தங்க சேமிப்பு பத்திரத்தின் விலை
Wed Nov 04, 2015 8:30 am
புதுடெல்லி,
தங்க சேமிப்பு பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 684 என்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இந்த பத்திரங்களைப் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தங்க பத்திரம்
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிட்டு, அதில் பொதுமக்களை முதலீடு செய்ய வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம், கடந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தங்க சேமிப்பு பத்திரங்கள், வருகிற 26–ந் தேதி வெளியிடப்படுகின்றன. இவை, வங்கிகளிலும், சில குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.
விலை நிர்ணயம்
இந்நிலையில், தங்க பத்திரங்களுக்கான விலையை ரிசர்வ் வங்கி நேற்று நிர்ணயித்தது. கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 684 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய தங்க, வெள்ளி மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட முந்தைய வார தங்கத்தின் முடிவு விலை அடிப்படையில், இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்க பத்திரங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் 20–ந் தேதிவரை அளிக்கலாம்.
குறைந்தபட்சம் 2 கிராம் மதிப்புள்ள தங்க பத்திரங்களிலும், அதிகபட்சம் 500 கிராம் மதிப்புள்ள தங்க பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம்.
முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 2.75 சதவீத வட்டி வழங்கப்படும். ஆறு மாதங்களுக்கு ஒருதடவை வட்டி கணக்கிட்டு வழங்கப்படும். தங்க பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். இருப்பினும், முதலீட்டாளர்கள் விரும்பினால், 5–வது ஆண்டிலேயே, வட்டி வழங்கப்படும் நாட்களில், கணக்கை முடித்து வெளியேறலாம்.
வரி உண்டு
தங்க பத்திர முதலீடு மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு. தங்கத்துக்கு விதிக்கப்படும் மூலதன ஆதாய வரியைப் போலவே, இதற்கும் மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்பட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் தங்க பத்திரங்களைப் பெறலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum