பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறைகள்
Sun Jul 19, 2015 3:37 pm
கோவை
பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறை விதிகளை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.
பி.எட். படிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், பட்டதாரி மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பதற்கான கலந்தாய்வு, சென்னை லேடி வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறை விதிகளை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மாணவர் சேர்க்கை நடைமுறைகள்
நடப்பு கல்வி ஆண்டில்(2015-16) பி.எட். மாணவர் சேர்க்கைக்கு, பி.எஸ்சி. பயன்பாட்டு வேதியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், உயிரி இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரித் தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண் உயிரியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு உள்ளிட்ட துறைகளில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
மதிப்பெண் விவரம்
பிற இனத்தவர்கள் (ஓ.சி.) குறைந்தபட்சம் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43 சதவீதமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் அருந்ததியர் இனத்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீதமும், இளநிலை பட்டப்படிப்பில் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
பொருளாதாரம், வணிகவியல், மனையியல் அறிவியல், அரசியல் சார் அறிவியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், இந்திய கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இதுவரை ஒரு ஆண்டாக இருந்த பி.எட். படிப்பு காலம், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum