வீடியோகேம்ஸ் விளையாடும் குழந்தைகளை மாற்றும் வழி..
Tue Dec 15, 2015 12:11 pm
இன்றைய தலைமுறை குழந்தைகளும், இளைஞர்களும் எந்நேரமும் செல்போன்கள், கணினிகளில் விளையாடுவதும், இணையதளங்களில் உலவுவதுமாக பொழுதுபோக்குகிறார்கள். இதனால், 'தங்கள் பிள்ளைகள் தவறான வழிக்குப் போய்விடுவார்களோ?' என்று பதற்றம் அடைவது பெற்றோர்தான். உங்கள் குழந்தைகளும் எலக்ட்ரானிக் கருவிகளின் மோகத்தில் சிக்கியிருக்கிறார்களா? கவலைவேண்டாம் அவர்களை எளிதாக மீட்கலாம்...
'8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 38 சதவீதம் பேர் அதாவது மூன்றில் ஒருவர் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகளை இயக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்' என்கிறது ஒரு புள்ளி விவரம். இவர்களில் 11 சதவீதம் பேர் தினமும் இந்த சாதனங்களை பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்களாம். அதேபோல 'அவர்கள் அரை மணி நேரம் படிப்பதற்காக செலவிட்டால் 1 3/4 மணி நேரம் டி.வி. பார்ப்பது, டி.வி.டி. பார்ப்பது, எலக்ட்ரானிக் சாதனங்களில் விளையாடுவது என பொழுதை கழிக்கிறார்கள்' என்கிறது மற்றொரு புள்ளி விவரம்.
இப்படி எலக்ட்ரானிக் திரை முன்பு செலவிடும் நேரத்தை 'திரை நேரம்' (ஸ்கிரீன் டைம்) எனக் குறிக்கும் ஆய்வுக்குழுவினர், 'இது ஒருவகையில் மூளையைத் தூண்டினாலும், அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்' என எச்சரிக்கிறார்கள். இதுபோன்ற குழந்தைகளை மீட்டெடுக்கவும் அவர்கள் சில வழிமுறைகளை கூறுகிறார்கள். அவற்றை அறிவோம்...
* எலக்ட்ரானிக் திரை முன் அமர்ந்து சதா கண்களுக்கு பயிற்சி அளிக்கும் குழந்தைகளை, கைகளுக்கு வேலை கொடுக்கும் பயிற்சியில் ஈடுபடுத்தினால் அவர்கள் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பேப்பர் கத்தரித்தல், மடித்தல் மூலம் புதிய படைப்புகளை செய்ய பழக்குங்கள். இதை தினசரி செய்ய பழக்காவிட்டாலும் வாரத்தில் இரண்டு, மூன்று முறை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணரலாம். எலக்ட்ரானிக் திரையைத் தாண்டி அவர்கள் உருவாக்கும் புதிய படைப்புகள், அவர்களுக்குப் பெற்றுத் தரும் ஊக்கம், பாராட்டுகள் இன்னும் பல சாதனைகளை படைக்க தூண்டுகோலாக விளங்கும்.
* பெரியவர்களும் எலக்ட்ரானிக் திரைகளின் முன்பு செலவிடும் நேரத்தை குறைத்து, குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் அவர்களுக்கும் அந்த பழக்கம் வெகுவாக குறையும். நாம் அவசியம் கருதியே கணினி, செல்போன்களை உபயோகித்தாலும், முடிந்த அளவு குழந்தைகள் முன்பு அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். குடும்பமாக வெளியே சென்றுவருவது, பயனுள்ள பணிகளில் ஈடுபடுவது என நேரத்தை செலவிடும்போது 'திரை நேரம்' குறைந்து மகிழ்ச்சி நேரம் பெருகும்.
* படுக்கையில் குழந்தைகளை அணைத்தபடி அவர்களை கவர்ந்திழுக்கும் கதைகளைக் கூறினால், அவர்கள் மனம் அதை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். தினமும் இதை பழக்கப்படுத்தலாம்.
* புதிய மனிதர்கள், விலங்குகள், இடங்கள் எல்லாவற்றையும் அவர்கள் கண்களுக்கு விருந்தளிக்க செய்ய வேண்டும். உறவுகளை சந்தித்தல், சுற்றுலா செல்லுதல் என நேரடி காட்சிகளுக்கு வாய்ப்பு உருவாக்கினால் அவர்கள் செல்போனில் மூழ்குவதை குறைத்து, அழைப்பிற்காக மட்டுமே அதை உபயோகிக்க பழகுவார்கள்.
* குழந்தைகள் டி.வி., செல்போன்களில் மூழ்கி இருப்பதற்கு முக்கிய காரணம். டிவி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்களில் காட்டப்படும் புதிய உருவங்கள், அவை செய்யும் சாகசங்கள்தான். அவற்றின் பின்னால் தாங்கள் ஓடுவதைப் போன்ற உற்சாக உணர்வை குழந்தைகள் பெறுவதால் அதை பெரிதும் ரசிக்கிறார்கள். எனவே அவர்கள் விரும்பும் கதாபாத்திர பொம்மைகளை நேரிலும் கிடைக்கச் செய்வதன் மூலம் குழந்தைகள் திரையில் விளையாடுவதைவிட நேரில் விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.
* எல்லா நாட்களிலும் 'விளையாடாதே படி, வீட்டுப் பாட பயிற்சி செய்' என அவர்களை விரட்டிக் கொண்டிருப்பதுதான் அவர்களை பொழுதுபோக்கில் அதிகம் லயிக்க வைக்கிறது. எனவே ஓய்வு நாளில் பாடத்தைப் பற்றிய சிந்தனையே வராமல் மனதை மகிழ்வூட்டும் காரியங்களில் ஈடுபட செய்யுங்கள். அந்த நேரத்தில் மட்டும் அவர்கள் சிறிது நேரம் திரை முன்பு செலவிட்டாலும் பரவாயில்லை. மற்ற நேரங்களில் திரைகளை தவிர்க்க பழக்கப்படுத்துங்கள். எங்கும் அழைத்துச் செல்ல முடியாவிட்டால்கூட அவர்களுக்கு விருப்பமான பதார்த்தம் ஒன்றை செய்து கொடுப்பதற்காக அவர்களை உதவிக்கு அழையுங்கள்.
குழந்தைகளின் மனதை எலக்ட்ரானிக் திரையைவிட உங்கள் அன்பு ஈர்க்கட்டும். பிறகு மாற்றங்கள் மலரும்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum