செம்மரம் - அறிவோம்
Thu Apr 09, 2015 8:00 pm
"செம்மரம்" என்றால் என்ன?
'டெரோகார்பஸ் சந்தாலினஸ்' எனும் அறிவியல் பெயர் கொண்ட செம்மரம் மணமில்லா சந்தன மர வகையைச் சார்ந்தது ஆகும்.
இது பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில்தான் வளரும்.
சுமார் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் 8 அல்லது 10 மீட்டர் வரை வளர்ந்து விடும்.
அதன்பிறகு வளர்ச்சி குறையும். 2,200 ஆண்டுகள் கூட செம்மரம் அழியாமல் வளரும்.
அதனுடைய தண்டுப் பகுதி பயன்படுத்தும் அளவுக்கு வளர்வதற்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை பிடிக்கும்.
இந்த வகை மரம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் வளர்வதில்லை என்று ஆந்திர காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த மரம் குறிப்பாக எங்கே வளர்கிறது?
முட்புதர் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ள மத்திய தக்கான பீடபூமிப் பகுதியில் 500 அடி முதல் 3 ஆயிரம் அடிக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த மரங்கள் வளர்கின்றன.
புவியியல் ரீதியாக, கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களின் பலகொண்டா மற்றும் சேஷாசலம் மலைகள், அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்கள், கர்னூல் மற்றும் பிரகாசத்தில் உள்ள நல்லமல்லா காடுகள் மற்றும் நெல்லூரில் சில பகுதிகள் ஆகியவற்றிலும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சில இடங்களிலும் என மொத்தமாக 5,200 சதுர கிமீ பரப்பளவில்தான் இந்த மரங்கள் வளர்கின்றன.
இது ஏன் கடத்தப்படுகிறது?
இந்த மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது.
இந்த மரங்களை வெட்டுவது சட்டப்படி குற்றம் ஆகும்.
மேலும் ஏற்றுமதி செய்வதற்கும் தடை உள்ளது. தனியார் இடங்களில் வளரும் செம்மரங்களை வெட்டவும் தடை உள்ளது.
சீனா மற்றும் ஜப்பானில் செம்மரத்தால் செய்யப்பட்ட அறைகலன்கள், செஸ் விளையாட்டு பொருட்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பது கவுரவமாகக் கருதப்படுகிறது.
கள்ளச் சந்தையில், தரத்தைப் பொறுத்து ஒரு டன் செம்மரத்தின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை விலை போகிறது.
வணிகம் எப்படி தடுக்கப்படுகிறது
அழிவுநிலையில் உள்ள உயிரின வணிகத்தைத் தடுக்கும் சர்வதேச உடன்படிக்கை (சி.ஐ.டி.இ.எஸ்.) மூலம் இந்த வகை மரம் வணிகம் செய்யப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
2014ம் ஆண்டு வரை, இந்த வகை மரங்கள் கடத்தப்படும்போது கைப்பற்றினால், அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஆந்திராவில் சுமார் 10 ஆயிரம் டன்களுக்கு மேலான மரங்கள் சேகரமாகிவிட்டதால், அந்தத் தடை நீக்கப்பட்டது.
ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட இந்த மரங்களால், கடந்த ஆண்டு ஆந்திர அரசுக்கு ரூ.991 கோடி வருமானம் கிடைத்தது.
காவலர்கள் - கடத்தல்காரர்கள் இடையேயான மோதல்
சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் கர்னூல் ஆகிய பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா வழியாகக் கடத்தல்காரர்கள் வந்து விடுகின்றனர்.
சித்தூர் பகுதியில்தான் காவலர்கள் - கடத்தல்காரர்கள் மத்தியில் அதிகளவு மோதல் நடைபெறுகிறது.
எந்த அளவுக்கு மரக் கடத்தல்
ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 200 டன் மரங்கள் கடத்தப்படுகின்றன.
ஆனால் அது கடலில் மேலோட்டமாகத் தெரியும் ஒரு பனிப்பாறை நுனிதான்.
உண்மையில் சுமார் 500 டன் மரங்கள் கடத்தப்படுகின்றன.
சென்னை மற்றும் மும்பையில் இருந்து கடல் மார்க்கமாகவும், நேபாள எல்லையில் சாலை மார்க்கமாகவும் சென்று சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது.!!
நன்றி: கிளமெண்ட் இளங்கோ - முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum