நான் உனக்கு எனது அன்பளிப்பாகத் தருகின்றேன். ஏற்றுக்கொள்ளுவாயா?" என்று தையல் கடை மேலாளர் பெர்க்கின்ஷா கேட்டார். "இது வேறு ஒருவருக்காக தைக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் அந்த மனிதருக்கு விருப்பமில்லாமல் அதை என் வசமே கொடுத்து வேறு யாருக்காவது இலவசமாக கொடுத்துவிடச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்" என்று கூறி அந்த புத்தம் புதிய அழகான உடைகளை கோபோர்த்துக்கே கொடுத்துவிட்டார். தேவன் தனக்கு எத்தனை நல்லவராக இருந்து தனது ஜெபத்துக்கு எத்தனை துரிதமாக பதில் அளித்துவிட்டார் என்ற ஆனந்த சந்தோசம் கோபோர்த்துக்கு பொங்கிப் புரள ஆரம்பித்தது.

தேவ மனிதனுக்கேற்ற ஒரு வாழ்க்கை துணை
கோபோர்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கண்ணோக்கி வரும் நாம் 49 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து அவரது 11 குழந்தைகளுக்குத் தாயான ரோசலிண்ட் கோபோர்த் அம்மையாரின் வாழ்க்கைச் சாயலையும் ஒரு கண்ணோட்டம் பார்ப்பது நமக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.

ரோசலிண்ட் கோபோர்த் அம்மையார் தனது வாழ்க்கை சரித்திரத்தை அவர்கள் வாயாலேயே சொல்ல நாம் ஜெபத்தோடு கவனிப்போம்:-

"இங்கிலாந்து தேசத்திலுள்ள கென்சிங்டன் கார்டன்ஸ் என்ற இடத்துக்கு அருகாமையில் 1864 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி நான் பிறந்தேன். நான் பிறந்த 3 ஆண்டு காலங்களுக்குப் பின்னர் எனது பெற்றோர் கனடா தேசத்திலுள்ள மாண்ட்ரீல் என்ற பட்டணத்தில் வந்து குடியேறினர். எனது குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியான நேரங்கள் வெகு அழகான படங்கள் வரையும் ஓவியக்காரரான எனது தந்தையின் சித்திரக்கூடத்தில் கழிந்தன. பின் நாட்களில் நான் ஒரு புகழ்மிக்க ஓவியக்காரியாக விளங்குவேன் என்பதை எனது தந்தை நன்கு அறிந்திருந்தார். நான் எனது சித்திரக்கலையை எனது தந்தையிடத்திலும் மற்ற எனது கல்வியை தனியார் பள்ளிக்கூடங்களிலும், எனது தாயாரிடத்திலும் பெற்றேன்.

நான் 12 வயது சிறுமியாக இருந்தபோது ஆல்பிரட் சந்தாம் என்ற பிரசங்கியார் யோவான் 3 :16 ஆம் வசனத்தின் பேரில் ஒரு உயிர் மீட்சி கூட்டத்தில் பிரசங்கித்தார். தேவனுடைய அன்பின் அழம், நீளம், அகலம், உயரத்தின் சித்திரத்தை மிகுந்த உணர்ச்சியோடும், தேவ அன்பின் பெருக்கத்தோடும் அவர் விளக்கிக் காண்பித்துக் கொண்டிருந்த வேளையில் நான் என்னை முற்றுமாக ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து தங்களை கர்த்தருக்கு அந்தக் கூட்டத்தில் அர்ப்பணித்த மக்களுடன் தைரியமாக எழுந்து நின்று எனது பரம எஜமானரின் அடிமையானேன்.

கூட்டத்திலிருந்து நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது "கிறிஸ்து இரட்சகர் உன்னை தனது சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்று நம்பிக்கொண்டிருப்பது எத்தனை முட்டாள்தனமானது" என்று சாத்தான் திரும்பத் திரும்ப என் காதிலே பேசிக்கொண்டே இருந்தான். அடுத்த நாள் அதிகாலை எனது பாட்டியம்மா எனக்கு இங்கிலாந்து தேசத்திலே கொடுத்த எனது வேதாகமத்தின் பக்கங்களை புரட்டினவளாக "ஆண்டவரே, நீர் என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டதின் நிச்சயத்தை உமது வசனத்தின் மூலமாக உறுதி செய்யும்" என்று ஜெபித்தேன். "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" (யோவான் 6 : 37) என்ற வசனத்தை தேவன் எனக்கு கொடுத்து என்னை களிகூரப்பண்ணினார். மேற்குறிப்பிட்ட தேவ வசனம் எனது எல்லா சந்தேகத்தையும் என்னிலிருந்து விரட்டி அடித்தது.

அதற்கப்பால் சாத்தான் "நீ ஆண்டவருடைய பிள்ளையாக இருப்பதற்கு முற்றும் தகுதியற்ற மிகவும் சிறு பிள்ளை" என்று எனது காதிற்குள் திரும்பவும் வந்து பேசி என்னை குழப்பமடைய செய்தான். நான் திரும்பவும் ஆண்டவருடைய வேதத்திற்கே சென்று அதின் பக்கங்களை புரட்டி கர்த்தர் இது விசயத்திலும் எனக்கு உதவி செய்ய அவரை நோக்கிக் கெஞ்சினேன். "அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதி 8 : 17) என்ற தேவ வசனத்தை கர்த்தர் எனக்குக் கொடுத்து என்னை அமரப்பண்ணினார். மேற்கண்ட இரு வசனங்களும் தேவன் என்னை தமது சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்ற எனது விசுவாசத்தை ஆழமாக உறுதிப்படுத்தியது. அதிலிருந்து எனக்கு எந்த ஒரு சந்தேகமும், தடுமாற்றமும் கடைசி வரை ஏற்படவே இல்லை.

அதின் பின்னர், அடுத்து வந்த ஆண்டுகளில் இரண்டு காரியங்கள் என்னில் போராட்டம் பண்ணிக் கொண்டே இருந்தன. ஒன்று, நான் கற்ற ஓவியக்கலை, அடுத்தது நான் எனது சொந்தமாக ஏற்றுக்கொண்ட எனது அருமை இரட்சகர். எனது அருமை இரட்சகருக்கு ஊழியம் செய்வதா அல்லது நான் கற்ற சித்திரக்கலையில் ஈடுபாடு கொண்டு அதற்கு உழைப்பதா என்ற போராட்டத்தில், கர்த்தருக்கு மாத்திரமே இனி நான் ஊழியம் செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தேன்.

நான் இன்னும் இளமையாக எனது 20 ஆம் வயதில் இருந்தபோது "ஆண்டவரே, நீர் என்னை ஒரு குடும்ப பெண்ணாக வாழ சித்தம் கொள்வீரானால் தன்னை முற்றுமாக உமது தேவ ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்த ஒரு தேவ ஊழியனுக்கே என்னை மனைவியாக ஆக்கியருளும். அதைத் தவிர வேறு எந்த ஒரு குடும்ப வாழ்விலும் நான் இணைய விரும்பவில்லை" என்று என்னை கர்த்தருக்கு ஒப்புவித்து ஜெபித்து வந்தேன்.

1885 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்களது வேதபாட ஆசிரியர் பிளேக் என்பவர் இடத்திற்கு ஹென்றி பிரைன் என்ற ஒரு புதிய ஆள் வந்திருந்தார். நான் தேவாலயத்தின் ஆர்க்கனிஸ்ட்டாக (இசைக்கருவி இசைப்பவர்) இருந்தமையால் அன்று பாடக்கூடிய பாடல்களைக் குறித்து அவர் என்னுடன் பேசினார். அவர் என்னைவிட்டு கடந்து செல்லும் நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஏழ்மையான மனிதரை எனக்கு "இவர்தான் எங்கள் பட்டணத்து மிஷனரி யோனத்தான் கோபோர்த்" என்று அறிமுகம் செய்து வைத்தார். அந்த மனிதர் பார்வைக்கு அற்பமானவராக தெரிந்த போதினும் அவரது பிரகாசமான முகச் சாயல் அவர் ஒரு பரிசுத்த தேவ பிள்ளை என்பதை வெட்ட வெளிச்சமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. அவரது பரிசுத்த சாயல் அவரது ஏழ்மைக்கோலத்தை நான் காணக்கூடாதபடி முற்றுமாக மறைத்தது. புதிதாக வந்த வேதபாட ஆசிரியர் ஹென்றி பிரைன் வரவிருக்கும் சனிக்கிழமை நடைபெறவிருந்த கூட்டம் ஒன்றுக்கு ஆர்கன் இசைப்பதற்கு என்னை வரும்படியாக அன்போடு அழைத்தார். ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டதின்படி நான் இங்கிலாந்து செல்லக்கூடியவளாக இருந்தபோதினும் என்னையறியாமல் அவரது அழைப்புக்கு சம்மதம் தெரிவித்தேன்.

சனிக்கிழமை வந்தது. டொராண்டோ மிஷன் யூனியன் சதுக்கத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்கு ஆர்க்கனிஸ்ட்டாக நான் சென்றேன். எனக்கு முன்பாக இருந்த மக்களுடன் யோனத்தான் கோபோர்த் அமர்ந்திருந்தார். அவர் தனக்கு முன்பாக இருந்த மேஜையின் மீது தனது வேதாகமத்தை வைத்திருந்தார். திடீரென அவரை ஏதோ ஒரு காரியத்துக்காக வெளியே வரும்படி அழைத்தார்கள். அவர் போனதும், நான் மிகுந்த தைரியத்தோடு எனக்குள் ஏற்பட்ட ஒரு உள்ளுணர்வின்படி எனது இருக்கையிலிருந்து எழுந்து கோபோர்த்துடைய இருக்கைக்கு சென்று அவரது வேதாகமத்தை எடுத்து வந்து அதை எனக்கு முன்பாக விரித்து வைத்து மிகவும் துரிதம் துரிதமாக அதின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஆ, அது, பல தடவைகள் வாசிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு சிதையுண்டு காணப்பட்டதுடன் தேவனுடைய வசனங்கள் எல்லாம் மிகவும் கிரமமாக, அழகாக கோடிட்டு வாசிக்கப்பட்டிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். உடனே, நான் அந்த வேதாகமத்தை அது இருந்த இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு எனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன். அந்தச் சம்பவம் கண் இமைக்கும் நேரத்தில் வெகு துரிதமாக நடந்து முடிந்தது. "நான் திருமணம் செய்வதாக இருந்தால் இந்த பரிசுத்த பக்தனைத்தான் மணந்து கொள்ளுவேன்" என்று என் உள்ளத்துக்குள் அன்றுதானே நிச்சயித்துக் கொண்டேன்.

அந்த நாட்களில் தானே டொராண்டோ பட்டணத்தின் கிழக்கு கடைக்கோடிப் பகுதியில் ஒரு சுவிசேஷ மிஷன் களத்தை புதிதாக திறக்கும் கமிட்டிக்கு என்னையும் அங்கத்தினராக தெரிவு செய்திருந்தார்கள். அதே கமிட்டியில் கோபோர்த்தும் இடம் பெற்றிருந்தார். நானும், கோபோர்த்தும் பல தடவைகள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டின் வசந்த காலத்தில் கோபோர்த் என்னைப் பார்த்து "உங்களுடைய வாழ்க்கையை என்னுடைய வாழ்க்கையுடன் இணைத்து சீனாவுக்கு மிஷனரியாக வருவீர்களா?" என்று கேட்டார். எந்த ஒரு தயக்கமுமின்றி நான் அவருடைய வார்த்தைக்கு இணங்கி "நிச்சயமாக அப்படியே செய்கின்றேன்" என்று பதில் அளித்தேன். சில நாட்கள் கடந்து சென்றன. கோபோர்த் மீண்டும் என்னைச் சந்தித்து "எனது ஆண்டவர் இயேசுவையும், அவரது பரிசுத்த தேவ ஊழியத்தையும், ஏன்? உங்களைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கவும், அன்புகூரவும் நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா?" என்று தாழ்மையாகக் கேட்டார். சற்று நேர அமைதிக்குப் பின்னர் "ஆம், நான் எப்பொழுதும் அதை உங்களுக்கு அனுமதிப்பேன்" என்றேன். இப்படிப்பட்ட ஒரு தேவ பக்தனை தேவன் எனக்குத் தரும்படியாகத்தான் நான் இத்தனை காலமும் ஜெபித்து வந்திருந்தேன்.

மேற்கண்ட வாக்குறுதியை நான் கொடுத்த பின்னர் எனது முதல் பரீட்ஷை ஆரம்பமானது. உலகில் எல்லா பெண்களையும் போல எனது வருங்கால கணவர் எனக்கு ஒரு நிச்சயதார்த்த மோதிரத்தை எனக்கு அணிவிப்பார் என்று நான் ஆவலோடு காத்திருந்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்தேன். எனது காத்திருப்பின் நாட்கள் ஒன்றில் கோபோர்த் என்னண்டை வந்து "உங்களுக்காக நான் ஒரு திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை பெற்றுக்கொள்ள முடியாது போனாலும் நீங்கள் அதைக் குறித்து ஒன்றும் நினைக்கமாட்டீர்கள் என்று நான் எண்ணுகின்றேன். அப்படித்தானே?" என்று கோபோர்த் கூறிவிட்டு தனது வார்த்தையைத் தொடர்ந்தார். "சீன தேசத்திலே தேவப்பணி செய்ய நிறைய புத்தகங்களும், துண்டுப்பிரதிகளும் தேவைப்படுகின்றன. அதின் காரணமாக ஒவ்வொரு பைசாவும் கூட மிகவும் கவனத்தோடும் சர்வ ஜாக்கிரதையோடும் செலவிடப்பட வேண்டியதாக இருக்கின்றது" என்று சொன்னார். "அவர் சொன்ன வார்த்தைகளைக்கேட்ட நான் அவரது பிரகாசமான முகத்தைப் பார்க்கவே நிச்சயதார்த்த மோதிரத்தைக் குறித்த எனது கனவுக்கோட்டை எல்லாம் என்னைவிட்டு மாயமாக மறைந்து போனது. நித்தியத்தின் அடிப்படையில் உண்மையான விலைமதிப்பு எதில் உள்ளது என்ற முதல் பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்.

டொராண்டோ பட்டணத்தின் கிழக்கு கடைக்கோடி குடிசை வாழ்பகுதியில் கோபோர்த்துடன் சேர்ந்து 2 ஆண்டு காலம் தேவப்பணி செய்ததின் காரணமாக மனந்திரும்பாத எனது உடன் பிறந்த சகோதரிகளின் ஆத்தும இரட்சிப்பைக் குறித்ததான எனது பொறுப்பான உத்திரவாதத்தை நான் வெகு அதிகமாக உணர்ந்தேன். இந்த நாட்களில் என்னில் எனது குழந்தை பருவ காலம் முதல் நீண்ட நாட்களாக வேர்ப்பிடித்து நின்ற எனது ஓவியக்கலை ஆர்வம் தானாகவே என்னிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டது. அதின் இடத்தை தன்னை முற்றுமாக தனது பரம எஜமானரின் பரிசுத்த சேவைக்கு அர்ப்பணித்திருந்த கோபோர்த்தின் உத்திரவாதமும் பொறுப்புமுள்ள மனைவியாக இருந்து கர்த்தருடைய பரிசுத்த தேவப் பணியில் அவரோடு தோளோடு தோள் கொடுத்து ஊழியம் செய்ய என்னை ஏவி எழுப்பி விட்டது" என்கின்றார் ரோசலிண்ட் அம்மையார். ரோசலிண்ட் கோபோர்த் அம்மையாரின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Jonathan_goforth_01
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Empty Re: யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

Wed Feb 03, 2016 11:16 pm
சீனா தேசம் நோக்கிய பயணப்பாதையில்
யோனத்தான் கோபோர்த்தும் அவரது மனைவி ரோசலிண்ட் கோபோர்த்தும் கனடா தேசத்தின் வான்கூவர் துறைமுகத்திலிருந்து 1888 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் மிஷனரிகளாக சீன தேசத்துக்கு பயணமானார்கள். அந்த நாளில் எழுதப்பட்ட கோபோர்த்தின் கடிதம் ஒன்றில் கீழ்க்கண்ட வரிகள் காணப்படுகின்றன:-

"எங்கள் கப்பல் தளபதியாம் கர்த்தர் புறப்படுவதற்கு முன்னர் சில வரிகளை நான் எழுதுகின்றேன். "எஸ்.எஸ்.பார்த்தியா" என்ற எங்கள் கப்பலின் அறைக்குள் காலை 7 மணிக்கெல்லாம் நாங்கள் சென்றுவிட்டோம். எங்களை ஏற்றிச்செல்லும் இந்தக் கப்பல் தனது நங்கூரத்தை விலக்கி மெதுவாக நகருவதை நாங்கள் கவனிக்கின்றோம். எங்களுடைய தாய் நாடான கனடா தேசத்தை விட்டுவிட்டு புறப்படுவது, அதிலும் குறிப்பாக எங்களை அதிகம் அதிகமாக நேசிக்கின்ற தேவ மக்கள் நிறைந்த அந்த நாட்டைவிட்டு பயணப்படுவது என்பது எங்களுக்கு தாங்க முடியாத துன்பப் பெருக்கை கொண்டு வருவதாக இருப்பினும் தொடர்ந்து கனடா தேசத்தில் தங்கியிருக்க எங்களுக்கு கொஞ்சமும் ஆசை இல்லை. எனது மனைவி ரோசலிண்ட் கோபோர்த்துக்கு எங்களுக்கு முன்னாலுள்ள ஆழ்ந்த சமுத்திரங்களுக்கு அப்பாலுள்ள எங்கள் புதிய பணித்தள வீட்டைக் குறித்து கொண்டுள்ள சந்தோசத்தைப் போன்ற ஒரு சந்தோசத்தை என்றைக்குமே கண்டதில்லை. எங்களது இந்த மிஷனரிப் பிரயாணத்தை அநேக கர்த்தருடைய பிள்ளைகளின் கண்கள் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவர்களுடைய உருக்கமான ஜெப ஆதரவும், பொருளாதார உதவியும் எங்களுக்கு உண்டு என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் தேவனுடைய திருவுளத்துக்குப் பிரியமானால் பத்தாயிரம் சீன மக்களை நாங்கள் எங்கள் ஆண்டவருக்காக ஆதாயம் செய்ய வேண்டுமென்பதே எங்கள் வாழ்வின் குறிக்கோள்" (இந்த ஆசை பின் வந்த ஆண்டுகளில் அப்படியே நிறைவேறலாயிற்று)

பார்த்தியா என்ற அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் ரோசலிண்ட் அம்மையார் மட்டும்தான் பெண் என்பது அதிர்ச்சியான செய்திதான். கப்பல் வளைகுடாவை கடந்து பெரும் சமுத்திரத்துக்குள் நுழைந்த ஓரிரு தினங்களில் கப்பலில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. கப்பலின் தலைவரான ஒரு பெரிய கனத்த மனிதன் அதிகமாக குடித்து அதின் காரணமாக மரணமடைந்து அவனது சரீரத்தை கப்பலின் அடித்தட்டுக்கு சுமந்து சென்றதை கோபோர்த் தம்பதியினர் கவனித்தனர். அடுத்த வந்த 14 நாட்களுக்கு ரோசலிண்ட் கோபோர்த் அம்மையாருக்கு அந்த நிகழ்ச்சி ஒரு பயங்கரமான கலக்கமாகவே இருந்தது.

கப்பலின் தச்சன் ஒரு நல்ல கிறிஸ்தவன். அவன் கோபோர்த்தண்டை வந்து கப்பலின் பாதுகாப்புக்காக ஜெபிக்கும்படியாக அவரைக் கேட்டுக் கொண்டான். ஏனெனில் அதிலே ஜப்பான் நாட்டுக்காக சில பளுவான யந்திரங்கள் ஏற்றப்பட்டிருந்தன. யந்திரங்களின் அத்தனை அதிகமான பழு கப்பல் பலகையை உடைத்துக்கொண்டு வெளியே சமுத்திரத்திற்குள் போய்விடுமோ என்ற அச்சம் அந்த தச்சனுக்கு இருந்தது. கடலிலே புயல் காரணமாக 14 நாட்கள் சூரியனுடைய முகமே காணப்படவில்லை. அந்த தினங்களில் கோபோர்த் அந்த தச்சனுடைய வேண்டுகோளுக்காக ஜெபிக்கும்படியான நல்ல தருணம் கிடைத்தது.

பதினைந்தாம் நாள் கப்பல் ஜப்பான் வந்து சேர்ந்து, அங்கிருந்து அது பயணப்பட்டு சீன தேசத்தின் ஷாங்காய் துறைமுகம் வந்து எட்டிப்பிடித்தது. தங்கள் பணித்தளத்திற்கு செல்லுவதற்கு முன்னால் கோபோர்த் தம்பதியினரை ஷாங்காய் நகரில் வாழ்ந்த அருட்பணியாளர் ஒருவர் அந்த நகரில் உள்ள "அபினி அரண்மனை" (ஒபியம் பாலஸ்) என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது ஓர் அழகான மாளிகை. மிகவும் பிரகாசமான விளக்குகள் அங்கு ஏற்றப்பட்டிருந்தன. அங்குள்ள ஒடுக்கமான படுக்கைகளில் முழு ஆடையணிந்த ஆண்களும், பெண்களும் அபின் அருந்தும் சாதனங்களுடன் படுத்திருந்தனர். அவர்களுக்கு அயல் நாட்டினர் வருகிறார்களே என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லை. கெட்ட குமாரன் சரித்திரத்தில் நாம் காண்கின்ற "தூர தேசம்" என்பது இந்த சீன தேசத்திலுள்ள ஷாங்காய் பட்டணம்தான் என்று கோபோர்த் தம்பதியினருக்கு கூறப்பட்டது. வெட்கத்துக்குரிய காரியம் என்னவெனில் இம்மாதிரியான அபினிக்கூடங்கள், விலை மாதர்களின் விடுதிகள் பலவும் சர்வ தேசத்தினர் குடியிருக்கும் பகுதிகளில் அமைந்திருந்ததேயாகும்.

அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணுவான்?
கோபோர்த் தம்பதியினரின் பணித்தளத்தின் தலைமையிடம் செஃபூ என்ற நகரில் அமைக்கப்பட்டது. அங்கு ஒரு வாடகை வீட்டில் கோபோர்த் தம்பதியினர் முதலாவதாக குடியேறினர். தனது முதல் வேலையாக கோபோர்த் தனக்கு சீன மொழியை கற்றுத் தர ஒரு ஆசிரியரை நியமித்துக் கொண்டார். ஒரு நாள் அவர்கள் உணவருந்திக் கொண்டிருக்கையில் வெளியே கூச்சல் அதிகமாகக் கேட்டது. அதின் காரணத்தை அறியும்படியாக என்னவென்று வெளியே போய்ப் பார்த்தபொழுது அவர்களுடைய படுக்கை அறை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அது கூரையிடப்பட்ட பகுதியாதலால் தீ வெகு விரைவில் பரவியது. கோபோர்த் எரிந்து கொண்டிருந்த தனது அறைக்குச் சென்று தனது வேதாகமத்தையும், பணப்பையையும் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், பணப்பையை அவரது மனைவி அதற்கு முன்னரே எடுத்துச் சென்று வெளியில் நின்று கொண்டிருந்த சமயம் திருட்டு சீனர்கள் அந்தப் பணப்பையை தட்டிப் பறித்துச் சென்றுவிட்டனர். அந்த தீ விபத்தில் அவர்களுடைய திருமண வெகுமதிகள் பலவும், அபூர்வமான குடும்ப புகைப்படங்கள் தொகுப்புகளும் எரிந்து போய்விட்டன. "அவை யாவும் வெறும் பொருட்கள்தானே" என்று பொருட்களை இழந்து துயரத்தில் நின்று கொண்டிருந்த தனது மனைவியிடம் கோபோர்த் கூறி அவர்களை ஆறுதல்படுத்தினார்.

கோபோர்த் தம்பதியினர் மூன்று வாரங்களில் தங்களது புதிய இல்லத்துக்கு குடிபோனார்கள். இந்தச் சமயத்தில் யோனத்தான் கோபோர்த் தனது மனைவிக்கு ஆண்டவருக்கு கொடுப்பதை குறித்து போதித்தார். அவர்கள் தங்கள் வருவாயில் ஏற்கெனவே தசமபாகம் கொடுத்து வந்தனர். ஆனால் கோபோர்த் அது போதாது எனக்கூறி ஐந்தில் ஒரு பாகம் கொடுக்கத் தீர்மானித்தார். நாளடைவில் அது அதிகமாகி தங்களுடைய அன்றாடக தேவைக்குப் போக மீதிப்பணம் அனைத்தையும் அவர்கள் தேவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள். கோபோர்த் ஒவ்வொரு ஓய்வு நாள் காலை ஆராதனைகளிலும் அங்குள்ள சீனர்களின் தேவாலயத்தில் பங்கு கொள்ளுவதை வழக்கமாகக் கொண்டார். ஏனெனில் அப்பொழுதுதான் கடினமான சீன மொழியின் ஓசைகளையும், உச்சரிப்பில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளையும் கற்றுக்கொள்ள உதவும் என்று அவர் எண்ணினார்.

சங்கை ஆர்தர் ஸ்மித் அக்காலச் சீன தேவ ஊழியர்களில் பெயர் பெற்றவராக விளங்கினார். அவர் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கோபோர்த்துக்கு அவருடைய பணித்தளமாகிய வட ஹோனான் மாநிலத்தை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். அது மிகவும் செழிப்பான பகுதி. ஏராளமான ஊர்களைக் கொண்டது. மேற்குப் பகுதியில் அழகிய ஷான்சி மலைகள் இருந்தன. இப்பகுதியில்தான், தான் தேவ ஊழியம் செய்ய தனக்கு ஆண்டவர் அருள் புரிய வேண்டுமென கோபோர்த் வேண்டிக்கொண்டார். அவர் அப்படி எண்ணிய நாளின் காலை வேளையில் தேவன் "மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல், பூமியை நனைத்து முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாய் என்னிடத்தில் திரும்பாமல் அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியம் ஆகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55 : 10, 11) என்ற வாக்குத்தத்தம் கிடைத்தது. கோபோர்த் அந்த தேவ வாக்கில் அதிகமான உற்சாகம் கொண்டார். அந்த தேவ வாக்குத்தத்தம் நிறைவேறப்பட வேண்டும் என்று கோபோர்த் கர்த்தரிடம் ஊக்கமாக வேண்டிக் கொண்டார்.

வட ஹோனானுக்கு அருகிலுள்ளது பங்ச்வான் என்ற ஊர். அது ஆற்றங்கரையிலிருந்து ஏறத்தாழ ஒரு மைலுக்கு அப்பாலிருந்தது. மக்கள் நெருக்கம் நிரம்பிய பகுதியிலிருந்த இந்த ஊர் பயிர் தொழிலில் சிறந்து விளங்கியது. இவ்வூரில்தான் கோபோர்த் தம்பதியினர் தங்கியிருந்து தேவனுடைய மிஷனரிப் பணியை தொடங்கலாயினர். அவர்கட்கு வசதியான ஒரு நல்ல வீடு கிடைத்தபடியால் செஃபூ நகரிலிருந்து வந்து இந்த ஊரில் குடியேறினர்.

இந்தச் சமயம் "சீனா இன்லாண்ட் மிஷனரி ஸ்தாபனத்தை" தோற்றுவித்த பரிசுத்தவான் ஹட்சன் டெயிலரிடமிருந்து கோபோர்த்துக்கு ஒரு கடிதம் வந்து கிடைத்தது. அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தில் ஹட்சன் டெயிலர் இவ்வாறு எழுதியிருந்தார். "நாங்கள் ஒரு பெரிய மஷனரி இயக்கமாக ஹோனான் மாகாணத்துக்குள் சுவிசேஷத்துடன் பிரவேசிக்க கடந்த 10 ஆண்டு காலமாகப் பிரயாசப்பட்டு இப்பொழுதுதான் சிறிய வெற்றி கிட்டியுள்ளது. நீங்கள் அந்த மாநிலத்துக்குள் சுவிசேஷத்துடன் செல்லுவதானால் உங்களுடைய முழங்கால்களிலேயே நகருங்கள் (ஜெபத்துடன் முன்னேறுங்கள்)" என்று குறிப்பிட்டிருந்தார்.

சீன மொழியை கற்றுக்கொள்ளுவது கோபோர்த்துக்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்த மொழியைக் கற்பது அவருக்கு அத்தனை இலகுவாக இருக்கவில்லை. சீன மக்கள் தங்கள் சீன மொழியிலேயே தங்களுடன் பேசுவதைக் கேட்க விரும்பினர். கோபோர்த் பேசிய சீன மொழி அவர்களுக்கு விளங்கவில்லை. இதனால் அவர் மிகவும் மனமடிந்து போனார். ஒரு நாள் தேவாலயத்துக்குச் செல்லும் முன்னால் அவர் தனது மனைவியிடம் "தேவன் சீன மொழி விசயத்தில் எனக்கு ஒரு அற்புதம் செய்யாவிடில், நான் ஒரு தோல்வியடைந்த மிஷனரியாகத்தான் இருப்பேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால், தேவனுடைய அற்புதம் அன்று தேவாலயத்தில் நிகழ்ந்தது. கோபோர்த் தனது வேதாகமத்தை கையில் எடுத்து சபையினருக்கு பிரசங்கிக்கும்படியாக எழுந்து நின்றார். சீன மொழி வார்த்கைள் அவரது வாயிலிருந்து தெளிவாகவும் சரளமாகவும் வெளி வந்தன. தனது எண்ணங்களை அவர் சரியான பதங்கள் மூலமாக மக்களுக்கு வெளிப்படுத்த முடிந்தது. மெய்யாகவே தேவன் தமது தாசனுக்கு அற்புதம் செய்துவிட்டார். கோபோர்த் பேசி முடிந்ததும் அடுத்து சங்கை டோனால்ட் பிரசங்கிக் வேண்டும். ஆனால், அன்று மக்கள் கோபோர்த்தையே தொடர்ந்து பேச விரும்பிக் கேட்டுக் கொண்டனர். வீடு திரும்பிய கோபோர்த் தனது மனைவியிடம் மட்டற்ற மகிழ்ச்சி பொங்க "சீன மொழிச் சிக்கலின் முதுகெலும்பு உடைந்துவிட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறினார். இந்த அற்புதமானது ஜெபத்திற்கு கிடைத்த ஒரு பதில் என்பதை இரண்டு மாதங்களுக்கு பின்னர் கனடாவிலிருந்து அவருக்கு வந்த ஒரு கடிதம் சுட்டிக் காண்பிப்பதாக இருந்தது.

ஒரு இரவு உணவு வேளைக்குப் பின்னர் நாக்ஸ் கல்லூரியின் (டொராண்டோ, கனடா) ஆவிக்குரிய மாணவர்கள் சிலர் ஜெபிப்பதற்காக ஒரு அறையில் கூடினர். அன்று அவர்கள், யோனத்தான் கோபோர்த்துக்காகவே ஜெபித்துக் கொண்டிருந்தனர். ஆண்டவருடைய பிரசன்னமும், வல்லமையும் அக்கூட்டத்தில் தெளிவாக இருந்தது. கூட்டத்திலிருந்தவர்கள் அனைவருமே அன்று ஆண்டவர் கோபோர்த்துக்கு ஏதாகிலும் நன்மை செய்திருப்பார் என்று முழு நிச்சயமாக நம்பினார்கள் என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தது. கோபோர்த் உடனடியாக தன் நாட் குறிப்பு புத்தகத்தை (டையரி) எடுத்துப் பார்க்கையில் தனக்கு தேவாலயத்தில் ஏற்பட்ட சீன மொழி அறிவின் அற்புதமும் நாக்ஸ் கல்லூரியில் மாணவர்கள் ஜெபித்த நாளும் ஒன்றாகவே இருக்கக் கண்டு தன் அன்பின் கர்த்தரைத் துதித்தார்.

மஞ்சூரியாவில் தேவ ஆவியின் அருள்மாரி
13 ஆண்டுகளாக கோபோர்த், சீனாவில் ஆற்றிய தேவ சேவை கனியற்றதாகவே இருந்தது. எனினும், தாம் நேசித்த சீன மக்களின் மீது தேவனது அருள்மாரி பொழியப்பட வேண்டுமென அவரது இருதயம் வாஞ்சித்து கதறியது. சீனாவில் அயல் நாட்டினருக்கு எதிரான பாக்ஸர் புரட்சி கிறிஸ்தவ சமுதாயத்தை சீரழித்தது கண்டு கோபோர்த் மனமுடைந்தார். பல கிறிஸ்தவ தேவாலயங்கள் தீ வைத்துக் கொழுத்தப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகளும், கிறிஸ்தவ மக்களும் கயவர்களின் கூர்மையான வாளுக்கு பலியானார்கள். கோபோர்த், ஆவியில் கலக்கமடைந்தவராக யாக்கோபு தேவனோடு போராடியது போல ஜீவனுள்ள தேவனின் ஆவி சபையில் ஊற்றப்பட போராடி அழுது மன்றாடினார். இதன் காரணமாக பரலோகின் மதகுகள் திறக்கப்பட்டு தேவ அன்பின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தேவனுக்கு வெகு தொலைவிலுள்ள பல்லாயிரக்கணக்கான சீன மக்களை பரமபிதாவின் அரவணைப்பினுள் கொண்டு வந்து சேர்த்தது. தேவன் தமது தாசனாம் கோபோர்த்தைக் கொண்டு மகத்தான செயல்களை செய்யத் தொடங்கினார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் எழுப்புதலின் தீ பற்றி எரிந்தது. சார்லஸ் பின்னியை தேவன் பயன்படுத்தியது போல கோபோர்த்தையும் கர்த்தர் தமது கரத்தின் கருவியாக எடுத்தாட் கொண்டார்.

மஞ்சூரியாவில் லியாங் என்ற இடத்தில் பெரும் எழுப்புதல் ஏற்பட்டது. கோபோர்த் இதுவரை பெற்றிராத தேவ வல்லமையோடு பிரசங்கிக்கத்தக்கதாக தேவன் அவரோடிருந்து செயல்பட்டார். மக்கள் தங்கள் பாவங்களை வெளியரங்கமாக அறிக்கையிட்டு தேவனுடைய மன்னிப்புக்காக கதறினார்கள். காலைக்கூட்டத்தில் கோபோர்த் தேவச் செய்தியை முடித்த பின்னர் சபையினர் ஜெபிக்க அவர் அவகாசம் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு முன் சபையில் கதறி அழுத மூப்பர் ஒருவர் எழுந்து மேடை மேல் சென்று தான் ஒரு வேசிக்கள்ளன் என்றும் தனது மனைவியை கொன்றுவிட மூன்று தடவைகள் முயன்றதால் தான் ஒரு கொலைகாரன் என்றும் இதய குமுறலுடன் அறிக்கையிட்டார். அப்படியே ஒவ்வொரு மூப்பரும் தங்கள் பாவங்களை அறிக்கையிட்ட பின்னர் சபையின் குருவானவரே தனது கொடிய பாவங்களை அறிக்கையிட்டு தான் அந்தச் சபையின் குருவானவராக பணி செய்ய சற்றும் அருகதையற்றவன் என்று கண்ணீரோடு ஓலமிட்டார். கிறிஸ்தவ வைத்தியன் ஒருவன் தனது பகைஞன் தன்னிடம் வைத்தியத்துக்காக வந்தபோது அவனை விஷம் கொடுத்து கொன்றதாக பகீரங்கமாக அறிக்கை செய்து அழுதான். லியாங்கில் ஏற்பட்ட எழுப்புதலைக் கண்ட டக்ளஸ் என்ற மிஷனரி அது 1859 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தேசத்தில் ஏற்பட்ட பெரும் எழுப்புதல் போன்றது என்று கூறினார்.

கோபோர்த்தின் இந்த உயிர் மீட்சி கூட்டங்களுக்கு பின்னர் லியாங்கில் இரட்சிக்கப்பட்டவர்கள் சுற்றிலுமுள்ள இடங்களுக்குச் சென்று கிறிஸ்துவின் நற்செய்தியை கூறி அறிவித்தனர். அதின் காரணமாக பலர் ஆண்டவரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.

சூதாட்டத்தில் தேர்ச்சிபெற்ற ஒரு துன்மார்க்கன் தனக்கு வரவேண்டிய பணத்தை சேர்க்க கழுதையின் மேல் ஏறி தன் கிராமத்தினின்று வட திசை நோக்கிச் சென்றான். கிராமத்தின் எல்லையை அடைந்ததும், கழுதை மேலும் செல்ல மறுத்தது. கழுதையை மேலும் செலுத்த முடியாது போகவே தென் திசையிலும் தன் கடன்காரர்கள் இருந்ததால் அந்த திசையில் தனது கழுதையை ஓட்டினான். ரஸ்தா தென் மேற்கிலும், தென் கிழக்கிலுமாக பிரியும் இடம் வரை கழுதை அமைதியாக சென்றது. தென் மேற்காக அவன் தெரிந்து கொண்ட பாதையில் கழுதை ஒரு அடி கூட முன் செல்ல மறுத்தது. உதைகளும், வசை மொழிகளும், மன்றாட்டுகளும் வீணாயிற்று. பொறுமை இழந்த அந்த சூதாடி மனிதன் கழுதையை அதின் விருப்பப்படியே போகவிட்டான். அப்பொழுது அது அவனுக்கு கொஞ்சம் கூட சிரமம் அளிக்காது அமைதியாகச் சென்றது. சிறிது நேரத்திற்குள்ளாக அவன் ஒரு கிராமத்தை வந்தடைந்தான். கழுதை அங்குள்ள தேவாலயத்தின் முகப்பு வாசலின் முன் வந்து நின்றது. பின்னர் அவன் சோர்புடன் ஆலயத்தின் அருகில் சென்றான். கோபோர்த்தின் தேவ செய்திகளால் எழுப்புதலடைந்த லியாங் கிறிஸ்தவர்கள் பாடிய கீதங்களின் இன்னிசை அவனைக் கவரவே அவன் தேவ ஆலயத்தினுள் சென்றான். தங்கள் பாவங்களை கண்ணீருடன் அறிக்கையிடுபவரையும், கிறிஸ்துவால் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் பெற்ற சந்தோசத்தையும், சமாதானத்தையும் குறித்து மலர்ந்த முகத்துடனும், ஒளி வீசும் கண்களுடனும் சாட்சி கொடுப்பவரையும் அவன் அங்கு கண்டான். தேவனது வல்லமையான பிரசன்னத்தில் அவன் தன் பாவங்களைக் குறித்து ஆழமாக உணர்த்தப்பட்டான். தன் பாவ அக்கிரமங்களை சபையில் அறிக்கையிட்டு தேவன் தமது அதிசயமான கரத்தால் அந்த ஆலயத்திற்கு தன்னை வழிநடத்திக் கொண்டு வந்த விந்தையை எடுத்துரைத்தான். மனந்திரும்பிய அந்த சூதாடி பாவியினிமித்தம் பரலோகத்தில் பேரானந்தம் உண்டாயிற்று.

நியூச்வாங்கில் ஏற்பட்ட உயிர்மீட்சி
நியூச்வாங்கிலுள்ள திருச்சபை, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாது கடினப்பட்டிருந்தமையால் எந்த நன்மையும் அச்சபையினின்று என்றும் வரப்போவதில்லை என்று எண்ணினார்கள். அந்த சபையைக்குறித்து எல்லாரும் தீதாகவே பேசினார்கள். லியாங்கில் ஏற்பட்ட எழுப்புதல் இங்குள்ள சபையில் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது முற்றும் தவறு என்று மக்கள் பேசிக்கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட கோபோர்த் "நீங்கள் தேவனது வல்லமையை பல இடங்களிலும் கண்டிருக்கின்றீர்கள். எனவே, மிகுந்த நம்பிக்கையுடன் தேவன் இந்த சபையிலும் இரக்கம் காட்டும்படியாக மன்றாடி ஜெபியுங்கள்" என்று சபையினரிடம் கூறினார்.

சர்வவல்லவரால் கூட நொறுக்கப்படாத கல்லான கடின சபை என்று கருதப்பட்ட அந்த நியூச்வாங் சபையின் தேவாலய பிரசங்க பீடத்தில் கோபோர்த் பெருமூச்சோடு ஏறினார். சபையினருக்கு முதல் பாடல் கீதத்தை அறிவிக்குமுன்னர் கோபோர்த் தலை கவிழ்ந்து மௌனமாக தனக்குள்ளேயே ஜெபித்தார். பின்னர் அவர் தலை நிமிர்ந்து பார்த்த போது ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்களது பாவ அக்கிரமங்களின் கொடுமையை உணர்ந்தவர்களாய் தேவனது நியாயாசனத்தின் முன் மனமுடைந்தோராய் கண்ணீர் வடித்து தங்களது பலவிதமான பாவங்களை அறிக்கை செய்து நொறுங்குண்ட இருதயத்தோடு ஜெபிக்கும் காட்சியை கோபோர்த்தின் கண்கள் கண்டன. ஒரு சிறு பிரசங்கமும் அவர் செய்யவில்லை. ஒரு கீதமும் கூட்டத்தில் இன்னும் பாடப்படவில்லை. ஏன், ஒரு சிறு ஜெபம் கூட செய்யப்படவில்லை. அதற்குள் அச்சபையின் கல்லான கடின இருதயம் தேவனின் முன்பாக மெழுகாக உருகிற்று. ஆம், இந்த மகத்தான வெற்றி வல்லமையான நம் கர்த்தரின் பராக்கிரமத்தாலேயே நிகழ்ந்தது.

ஷான்ஸியில் பரிசுத்த ஆவியானவரின் 
அக்கினி பற்றி எரிந்தது
"சீனாவின் இரத்த சாட்சிகளின் பிரதேசம்" என்று ஷான்ஸி மாகாணம் இன்றும் அழைக்கப்படுகின்றது. 1900 ஆம் வருடம் ஏற்பட்ட பாக்ஸர் கலவரத்தின் போது மிகுதியாய் துன்புறுத்தப்பட்டவர்கள் இங்குள்ள கிறிஸ்தவர்களே. நூற்றுக்கணக்கான மக்கள் தாங்கள் கிறிஸ்துவின் நாமத்தை தரித்திருந்ததால் தங்களது இன்னுயிரை இழக்க வேண்டியதாயிற்று. மிஷனரிகளான 100 பேர் இந்தக் கொடியவர்களின் வாளுக்கு முதல் பலியானார்கள்.

"மரணம் ஒரு நிமிட நேர இடைவெளியில் அத்தனை அருகில் வந்துவிட்டது. எனினும் அக்கிறிஸ்தவ மிஷனரிமார்களின் முகத்தில் நான் எங்கும் கண்டிராத அமைதியும், புன்முறுவலுமே தோன்றிற்று. அக்கணத்திலும் தன்னைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருந்த தனது பாலகனை அணைத்துக் கொண்டு அவனிடம் அன்புடனும், முகமலர்ச்சியோடும் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ஒரு கிறிஸ்தவ மாது. சில வினாடிகளில் அவளது உடல் கூரிய வாளின் வீச்சினால் தரையிலே விழுந்தது. அப்பாலகன் எவ்வித அச்சமும் வருத்தமுமின்றி இன்னும் தனது தாயை இறுகப்பற்றிக் கொண்டான். கயவரின் வாள் இன்னெரு தரம் வீசப்பட்டது. அவனது அழகிய உருவம் இரத்தத்தால் சிதைந்து அவனது தாயின் உடல் அருகே பிணமாக விழுந்தது. இப்படி விவரிக்க இயலாத ஆச்சரியமான வீரத்தை என் கண்கள் கண்ட பின்னர் வேத புத்தகம் உண்மையிலேயே சர்வ வல்லமையுடைய கர்த்தரது உயிருள்ள வார்த்தை என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் வேர் ஊன்றியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது?" என்று சீன கவர்னரின் கோட்டையில் நடைபெற்ற இப்படு கொலையை நேரில் கண்ட ஒரு சீன சாஸ்திரி எழுதுகின்றார்.

இவ்விதமாக கொடூர படுகொலை நடந்து எட்டு வருடங்களுக்குப் பின்னர்தான் 1908 ஆம் வருடம் கோபோர்த் அங்கு சென்று எழுப்புதல் கூட்டங்கள் நடத்தினார். "இரத்த சாட்சிகளின் இரத்தமே சபையின் உயிர் மூலம்" என்ற ஒரு சொல் உண்டு. அதின்படி அவ்விடத்தில் ஏற்பட்ட தேவனது ஆவியின் வல்லமையான கிரியைகள் இச்சொல்லின் உண்மையை நிரூபிக்கின்றன.

கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை மிகவும் சீர்குலைந்த நிலையிலிருந்த சமயம் அது. கிறிஸ்தவர்களின் சீர்கெட்ட நடத்தை கிறிஸ்துவின் நாமத்திற்கு நிந்தை அவமானத்தை கொண்டு வந்த காலம் அது. கிறிஸ்தவ மக்களின் கேவலமான நடத்தையாலும், அஞ்ஞானிகளுக்கொத்த அவர்களது பாவ வாழ்க்கைத் தரத்தாலும் கர்த்தரது பரிசுத்தமுள்ள நாமம் புற ஜாதியாரின் மத்தியில் தூஷிக்கப்பட்டது. புருஷர் தங்களது மனைவிமாரை நேசியாது அவர்களை மிருகங்களைப்போல அடித்து துன்புறுத்துவது சர்வ சாதாரணமாக இருந்தது. பிள்ளைகள் பெற்றோரின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடப்பது அநாகரீகம் என்று கருதப்பட்டது. கோபோர்த்தின் எழுப்புதல் கூட்டங்களின் காரணமாக இந்த பாவங்களை எல்லாம் மக்கள் மறைத்து வைக்காமல் தேவனது சந்நிதியில் அழுகையோடும், கண்ணீரோடும் அறிக்கையிட்டு விட்டுவிட்டு கர்த்தரண்டை திரும்பினார்கள்.

ஏதோ ஓர் அபூர்வ ஆற்றல் பொல்லாத கிறிஸ்தவரையும் சீரான நல்ல கிறிஸ்தவராக மாற்றி விடுகின்றது என்ற செய்தி நகரத்தில் எங்கும் பரவிற்று. மக்களை மாற்றி, அவர்களை அடக்கியாளும் சக்தியற்ற "பழைய இயேசு" விற்குப் பதிலாக கொடிய கயவரையும் மாற்றி அவர்களை சிறந்த சான்றோராக செய்யும் வல்லமை பொருந்திய "புதிய இயேசு" தோன்றி இருப்பதாக ஷான்ஸி பட்டணம் எங்கும் பேச்சாயிற்று. இப்படி பாவத்திலிருந்து மக்களை விடுவிக்கும் திறன்பெற்ற ஜீவனுள்ள தேவன் தாமே தமது மக்களிடையே தோன்றியிருக்கின்றார் என்று பிற மதஸ்தரும் திட்டமும் தெளிவுமாக கண்டு கொண்டனர். "அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத் 1 : 21) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றதல்லவா?

ஷன்மின்பூவில் எழுப்புதல்
ஷன்மின்பூவிலுள்ள கிறிஸ்தவர்கள் 1900 ஆம் வருடத்திய பாக்ஸர் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு 54 கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சிகளாக மரித்திருந்தனர். மரணத்திற்குத் தப்பிய கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி இப்படுகொலையை செய்தவர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்து அவர்களை எப்படியும் கொன்று பழிக்குப் பழி வாங்கியே தீருவது என்று தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.

பழிக்குப்பழி வாங்கியே தீர வேண்டும் என்ற மன்னிப்புக்கு இடமில்லாத மக்களின் மனக்கசப்பின் ஆவி பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக இருந்தது. நான்காம் நாள் மாலையில்தான், பரிசுத்த ஆவியானவர் சகல எதிர்ப்பையும், அந்தகார இருளையும் கடந்து வல்லமையுடன் மக்கள் மேல் இறங்கினார். மூன்று மணி நேர கூட்டம் நீடித்திருந்த பின்னர் கோபோர்த் ஆசீர்வாதம் கூறி கூட்டத்தை முடித்தார். "எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள். தயவு செய்து கூட்டத்தை அவ்வளவு சீக்கிரமாக முடித்துவிடாதீர்கள். இவ்வளவு நாட்களும் எங்களுக்கு தூக்கம் என்பதே இல்லை. எங்கள் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிட எங்களுக்கு அவகாசம் தராமல் சீக்கிரம் எங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவீராயின் இன்னும் எங்கள் நிலை பழைய பாவ நிலையாகவே இருக்கும்" என்று சபையார் அனைவரும் ஒன்றுபோல சேர்ந்து கோபோர்த்திடம் கெஞ்சினார்கள்.

அதைக்கேட்ட கோபோர்த், பெண்களை எல்லாம் தனியாகச் சென்று ஜெபிக்கும்படியாக பக்கத்திலிருந்த பாடசாலைக்கு அனுப்பிவிட்டு ஆண்கள் மாத்திரம் ஆலயத்தில் தங்கியிருந்து ஜெபிக்கும்படிச் செய்தார். அன்று அனைவரும் தேவனுடன் ஒப்புரவாகிக் கொள்ள வேண்டுமென மிகுந்த ஆவலுடன் இருந்ததால் அப்படி கூட்டத்தை தனித்தனியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதின் பின்னர் ஒரு சுவிசேஷகர் முழந்தாளில் நின்று தனது அநேக பாவங்களை அறிக்கையிட்டார். எனினும், அவரது துயரம் கொஞ்சம் கூட குறைவுபடவில்லை. ஏனெனில், பாவங்கள் அனைத்தையும் அவர் அறிக்கை செய்து விட்டுவிடவில்லை. பாக்ஸர் கலவரத்தின் போது தனது தந்தையை வெட்டிக்கொன்ற பாதகனை தம்மால் ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றார். இவ்வளவு நாட்களாக தன் தந்தையைக் கொன்றவனை பழிக்குப்பழி வாங்குவதென்ற ஒரே நோக்கத்துடன் ஜீவித்து வந்திருப்பதாக கூறினார். தன் பாவங்களை அறிக்கையிட்டு தேவனுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஒரு புறமும், தன் தந்தையைக் கொன்றவனை கொலை செய்வதே தந்தைக்கு தான் ஆற்றும் சிறந்த நன்றி கடன் ஆகும் என்ற தப்பான ஆர்வம் ஒரு புறமும் அவரை இழுத்ததால் அவர் இன்னும் முழங்காலில் நின்று போராடினார்.

பின்னர் உயர்தர பாடசாலை மாணவன் ஒருவன் எழுந்து நின்று, பாக்ஸர் குழப்பத்தின் போது தன் தகப்பனாரும் கொலை செய்யப்பட்டதாகவும், குழந்தைப் பருவத்திலேயே அக்கொலைகாரனை பழிவாங்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினான். கோபோர்த் நடத்தும் இக்கூட்டங்களுக்கு வந்த பின்னர் தன் தந்தையைக் கொன்ற கயவனை மன்னித்துவிட தேவ ஆவியானவர் தன் இருதயத்தில் ஏவுவதாகவும், அதினால், தான் உண்ணவோ, உறங்கவோ இயலாதபடி தன் உள்ளத்தில் பெருங்கலக்கமும், போராட்டமும் இருப்பதால், கொலைஞனை மன்னித்துவிடத் தேவையான தேவ கிருபை தனக்கு அளிக்கும்படியாக சபையார் யாவரும் தனக்காக ஜெபிக்கும்படியாக கெஞ்சினான். அதின் பின்னர் 9 பேர் ஒவ்வொருவராக தங்களது பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரிகள் எப்படி தங்கள் கண்களுக்கு முன்பாகவே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்று பரிதாபகரமான குரலில் கூறினர். தங்களது இருதயத்தின் வேதனை நீங்கும்படியும், கொலைஞரை மன்னித்துவிட தேவனது அளவற்ற கிருபை தங்களுக்கு அருளப்படவும் சபையார் ஜெபிக்கும்படியாக கேட்டுக் கொண்டனர். அதின்படி அந்தக்கூட்டம் இன்னும் இரண்டரை மணி நேரம் நீடித்தது. கூட்டத்தின் முடிவில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சுவிசேஷகர் எழுந்து நின்று, தன் தந்தையைக் கொன்ற கொலைஞனைத் தாம் எந்தவிதத்திலும் மன்னிக்க இயலாது என்றும், பழிக்குப்பழி வாங்கினால்தான் தன் மனம் அமைதியடையும் என்று கூறி அனைவரையும் திகைப்படையச் செய்தார்.

அடுத்த நாள் காலைக்கூட்டம் ஆரம்பமானது. அந்தக் கூட்டத்தில் பேச தனக்கு அவகாசம் கொடுக்கும்படியாக அந்த சுவிசேஷகர் கோபோர்த்திடம் கேட்டுக் கொண்டார். அப்படியே அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. அவர் பேச எழுந்து நின்றார். அவரது முகத்தில் ஒரு புதிய ஒளியும், அமைதியும் காணப்பட்டது. கொலைஞனை மன்னிக்க கிருபை தனக்கு அருளப்பட சபையாரை ஜெபிக்கும்படியாக கேட்டுக்கொண்ட இளைஞரை அவர் அழைத்தார். முந்திய இரவு தான் அவனிடம் நடந்து கொண்ட விதம் அந்த வாலிபனுக்கு கிறிஸ்துவுக்குள்ளாக நல்ல முன் மாதிரியாக இல்லாமல் அவனுக்கு தான் இடைஞ்சலாக இருந்தது குறித்து தம்மை நொந்து மன்னிக்கும்படியாக அவனைக் கேட்டுக் கொண்டார். இந்த வாலிபன் தேவனது குரலுக்கு கீழ்ப்படிய முன்வரும் சமயம் சபை மூப்பனும் சுவிசேஷகனுமாகிய நான் தேவனுக்கு எதிர்த்து நின்றது எத்தனை தவறு என்று தாம் உணருவதாக கூறி, பின்னர், தேவன் எப்படி தமக்கு முந்தின நாள் இரவில் தனது தந்தையைக் கொன்ற கொலைகாரனை மன்னித்துவிட கிருபை தந்தார் என்று சபையினருக்கு விவரித்துக் கூறினார். அதற்கப்பால், சபை மக்களால் பழிவாக்கப்பட வேண்டும் என்று முன்குறித்திருந்த 150 பேர்கள் அடங்கிய பெயர் பட்டியல் பத்திரத்தை சுக்கு நூறாகக் கிழித்து மிதித்து வீசி எறிந்தனர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Empty Re: யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

Wed Feb 03, 2016 11:19 pm
தன்னை தரைமட்டாகத் தாழ்த்திய தேவ மனிதன்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் யோனத்தான் கோபோர்த்தை மிகவும் வல்லமையாக சீன தேசத்திலே பயன்படுத்தினார். அவர் மூலமாக ஒரு பெரிய ஆவிக்குரிய எழுப்புதல் சீன தேசத்திலே உண்டாயிற்று. அந்த எழுப்புதலின் சரித்திரத்தை இந்த சிறிய பத்திரிக்கையில் முழுமையாக எழுதுவது என்பது முற்றும் கூடாத காரியம். தேவ நாமத்திற்கு மகிமையாக அந்த எழுப்புதலின் ஓரிரு காட்சிகளை மாத்திரமேதான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். கோபோர்த்தை தேவன் வல்லமையாகவும், அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாகவும் பயன்படுத்துவதை கண்ணுற்ற சாத்தானாம் பிசாசு அவ்வப்போது அவரண்டை வந்து "கோபோர்த்தே பார், உனது பிரசங்கங்களால் எத்தனை ஆயிரம் சீன மக்கள் உயிர் மீட்சி அடைந்துள்ளனர்! உனது பிரசங்கத்தின் வல்லமைதான் எத்தனை மாட்சியானது!" என்று அவரது காதுக்குள் கூறி தேவனுக்குச் சேரவேண்டிய மகிமையையும், கனத்தையும் களவாடி தனக்கு எடுத்துக்கொள்ளவும், பெருமையாக நடக்கவும் அவருக்கு தீய ஆலோசனை கூறுவான். அப்பொழுதெல்லாம் தேவ மனிதன் கோபோர்த் நினைவுகூர்ந்து தன்னை தரைமட்டாகத் தாழ்த்தும் ஒரு கதை உண்டு. அது இதுவேதான்:-

"ஒரு மரங்கொத்திப் பறவை வானுற ஓங்கி வளர்ந்திருந்த ஒரு உயரமான பெரிய பைன் மரத்தின் உச்சியில் பறந்து வந்து அமர்ந்து அதில் ஏதாவது புழுக்கள் கிடைக்குமா என்ற ஆசையில் ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று கொத்து கொத்தியது. அப்பொழுது மழை காலமானதால் ஒரு பயங்கர இடி மிகுந்த முழக்கத்துடன் அந்தச்சமயம் பார்த்து முழங்கி அந்த பைன் மரத்தில் விழுந்தது. இடி தாக்கிய அந்த பெரிய பைன் மரம் சில நொடிகளில் சின்னாபின்னமாக சிதறி உடைந்து ஒரு குவியல் மரப்பட்டைகளாகிவிட்டன. இடி இடிக்கவும் மரங்கொத்தி பறவை பயந்து நடுங்கி பக்கத்து மரத்துக்குப் பறந்து சென்று அமர்ந்து கொண்டு இனி நமக்கு என்ன ஆபத்து நடக்குமோ? அடுத்த இடி நமது தலைமேல்தான் விழுமோ? என்று அஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில் அதற்கப்பால் எதுவுமே நடப்பதாகத் தெரிவில்லை. இடிமுழக்கங்கள் எல்லாம் முற்றுமாக நின்றுவிட்டது. நேரம் ஆக ஆக மரங்கொத்திப் பறவையின் பயங்கள் யாவும் மறைந்து ஒரு அசட்டுத் துணிச்சலான எண்ணம் அதின் மனதில் தோன்றலாயிற்று. "ஆ, நான் எத்தனை பலவான்! எனது அலகிலுள்ள மகா பலத்தின் அளவை யாரே அறிவர்! மூன்றே மூன்று கொத்துக்கள்தான். பிரமாண்டமான உயர்ந்த பைன் மரம் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து நொறுங்கிப்போய்விட்டது!" என்று தனக்குள்ளே பெருமிதமாக எண்ணிக் கொண்டதாம்.

"தேவன் என்னைக் கொண்டு நடப்பிக்கும் எழுப்புதல் அக்கினியைக் குறித்து நான் ஏதாவது கூறி ஆண்டவரது மகிமையை நான் எனக்கென்று எடுப்பேனானால் அது அந்த புத்தியற்ற மரங்கொத்திப் பறவையின் கதையாகத்தான் இருக்கும். அந்தவிதமான மதியீனமான எண்ணத்தை நான் ஒருக்காலும் கொள்ளமாட்டேன். அகண்டு வியாபித்துப் பரந்து கிடக்கும் சர்வவல்லவரின் ஆகாயவிரிவில் கண்ணுக்குப் புலப்படாமல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தூசி மாத்திரமேதான் நான் வேறொன்றுமில்லை என்ற உணர்வுமட்டும்தான் எனக்குள்ளதே தவிர வேறு எந்த உணர்வும் எனக்கு இல்லை" என்று கோபோர்த், சாத்தானிடம் கூறி அவனைத் துரத்தி அடிப்பார்.

வேத வசன பிரியன்
யோனத்தான் கோபோர்த் தேவனுடைய வேத புத்தகத்தை தமது மரணத்திற்கு முன்னால் 73 தடவைகள் முழுவதுமாக வாசித்து முடித்திருந்தார். தேவனுடைய வேதத்தின் பகுதிகளை மனப்பாடமாக படிப்பதை குறித்து அவர் எழுதிய வார்த்தைகளை கவனியுங்கள்:-

"கர்த்தருடைய வசனங்களை மனப்பாடமாக கூறுதல் நலமானதுதான். ஆனால், அந்த வசனங்கள் வேதாகமத்தில் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க வேதாகம ஒத்துவாக்கிய அகராதியை நான் தேடி ஓடுவது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கின்றது. ஆனால் என் மனைவி என்னை "நடமாடும் ஒத்துவாக்கிய அகராதி" என்று கூறிக்கொள்ளுகின்றார்கள். அத்துடன் எனது சீன கிறிஸ்தவ சகோதரர்களும் வேதாகமம் எனக்கு அத்துப்படியாகத் தெரியும் என்று என்னை மெச்சிக் கொள்ளுகின்றனர். ஆனால், இந்த புகழ் உரைகள் எல்லாம் எனக்கு திருப்தி அளிப்பதாகத் தெரியவில்லை. இன்னும் அநேக நூற்றாண்டு காலங்கள் நான் என் தேவனுடைய வேதத்தடன் நேரம் செலவிட வேண்டுமென்றே நான் விரும்புகின்றேன்.

வேத பகுதிகளை மனப்பாடம் செய்வது நமக்கு ஆசீர்வாதமாகும். நான் மனப்பாடம் செய்யும் முறை யாதெனில் ஒவ்வொரு வசனத்தையும் ஐந்தைந்து தடவைகள் மிகவும் கவனத்துடன் வாசிப்பேன். முதல் முறை வாசித்த உடனேயே அதை மனப்பாடமாக கூற முயற்சிப்பேன். பிறகு அதை ஆங்கில வேதாகமத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுவேன். இன்னும் சில நாட்களில் நான் என்னுடைய சீன மொழி வேதாகமத்தை 35 ஆவது தடவையாக வாசித்து முடிக்கப் போகின்றேன்!"

கர்த்தருடைய வேதத்தின் மேலுள்ள அவரது தாகம் யாவரும் அறிந்ததாகும். அவருடைய வேதாகமம் எப்பொழுதும் திறந்ததாகவும் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர் அதை தியானத்தோடு வாசித்துக் கொண்டும் இருந்தார். அவர் தனது கண் பார்வையை முற்றும் இழந்து கபோதியாக இருந்த கடைசி நாட்களிலும் தினமும் 12 அதிகாரங்களை வேதத்திலிருந்து தனக்கு வாசித்துக் காண்பிக்கும்படியாக ஒரு சீன உதவியாளனை தனக்கு வைத்திருந்தார். வேத புத்தகம் ஜீவனுள்ள வார்த்தைகள் என்பதை பரிபூரணமாக விசுவாசித்து அதினுடைய சத்தியங்களுக்கு தனது வாழ்நாட்காலம் முழுமையிலும் அப்படியே கீழ்ப்படிந்து நடந்து வந்தார். அவர் ஒரு வல்லமையான ஜெப மாந்தன். ஜெபம், வேத வசன தியானம் மூலமாக தேவனுடைய சித்தத்தை அவர் கண்டு பிடித்து வந்தார். தேவனுடைய வசனங்கள் மேலுள்ள அவரது தாகமும் தேவனோடுள்ள அவரது இடைவிடாத ஐக்கிய சகவாசம் காரணமாக அவரது நற்செய்தி கூட்டங்களில் தேவ ஆவியானவர் மக்களை பாவ உணர்வுகளுக்குள்ளும், மனந்திரும்புதலுக்கும் வழிநடத்திச் சென்றார். "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலேயே ஆகும்" (சகரியா 4 : 6) என்ற தேவ வசனமும் "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்" (அப் 1 : Cool என்ற வசனமும் அவரது வாழ்வின் ஜெய கெம்பீர தொனியாக இருந்தது.

யோனத்தான் கோபோர்த் கண்ணற்ற கபோதியானார்
தேவனால் இத்தனை வல்லமையாக எடுத்து பயன்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான சீன மக்களை ஆண்டவருடைய மந்தையில் சேர்த்த மாபெரும் தேவ பக்தனாகிய கோபோர்த் தனது மரணத்திற்கு முன்பு 2 ஆண்டு காலம் கண் பார்வையிழந்த கபோதியாக இருந்தார் என்ற காரியம் மனித சிந்தனைக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டதொன்றாக உள்ளது. "உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது. உமது காலடிகள் தெரியப்படாமற் போயிற்று" (சங் 77 : 19) என்று சங்கீதக்காரர் அது குறித்து எழுதுவார்.

கோபோர்த் மூலமாக சீனாவில் நடைபெற்றிருந்த தேவ ஊழியங்கள் எல்லாம் மிகவும் சிறப்புற்று விளங்கின. 1932 ஆம் ஆண்டு அதைக்குறித்து ஒரு கணக்கெடுப்பை பார்த்தபோது எல்லாருடைய உள்ளங்களும் களிகூர்ந்தன. கோபோர்த் தமது ஒவ்வொரு மிஷனரி தளத்தையும் நேரில் பார்வையிட்டு அங்கு காணப்பட்ட ஆத்தும அறுவடையையும், உயிர் மீட்சியின் செய்திகளையும் அறிந்து ஆவியில் களிகூர்ந்து ஆர்ப்பரித்தார்.

அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நாட்கள் ஒன்றில்தான் 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள் மாலை நேரம் கோபோர்த் வெளிரிப்போன நிறத்தில் தனது மனைவி முன் வந்து நின்றார். தனது கணவருடைய பரிதாபகரமான நிலையைக் கண்ட ரோசலிண்ட் அம்மையார் ஆச்சரியத்தால் திடுக்கிட்டார். "ரோசி, எனது இடது கண்ணின் கருவிழி இடம் மாறியிருக்குமோ என்று நான் அஞ்சுகின்றேன்" என்றார் கோபோர்த். அப்படித்தான் ஆகியிருந்தது.

ஏற்கெனவே, இந்த தொந்தரவு கனடாவில் இருந்தபோது ஒரு சமயம் அவருக்கு வந்தது. அதற்காக கோபோர்த், சீனாவின் தலைநகர் பீக்கிங்கில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடும் வேதனையான சிகிச்சை பெற்றது உண்டு. திரும்பவும், அந்த தொந்தரவு வரவே சீனாவின் தெற்கு மஞ்சூரியா பட்டணத்திலுள்ள டெய்ரன் என்ற துறைமுக பட்டணம் சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற ஒரு கண் மருத்துவமனையில் இருந்த புகழ்பெற்ற ஜப்பானிய மருத்துவரிடம் கோபோர்த் கொடிய வேதனை அளிக்கக்கூடிய சிகிட்சையை பெற்றார். வாரத்திற்கு மூன்று தடவைகள் அந்த மருத்துவமனைக்குச் சென்று கண்ணில் ஊசி செலுத்தப்பட்டு அந்த வேதனையான சிகிட்சையை அவர் பெற்று வந்தார். எனினும் அந்த சிகிட்சைகள் எதுவும் பயன் அளிக்காமல் அவரது இரு கண்களின் பார்வையும் மறைந்துவிட்டது. தனது பார்வை போய்விட்ட காரணத்திற்காக கோபோர்த் தன் அன்பின் தேவனைக்குறித்தும், அவரது வழிநடத்துதலைக் குறித்தும் ஒரு சிறிய முறுமுறுப்போ அல்லது கேள்வியோ எழுப்பவில்லை.

டெய்ரன் பட்டணத்தில் தனது தந்தையுடன் இருந்த ரூத் என்ற அவரது மகள் அந்த நாட்களில் நடந்த நிகழ்வுகள் ஏறித்து எழுதும் வரிகளை நாம் கவனிப்போம்:-

"எனது கணவர் ஐவரி ஜெஃப்ரி, எனது தந்தை கோபோர்த்தை வாரம் மூன்று நாட்கள் கண் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வந்தார்கள். கண்களின் உள் விழிகளில் போடப்பட்ட ஊசிகளின் வேதனையை தந்தை எப்படி தாங்கி பொறுத்துக் கொண்டார்களோ எங்களுக்குத் தெரியாது. தனது கொடிய வேதனைகள் குறித்து ஒரு வார்த்தை கூட அவர்கள் எங்களிடம் பேசமாட்டார்கள். அப்பொழுது நாங்கள் டெய்ரன் பட்டணத்தில் அப்பாவின் கண் சிகிட்சைக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அந்நாட்களில் டெய்ரன் கடற்கரை துறைமுகத்துக்கு அநேக பிரிட்டிஷ் போர் கப்பல்கள் வந்து நின்று கொண்டிருந்தன. அதின் மாலுமிகள் பலரும் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றனர். எங்கள் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு கடற்படை மாலுமி மற்றும் உத்தியோகஸ்தர்களிடம் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வின் இரட்சிப்பின் காரியம் குறித்து அப்பா பேசாமல் விடவே மாட்டார்கள். தனது கண்களின் வலியோடு ஒரு புறம் ஒதுங்கி இருக்காமல் வீட்டுக்கு வருகின்ற எல்லா மாலுமிகளிடமும் அவர்களின் இரட்சிப்பு குறித்து பேசி அவர்களின் கவனத்தை நித்தியத்துக்கு நேராக திருப்பினார்கள். தேவனை நோக்கிச் செய்யும் ஊக்கமான ஜெபங்கள் ஒருக்காலும் வீண்போகாது என்பதற்கு தான் ஒரு சாட்சி என்பதையும், சீனா தேசத்தில் தேவன் தன்னைக் கொண்டு நிறைவேற்றிய அரும்பெரும் தேவப்பணிகள் குறித்தும் அந்த கடற்படை வீரர்களிடம் கூறி அவர்களின் விசுவாசத்தை மேலோங்கி வளரச் செய்தார்கள்"

டெய்ரன் பட்டணத்திலேயே கோபோர்த் தனது கண் பார்வையை முற்றுமாக இழந்து கபோதியானார். அவரைக் கவனித்துக் கொள்ளவும், அவருக்கு வேதாகமத்தை தினமும் வாசித்துக் காண்பிக்கவும் ஒரு உத்தமமான சீன கிறிஸ்தவ வாலிபனைத் தேடினார்கள். கோபோர்த்தின் கண் பார்வையை எடுத்துக்கொண்ட கர்த்தர் தமது தாசன் மேல் இரக்கம் கொண்டு தமது கிருபையை அபரிதமாகப் பொழிந்தருளினார். அதின் காரணமாக வெகு துரிதமாகவே "கவோ" என்ற ஒரு சீன கிறிஸ்தவ இளைஞன் கோபோர்த்தின் உதவியாளனாக கிடைத்தான். தேவ மனிதர் எதிர்பார்த்த எல்லா பரிசுத்த பண்புகளும் கவோ என்ற அந்த வாலிபனிடம் காணப்பட்டது. தினமும் தேவனுடைய வேதத்திலிருந்து 12 அதிகாரங்களை கோபோர்த்துக்கு வாசித்துக் காண்பிப்பதே அந்த வாலிபனின் பிரதான பணியாக இருந்தது. அவன் வாசிக்கும்போது ஒரு சிறு தவறு காணப்பட்டாலும் உடனே அதை கோபோர்த் கண்டு பிடித்து திருத்திவிடுவார்.

சீன உதவியாளன் "கவோ"வுக்கு ஆகும் மாதாந்திர சம்பளத்தை மிஷன் ஸ்தாபனம் ஏற்றுக்கொள்ளாமல் கோபோர்த் குடும்பத்தினரே சந்தித்துக் கொள்ள ஆவலுடன் முன் வந்து அதற்காக அவர்கள் ஊக்கமாக ஜெபித்தார்கள். கோபோர்த்தை மிஷனரியாக அனுப்பிய மிஷன் ஸ்தாபனத்துக்கு சுமையாக இருக்கக்கூடாது என்று அவர்கள் நினைத்தனர். அதிலும், தேவன் தமது அன்பை அதிசயமாக விளங்கப்பண்ணினார். டெய்ரன் பட்டணத்தை விட்டு அவர்கள் சிப்பின்காய் என்ற அவர்களுடைய ஊழிய தளத்துக்கு திரும்பி வந்தபோது நியூயார்க் பட்டணத்திலிருந்து ஒரு மனிதர் தனது கடிதத்துடன் ஒரு பெருந்தொகைக்கான காசோலையை (Cheque) இணைத்து அனுப்பியிருந்தார். அந்தப் பணமானது "கவோ" என்ற அந்த கோபோர்த்தின் உதவியாளனுக்கு ஒரு ஆண்டு சம்பளத்துக்குப் போதமானதாக இருந்தது. "இந்தப் பணம் கோபோர்த்துக்கு அனுப்பப்படுகின்றது. கண் பார்வையை இழந்த அவரது சுய தேவைக்காக இது பயன்படுத்தப்பட வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

யோனத்தான் கோபோர்த்தின் கண் பார்வை பறிபோனதும் அவருடைய வல்லமையான தேவ ஊழியமும் அத்துடன் முற்றுப்பெற்றுவிடும் என்று எல்லாரும் எண்ணினர். ஆனால், தேவன் அதை அனுமதிக்கவில்லை. அதற்குப் பின்னரும் தேவன் அவரை அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக எடுத்தாட்கொண்டார். வேதத்தில் பாண்டித்தியம் பெற்று விளங்கிய அவருக்கு வேதாகமத்தின் பல பகுதிகளும், ஏராளமான வசனங்களும் மனப்பாடமாக தெரிந்திருந்ததால் வேதாகமம் இல்லாமலேயே மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை எப்பொழுதும் போல வல்லமையாக அவரால் பிரசங்கிக்க முடிந்தது. கண் பார்வை இழப்பின் காரணமாக தொலை தூரமான இடங்களுக்கு பிரயாணம் செய்து புற ஜாதியாருக்கு தேவனுடைய வார்த்தைகளை பிரசங்கிப்பது அவருக்கு கடினமாக இருந்ததால் அந்த ஒரு ஊழியத்தை மாத்திரம் அவர் தவிர்க்க வேண்டியதாக இருந்தது.

கண் பார்வை இழந்த பின்னர் முதன் முறையாக அவர் சிப்பின்காய் என்ற இடத்தில் தேவனுடைய செய்தியைக் கொடுத்தார். செய்தியைக் கொடுப்பதற்கு முன்னர் தனித்தனியாக மக்களை அவர் ஜெபிக்கச் சொன்னார். அப்பொழுது ஒரு ஐந்து வயது சிறுவன் ஜெபிக்கும்படியாக இரண்டு தடவைகள் முயற்சித்தும் கூடாது போயிற்று. அவன் ஜெபிக்கத் தொடங்கியதும் அவனுக்கும் மூப்பான பையன்கள் ஜெபித்து அவனை அப்படியே ஜெபிக்காமல் செய்துவிட்டனர். சிறுவனுக்கு துக்கம் தாங்க முடியாமல் போய்விட்டது.

கூட்டம் முடிவுற்றதும் அந்த சிறுவன் கோபோர்த் அண்டை ஓடிச்சென்று அவரது முகத்தை உற்று நோக்கியவனாக அவரது இரு கரங்களையும் பற்றிக் கொண்டான். அவன் அவரைப் பார்த்து "எனக்கும் ஜெபிக்க முடியும்" என்று கூறினான். அதற்கு மாறுத்தரமாக "உனக்கு ஜெபிக்கக்கூடும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், நீ கூட்டத்தில் ஜெபிக்க முயற்சித்த உன் குரலை நான் கேட்டேன்" என்று கோபோர்த் கூறினார். "அப்படியானால் உங்களது கண் பார்வை இப்பொழுது சற்று தெளிவாக இருக்கின்றதோ?" என்று சிறுவன் கேட்டான். "இன்னும் பார்வை கிடைக்கவில்லை. ஆனால், நீ கட்டாயம் அதற்காக ஜெபிக்க வேண்டும்" என்று தேவ மனிதர் கூறினார். "ஓ, கட்டாயம் உங்கள் கண் பார்வைக்காக நான் ஜெபித்து வருவேன்" என்று கூறினவனாக அவரது கரங்களை இன்னும் அன்பொழுக பற்றிக்கொண்டான்.

பரிசுத்த குடும்பத்தை சந்தித்த மரணங்கள்
கோபோர்த் தம்பதியினர் சீன தேசம் சென்றடைந்த மறு ஆண்டின் வசந்த காலத்திலேயே அவர்களது முதற் குழந்தை "ஜெர்ட்ரூட் மாடலின்" சீதபேதியால் மரித்துப் போனாள். எவ்வளவோ முயற்சித்தும் அந்த அன்புக் குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியாது போயிற்று. அந்தக் குழந்தையின் மரணம் குறித்து கோபோர்த் கனடாவிலுள்ள தனது மிஷன் ஸ்தாபனத்துக்கு கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் எழுதினார்:-

"எனது அருமைக் குமாரத்தி ஜெர்ட்ரூட் மாடலின் மரித்துப் போனாள். அவளது பிரிவு எங்கள் இருவரின் தாங்கொண்ணா துயரமாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் மகள் பூரண சுகதேகியாக இருந்தாள். ஆனால், சீதபேதியால் தாக்குண்ட 6 நாட்களுக்குள்ளேயே அவள் மரித்துவிட்டாள். வெளி நாட்டவர்களுக்கு இங்கு லிஞ்சிங்கில் கல்லறைத் தோட்டம் இல்லாததால் மகளைப் புதைப்பதற்கு இங்கு இடம் இல்லை. எனவே, மகளின் சரீரத்தை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி 50 மைல்கள் தொலைவிலுள்ள பாங்ச்வாங் என்ற இடத்திற்கு கொண்டு சென்றோம்.

இரவு 11 மணிக்கு நாங்கள் புறப்பட்டு அடுத்த நாள் விடியற்காலை 5 மணிக்கு பாங்ச்வாங் போய்ச் சேர்ந்தோம். அந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் அந்த இடத்தைவிட்டு கிளம்பி இங்கு வந்திருந்தோம். பாங்ச்வாங் மிஷன் காம்பவுண்டில் எங்கள் அன்புக் குழந்தை மாடலின் எல்லாருக்கும் மிகவும் பிரியமானவள். சிறியோர், பெரியோர் அனைவரின் இருதயத்தையும் அவள் கவர்ந்திருந்தாள். மூன்று வாரங்களுக்கு முன்னால் தங்களைவிட்டு ஜீவனோடும், மகிழ்ச்சியின் குதூகலத்தோடும் போன குழந்தை மரித்து ஜீவனற்ற சடலமாக திரும்பவும் அவர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது அங்குள்ள மக்களுக்கு ஆறாத துயரமாக இருந்தது. சீன மொழியில் மாடலினுக்கு அடக்க ஆராதனை நடத்தப்பட்ட பின்னர் நாங்கள் அவளது சரீரத்தை கரடு முரடான ஒரு பிரேதப் பெட்டியில் வைத்து, பூக்களால் அதை அலங்கரித்து கிராமத்தின் புற மதிலுக்கு அப்பால் அடக்கம் செய்தோம். இருள் சூழ்ந்து கொண்டிருந்த அந்த மாலை நேரத்தில் குழந்தையின் அடக்கத்தை சில சீன அஞ்ஞானிகள் ஆச்சரியத்தோடு நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே அந்த இடத்தில் 2 வெளி நாட்டு குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

அன்று இரவு மாடலினுக்காக ஒரு ஜெபக்கூட்டம் நடைபெற்றது. "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள், அவர்களை தடைபண்ணாதிருங்கள்" என்ற வசனத்தின் பேரில் சங்கை ஸ்மித் அவர்கள் பேசினார்கள். சிறு குழந்தைகள் தங்கள் இருதயத்தை ஆண்டவர் இயேசுவுக்கு கொடுக்க வேண்டியதின் அவசியத்தையும், மரணம் எந்த நேரமும் அவர்களைச் சந்திக்கலாம் என்றும் அவர் பேசினார். நான் மறு நாள் காலை எனது அருமை மகளின் கல்லறையைப் பார்க்க சென்றேன். என்ன ஆச்சரியம், எனக்கு முன்பாக இரண்டு மிஷனரி குழந்தைகள் ஃபுளோராவும், கேரியும் எனது மகளின் கல்லறைக்குச் சென்று அதை காட்டு புஷ்பங்களால் அலங்கரித்து கல்லறையை மூடியிருந்த மிருதுவான களிமண்ணில் எனது அருமை மகளின் பெயரின் முதன்மை இரு எழுத்துக்களை "ஜி.ஜி" (ஜெர்ட்ரூட் கோபோர்த்) என்று எழுதி வைத்துவிட்டு அங்கு நின்று கொண்டிருந்தனர். தங்களுக்கு அருமையானவர்களை மரணத்தின் மூலமாக இழக்கக் கொடுத்தவர்களுக்குத்தான் அதின் கடும் துயரம் தெரியும். எங்களுக்கோ அந்த துயரம் இன்னும் அதிகம். காரணம், நாங்கள் தொலை தூரமான தேசத்தில் உற்றார் உறவினர் எவருமின்றி தனிமையாக அல்லவா இருக்கின்றோம்!"

அடுத்து வந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி கோபோர்த் தம்பதியினருக்கு ஆண்டவர் ஒரு அழகான பாலகனைக் கொடுத்தார். அவர்கள் அவனுக்கு டோனால்ட் என்று பெயர் சூட்டி பாசத்தோடு அவனை வளர்த்து வந்தனர். அந்த குழந்தை அவர்களுடன் 19 மாதங்கள் மாத்திரமேதான் இருந்தது. ஒரு நாள் அந்தப் பாலகன் வீட்டு வராந்தாவிலே ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த போது வராந்தாவிலிருந்து தவறி கீழே விழுந்து அங்கிருந்த பூந்தொட்டியின் மீது அவனது தலை மோதிற்று. ஆரம்பத்தில் அது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் துரிதமாகவே குழந்தை தனது கை கால்களை பயன்படுத்த இயலாது போயிற்று. கடுமையான வெயில் தணிந்ததும் ஷாங்காய் பட்டணத்துக்கு பாலகனை சிகிட்சைக்காக கொண்டு செல்ல பெற்றோர் நினைத்திருந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே பாலகன் டோனால்ட் ஆண்டவரண்டை சென்றுவிட்டான்.

திரும்பவும் இரண்டாம் தடவையாக கோபோர்த் தம்பதியினர் தங்களது மரித்த அருமை குழந்தையின் சரீரத்தை ஒரு கட்டை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு பாங்ச்வாங் என்ற அதே சீன கிராமம் நோக்கிச் சென்றனர். அங்கு அவனை அவளது அக்கா மாடலின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்துவிட்டு தாங்கொண்ணா துயரத்துடன் பெற்றோர் திரும்பி வந்தனர். இவை யாவற்றிலும் தேவ மனிதர் கோபோர்த்தும் அவரது பரிசுத்தவாட்டி மனைவி ரோசலிண்ட் அம்மையாரும் ஆண்டவர் பேரில் எந்த ஒரு முறுமுறுப்போ, மனக்கசப்போ கொள்ளாமல் "அவர் கர்த்தர், அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக" என்று சொல்லி ஆண்டவருடைய பரிசுத்த சித்தத்துக்கு தங்களை ஒப்புவித்து அவருக்குள் ஆறுதலடைந்து அமர்ந்திருந்தனர்.

பின் வந்த நாட்களில் ஃபிளாரன்ஸ் என்ற அவர்களுடைய மற்றொரு குமாரத்தியும் மரித்தாள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Empty Re: யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

Wed Feb 03, 2016 11:19 pm
மரண நிழலின் பள்ளத்தாக்கு
1900 ஆம் ஆண்டு சீனா தேசத்தில் பாக்ஸர் கலவரம் மூண்டது. வெளிநாட்டினரை கொல்லுவதே அந்த கலவரத்தின் ஒரே குறிக்கோளாகும். அதின்படி நுற்றுக்கணக்கான வெளிநாட்டு மிஷனரிகளும், ஏராளமான சீன கிறிஸ்தவ மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். அப்பொழுது சீன தேசத்தில் மிஷனரிகளாக பணியாற்றிய கோபோர்த் தம்பதியினருக்கும் மரணம் தலைவாசலில் வந்து நின்றது. அந்தக் கலவரத்தில் அவர்கள் உயிர் தப்பியதே ஒரு பெரிய அதிசயமும், தேவச்செயலுமாகும். பாக்ஸர் கலவரம் சீன தேசம் எங்கும் கொந்தளிப்பாக நடந்து கொண்டிருந்தது.

"பாக்ஸர் கலகக்காரர்கள் சீனாவின் வடக்கு வழியை துண்டித்துவிட்டனர். உங்கள் ஜீவன் தப்ப வேண்டுமானால் தெற்கு நோக்கி ஓடுங்கள்" என்ற அவசரமான செய்தி ஜெஃப்பூ என்ற சீன பட்டணத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மூலமாக கோபோர்த்து தம்பதியினருக்கு கிடைத்தது. அப்பொழுதுதான் அவர்களுடைய அருமைக் குமாரத்தி ஃப்ளாரன்ஸ் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தாள்.

கோபோர்த் தம்பதியினரும், கிறிஸ்தவ வெளிநாட்டு மிஷனரிகள் சிலரும் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி தெற்கு நோக்கி தங்கள் ஜீவன் தப்பி ஓட ஆயத்தமாயினர். இந்த வேளையில் ஃப்ளாரன்ஸ் மரணமடைந்தாள். அவளை அடக்கம் செய்துவிட்டு கோபோர்த் தம்பதியினர் தங்களது எஞ்சிய நான்கு குழந்தைகளுடன் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். மிஷனரிகளின் திட்டப்படி 14 நாட்கள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து பாஞ்செங் என்ற இடத்தை அடைந்து அங்கிருந்து 10 நாட்களுக்கும் கூடுதலாக நாட்டுப்படகில் பயணம் செய்து ஹன்கோ பட்டணம் போய்ச் சேருவதாக இருந்தது.

அதின்படி 10 மாட்டு வண்டிகளில் மிஷனரிகள் தங்களது பிரயாணத்தை ஆரம்பித்தனர். பாக்ஸர் கொலைகாரர்களுக்குத் தெரியாமல் மறைவாக இருப்பதற்காக மாட்டு வண்டிகள் சீன தேசத்து நாடோடி மக்களின் மாட்டு வண்டிகளைப்போல வடிவமைக்கப்பட்டு புல்லினால் செய்யப்பட்ட பாய்களால் மூடப்பட்டிருந்தன. மாட்டு வண்டிகளில் மிஷனரிகளின் ஏராளமான பொருட்களும் ஏற்றப்பட்டிருந்தன. பகலில் கடுமையான வெயிலில் பிரயாணம் செய்து இரவில் மிஷனரி குடும்பங்கள் கடுமையான பனிப் பொழிவுகள் இருந்த திறந்த வெளிகளில் படுத்து வந்தனர். மாட்டு வண்டி பிரயாணம் நரக வேதனையாக சொல்லொண்ணா துயரத்தை அவர்களுக்குக் கொடுத்தது. காரணம், கரடு முரடான அந்த வண்டிகளில் ஸ்பிரிங் கம்பிகள் இல்லாததால் அவர்களுடைன சரீரம் நொந்து, தொய்ந்து போனது. ஆரம்பத்தில் சில தினங்கள் அவர்களுடைய பிரயாணம் எந்த ஒரு தடங்கலும், இடையூறும் இல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், வழியில் அவர்களுக்கு எத்தனை கொடிய ஆபத்து காத்திருக்கின்றது என்பது அப்பொழுது அவர்களுக்குத் தெரியாதிருந்தது.

தங்களுடைய பிரயாணத்தில் ஒரு குறிப்பிட்ட பட்டணத்தின் கோட்டையின் பிரதான கதவுக்கு முன்னால் அநேக நூற்றுக்கணக்கான பாக்ஸர் கலகக்காரர்கள் துப்பாக்கிகள், வாள்கள், கற்கள் போன்றவைகளுடன் கோபாவேசத்துடன் நின்று கொண்டிருந்தனர். வண்டிகள் பட்டணத்தை நெருங்க, நெருங்க அவர்கள் கற்களை வண்டிகளில் வீசினர். வண்டிகள் புற்பாய்களால் மூடப்பட்டிருந்ததால் கற்கள் மிஷனரிகளின் மேல் விழவில்லை. பின்னர் கலகக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அந்த குண்டுகள் வண்டி மாடுகள் மேல் பட்டு மாடுகள் ஒன்றிரண்டு கீழே விழுந்தன. வெளியிலுள்ள பயங்கரமான நிலையை அறிந்த கோபோர்த் வண்டியைவிட்டு கீழே இறங்கி கூட்டத்தினரிடம் சென்று மிகவும் அன்புடன் "எங்கள் பொருட்களையும், எங்களுக்குரியவைகள் அனைத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எங்களையும், எங்கள் அன்புக்குழந்தைகளையும் மாத்திரம் தயவுசெய்து கொல்லாதேயுங்கள்" என்று கெஞ்சினார். அந்த நேரம் ஒரு கொடியவன் தனது வாளை ஓங்கி கோபோர்த்தை வெட்டினான். அந்த வெட்டு அவர் தலைமேல் இருந்த அவரது தலைக்கவசத்தை நொறுக்கி முதுகிலும் பெரிய இரத்த காயத்தை ஏற்படுத்திற்று. கோபோர்த் உடனே தரையில் சாய்ந்து விழுந்தார்.

இந்த பயங்கரமான வேளை தேவனது அதிசயம் நடைபெற்றது. "பயப்படாதே, மக்கள் உனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர்" என்ற தெளிவான தேவனுடைய குரலை அவரது காதுகள் அந்த வேளை கேட்டன. என்ன ஆச்சரியம்! இந்த வேளையில் ஒரு குதிரை கூட்டத்தினுள்ளே நாற்கால் பாய்ச்சலில் பாய்ந்து வந்து கோபோர்த்துக்கும், கொலைகாரர்களுக்கும் இடையில் வந்து கோபோர்த்தண்டை விழுந்து தனது கால்களை பலமாக தரையில் உதறி கோபோர்த்தை எவரும் நெருங்காதபடி செய்து கொண்டிருந்தது. அந்த குதிரை தனது முதுகில் சவாரி செய்த தனது எஜமானனை எங்கேயோ வீசி எறிந்துவிட்டு வந்திருந்தது. கோபோர்த் தனது சுயநினைவுக்கு திரும்பி தரையிலிருந்து எழும்பும் வரை அந்தக் குதிரை அவ்வாறு தனது கால்களை மூர்க்கத்தனமாக உதறிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் கொலைகார கூட்டத்தினர் கோபோர்த்தை வெட்டுவதை விட்டுவிட்டு 10 மாட்டு வண்டிகளில் இருந்த பொருட்களை முற்றுமாக கொள்ளையடித்தனர். கொள்ளைப் பொருட்களை பங்கிடுவதில் கொலைகார கும்பலினருக்கு இடையே கடும் சண்டை மூண்டதால் அதை பயன்படுத்தி மிஷனரிகள் வண்டிகளிலிருந்து இறங்கி அந்த இடத்திலிருந்து கால் நடையாக நடந்து மற்றொரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையில் ரோசலிண்ட் அம்மையாரை ஒரு கொலைகாரன் வாளால் வெட்டினான். அந்த வெட்டுக்கு அவர்கள் தேவ கிருபையால் ஆச்சரியமாக தப்பிக் கொண்டார்கள். ஆண்டவருடைய சித்தமில்லாமல் தலையிலுள்ள ஒரு முடி கூட விழாது அல்லவா! அப்படித்தான் அங்கு நடந்தது. அந்த பரிசுத்த மக்களின் பாதுகாவலை தேவன் அந்த இடத்தில் தமது கரத்தில் எடுத்திருந்தார். கோபோர்த்தினுடைய நான்கு குழந்தைகள் இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் எப்பொழுதும் கொலைகார கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டும், தங்கள் சிறிய அன்புக்கரங்களை அவர்களைப் பார்த்து அசைத்துக் கொண்டும் இருந்தபடியால் அந்தக் கொலைகாரர்களின் உள்ளத்தில் கருணையும் இரக்கமும் பிறந்தது. சீனர்களுக்கு குழந்தைகள் என்றால் அலாதி அன்பு உண்டு.

பக்கத்து கிராமத்தை வந்தடைந்ததும் கோபோர்த்தின் வெட்டுக்காயங்களிலிருந்து இரத்தம் சற்று கூடுதலாக வடிந்து கொண்டிருந்தமையால் அவர் தரையில் விழுந்து தனது கால்களை உதறிக்கொண்டிருந்தார். அதைக்கண்ட ரோசலிண்ட் அம்மையார் தனது கணவனண்டை அமர்ந்து கதறி அழுதார்கள். அதைக் கண்ணுற்ற அன்புள்ளம் கொண்ட அந்த கிராமவாசிகள் ஓடிச்சென்று ஒருவித மெல்லிய மாவைக்கொண்டு வந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்த காயத்தில் வைத்து இரத்தப்போக்கை உடனடியாக நிறுத்தினார்கள். கிராமத்திலுள்ள பலரும் கோபோர்த்துக்கு உதவி செய்தனர். அந்த கிராமவாசிகள் மிஷனரிகளுக்கும், குழந்தைகளுக்கும் சூடான கூழ்கள் மற்றும் வேண்டிய ஆகாரங்களை கொடுத்து அவர்களை ஆற்றித் தேற்றி அரவணைத்தனர்.

குழந்தைகளுக்கு போடுவதற்கு தங்களிடமிருந்த பழைய உடைகளை கொடுத்தனர். அத்துடன் ரோசலிண்ட் அம்மையார் போட்டுக்கொள்ள ஒரு ஜோடி பழைய செருப்பையும் கொடுத்தனர். அம்மையாரின் செருப்புகளைக்கூட கொலைகாரர்கள் பிடுங்கிக் கொண்டனர். அந்த கிராமவாசிகள் மிஷனரிகளுக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் பாராட்டிய அன்பு கொஞ்சமல்ல. அதற்கான காரணத்தை மிஷனரிகள் அந்த அன்புள்ள கிராமவாசிகளிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்:- "நாங்கள் முகமதியர்கள். நீங்கள் எந்த கடவுளை வழிபடுகின்றீர்களோ அவரைத்தான் நாங்களும் தொழுகின்றோம். மற்றவர்களைப்போல நாங்களும் உங்களை துன்புறுத்தி, கொல்ல முயற்சிப்போமானால் அல்லது உங்கள் பொருட்களை கொள்ளையிடுவோமானால் நாங்கள் எங்கள் ஆண்டவருக்கு முன்பாக ஒரு நாள் நிற்கும்போது நாங்கள் அவருக்கு பதில் சொல்லி ஆகவேண்டும். அவரது முகத்தை தைரியமாக எங்களால் பார்க்க முடியாது" என்று கூறினார்கள்.

அதின் பின்னர் மிஷனரிகள் பயணம் செய்து வந்த வண்டிகளில் சில அந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தன. அவைகளில் ஏறி அவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். முன்புபோல வண்டிகளில் வசதியாக அவர்களால் இப்பொழுது உட்கார இயலவில்லை. வண்டிக்கு 7 பேர் உட்கார வேண்டியதானது. காரணம், மாடுகளில் சில கலவரக்காரர்களின் தோட்டாக்களுக்குப் பலியானது. அதினால், வண்டிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. 30 மணி நேரத்திற்குப் பின்னர் கோபோர்த்தின் பலத்த வெட்டுக்காயத்துக்கு ஓரிடத்தில் சிகிட்சை செய்யப்பட்டது. அவர்களுடைய தொடர் பயணத்தில் மேலும் சில இடங்களில் பாக்ஸர் கொலைகார கும்பல்கள் அவர்களை சந்தித்தனர். ஆனால் உடம்பெல்லாம் காயப்பட்டு, எந்த ஒரு பொருட்களும் இல்லாமல் பிச்சைக்காரர்களாக சென்று கொண்டிருந்த அந்த பரிதாபகரமான மிஷனரிகளையும், பசியால் வாடும் குழந்தைகளையும் அவர்கள் கண்டபோது இரக்கமுற்று எந்த ஒரு தீங்கும் செய்யாமல் அவர்களை விட்டுவிட்டனர். இந்தப் பிரயாணத்தில் அவர்கள் பசி, தாகம், வெயில், குளிர், நிர்வாணம், சரீர உபாதைகள் என்று எத்தனை எத்தனையோ பாடுகள் பட்டனர். தமது பரிசுத்த மக்களை கண்ணின்மணி போல பாதுகாக்கவேண்டுமென்பது தேவனுடைய திட்டமான தீர்மானமாக இருந்ததால் அவர்கள் கடைசியாக சுகபத்திரமாக தாங்கள் சென்று அடைய வேண்டிய இடமான ஹன்கோ பட்டணத்துக்கு வந்து சேர்ந்தனர்.

சீன தேசத்திலிருந்து கண்ணீரின் பிரிவு உபச்சாரம்
யோனத்தான் கோபோர்த் சீன தேசத்தில் சுமார் 45 ஆண்டு காலம் கர்த்தருக்கு மகிமையானதோர் தேவப் பணி செய்து, ஆயிரக்கணக்கான சீன மக்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிமைகளாக்கி, அநேக இடங்களில் மிஷனரி பணித்தளங்களை தோற்றுவித்து, அவைகளை பின் நாட்களில் வழிநடத்திக் கொண்டு செல்ல ஏராளமான சீன தேவ ஊழியர்களை உருவாக்கிக் கொடுத்து, தனது அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் கர்த்தருக்கு மகிமையாகவும், உத்தமமாகவும் நிறைவேற்றி முடித்த பின்னர் தனது கண் பார்வை இழந்த காரணத்திற்காகவும், முதுமை காரணமாகவும் தனது தாய் நாடு திரும்பிச் செல்ல வேண்டியதானது.

கோபோர்த் கடைசியாக தேவப்பணி புரிந்த சிப்பின்காய் என்ற இடத்தில் கோபோர்த் தம்பதியினருக்கு சிறப்பான பிரிவுபச்சார விழா நடைபெற்றது. அதற்கான ஆயத்தங்கள் பல நாட்களுக்கு முன்பதாகவே தொடங்கிவிட்டது. குறிப்பிட்ட நாளில் சிப்பின்காய் சிற்றாலயம் தேவ வசனங்கள் எழுதப்பட்டபட்டு, வெல்வெட் மற்றும் சாட்டின் துணி பானர்களால் சிற்றாலய சுவர்கள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேவ மனிதர் கோபோர்த்துக்கு முன்பாக ஒரு நீண்ட மேஜையில் 12 அழகான வெள்ளி கேடயங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் "இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரன்" என்றும் "அன்பை பின் வைத்துப் போகும் ஒரு உத்தம பாஸ்டர்" என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக சீன தேச தேவ ஊழியர்களும், மிஷனரிகள் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் விதவிதமான கவர்ச்சியான வண்ணங்களில் ஷாங்காய் பட்டணத்தில் கைப்பின்னல் வேலையால் உருவாக்கப்பட்ட "அன்பு" என்ற வார்த்தை நேர்த்தியாக சட்டமிடப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்தது. அதை கோபோர்த்துக்கென்று அன்பளிப்பு செய்திருந்தவர் சிப்பின்காய் வாசியான ஒரு வர்த்தகராவார். அந்த வர்த்தகர் ஒருகாலத்தில் மிகவும் கொடிய துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்தவர். அந்த மனிதரை கோபோர்த் ஆண்டவருடைய கல்வாரி அன்புக்குள் வழிநடத்தி அவரை எப்பொழுதும் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழும் ஒரு உன்னத அனுபவத்துக்குள் கொண்டு வந்து வைத்திருந்தார். கோபோர்த்துக்கு முன்பாக சபை மக்களால் அளிக்கப்பட்ட அநேக வெகுமதிகள் இருந்தன. பாஸ்டர் சுயூ என்பவர் 2 தங்க மோதிரங்களை அன்பளிப்பாகக் கொடுத்து "இந்த மோதிரங்கள் உங்களுடைய சரீரங்களோடு எப்பொழுதும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். நான் உங்கள் மேல் கொண்டுள்ள அளவுகடந்த அன்புக்கு இது அடையாளம்" என்று கூறினார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் துக்கம் தாளாது அழுது கொண்டே தங்கள் உரைகளை முடித்தனர். சிலர் துயரம் தாழாது பூமியில் விழுந்தனர். "எலியா தீர்க்கன் நம்மைவிட்டுப் பிரிந்து செல்லுகின்றார். நாம் எல்லாரும் எலிசா தீர்க்கத்தரிசிகளாக மாற்றம் அடைந்து தேவனுக்கு ஊழியம் செய்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும்" என்று ஒரு தேவ ஊழியர் தமது செய்தியில் சொன்னார்.

மூன்று நாட்களுக்குப் பின்னர் சிப்பின்காய் ரயில் நிலையம் கிறிஸ்தவ விசுவாசிகளாலும், சபை மக்களாலும், தேவ ஊழியர்களாலும், மிஷனரிகளாலும் நிறைந்து வழிந்தது. ரோசலிண்ட் அம்மையார் தனது கணவரை ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரமாக வசதியாக உட்கார வைத்தார்கள். திரள் கூட்டம் மக்கள் தங்களை விட்டு கடந்து செல்லும் தங்கள் அன்பு தேவ ஊழியரின் முகத்தை தங்கள் வாழ்வில் இறுதியாக பார்க்க கண்ணீரோடு முண்டியடித்துக் கொண்டிருந்தனர். கோபோர்த் தனது அன்பு திருச்சபை மக்களை தனது கண்களால் காணக்கூடாவிட்டாலும் அவரது இருதயம் அவர்களோடிருந்தது. அடிக்கடி தனது முகத்தை வானத்துக்கு நேராக ஏறெடுத்துக்கொண்டிருந்தார். அது, "என் பிள்ளைகளே, திரும்பவும் நாம் பரலோகத்தில் ஒன்றாக சந்திக்கப் போகின்றோம் என்ற மகிமையின் நம்பிக்கை நமக்குள்ளது" என்று அவர் கூறுவது போல இருந்தது.

கோபோர்த்தின் உதவியாளன் "கவோ" துக்கம் தாங்க முடியாமல் முதலில் ரயில் நிலையத்தில் கதறி அழுதான். அவன்தான் அவருக்கு அருகில் ஜன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தான். அவன் அழுவதைத் தொடர்ந்து மற்ற மக்கள் எல்லாரும் கதறி அழுதார்கள். ரயில் வண்டி மெதுவாக நகர்ந்தது. மக்கள் அழுதுகொண்டே ரயில் பெட்டியை தொடர்ந்து ஓடினர். தேவ மனிதரின் காட்சி மறையும் வரை அவர்கள் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருந்தனர். ஆம், எத்தனை உருக்கமும், நெஞ்சத்தை நெகிழ வைப்பதுமான கண்ணீரின் காட்சி அது!

கோபோர்த் தம்பதியினர் கோப் என்ற துறைமுகப்பட்டணம் வந்து சேர்ந்தனர். கோப் துறை முகத்தில் அநேக சின்னஞ்சிறிய அழகான மிஷனரி குழந்தைகள் கோபோர்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அவரோடு ஒட்டிக் கொண்டே இருந்தனர். ஏராளமான மிஷனரிகளும் தேவ மனிதரை விடைகொடுத்து அனுப்ப வந்திருந்தனர். அங்கிருந்து கோபோர்த் தம்பதியினர் "ஜப்பானின் ராணி" என்ற கப்பலில் ஏறி கனடா நாட்டிலுள்ள வான்கூவர் பட்டணத்துக்கு பயணமானார்கள். அந்தக் கப்பலிலேயே தேவ மனிதருக்கு 76 ஆம் வயது பிறந்தது. கப்பலிலேயே அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கப்பலிலுள்ள மாலுமிகளும், உத்தியோகஸ்தர்களும், பயணிகளும் மாபெரும் மிஷனரியும், உண்மையும் உத்தமமுமான தேவ பக்தனுமான கோபோர்த்தண்டை வந்து அவரை வாழ்த்தி அவருடன் கை குலுக்கிக் கொண்டனர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Empty Re: யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

Wed Feb 03, 2016 11:20 pm
தேவ மனிதரின் இறுதி நாட்கள்
உச்சித மோட்ச பட்டண பயணம்
தேவ மனிதர் கோபோர்த்தின் வாழ்நாளின் கடைசி ஓய்வு நாள் ஒண்டேரியாவிலுள்ள ரிவர்டேல் என்ற இடத்திலுள்ள பிரஸ்பிட்டேரியன் தேவாலயத்தில் செலவிடப்பட்டது. அங்கு அவர் அன்று 4 தடவைகள் பிரசங்கித்தார். காலை மாலை ஆராதனைகள், மற்றும் ஓய்வு நாள் பள்ளியில் அவர் தேவச் செய்தி கொடுத்தார். அவருடைய அந்த நாளின் தேவ செய்திகள் மிகுந்த தேவ வல்லமையோடு காணப்பட்டது. அந்த தேவச்செய்தியை கேட்ட மக்களிடமிருந்து பின் வந்த நாட்களில் கிடைத்த அறிக்கை யாதெனில் கோபோர்த் அவர்களின் பிரகாசமான முகச்சாயல் என்றுமில்லாத விதத்தில் அப்பொழுது பிரகாசமாக இருந்தது என்றதுதான். அவருடைய அந்த நாளின் தேவச் செய்தியை கேட்ட பெர்த்தா மெர்சி என்ற பெண்மணி இவ்வாறு கூறுகின்றார்கள்:-

"சங்கை மாக் பெர்சன் அவர்கள் யோனத்தான் கோபோர்த்தை தேவாலயத்தின் பிரசங்க பீடத்துக்கு அவரது கரத்தைப் பற்றிப் பிடித்து அழைத்தச் சென்றபோது கோபோர்த் உறுதியாக தனது காலடிகளை எடுத்து வைத்தவராக நிமிர்ந்த தலையுடன் முன் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரது முகம் கிறிஸ்து இரட்சகரின் மேலுள்ள ஆனந்தத்தின் காரணமாக பிரகாசமாக இருந்தது. கண் பார்வை இழந்த கபோதியான அவர் தனது முகத்தை பரலோகத்துக்கு நேராக திருப்பினார். பூமிக்குரியவைகளை தான் காணக்கூடாதபோதினும் பரலோகத்தை தன்னால் நன்கு பார்க்க முடியும் என்று சொல்லுவதைப்போல அந்தப் பார்வை அமைந்திருந்தது. தேவாலயத்தில் கூடியிருந்த மக்கள் மிகுந்த பக்தி வினயத்தோடும் மகா அமைதியோடும் தேவ பக்தனின் செய்தியை கவனித்தனர். அவருடைய செய்தி பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு புறப்பட்டது"

செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் யோனத்தான் கோபோர்த்தும் அவரது மனைவி ரோசலிண்ட் அம்மையாரும் அவர்களுடைய மகன் பிரட்ரிக் என்பவர் குருவானவராக பணி செய்த ஒண்டேரியாவிலுள்ள வாலஸ்பர்க் என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு பல இடங்களிலும் கோபோர்த் தேவச் செய்தி கொடுக்கும்படி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சற்றும் இடைவெளியில்லாத ஊழியத் திட்டம் அது. பகற் காலம் முழுவதும் ஆங்காங்கு ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் கர்த்தருடைய செய்தியை கொடுத்துவிட்டு மாலையில் வாலஸ்பர்க்கிலுள்ள தனது மகனுடைய வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவது என்பது அந்த திட்டம். அதின்படி அக்டோபர் மாதம் 7 ஆம் நாள் புதன் கிழமை கோபோர்த் 40 மைல்கள் தொலைவிலுள்ள ஓரிடத்தில் அந்த நாளின் பகற்காலங்களில் கர்த்தருடைய செய்தியை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். "கொரியா தேசத்தில் எழுப்புதல் அக்கினி எவ்விதமாக பரிசுத்த ஆவியானவரால் ஊற்றப்பட்டது" என்பதே அந்த நாளின் மாலை வேளை கோபோர்த் கொடுத்த சற்று நீளமான தேவ வல்லமையின் செய்தியாகும். அந்த இறுதி கூட்ட முடிவில் கூடி வந்தோர் யாவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆனால் கோபோர்த் தனது உடல் நலக் குறைவு காரணமாக தனக்கு கொடுக்கப்பட்ட சிற்றுண்டியை அருந்தவில்லை. அந்த இடத்திலிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்து தனது இரவு இளைப்பாறுதலுக்கு செல்ல கோபோர்த்துக்கு மிகவும் பிந்திவிட்டது. இரவின் பிந்திய மணி நேரத்தில்தான் அவர் தூங்கச் சென்றார்.

அடுத்த நாள் காலை மற்றொரு இடத்திற்கு தேவ ஊழியத்துக்காக பயணப்பட வேண்டும். ரோசலிண்ட் கோபோர்த் அம்மையார் வழக்கம் போல காலையில் எழுந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது காலை ஏழு மணி. தனது கணவர் கண் விழித்து எழும்புவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாதிருந்தது. ரோசலிண்ட் அம்மையார் தனது கணவரை சற்று கூர்மையாக கவனித்தபோது அவர் நித்திரை செய்பவரைப் போல காணப்படாமல் சற்று வித்தியாசமாகக் காணப்பட்டார். அம்மையார் மிகவும் அருகில் வந்து அவரைப் பார்த்தபோது கோபோர்த் அவர்களின் மண்ணுக்குரிய ஜீவனற்ற சடலம் மாத்திரமே அங்கிருந்தது. கோபோர்த் தனது ஜீவகாலம் முழுவதும் உண்மையும், உத்தமமுமாக சேவித்து ஆராதித்து வந்த தன் அருமை ஆண்டவரின் பொன் முகம் தரிசிக்க இப்பொழுது கடந்து சென்றுவிட்டார். தனது ஒரு கரத்தின் மேல் தனது கன்னத்தை வைத்து ஆழ்ந்த இளைப்பாறுதலில் இருப்பவராக அவர் காணப்பட்டார். ரோசலிண்ட் அம்மையார் கண்விழித்த அதே காலை நேரம்தான் அவரது உயிர் பிரிந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர் கூறினார். "மரணத்தின் கூரை அனுபவிக்காமலே அவரது ஜீவன் சரீரத்திலிருந்து பிரிந்து சென்றிருப்பதாக" மருத்துவர் மேலும் சொன்னார்.

பூமியில் ஒரு கணம் தனது கண்களை மூடி அடுத்த கணம் இம்மானுவேலரின் மகிமை தேசத்தில் தனது கண்களை அவர் திறந்தார். சில வாரங்களுக்கு முன்னர்தான் அவர் "பென்லிப்பன்" என்ற இடத்தில் பேசும்போது "அடுத்தபடியாக நான் விரைவில் தரிசிக்கப்போகும் முகம் எனது அருமை இரட்சகர் இயேசுவின் முகம்தான்" என்று மிகுந்த ஆனந்த களிப்போடு கூறியிருந்தார். அப்படியே அவர் தனது நேச கர்த்தரை முகமுகமாக தரிசிக்கச் சென்றுவிட்டார். "நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தி ஆவேன்" (சங்கீதம் 17 : 15) என்று சங்கீதக்காரர் கூறுவார்.

கோபோர்த்தின் வல்லமையுள்ள 
தேவ ஊழிய ஆசீர்வாத இரகசியம்
அருமை இரட்சகர் இயேசுவின் பரிசுத்த தேவ பணியில் கோபோர்த்தை தேவன் இத்தனை வல்லமையும் அற்புதமுமாக பயன்படுத்துவதற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கும் நேரம் இது. இதைக் குறித்து சங்கை ஆலன் ரோச் என்பவர் கூறும்போது:-

"கோபோர்த்தின் ஆவிக்குரிய வல்லமைக்கான இரகசியம் என்று குறிப்பிட பல பரிசுத்த குணாதிசயங்கள் அவரிடம் காணப்பட்ட போதினும் கீழ்க்கண்ட ஏழு பரிசுத்த பண்புகள் முக்கியமானதாகும் என்று நான் கூறமுடியும். அதை கோபோர்த் அவர்களே 1894 ஆம் ஆண்டு தனது வேதபுத்தகத்தின் முகப்பு வெள்ளைத்தாள் ஒன்றில் எழுதி வைத்துள்ளார். 1) ஒன்றையும் கைம்மாறாக எதிர்பாராமல் தேவ ஊழியத்துக்கு அதிகமாகவே கொடுக்க முயற்சி செய். 2) மற்றவர்களின் பரிசுத்த செயல்களுக்கு உறுதியான அஸ்திபாரம் கொடு. 3) குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது தேவனுடைய வேத வசனங்களுடன் நேரம் செலவிடாமல் எந்த ஒரு நாளையும் கை நழுவ விட்டுவிடாதே. 4) எல்லா காரியங்களிலும் தேவனுடைய திருவுள சித்தத்தை கண்டுபிடிக்க முயற்சி செய். அப்படி கண்டுபிடித்துவிட்டால் எந்த ஒரு விலைக் கிரயம் கொடுத்தாகிலும் அதற்கு கீழ்ப்படி. 5) காலை, மாலை இரு நேரங்களிலும் தனி ஜெபம், தியான வேளைகளை ஒருக்காலும் தவறவிட்டுவிடாதே. 6) அமர்ந்த ஜெப ஆவியை உனக்குள் உருவாக்க பிரயத்தனப்படு. 7) தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை குறித்து புறமதஸ்தர்கள் மத்தியில் தினமும் ஏதாகிலும் பேசி அல்லது செய்துவர கவனமாயிரு.

மேற்கண்ட பரிசுத்த ஒழுங்குகள் யாவையும் எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி கோபோர்த் தவறாது கடைப்பிடித்து வந்ததுடன் அவைகளுக்கு மிகவும் கூடுதலாகவே வாழ்ந்தும் வந்தார்.

யோனத்தான் கோபோர்த்தைக் குறித்து பண்டிதர் 
ஜாண் கிப்சன் குறிப்பிடும் வார்த்தைகள்
யோனத்தான் கோபோர்த், அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப்போன்ற பரிசுத்த குணநலன்களைக் கொண்டவர். அவரது சிந்தை, அவரது இருதயம், அவரது ஆவியின் தன்மைகள் அப்படியே அப்போஸ்தலனாம் பவுலைப்போன்றதாகும். அவரிடம் அஞ்சாத துணிவு, விடா முயற்சி, சோர்படையாத மனோ ஆற்றல், தேவ பணியில் கண்ணும் கருத்துமாயிருத்தல் போன்றவை குடி கொண்டிருந்தன. இயேசுவின் கல்வாரி அன்பில் மயங்கிக்கிடந்த ஒரு மனிதராக அவர் காணப்பட்டார். பரிசுத்த ஆவியாலும், அக்கினியாலும் அவர் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார். தன்னை முழுமையாக கர்த்தருக்கு அர்ப்பணித்தவரும், தத்தம் செய்தவருமாக அவர் விளங்கினார். யாவுக்கும் மேலாக கோபோர்த் தாழ்மை சொரூபனாக இருந்தார். அவர் தன்னை முற்றுமாக வெறுமையாக்கியபோது பரிசுத்த ஆவியானவரால் பாத்திரம் நிரம்பி வழியும் அளவிற்கு நிரப்பப்பட்டார். தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொள்ளும் பரலோக வலிமையை அவர் பெற்றிருந்தார். பரிசுத்த ஆவியில் நிறைந்து விசுவாசத்தோடு ஜெபிக்கும் ஜெபவல்லமை அவருக்கிருந்தது.

வேதாகம புருஷர்களில் வேறு எவர்களைக் காட்டிலும் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ஒருவரே அவருக்கு இணையாக ஒப்பிடப்படக்கூடியவர். மிஷனரி பணி ஆர்வத்தில் பவுல் அப்போஸ்தலனைப்போல வேறு எவரையும் நான் கண்டதில்லை. டேவிட் லிவிங்ஸ்டன், ஜட்ஸன், ஹட்சன் டெயிலர் போன்ற பரிசுத்த பக்தர்களைப்போன்றே தேவனுடைய சுவிசேஷத்தையும், இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் பிரசங்கிக்கும் பொருட்டாகவே கோபோர்த் தன்னையே எரித்துச் சாம்பலாக்கிக் கொண்டார். அவருடைய பரிசுத்தமான வாழ்க்கை சோம்பிக் கிடக்கும் நம்மை வெட்கப்பட்டு தலைகுனியச் செய்ய வைப்பதுடன் கர்த்தருக்காக நாம் எதையாவது செய்ய வேண்டும் என்ற வாஞ்சையை நம்மிலே தூண்டிவிடுவதாக இருக்கின்றது. எத்தனை ஆச்சரியமான முன்மாதிரி! நமது உள்ளத்தை உணர்த்தி எழுப்புதலடையச்செய்யும் எத்தனை பரவசமான பரிசுத்த வாழ்க்கை!
Sponsored content

யோனத்தான் கோபோர்த் (1859 - 1934) Empty Re: யோனத்தான் கோபோர்த் (1859 - 1934)

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum