திருமணச்சட்டம் அறிவோம்
Wed Jan 20, 2016 10:16 pm
இந்து திருமணச் சட்டம் 1955
இந்துக்களின் திருமணச் சட்டம் 1955 என்பது 18.5.1955 முதல் அமலுக்கு வந்தது. இந்த தேதிக்கு முன்னர், இந்துக்கள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் இந்த தேதிக்கு பின், அதாவது இந்த சட்டம் வந்தபின் (18.5.1955க்கு பின்னர்), ஒரு இந்து ஆண், ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்ய முடியாது. அப்படி இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமணம் செல்லாது. இரண்டாவது திருமணம் செய்த மனைவி “சட்டபூர்வ மனைவியே இல்லை” என்கிறது சட்டம். இரண்டாவது மனைவி சட்டபூர்வ இல்லாத மனைவி என்றபோதிலும், அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த இந்துமத திருமணச் சட்டம் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே, இந்தியாவில் உள்ள யார் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளும் வகையில் ஸ்பெஷல் திருமணச் சட்டம் 1954 கொண்டுவரப் பட்டது. இதை சிவில் திருமணம் (Civil Marriage) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.
இந்து திருமணச் சட்டம் 1955ன் பிரிவு 5ன்படி திருமணம் செய்து கொள்வதற்கு தகுதி என்று சில விபரங்களைச் சொல்லி உள்ளனர். அவைகள்;
1) திருமணம் செய்து கொள்ளும் ஆணோ பெண்ணோ ஏற்கனவே ஒரு துணையுடன் வாழ்ந்து கொண்டிருக்க கூடாது.
2) இருவரும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும், அதாவது பைத்தியமாகவோ, மன நிலை பிறழ்ந்தவராகவோ இருக்க கூடாது.
3) ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் முடிந்து இருக்க வேண்டும்.
4) இருவரும், தடுக்கப்பட்ட உறவுகளுக்குள் உள்ள உறவாக இருக்க கூடாது. (prohibited relationship)
5) இருவரும் சபிண்ட உறவிலும் இருக்க கூடாது. (Spaindas).
இதில் 1, 4, 5 இவைகளை மீறித் திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் சட்டப்படி செல்லாது (Void) என்று இந்த சட்டத்தின் பிரிவு 11 சொல்கிறது. எனவே இந்த 1, 4, 5 தகுதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
1955 க்குப் பின் நடந்த திருமணத்தில், இருவரும் உடல்உறவு கொள்ளாமல் இருந்தால், அதில் ஆணோ, பெண்ணோ உறவு கொள்ளும் தகுதி இல்லாமல் இருந்தால் (குறைபாட்டுடன் இருந்தால்-impotence) மற்றவர் இதை ஒரு காரணமாகச் சொல்லி அவர்களுக்குள் நடந்த திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று பிரிவு 12 சொல்கிறது. இதை Voidable marriage என்கிறார்கள். விருப்பம் இருந்தால் இந்த குறையை ஏற்றுக் கொண்டு வாழலாம். அந்த திருமணம் செல்லும். அவ்வாறு வாழ விரும்பம் இல்லை என்றால் வேண்டாம் என்றும் சொல்லி திருமணத்தை ரத்து செய்து விடலாம்.
பிரிவு 5ல் உள்ள 2-வது நிபந்தனையின்படி இருவரும் நல்ல மனநிலை உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இதில், ஆணோ, பெண்ணோ மனநிலை சரியில்லாமல் இருந்தாலும், மற்றவர் அவருடன் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அதை காரணமாச் சொல்லி திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்று பிரிவு 12 சொல்கிறது. இதுவும் Voidable marriage தான். விரும்பினால் திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம்.
இந்து திருமணம்
இந்து பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் இந்துவே. “இந்து என்பவன் பிறப்பால் மட்டுமே இந்து ஆவான், இந்துவாக யாரையும் உருவாக்க முடியாது” – என்று பழங்காலத்தில் இருந்துவந்த கடுமையான கோட்பாடு பின்னர் தகர்த்தெரியப் பட்டது.
ஆப்ரகாம் v. ஆப்ரகாம் என்ற வழக்கில் “இந்து மதத்துக்கு மாறி வந்தவரும் இந்துவே” என்று பிரைவி கவுன்சில் தீர்க்கமான தீர்ப்பை கூறியது. இந்த வழக்கில் ஆப்ரகாம் என்ற கிறிஸ்தவர் இந்து பெண்ணைத் திருமணம் செய்து இந்துவாகவே வாழ்ந்தும், இந்து பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து இறந்தார். அவர் இந்துவே என்று அழுத்தமான தீர்ப்பை அப்போதைய கோர்ட் வழங்கியது.
ஒரு இந்து ஆண், ஒரு கிறிஸ்தவப் பெண்ணை, சிறப்பு திருமணச் சட்டம் 1954ன்படி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். தகப்பனும் மகனும் ஒரு இந்து கூட்டுகுடும்பம் என்ற முறையில் வாழ்கிறார்கள். இதில் அந்த மகன் இந்துவே என்று இந்திய சுப்ரீம் கோர்ட் (ஸ்ரீதரன் என்ற வழக்கில்) தீர்ப்புச் சொல்லி உள்ளது.
ஒரு கிறிஸ்தவ ஆண், இந்து பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அந்த மகனை அந்த தாய், தன் மதமான இந்து மதப்படியே வளர்த்து வருகிறார். இங்கும், அந்த மகன், ஒரு இந்துவாகவே வளர்ந்து வருவதால், அவன் ஒரு இந்துவே என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஒருவர் இந்துவாக இருந்து, பின்னர் வேறு மதத்துக்கு மாறி அந்த மதத்தில் வாழ்ந்து, பின்னர் மறுபடியும் இந்து மதத்த்துக்கு மாறி வந்தாலும், அவர் இந்துவாக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்றே சட்டம் அனுமதிக்கிறதாம். எப்போது இவ்வாறு மதம் மாறினாலும், அவர் சார்ந்த சமுதாயத்தில் அவரை ஏற்றுக் கொண்டால் போதும் என்றே சட்டம் கருதுகிறதாம்.
இந்து பெண் ஒருவர், முகமதிய ஆணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால், அந்த குழந்தைகளை அவளின் பெற்றோர் இந்து குழந்தைகளாக வளர்க்கிறார்கள். அப்படியெனில் அந்தக் குழந்தைகள் இந்துதான் என்று சட்டம் கருதுகிறாம். ஒரு குழந்தை எந்த சூழலில் வளர்க்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் மதம் எனச் சட்டம் கருதுகிறது.
இந்து தகப்பனுக்கும், கிறிஸ்தவத் தாய்க்கு பிறந்த குழந்தையானது, கிறஸ்தவனாகவே வளர்க்கப்பட்டால், அந்த குழந்தை ஒரு கிறிஸ்தவனே எனச் சட்டம் கருதுகிறதாம்.
இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் தாய்க்கும், திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தை இந்து குழந்தை அல்ல என்கிறது. இங்கு தகப்பனின் மதமே குழந்தையின் மதமும் எனச் சட்டம் கருதுகிறது. ஒரு இந்து ஆண், முகமதிய மதத்துக்குக்கோ, கிறிஸ்தவ மதத்துக்கோ மாறிவிட்டால், அவரின் குழந்தை இந்து குழந்தை அல்ல.
இன்னொரு முக்கிய சிறப்பு என்னவென்றால்:
ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியே திருமணச் சட்டங்கள் உள்ளன. இது இல்லாமல், சிறப்பு திருமணச் சட்டம் என்று உள்ளது. அதன்படி, எந்த மதத்தைச் சேர்ந்த ஆணும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள இந்த சட்டம் வழி செய்கிறது.
இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த சிறப்புத் திருமணச் சட்டப்படி, வேறு வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால், அவர்களின் குழந்தைகளுக்கு “இந்திய வாரிசுச் சட்டம் 1925” படியே பெற்றோரின் சொத்தில் உரிமை கொண்டாட முடியும்.
அதாவது இரு இந்துக்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல், சிறப்பு திருமணச் சட்டப்படி திருமணம் செய்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி பெற்றோரின் சொத்துக்கள் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி சேராது, அதற்குப்பதிலாக, இந்தியன் வாரிசுரிமை சட்டப்படி சேரும்.
ஒருவர் எந்த மதத்துக்கு மாறுகிறாரோ அந்த மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எந்த மத பழக்க வழக்கப்படி வளர்க்கப் படுகிறதோ அந்த மதமாகக் சட்டம் கருதுகிறது. அப்படி எந்த மதத்தையையும் அந்தக் குழந்தை பின்பற்றவில்லை என்றால், அந்தக் குழந்தையின் தகப்பனின் மதமே அந்தக் குழந்தையின் மதமும்.
ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டால், அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாரோ, அந்த மத வாரிசு சட்டப்படி அவரின் வாரிசுகளுக்கு சொத்து சேரும். வாரிசுகளில் யாராவது ஒருவர் வேறு மதத்துக்கு மாறி விட்டிருந்தாலும், அவரின் தகப்பனின் சொத்தில் மகனின் பங்கு எப்போதும் போலவே கிடைக்கும்,
ஆனால், அவ்வாறு மதம் மாறிய மகனின் (இறந்துவிட்டால்) அவனின் பிள்ளைகளுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. அதாவது மதம் மாறியவர், அவரின் தகப்பன் சொத்தில் பங்கு பெறலாம். ஆனால், மதம் மாறியவரின் வாரிசுகள், தாத்தா சொத்தில் பங்கை பெற முடியாது, காரணம், அந்தப் பேரப்பிள்ளைகளை வேறு மதத்தைச் சேர்ந்தவரின் பிள்ளைகள் எனச் சட்டம் கருதுகிறது.
ஒரு இந்து ஆணும், ஒரு இந்து பெண்ணும் இந்து திருமணச் சட்டப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், பின்னர், கணவன் மட்டும் வேறு மதத்துக்கு மாறிவிடுகிறான். இப்போது மனைவி டைவர்ஸ் கேட்கிறார். எந்தச் சட்டப்படி டைவர்ஸ் கேட்பார்? என்ற கேள்வி எழுகிறது.
பதில்; இந்து திருமணச் சட்டப்படியே டைவர்ஸ் கேட்கலாம். ஏனென்றால், எந்த மதச் சட்டப்படி திருமணம் நடந்ததோ அந்த மதச் சட்டப்படியே டைவர்ஸ் கேட்கலாம் என சட்டம் சொல்கிறது.
ஆனால், இருவரும் இந்துக்களாக இருந்து, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் இருவரும் முகமதிய மதத்துக்கு மாறிவிட்டார்கள் என்று வைத்துக் கொண்டால், அவர்கள் இருவரும் டைவர்ஸ் கேட்க, முகமதிய சட்டப்படி தலக் முறைப்படி கேட்க வேண்டும்.
நன்றி: http://gblawfirm.blogspot.in/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum