வீட்டிலேயே தயாரிக்கலாம் ஃபேஷன் பேக்!
Mon May 04, 2015 2:01 pm
Aval Vikatan
வீட்டிலேயே தயாரிக்கலாம் ஃபேஷன் பேக்!
''சின்னதா ஒரு ஷாப்பிங் போனா கூட, பிளாஸ்டிக் கவர் எதிர்பார்க்கிற வங்கதான் அதிகம். ஆனா, இப்பல்லாம் பிளாஸ்டிக் கவரை கொடுத்துட்டு, அதுக்கும் ரெண்டு ரூபாய், அஞ்சு ரூபாய், ஏழு ரூபாய்னு பில்லு போட்டுடறாங்க. இப்படி பிளாஸ்டிக் பைக்கு காசு வாங்கச் சொல்லி கவர்ன்மென்ட் உத்தரவு போட்டதோட நோக்கமே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிற பிளாஸ்டிக் பேக்குகளை ஒழிக்கிறதுக்குத்தான். எல்லாரும் வீட்டிலிருந்தே பேக் கொண்டு வந்தா, பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்ங்கிற அரசாங்கத்தோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யறதுக்கு நாமெல்லாம் கைகொடுக்கலாம். இதுக்கு, வீட்டுலயே ஒரு துணிப் பையை தயாரிக்கலாம் வாங்க'' என்று அழைக்கும் சென்னையைச் சேர்ந்த நிர்மலா முத்து, துணிப்பை தயாரிப்பதை இங்கே கற்றுத் தருகிறார். இவர், ஃபேஷியல் செய்தல், சாக்லேட் தயாரித்தல், கேண்டில் தயாரிப்பு, ஜுவல்லரி மேக்கிங் என பலவித கைத்தொழில்கள் குறித்து பலருக்கும் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
தேவையான பொருட்கள்: துணி - 1 மீட்டர் (பேக்கின் அளவுக்கு ஏற்ப துணியின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம். எல்லாவித துணிகளி லும் பேக் செய்யலாம். என்றாலும், 2 பை 2 துணி யில் செய்தால், நீடித்து உழைக்கும்), கத்தரிக்கோல், பூ செய்வதற்கு செவ்வக வடிவிலான துணி தேவையான அளவு, ஊசி, நூல்.
செய்முறை:
படம் 1, 1a: துணியை முக்கோணமாக மடித்து, மீதமிருக்கும் பாகத்தை வெட்டித் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கோணமாக மடித்த பாகத்தைப் பிரித்தால், சதுரமாக இருக்கும்.
படம் 2, 2a: சதுர வடிவில் இருக்கும் துணியின் ஒருமுனையை உள்பக்கமாக கொஞ்சம் சுருட்டி முடிச்சு போட வேண்டும்.
படம் 3: இதேபோல நான்கு முனைகளையும் சுருட்டி முடிச்சு போட வேண்டும்.
வெட்டி தனியாக வைத்திருக்கும் துணியில் கைப்பிடி தயாரிக்க வேண்டும். ஒரு ஸ்கேல் அளவு அகலம் கொண்டதாக 2 துண்டுகளாக வெட்ட வேண்டும். உங்களின் தேவைக்கு ஏற்ப கைப்பிடியின் அளவுக்கு வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
படம் 4, 4a, 4b : வெட்டிய கைப்பிடி துணிகளை, பேக்கில் முடிச்சுப் போட்டு, கைப்பிடி செய்ய வேண்டும். கைப்பிடியை பேக்கில் இணைத்த இடத்தில் துணி கொஞ்சம் நீ்ண்டு இருந்தால், கைப்பிடியினுள் வைத்து தைத்துவிடலாம்.
படம் 5, 5a: பேக் மீது அழகான ஒரு பூ வைக்க, செவ்வக வடிவ துணியை எடுத்து மடிக்க வேண்டும். மடித்த பிறகு ஒரு பாகத்தில் கத்தரிக்கோலால் பாதி அளவுக்கு சின்னச்சின்ன இடைவெளியில் நறுக்கி, சுருட்டி, வெட்டாத மேல் பாகத்தில் சின்ன நூல் கொண்டு கட்டிவிட்டு, மேல் பக்கத்தை சமமாக்க, நுனியில் கொஞ்சம் நறுக்கவேண்டும்.
படம் 6: இப்போது பூங்கொத்து போன்ற வடிவத்தில் இருக்கும். இதை பையின் மீது உங்களுக்கு பிடித்த இடத் தில் வைத்து தைத்தால், அழகிய ஹேண்ட் பேக் ரெடி!
இதில் லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்றவற்றை வைத்து எடுத்துச் செல்லாம். பார்க்க சின்ன பை போல் இருந்தாலும், பிளாஸ்டிக் கவர் போல் இல்லாமல் நிறைய பொருட்களைத் தாங்கும். 20 நிமிடம் ஒதுக்கி னால், இந்த சிம்பிள் அண்ட் ஃபேஷன் பேக்கை நாமே செய்துவிடலாம்.
- கே.அபிநயா. #ஃபேஷன்பேக் #டிப்ஸ் #அவள்விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum