சர்வதேச யோகா தினமும் கிறிஸ்தவமும்
Thu Jun 18, 2015 10:54 pm
"உங்கள் கண்கள் திறக்கப்படும்... நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” - ஆதியாகமம் 3:4,5
ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா நாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் பிண்ணனியை வேதத்தின் அடிப்படையில் சிந்தித்தால் சில அபாயமான புள்ளிகள் ஒரே கோட்டில் இணைவதை சிந்திக்கச்செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். திடீரென்று ஏன் யோகா திணிக்கப்படுகிறது? உடல் நலத்திற்காக என்று சொல்லப்பட்டாலும் கூட, நம் வேதம் இதுபோன்ற வழிகளை அங்கீகரிக்குமா? யோகாவுக்கும் கிறிஸ்தவனுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் கிறிஸ்துவைத் உங்களது, சொந்த இரட்சகராக - ஆத்தும மீட்பராக ஏற்றுக் கொண்டிருப்பீர்களானால் தொடர்ந்து, வாசியுங்கள்.
புது யுக இயக்கம் என்கிற new age movement-ஐக்குறித்து சுவாரசியமான தகவல்கள் நிறைய நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இல்லையென்றால் தேடிவாசியுங்கள். இந்தப் புது யுக இயக்கம் என்பது வாழ்வை எப்படி வாழ்வது என்று தாங்களே முடிவு செய்ய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
எல்லா மதங்களும் ஒன்று என்றும், மனிதன் தியான முறைகளாலும் யோகா போன்ற கலைகளாலும் இறைவனாகலாம் என்றும் போதிக்கின்ற, மக்களை மீண்டும் பாபிலோனிய வழிக்குத் திருப்பும் வழிதான் இந்தப் புது யுக இயக்கம் என்பதாக இவர்கள் அறியப்படுகிறார்கள்.
பாபிலோனைக் குறித்தும் அதன் இரகசியங்களைக் குறித்தும் மேலும் அறிவ விரும்பினால் அண்ணன் சுரேஷ் இராமச்சந்திரனின் பாபிலோனின் இரகசியங்கள் என்கிற காணொலியைப் பாருங்கள்
(https://www.youtube.com/watch?v=Vz4INbRxl5Y).
மேற்கத்திய உடையணிந்த இந்துமதக் கோட்பாடுகள் என்றும் இந்தப் புதுயுக மதத்தை அழைக்கிறார்கள். மனிதன் தன் சரீர முயற்சியால், அதாவது யோகாசனம் போன்ற சரீர முற்சிகளால், ஆத்துமாவை உன்னத நிலைக்கு, தேவர்களைப் போன்ற, அல்லது கடவுளது ஸ்தானத்திற்கு உயற்திச் செல்லலாம் என்பது இவர்களின் போதனை. ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக்கிடக்கும் இறைவனை எழுப்புவதே இந்த புது யுக மதத்தின் போதனை என்று தியோடர் ரொஸாக் என்னும் எழுத்தாளர் கூறுகிறார். இந்தப் புதுயுக மதத்திற்கும் இந்தக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு? தொடர்ந்து வாசியுங்கள்.
மதங்களின் இணைப்பல்ல.. அதிகாரங்களின் இணைப்பு:
இந்துமதமும், சமண, பௌத்த மதங்களும், இஸ்லாம் (சூஃபி) இன்னும் பல மதங்களும் ஏற்றுக் கொண்டுள்ள சில கோட்பாடுகளை கலந்துகட்டி அடிக்க வருவதுதான் புது யுக மதம். இந்தப் புது யுக மதம் ஒன்று உருவாகியே தீரவேண்டும். இது காலத்தின் கட்டாயம். 'மத நல்லிணக்கம்’ என்ற கவர்ச்சியான பெயரால் ஒரு குடையின் கீழ் ஓராட்சியாக இணைப்பது இதிலுள்ள முக்கியத் திட்டம். மதங்களின் தொடக்கங்களை அறிந்து கொண்டால், அவை இன்று எப்படி ஒரிடத்தில் இணைய முயற்சிக்கின்றன என்பதையும், எவ்வாறெல்லாம் ஒரு அதிகாரத்தின் கீழ் அவை கொண்டு வரப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம். பின்பு அதற்கு ஒரு தலைவன் வரவேண்டும்; அவன் உலக அமைதியின் தூதுவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒருவன்!. அவன் யாரென்று தெரிய வேண்டுமானால் வேதத்தைப் படியுங்கள். smile emoticon
ஆனால் அவனுக்கான அரசு ஒன்று உருவாக, இந்த இணைப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. பல நாடுகளில் அரசாங்கங்ளே இந்த வேலையைச் செய்கின்றன.(உதாரணம்: மலேசியாவின் '1மலேசியா' திட்டம்). இதில் வேண்டா வெறுப்பாக சில மதங்களும், விரும்பிச் சில மதங்களும், இதன் பிண்ணனி புரியாமல் இணையும் மதங்களும் வரிசையாக நிற்கத் தொடங்குகின்றன. அதற்குத் தூணைபோவது புது யுகச் சாமியார்கள் எனப்படும் அதீத பணக்கார்களாயிருக்கும் கார்ப்பொரேட் சாமியார்கள். போப்பாண்டவர் முதல், பல்வேறு இயக்கங்கள் வரை ஏற்கனவே இதற்கு ஆதரவு தொடங்கிவிட்டன. அவர்களெல்லால்லம் இதன் தலைவனான “அவனுக்காக" அறிந்தோ அறியாமலோ உழைக்கத்துவங்கி இருக்கிறார்கள். அந்த அமைதியின் தூதுவன் பாபிலோனியப் பாரம்பரியங்களை ஒருங்கிணைத்தபின் படைத்த கடவுளை எதிர்க்கத் தயாராவான்; அதன்பின் இந்த 'உலகின் இளவரசனது' கடைசிகாலம் வரும்.
நல்லதைத் தானே முன்வைக்கிறார்கள்?
வெளிப்பார்வைக்கு எல்லாமே நலமானதாய்த் தோன்றினாலும், அடிப்படை நோக்கம் முற்றிலும் வேறு. 'உடல் நலம்’ என்பது தண்ணீருக்கு வெளியில் தெரியும் பனிக்கட்டி மட்டுமே. எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அதற்குச் சில சாயங்கள் பூசியாக வேண்டும். உலகமே பிரச்சனைக்குள்ளாகி இருக்கிறதே, இப்போது நமக்குத் தேவை மன அமைதியும், சமூக நல்லிணக்கமும்தானே என்று சொல்லலாம். ஆனால், என்று மனிதன் பாவத்தைத் தன் வழியாக எடுத்துக் கொண்டு உலகத்தைச் சீரழிக்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து இந்த உலகம் இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் கையில் அவனது அரசாங்கமாகத்தான் நடந்து வருகிறது என்று வேதம் சொல்கிறது (2 கொரிந்தியர் 4:4). இங்கு சமூக அமைதிக்கு ஒரு நாளும் நல்லவழி இது என்ற ஒரு வழி எதுவுமேயில்லை... "என் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை” (யோவான் 14:27) என்று சொன்ன கிறிஸ்துவைத் தவிர!
யோகா தருவது உடல் நலம் மட்டுமா?
மதங்கள் இணைப்பு என்ற பெயரில் இதைச் செய்யாமல் - வேறு சில தந்திரமான வார்த்தைகளாலும் செயல்பாடுகளாலும் அலங்கரித்து இதை நிகழ்த்தும் முயற்சி நடக்கிறது. உதாரணமாக, இயேசு எல்லா மதங்களிலும் இருக்கிறார், யோகா மதச் சார்பற்றது, பாம்பு என்பது மனிதனுக்கு நுண்ணறிவு அவசியம் என்று கற்றுக் கொடுக்கும் ஒரு ‘நல்ல’ விலங்கு என்றெல்லாம் புழுகுவது. இன்று அதுதான் சர்வதேச யோகாதினமாக உருவெடுத்துள்ளது; இதை கிறிஸ்தவர்களும் கூட உணராமல் வீட்டில் செய்யத் துவங்கியுள்ளனர். யோகா என்பது ஒரு உடற்பயிற்சி (மட்டும்) அல்ல, மாறாக ஒரூ ஆவிக்குறிய பயிற்சி (spiritual excercise) என்பதை உணர்தால் மட்டுமே அதன் வழி வேதத்திற்குப் புறம்பானது என்பதை அறிய முடியும்.
மஹாபாரதத்தில், யோகாவின் லட்சியம் பிரம்ம லோகத்தில் பிரம்மனாக நுழைவது, அல்லது எல்லாவற்றிலும் உள்ள பிரம்மம் அல்லது ஆத்மாவை உணர்தல், உடலின் வலிகளில் இருந்து ஆத்துமாவைப் பிரிப்பது என்று பலவாறாக விளக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சில சக்திகளை மற்றும் பதினெட்டு யோக சித்திகளைக் கொண்டு இதை அடையமுடியும் என்பதே யோகம் எனும் தத்துவத்தின் கருத்து.
சுருங்கச் சொன்னால் தன் “சுய முயற்சியால்” மனிதன் கடவுளை அடைவது மட்டுமல்ல, கடவுளாகவே மாறிவிடுதல் என்பதுதான் இதன் பின்னணி! இது கிறிஸ்துவின் வருகையின் நோக்கத்தையும், அவரது மாட்சிமையையும் புறக்கணிப்பதேயல்லாமல் வேறொன்றுமில்லை.
ஆனால், இதை முற்றிலும் மறைத்து, யோகாவின் மூலம் உடல் நலமும்,மனநலமும் மேம்பட்டு, நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம் என்று இதன் ஒருமுகத்தை மட்டும் வெளிக்காட்டும் வஞ்சனையின் ஒருபகுதிதான் ‘இண்டர்னேஷனல் யோகா டே”! இதற்குப் பிரபலங்கள் முகம்காட்டி விளம்பரம் செய்கிறார்கள். (கேள்வி: யோகா நல்லது என்றால் அதற்கெதற்கு விளம்பரம்?)
ஒரு பேச்சுக்கு யோகாவையும் தியானங்களையும் செய்து அதை நம்மையும் ஏற்கச்சொல்லி வலியுறுத்துபவர்கள் எல்லோரும் அதன் பலன் அடைந்து மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். இவர்கள், தங்கள் உன்னத நிலையில் இருந்து இதுவரை உலகுக்குச் செய்திருப்பது என்ன? இவர்கள் எல்லாம் யார்? சாதாரணர்களா? ஏழைகளா? இதில் சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர் யாருமே தென்படக் காணோமே? அவர்களெல்லாம் சொல்லிவைத்தாற் போன்று சாமியார்களும், மடாதிபதிகளும், பெறும் தனவந்தர்களும், போப்புகளும், கார்ப்போரேட் நிறுவனங்களும், கார்ப்பொரேட் நிறுவனங்களாகிவிட்ட அரசாங்கங்களும், அவர்களின் அடியாட்களுமாகவே தென்படுகிறார்களே! சுயநலமெல்லாவற்றையும் மூட்டைகட்டிவிட்டுத்தான் இவர்கள் இந்த ஆலோசனை தருகிறார்களா?
யோகாவின் பிரதான போதனை “மனதைச் சூன்யமாக்கு“ அவ்வாறு ஆக்கினால் என்ன ஆகும் ? தந்திரக்காரச் சாத்தான் உட்புகுந்து, நமக்குள் உட்கார்ந்து, ஆக்கிரமித்து ஆட்சிசெய்யத் துவங்கி விடுவான். அதன்பின் சின்னாபின்னமாகி விடும் நமது ஆத்மா. சரீர ஆரோக்யத்திற்கு கேரன்ட்டியும் வாரன்ட்டியும் தருவதாக கள்ளம் பரைந்து பலரையும் கவர நினைக்கும் இந்த யோகா ஒரு பொய்யான கோட்பாடு.*
நம் வேதம் என்ன சொல்கிறது?
மரித்தபின் மனிதனது ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கும், சரீரம் மண்ணிற்கும், ஆத்துமா தற்காலிக - ஆனால், ஆழ்ந்த ஒரு ஒய்விற்கும் செல்லும் என்பதே கிறிஸ்தவ நம்பிக்கை. இந்தச் சரீரத்தால் அல்லது சுயத்தால் நம்மைப் படைத்த கடவுளை அடைய முடியாது என்பதுதான் கிறிஸ்தவம் போதிக்கும் சத்தியம். நம் ஆத்துமாவை தேவனுக்கு நேராக வழிநடத்த சரீரத்தால் செய்யும் தன்முயற்சியால் எந்தப்பயனும் இல்லை. கறைபடிந்த ஆத்துமாவைக் கழுவ இயேசு குற்றமில்லா தன் இரத்தத்தை சிந்தினார் என்பதுதான் சத்தியவேதம் நமக்குப் போதிப்பது. இது மட்டுமே கிறிஸ்தவனின் அடையாளம். இதை மறக்கச் செய்யவும், சத்தியத்திற்குச் செவிசாய்த்திவிடாமல் மனதைத் திருப்பிவிடும் முக்கியமான ஒரு அந்தகார சக்தியே யோகக்கலை. இது பிசாசின் ஆயுதம். கடவுளின் தன்மையை அறியவிடாமல், அவரைச் சிறுமைப்படுத்தி, அவரால் உண்டாக்கப்பட்ட மனிதன் தன்னைப் பெருமையுடன் கடவுளாக உயர்த்தச் செய்யும் வீண் முயற்சிகளில் ஒன்றே யோகா!
சாத்தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமானவன் (யோவான் 8:44 ). அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிருக்கிறபடியால் தேவசாயலில் படைக்கப்பட்ட எவரையும் கொலைசெய்கிறான். ஆத்மாக்களை எவ்வழியிலாவது அழிப்பதே அவனது பிரதான நோக்கம். மனுஷனுக்குத் 'தீமை’ என்பது என்ன என்று தெரியுமாதலால், தீயவற்றை நன்மை என்று பொய்யாய் உருவகப்படுத்தி வழிதவறச் செய்து ‘பாவத்தால்’ அழிப்பதே அவன் சூழ்ச்சி. இதையறியாமல் கூட்டம் கூட்டமாக ஏமாறுவது, படைத்து தன்னை வெளிப்படுத்தச் சித்தம் கொண்ட இறைவனைப் புறக்கணிக்கச் செய்யும் செயலல்லவா?
சரீரமுயற்சி அற்பப் பிரயோஜனமுள்ளது (1 தீமோத்தேயு 4: என்று வேதம் தெளிவாகப் போதிக்கிறது. இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது என்று பவுல் மீண்டும் அதே வசனத்தில் உறுதிப்படுத்தவும் செய்துள்ளார். ஆனால் இதற்கு மாறாகச் செய்யும் 'சரீர முயற்சியால் ஆனதே யோகா' என்பதை நாம் அறிவது முக்கியம்!. தலைகீழ் ஆசனம் செய்தாலும், என்ன சித்து வேலை செய்தாலும், சரீரத்திலிருந்து ஆத்துமாவைப் பிரித்து கடவுளாக மாற/மாற்ற நினைப்பது அறியாமை என்பதைத் தவிர வேறன்ன? இங்குதான் மனிதனது பலவீனம் வெளிப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ளவதையோ பெருமை தடுக்கிறது. ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் என்று ‘சுயத்திற்கு மரிப்பதை’ அல்லவா கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து முதன்மைப்படுத்தினார்.
நின்றுகொண்டிருக்கும் விமானத்தில் வேண்டுமானால் ஏணிப்படிகளில் ஏறி நுழையலாம். ஆனால், அழிந்துபோகும் இச்சரீரத்தைக் கொண்டு அதை அடக்கி, வளைத்து, ஏதேதோ சக்கரங்களை சுழற்றி பரம்பொருளை அடைவதோ, இல்லை கடவுளாகவே மாற முயற்சிப்பதோ, பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் படியைச் சாய்த்து ஏற முயற்சிப்பது போன்ற செயல்.
மதச்சார்பற்றவையா யோகாவும் தியானமும்?
இந்த இடத்தில்,யோகாவையும் தியானத்தையும் ஒரு உடற்பயிற்சியாகப் பார்க்கலாமே, ஏன் மதச் சார்புடையதாகப் பார்க்கிறீர்கள் என்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நீங்கள் விளையாடுவது நெருப்புடன்! யோகாவின் உண்மையான நோக்கத்தையும், அது “என்னவெல்லாம்” செய்யும் என்பதை அறிந்தீர்களானால் இப்படி எண்ணத் துணியமாட்டோம்.
யோகத்தில் குண்டலினியை சுருண்டு படுத்திருக்கும் பாம்பாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இது இந்து மதத்தில் மட்டுமல்லாமல் எல்லா மதங்களிலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவம் தவிர!!! பாம்பைப் பற்றிக் கிறிஸ்தவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, அதன் சுயரூபம் என்ன, அது என்ன செய்தது என்பதும் நமக்குத் தெரியும்.
பொய்யின் ஆட்சி:
பொய்யனும் பொய்க்குப் பிதாவிமானவன் மனிதனிடம் சொன்ன முதல் பொய்யை அறிவோம். "அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.” ஆதியாகமம் 3:4,5 . இந்தப் பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் தந்திரமாக மீண்டும் சொல்லும் பொய் “யோகாவின் மூலம் நீங்கள் தேவர்களைப் போல மாறுவீர்கள்” என்பதே.
தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. (1 தீமோத்தேயு 4:
தேவபக்தி, அதாவது தேவனை அறிந்து அவரது வார்த்தைக்குக் கீழ்படிந்த வாழ்வும், உறவும் மட்டுமே நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச்செல்லும். பல கிறிஸ்தவர்களும் இதையறியாமல் “கிறிஸ்டியன் யோகா” என்று ஒன்றை முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது (2கொரிந்தியர் 6:14 )
யோகாவின் அற்புதங்கள்:
யோகாவின் மூலம் பலர் பல சாகசங்களை நிகழ்த்தி இறைவனுக்கு நிகராக உணர்கிறார்களே, அது எப்படி எனலாம். அந்தகார லோகாதிபதிகளின் ஆவி இவ்வுலகில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அறியாதிருந்தால் நீங்கள் கிறிஸ்தவனே அல்ல. அவைகள் கிறிஸ்தவத்திற்குள்ளும் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறன்றன என்பதையும், போலி அற்புதங்கள் ஆதி காலத்திலிருந்தே (உதாரணம் பார்வோனுக்கு முன்பு மந்திரவாதிகள் எகிப்தில் நடத்திக் காட்டிய அற்புதங்கள் ) நிகழ்த்தப்படுபவைதான் என்றும் நாம் அறிவோம்.
ஆனால், அப்படிச் செயல்படும் ஆவி எந்த ஆவி என்று பகுத்துணர வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட தற்காலிக அற்புதங்களை நடத்துவது அந்த ஆவிகளுக்குப் பெரிய ஒரு விஷயமே அல்ல. செப்பிடு வித்தைகளுக்கும், மாந்திரீக ஜாலங்களுக்கும் இவ்வுலகில் பஞ்சமில்லையாதலால், அற்புதங்களைக் கண்டு அவை பின்பு செல்வோமானால் ஏமாற்றப்படுவது உறுதி.
ஆத்ம விடுதலை என்பது தேவனிடம் இருந்து மட்டுமே வரமுடியும். இதுதான் நம் வேதம் போதிப்பது. வேறு ஒரு மூலம்(source) அதற்கு இருக்கிறது என்று யாராவது அறிவித்தால், அது வஞ்சகம் என்று அறிந்து, சுதாரித்து, உணர்ந்து புறக்கணிப்பது அவசியம். அது ஒருவேளை உடலின் வலிமையை அதிகரிப்பதாக, நோய்களைச் சரிசெய்வதாக இருந்தாலும், அல்லது இனி நோயே வராது என்று சொன்னாலும் கூட!
புள்ளிகளை இணைத்துப் பார்ப்போம்:
யோகா, சுயமான முயற்சி, கடவுள் நிலையை அடைதல், புது யுக மதம், ஒருலக அரசாங்கம், பாபிலோனிய வழிபாடு, அந்திக் கிறிஸ்து - இப்படிப்பட்ட புள்ளிகளை இணைத்துப் பாருங்கள். அவை பிசாசின் பொய் என்னும் ஒரு கோடால் இணைக்கப்பட்டிருப்பதை வேதத்தின் வெளிச்சத்தில் காணலாம். சத்தியத்தை அறிந்தவர் இதை உணராலாம்.
அழிந்துபோகும் இச்சரீரத்திற்கல்ல, விலையேறப்பெற்ற அழிவில்லா ஆத்துமாவைக் குறித்த ஞானமும், அதை மீட்கவந்த கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தமுமே ஒரு கிறஸ்தவனுக்கு எல்லாம். நமக்கு குறுக்கு வழிகளோ, இலகுவான வேறொரு வழியோ இல்லவே இல்லை. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்னவர் மட்டுமே வழி. நாம் இதைச் சொன்னால் உலகத்துக்குப் பைத்தியங்களாய்த் தெரியலாம். ஆனாலும், பரவாயில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் ஞானியாக இருந்துவிட்டுப் போவோம்.
பொய்ச்சாட்சிக்காரன் பொய்களை ஊதுகிறான். அது நம்மிலுள்ள வேத வெளிச்சத்தை அணைத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள நம்மில் வாழும் ஆவியானவரைச் சார்ந்து கொள்வோம். நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. (1 தெசலோனிக்கேயர் 5:5 )
- பென்னி
* - நன்றி. திரு John Selvaraj
Permissions in this forum:
You cannot reply to topics in this forum