சுவர் தோட்டம்
Sun Mar 22, 2015 9:59 pm
பசுமை சுவர், செங்குத்துத் தோட்டம் என பல்வேறு பெயர்களில் இன்றைய “கான்கீரிட் காடு”களிடையே பசுமையை உண்டாக்க வந்துள்ளது இந்த வகை தோட்டக்கலை. இன்றைய காலகட்டதில் நகரங்களில் இடத்தின் மதிப்பு அதிகமாக அதிகமாக வீட்டுத் தோட்டத்தின் பரப்பு குறைந்து, தாவரங்கள் அழிக்கப்பட்டு, தேவையின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அளவு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாவரங்களால் மட்டுமே மிக குறைந்த செலவில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்து காற்றை சுத்தம் செய்ய இயலும். எனவே இந்த வகை தோட்டம் பிரபலமடைந்து வருகிறது.
பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான தாங்கி.
இந்த செங்குத்துத் தோட்டம் ஏற்கனவே உள்ள சுவர்களிலோ அல்லது அதற்கென தனியாக சட்டங்கள் அமைத்தோ உருவாக்கலாம். உள்புறமோ அல்லது வெளிபகுதியிலோ அமைக்கலாம். பொதுவாக கண்ணாடி அமைப்புகள் கொண்ட அலுவலக, நட்சத்திர ஓட்டல்களின் முகப்பு அறைகளில் உள்புறமாக பசுமை சுவர்களை உருவாக்குகின்றனர். பகல் நேரங்களில் சூரிய வெப்பத்தை கட்டிடங்கள் கிரகித்து சூரிய கதிர் வீச்சை ஏற்படுத்தும். இதனால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் இது போன்ற சுவர் தோட்டம் அமைக்கும் போது சூரிய வெப்பத்தை தாவரங்கள் தடுத்துவிடுவதால். சூரிய கதிர் வீச்சு குறையும். எனவே கட்டிடங்களின் அருகில் வெப்ப அளவு குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. உயரமான பகுதிகளில் தண்ணீர் ஊற்றுவது சற்று கடினம் எனவே சொட்டுநீர் பாசனம் செய்தால் எளிமையாக பராமரிக்கலாம். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்களில் இதனை அமைக்கும் போது மேல் தளங்களில் குடியிருப்போரின் சமையலறை கழிவு நீரை சுத்திகரித்து எளிமையாக மறு உபயோகம் செய்ய ஒரு வாய்ப்பு. மேலை நாடுகளில் கட்டிடம் கட்டும் போதே சுவர் தோட்டத்திற்கான அமைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றனர்
நல்ல வெளிச்சமுள்ள அல்லது சற்று நிழலான சுவர் பகுதி போதுமானது. புற ஊதா கதிர்களை தாங்கி நீண்ட நாட்கள் வரும் பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான சுவற்றில் பொருத்தப்படும் பகுதி, தொட்டிகள், பைகள் கடைகளில் நிறைய வந்துள்ளன. அவைகளை வாங்கி நமது தேவைகேற்ப வடிவமைத்து அலங்கார செடிகள், அல்லது சமையலுக்கு தேவையான செடி வகைகளை வளர்க்கலாம். பொதுவாக அடுக்குமாடி அல்லது வணிக வளாகங்களின் முகப்பு பகுதிகளில் அலங்காரச் செடிகளையும், குடியிருப்பு பகுதிகளின் அருகில் சமையலுக்கு தேவையான செடி வகைகளையும் வளர்க்கலாம். காம்பௌன்ட் சுவற்றையும் இதற்கு பயன்படுத்தலாம். இவைகள் இன்றி பாட்டில்கள், பழைய டயர்கள் போன்றவற்றையும் நமது பொருளாதாரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்.
எளிமையாக சொட்டு நீர் அமைப்பும் உண்டு.
வண்ணமிக்க அழகு தாவரங்கள்
எடை குறைந்த, நீரை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ளும் தென்னைநார் கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை வளர்ப்பதற்கு உபயோகிக்கும் போது சிறப்பாக செடிகள் வளரும். ஆஸ்பரகஸ், பெரணி வகைகள், வண்ணமிகு கெலேடியம் வகை தாவரங்கள், சில வண்ண புற்கள், தொங்கு தொட்டிகளில் வளர்க்கப்படும் அனைத்து மலர் செடிகளையும், புதினா, கொத்தமல்லி, ஓரிகானம் போன்ற நறுமண தாவரங்களையும் சுவர் தோட்டத்தில் வளர்க்கலாம். இன்றைய நகரங்களின் தேவை இந்த “சுவர் தோட்டம்”
நன்றி : மரவளம் இணையதளம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum