மனை வாங்கவும் கடன் இருக்கே!
Sun Nov 15, 2015 8:59 am
வங்கிகளில் மனை வாங்கு வதற்குகூடக் கடன் வசதிகள் உள்ளன. மனை வாங்கக் கடன் கேட்பதற்கும் வங்கிகள் சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன. வீட்டுக் கடன் கொடுப்பது போலவேதான் இதற்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கும் இந்தக் கடன் கிடைக்கும். ஈட்டும் வருவாய், கடனைச் செலுத்தும் தகுதி ஆகியவை இந்த விஷயத்தில் ஆராயப்படும்.
மனைக் கடன் வாங்கும்போது வங்கிகள் முக்கியமாகப் பார்க்கும் விஷயம், மனை எந்த நிலத்தில் அமைந்துள்ளது என்பதுதான். வாங்க உத்தேசித்துள்ள மனை குடியிருப்புப் பகுதியாக அரசால் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விவசாய நிலமாகவோ, வணிக ரீதியான நிலமாகவோ நிச்சயம் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி என வரையறுக்கப்பட்ட உள்ளாட்சியின் எல்லைக்குள் மனை இருக்க வேண்டும். வீடு கட்டும் எண்ணத்திலோ முதலீட்டு எண்ணத்திலோ மனையை வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.
வீட்டுக் கடனுக்கு 80 சதவீதம் வரை வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. 20 சதவீதத் தொகையை நம் கையில் இருந்து செலவு செய்வது போலத்தான் மனைக் கடனுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மனையின் மதிப்பு பெரு நகரம், சிறு நகரம் சார்ந்த பகுதிகளில் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் மனைக் கடன் கிடைக்கும். பெரு நகரங்கள் என்றால் அரசு வழிகாட்டு மதிப்புக்கு ஏற்ப 70 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும். சில வங்கிகள் 80 முதல் 85 சதவீதம் வரையிலும்கூட மனைக் கடன் வழங்குகின்றன. சிறிய நகரங்கள் என்றால், மனையின் மொத்த மதிப்பீட்டில் 50 முதல் 60 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும்.
வங்கியில் மனைக் கடன் கேட்க முடிவு செய்துவிட்டால் சில ஆவணங்கள், சான்றிதழ்களைத் தயார் செய்ய வேண்டும். வீட்டுக் கடனுக்குரிய விதிமுறைகள்தான் இங்கும் பின்பற்றப்படுகின்றன. புகைப்படம், அரசு வழங்கிய அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், மாதச் சம்பளச் சான்றிதழ் (வேலை செய்யும் நிறுவனம் வழங்கும் பே ஸ்லிப்) , கடன் கேட்கும் தேதியிலிருந்து முந்தைய 6 மாத வங்கி கணக்கு அறிக்கையின் நகல் ஆகியவற்றை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
இதுமட்டுமல்ல, இன்னும் சில ஆவணங்கள் கேட்கப்படும். விற்பவரின் நில உரிமை ஆவணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். விலைக்கு வாங்கும் மனையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் (ஈ.சி.), சிட்டா சான்றிதழ், இடத்துக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வங்கியில் சமர்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற நிலத்தின் வரைபடம், நிலத்தின் உரிமையாளர் மனைக்கு வரி செலுத்திய ரசீதையும் சமர்பிக்க வேண்டும். உங்கள் கடன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கப் பரிசீலனைக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மனைக் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், மனைக் கடனை அடைக்கச் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு வரி விலக்கு எதுவும் கிடையாது. அதேசமயம் வாங்கிய மனையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு வரி விலக்குகளைப் பெற முடியும். கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால் முழுமையாக வரி விலக்கு பொருந்தும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum