காட்டிலே கல்யாணம்!
Mon Dec 28, 2015 10:41 pm
காட்டிலே கல்யாணம்!
தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்துகொண்டிருந்த யானை ஒன்று, கடைசியாக ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கண்டுபிடித்தது.
''இவன் என் ஒரே பையன். பட்டணத்தில் ஒரு சர்க்கஸ் கம்பெனி யில் வேலை செய்கிறான். நீங்கள் போங்கள். நான் என் நண்பர் களுடன் கலந்து யோசனை செய்துவிட்டு, உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்'' என்று சொல்லிற்று மாப்பிள்ளை யானையின் தந்தை. அதன் நண்பனான ஒட்டைச்சிவிங்கி பெண் யானையின் தந்தை யிடம், ''நான் இதை நல்லபடியாக முடித்து வைக்கிறேன். கவலைப் படாமல் போய் வாருங்கள். கூடவே, என் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை இருந்தால் கடிதம் எழுதுங்கள்'' என்று சொல்லி அனுப்பிற்று.
பெண் யானையின் தந்தைக்கு மறுநாள் கடிதம் வந்தது. ''என் பிள்ளைக்கு உங்கள் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்வதற்குச் சம்மதம்தான். ஆனால், ஒரு நிபந்தனை. உங்கள் பெண்ணுக்குத் தங்க ஒட்டியாணம் போட வேண்டும். என் நண்பர் ஒட்டைச்சிவிங்கியின் ஆலோசனையின் பேரில்தான் இதை எழுதியிருக்கிறேன்...''
''தங்க ஒட்டியாணமா..!'' என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையாகிக் கீழே விழுந்தது அம்மா யானை.
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று அப்பா யானை கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் இதன் சிநேகித ஒட்டைச்சிவிங்கி வந்தது. விஷயத்தை அறிந்த அது, ''கவலைப்படாதீர்கள். இதற்கு ஒரு வழி செய்கிறேன்'' என்று கூறிப் பெண் யானையின் தந்தையிடம் ரகசியமாக ஏதோ சொல்லிற்று.
மறுநாள், மாப்பிள்ளை வீட்டு நண்பனான விஷமக்கார ஒட்டைச்சிவிங்கிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ''உங்கள் பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளை இருந்தால் சொல்லும்படி கேட்டீர்களே, அருமையான மாப்பிள்ளை இருக்கிறார். நீங்கள் உடனே கிளம்பி வாருங்கள்'' என்று எழுதியிருந்தது பெண் யானையின் தந்தை. ஒட்டைச்சிவிங்கி சந்தோஷத்துடன் தன் மனைவி, மகளுடன் இந்த யானையின் வீட்டுக்கு வந்தது. யானை, பிள்ளை வீட்டாரை ஒட்டைச்சிவிங்கிக்கு அறிமுகப்படுத்தியது.
சற்று நேரம் கழித்து, ''என் பையன் உங்கள் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்துவிட்டான். ஆனால், ஒரு நிபந்தனை, உங்கள் பெண்ணுக்கு அவளுடைய நீண்ட கழுத்து மறையும்படி தங்கச் சங்கிலி போடவேண்டும்'' என்று பிள்ளை ஒட்டைச்சிவிங்கியின் தந்தை சொல்லிற்று. ''அநியாயமாக இருக்கிறதே! இப்போது தங்கம் விற்கிற விலையில்...'' என்று பதறியது பெண் ஒட்டைச்சிவிங்கியின் தந்தை.
''ஒரு அநியாயமும் இல்லை. பக்கத்து வீட்டு யானையாரை தன் பெண் இடுப்புக்கு ஒட்டியாணம் போடச் சொல்லி மாப்பிள்ளை யானையைத் தூண்டியது நீங்கள்தானே! அப்படியிருக்கும்போது, நீங்களும் உங்கள் பெண்ணுக்குக் கழுத்துச் சங்கிலி போடுவதுதானே நியாயம்!'' என்று ஒரே போடாகப் போட்டது மாப்பிள்ளை ஒட்டைச்சிவிங்கியின் தந்தை.
விஷமக்கார ஒட்டைச்சிவிங்கி தன் தவற்றை உணர்ந்து திருந்த, ஒரே பந்தலில் இரண்டு திருமணங்களும் ஜாம் ஜாமென்று விமரிசையாக நடந்தன.
நன்றி: விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum