பணம் பணக்காரர்களிடம் பத்திரமாக இருக்கிறது
Fri Nov 13, 2015 12:47 pm
உலக அளவில் உடனுக்குடன் தானாகவே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை வருவதால் வரி ஏய்ப்புகள் அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது என்று அருண் ஜேட்லி சமீபத்தில் கூறியிருக்கிறார். வரி ஏய்ப்பு என்பது உலகெங்கிலும் நடக்கும் தகிடுதத்தங்களில் முதன்மையானது என்பதிலும் ‘வரி ஏய்ப்பு ஒலிம்பிக்ஸ்’ நடந்தால் இந்தியர்கள் கணக்கற்ற பதக்கங்களைப் பெறுவார்கள் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால், பணத்தைப் பதுக்குவது கடினமாகிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனவே, இந்தியர்கள் வெளிநாட்டில் பணத்தைப் பதுக்குவது கடினமாக ஆகலாம். ஆனால், ஏற்கெனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் அனைத்தையும் வெளியில் கொண்டுவர முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று பதில் சொல்ல அரசால் முடியாது. இந்த அரசால் மட்டும் அல்ல, எந்த அரசு வந்தாலும் முடியாது. அரசின் ‘தன்னார்வ வெளிப்பாட்டு’ (வாலன்டரி டிஸ்க்லோஷர்) திட்டத்தின் கீழ் இந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த பணம் ரூபாய் 3.770 கோடி. இது எவ்வளவு குறைவு என்பதைப் புரிந்துகொள்ள 1997-ல் சிதம்பரம் அறிவித்த திட்டத்தில் வெளிவந்த பணத்தின் மதிப்பு சுமார் ரூ. 37,000 கோடி என்ற புள்ளிவிவரமே போதும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்திலிருந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை விடுங்கள். கிடைத்திருக்கும் பணத்திலிருந்து, இந்தியர்கள் அனைவருக்கும் அம்மா உணவகத்திலிருந்து ஒரு நாள் சாப்பாடுகூட முழுதாகப் போட முடியாது. இரவு சாப்பாட்டுக்குக் கடன் வாங்க வேண்டியிருக்கும்.
ஏய்ப்புப் பணம் எங்கே இருக்கிறது?
வெளிநாட்டில் இருக்கும் நமது பணத்தின் மொத்த மதிப்பைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையைப் பற்றித் தொடர்ந்து எழுதி வரும் பேராசிரியர் வைத்தியநாதன், பணத்தின் மதிப்பு 1.4 ட்ரில்லியன் டாலர்கள் ( தொண்ணூறு லட்சம் கோடி ரூபாய்!) என்று 2009-லேயே மதிப்பிட்டிருந்தார். 2007-ல் உலக வங்கி சுமார் 200 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிட்டிருந்தது. எனவே, திரும்பிவந்த பணம் பெருவெள்ளத்தில் சிறுதுளிகூடக் கிடையாது என்பது தெளிவு. ஜேட்லி தனது ப்ளாகில் மொத்த கருப்புப் பணத்தில் பெரும்பகுதி இந்தியாவில்தான் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது, வெளியில் இருக்கும் புலி என்று நாம் நம்பிக்கொண்டிருந்தது வீட்டில் இருக்கும் எலிகள்தான் என்று சொல்வது போல இருந்தாலும், அவரது கூற்றில் உண்மை இருக்கிறது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் இந்தியாவுக்குத் திரும்பி வரத் தொடங்கியிருக்கிறது என்பதும் உண்மை. இது முக்கியமாக இரண்டு வழிகளில் வருகிறது.
இவை என்ன?
பி - நோட்
முதலாவது பி-நோட் எனப்படும் பார்டிஸ்பேடரி நோட் அதாவது, பங்கு பெறுகைக் குறிப்பு. இது பல நிதி நிறுவனங்களை அவர்கள் பெயரில் மற்றவர்கள் பணத்தை அநாமதேயமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வழிவகை செய்வது. (இது பற்றி ரமேஷ்பாபு தனது 6 அக்டோபர் கட்டுரையில் தெளிவாக எழுதியிருக்கிறார்) பி-நோட் மூலம் வரும் பணத்தின் வீதம் 2007-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வரும் முதலீட்டில் சுமார் 48% ஆக இருந்தது, 2013-ல் 8%- மாக குறைவாகிவிட்டது. எனவே, இந்தியப் பணம் பெருமளவு வெளிநாட்டு முதலீடாக இந்தியாவுக்குத் திரும்பி வருவது பெருமளவில் குறைந்திருக்கிறது என்பது தெளிவு. ஆனாலும், 31 மார்ச் வரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி பங்குச் சந்தையில் பி-நோட் மூலம் 2 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. இந்தத் தொகை மட்டும் நமது நாட்டின் ஆண்டு வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு! எனவே, வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் நம்மைப் போன்ற சாதாரண மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரியது.
ரியல் எஸ்டேட்
வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தில் ஒரு பகுதி ரியல் எஸ்டேட்டுக்கு வருகிறது. இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் சுமார் 8,000 கோடி ரூபாய் இந்த வழியில் வந்திருக்கிறது. ஆனால், ரியல் எஸ்டேட்டில் புழங்கும் உள்ளூர் கறுப்புப் பணம் வெளியூரிலிருந்து வருவதைவிட மிகமிக அதிகம். இந்தியாவின் ஏழு பெரு நகரங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் வீடுகள் விற்காமல் இருக்கின்றன. இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய். இதைத் தவிர, வாங்கிய பிறகு யாரும் வசிக்காமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளும் மிக அதிகம் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வளவு காலி வீடுகள் இருந்தும் வீட்டு விலை குறைவதில்லை. பெருநகரங்களில் சாதாரண மனிதர்கள் வாங்கக் கூடிய அளவில் வீடுகள் கிடைப்பதில்லை. காரணம், மிகச் சிலரைத் தவிர, ரியல் எஸ்டேட்டில் பெருமளவு முதலீடு செய்திருப்பவர்களுக்கு உடனடியாகப் பணத் தேவை இல்லை. அவர்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இதெல்லாம் நமக்குத் தெரியுமென்றால், அரசுக்குத் தெரியாதா?
அரசு என்ன செய்ய வேண்டும்?
பி-நோட்டுகளைத் தடை செய்வது ஒரு வழி. மற்றொன்று, ரியல் எஸ்டேட்டில் யார் முதலீடு செய்கிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணித்து, பினாமி முதலீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது இன்னொரு வழி. இந்த இரண்டு வழிகளிலும் எந்த அரசும் செல்லாது. செல்ல முடியாது. ஏனென்றால்
பி-நோட்டுகளைத் தடை செய்தால் பங்குச் சந்தையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்படும். அதனால் உண்டாகும் பிரச்சினைகள், வரி ஏய்ப்புப் பிரச்சினையைவிடப் பெரிதாக உருவெடுக்கும் அபாயம் இருக்கிறது. ரியல் எஸ்டேட்டில் கை வைத்தால், அரசியல்வாதிகள் உள்ளூர் பெருந்தலைகள் மீது கை வைக்க வேண்டி வரும். எந்த அரசியல் கட்சியும் இதைத் தைரியமாகச் செய்ய முன்வராது.
என்ன செய்யலாம்?
வரி ஏய்ப்புச் செய்யும் வழிகள் கணிசமாகக் குறைய வேண்டுமானால் பணப் புழக்கம் கணிசமாகக் குறைய வேண்டும். ஸ்வீடன் போன்ற நாடுகள் காகிதப் பணத்தையே ஒழிக்கும் திசையில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்தியாவில் அந்த நிலை ஏற்படப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், பெரிய அளவு பண பரிவர்த்தனை நடப்பதைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் இன்று நம்மிடம் இருக்கிறது. வருமான வரி அடையாள அட்டை இல்லாமல் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுக்க முடியாதபடி வழிவகை செய்ய முடியும். தங்கம் இறக்குமதி செய்யும் இடத்திலிருந்து யாரிடமெல்லாம் செல்கிறது என்பதையும் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
பணம் பணக்காரர்களிடம் இருக்கிறது
ஆனால், பணம் பணக்காரர்களிடம் இருக்கிறது. அவர்கள் அவ்வளவு எளிதாக பணத்துக்கு விடை கொடுக்கத் தயாராக இல்லை. இந்தியாவுக்கு விடை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் முதல் ஆண்டிலிருந்து இந்தியாவை விட்டு வெளியேறிய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 61,000. ஆனால், இந்தியாவில் வருடத்துக்கு ஒரு கோடி வருமானம் இருக்கிறது என்று தெரிவித்து வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 43,000 மட்டும்.
இவர்களில் பலர் எந்த அரசுக்கும் பயப்படாதவர்கள். எல்லோரையும் கைக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களைச் சார்ந்துதான் அரசு இருக்கிறது.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Permissions in this forum:
You cannot reply to topics in this forum