ஒருவரும் ஒன்றும் செய்வதற்கில்லை..!
Mon Mar 02, 2015 8:00 pm
Arul Samuel Puliangudi with Bovas Yovan
நடந்தது மத மாற்றங்களா..மன மாற்றங்களா?
___________________________________
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்துத்துவா ஆதரவாளர்களின் கூக்குரல் பெரிதாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.. அவர்கள் மட்டும்தான் இந்தியர்கள் என்பது போலவும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்தது போலவும்.. அவர்களுக்கு மட்டும்தான் இந்த தேசமும் தேசபக்தியும் சொந்தம் என்பது போலவும்..!
இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரும் பணத்திற்காக மதம் மாறியவர்கள் என்றும், இப்பொழுதும் பணம் கொடுத்துதான் மதம் மாறிக் கொண்டிருப்பதாகவும் ஒரு மாயக் குரல் உலா வந்து கொண்டிருக்கிறது.
பணம் கொடுத்து, ஒருவனை மதம் மாற்றிவிட முடியும் என்றால், இப்பொழுது உங்கள் கையில்தானே அதிகாரம் இருக்கிறது..இந்தியாவின் கஜானாவே உங்கள் கையில்தானே இருக்கிறது. உங்களிடம்தானே, ஒரு வேளை உடுத்தும் ஒரு ஆடைக்கு 10 இலட்ச ரூபாய் செலவளிக்கும் வகையில் தகுதியுள்ள தொழிலதிபர்கள் நண்பர்களாக இருக்கின்றார்கள்?
பிறகு என்ன தயக்கம்?
இருக்கும் பணத்தை அள்ளி வீசி, இந்தியாவில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் மதம் மாற்றிவிட வேண்டியதுதானே? யார் உங்களைத் தடை செய்கிறார்கள்?
அர்த்தமற்ற வாதங்கள் நிலையற்ற உலகில் ஏன்?
ஒரு உதாரணம் சொல்கிறேன்..அதன்பிறகு நமது வாதத்திற்குள் வரலாம் நண்பர்களே..
திருநெல்வேலி மாவட்டத்தில் முதன் முதலாக கிறிஸ்தவ ஆலயம் எப்பொழுது எழுப்பப்பட்டது என்று தெரியுமா?
1778ம் ஆண்டில்..பாளையங்கோட்டையில் கட்டப்பட்டது.
யாரால் கட்டப்பட்டது?
க்ளாரிந்தா என்ற அம்மையாரால் கட்டப்பட்டது.
க்ளாரிந்தா அம்மையார் என்பவர் யார்?
உடனே சொல்லிவிடுவீர்கள்..அவர் ஒரு வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த ஒரு மிஷனரி என்று.
இல்லை..இல்லவே இல்லை.
அவர் தஞ்சாவூர் பகுதியைச் சார்ந்த மிகவும் வைராக்கியமான ஒரு பிராமின் சமூகத்தைச் சார்ந்தவர். (ஆதாரம் :http://csitirunelveli.org/profile/history/missionaries/)
இவர் எப்படி கிறிஸ்தவ ஆலயத்தைக் கட்டியிருக்க முடியும்?
இவர் எப்படி கிறிஸ்தவராகியிருக்க முடியும்? பணம் பெற்றுக் கொண்டா கிறிஸ்தவர் ஆனார்?
இவருடைய கணவர் மரித்துப் போய்விடுகிறார். கணவனை இழந்த பெண்களுக்குத்தான் உயரிய மரியாதை அளிக்கும் சமூகம்தானே நம் இந்திய சமூகம்?
ஆம்..அந்த உயரிய வழக்கத்தின்படியே, அந்தப் பெண்ணை மொட்டையடித்து, வெள்ளையாடை உடுத்தி, கணவனின் சிதையில் உடன்கட்டை ஏற்றிக் கொலை செய்வதற்குக் கொண்டு போனார்கள்.
எவ்வளவு உயர்ந்த பாரம்பரியம் கொண்டது நமது இந்தியா?
பெண்களை கிள்ளுக்கீரையாய்கூட அல்ல, அதை விடவும் கேவலமாக நடத்தியதுதானே நம் சமூகம்?
கணவன் இறந்து போனால் ஏன் பெண்களுக்கு மொட்டையடிக்கவேண்டும்?
அவளைப் பார்த்து, பிற ஆண்களுக்கு காம உணர்ச்சிகள் வந்துவிடக்கூடாதாம்.. அவள் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்..வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும்..பிறரது முகத்தில் விழித்துவிடக்கூடாது..உப்பில்லாப் பண்டம் சாப்பிடவேண்டும்..
சரி..தலையை மொட்டையடித்து, வெள்ளையாடை உடுத்தியபிறகும் அவள் பிறர் கண்களுக்கு அழகாகத் தெரிந்தால் என்ன செய்யலாம்?
அவளை உயிரோடு எரித்துவிடவேண்டும்..உடன்கட்டை ஏறுதல் என்ற பெயரில்.
இதுதானே வழக்கம்?
மனைவியை இழந்த ஆணை என்ன செய்தீர்கள்?
அடப் பாவிகளா?
இதுதான் தர்மமா?
இந்தக் காட்சியைக் கண்ட ஆங்கிலேயப் பிரபு ஒருவர் அவளை மீட்டு, காப்பாற்றி திருமணம் செய்து கொள்கிறான். அவன் மூலமாகத்தான் கிறிஸ்தவத்தை அவள் அறிந்து கொள்கிறாள்.
வேதம் வாசிக்க ஆரம்பிக்கிறாள்..கிறஸ்தவப் பெண்ணாக மாறுகிறாள். தன்னைப் போல் வேறு ஒரு பெண்ணிற்கு இந்தப் பூமியில் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று முடிவு செய்கிறார்.
கிறிஸ்தவம் குறித்துப் பிற பெண்களுக்குப் போதிக்க ஆரம்பிக்கிறார். சக மனிதனையும் தன்னைப் போல் நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கிறார்.
பெண்களின் உயிரும் விலை மதிப்பில்லாததுதான்..என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த ஆரம்பிக்கிறார்.
தன் கையிருப்பையெல்லாம் விற்று ஒரு சிறிய கூரை ஆலயத்தைப் பாளையங்கோட்டையிலே கட்டி முடிக்கிறார்.
அதைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியாத அவரது சமூகத்தினர் அதை தீயிட்டுக் கொளுத்துகின்றனர்.
அதன்பிறகுதான் மக்கள் மனதில் ஒரு பெரிய விழிப்புரை வர ஆரம்பிக்கிறது.
கிறிஸ்தவம் என்றால் என்ன? ஏன் நாம் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
கிறிஸ்தவம் இங்கு வேகமாய் பரவ ஆரம்பித்தது.
இந்த க்ளாரிந்தா ஆலயம் பிறகு செப்பனிடப்பட்டு,தற்போதும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. (பார்க்க : படம்.) இதன் அருகில்தான் வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ் துரையின் சமாதி இருக்கிறது. அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதில் நமக்குச் சொல்லப்பட்டிருப்பதிலும், உண்மைக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கிறது.
கல்வி நிலையங்கள் ஏராளமாய் ஆரம்பிக்கப்பட்டது. உயர்ந்த ஜாதியின ஆண்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் என்றிருந்த நிலையை உடைத்து, எல்லோரும் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கிறிஸ்தவம் கொண்டுவந்தது.
நீ தாழ்ந்த ஜாதி என்று பிறர் பேசும் போது, நான் எதில் தாழ்ந்தவன் என்று எதிர் கேள்வி கேட்க அவன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்.
நாடார்களை இந்த சமூகம் மிகவும் இழிவான நிலையில் வைத்திருந்தது. நாடார் குலப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது. தங்கள் மார்புகளை துணியால் மறைக்கவும் கூடாது என்றிருந்ததை நாம் மறக்க முடியுமா?
அவர்களுக்குத் தைரியம் கொடுத்தது..கிறிஸ்தவமும், வைக்கம் பெரியாரும்தான்.
இந்த இழி நிலையைக் கண்டு கொதித்து எழுந்துதான் நாராயணசாமிகள் உருவானார்கள்.
ஆலயத்திற்குள் மட்டுமல்ல கருவறைக்குள்ளும் நாங்களும் செல்வோம்..நாங்களும் தலையில் பரிவட்டம் கட்டுவோம்..நாங்களும் பூணூல் அணிவோம் என்று எழுந்தார்கள்..
நாடார்களில் பெரும்பகுதி கிறஸ்தவர்களாக மாறினார்கள்..ஒரு பகுதி நாராயணசாமி வழிபாட்டிற்கு மாறினார்கள்..சிலர் சுயம்புவாய் எழும்பியதை இறைவனாக்கி வணங்க ஆரம்பித்தார்கள்..
இதில் பணம் எங்கிருந்து வந்தது?
மாறியது மனங்கள்தான்..மதங்கள் அல்ல.
எது, என்னை.. சக மனிதனைப் போல வாழவும், பழகவும் தடை செய்கிறதோ..அதை விட்டு விட்டு, அதிலிருந்து வெளியே வர எது கை கொடுத்ததோ..அதை ஆரத் தழுவிக் கொண்டார்கள்.
என் மூதாதையர்கள்.. ஆறுமுகம் நாடார் அதன்பிறகு வைரவன் நாடார்..அதன்பிறகு வண்ணமுத்து நாடார். வண்ணமுத்துதான் என் தாத்தா.
இவைகளில் பாதிக்கப்பட்டு, கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவி ஸ்டீபன் வேதமுத்து என்று கிறிஸ்தவர் ஆனார். தன் கிராமத்தில் உள்ள சொத்தையெல்லாம் விற்று, அருகில் உள்ள ஊருக்கு வந்தார்.
1919ல் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்.. பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார்.
இதோ..95 ஆண்டுகள் ஆகிறது. இந்த 95 ஆண்டுகளில் எத்தனையோ ஆயிரம் மாணவர்கள் .இங்கு கல்வியைப் பெற்றிருக்கின்றார்கள். அதில் யாருக்கென்ன நஷ்டம் வந்துவிட்டது?
இன்றைக்கு கிறிஸ்தவ நிறுவனங்கள், இந்தியாவில் இத்தனை எழும்பப்போய்தான், பல கோடிக்கணக்கான மக்களுக்கு இங்கு கல்வி போய் சேர்ந்திருக்கிறது.. தீண்டாமை ஒழிந்திருக்கிறது.. உடன்கட்டை போயிருக்கிறது.. மனிதனை மனிதனாக மதிக்கும் வழக்கம் வந்திருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவமனைகள்..முதியோர் இல்லங்கள்..சேவை நிலையங்கள்..ஆதரவற்றோர் நிலையங்கள்..வந்திருக்கிறது. விதவைகள் மறுமணங்கள் பெருகியிருக்கிறது.
குறிப்பாய் மேல் ஜாதி வர்க்கத்தின் ஆதிக்கம் பெருமளவு குறைந்திருக்கிறது.
காடுகளாய் காணப்பட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் புகைவண்டித் தடங்கள் அமைத்தார்கள்..சாலைகள் அமைத்தார்கள்..கட்டிடங்கள் எழுப்பினார்கள்..கல்வி நிலையங்களைக் கட்டினார்கள்..
அந்த இடங்களைச் சுற்றிப் பிற மனிதர்கள் குடியேற ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ நிறுவனங்கள் அதனாலேயே நகரத்தின் மையப் பகுதியானது.
இன்றைக்கு அதன் மதிப்பு பல்லாயிரம் கோடிக்கணக்கான மதிப்புடையதாய் மாறிப்போனது. அதற்கு யார் என்ன செய்வது?
அய்யோ..அவர்களிடத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறதே என்று புலம்புவதில் லாபம் என்ன?
கிறிஸ்தவர்கள் தங்கள் வருமானத்தில் தசம பாகத்தை வலுக்கட்டாயமாய் ஆலயங்களுக்கென்றும் அதன் நிறுவனங்களுக்கென்றும் கொடுத்துப் பழகிவிட்டார்கள்.
ஆகவே கிறிஸ்தவ நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல.
ஆனால் வெளியிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றவர்கள், ஆ..,இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வெளிநாட்டிலிருந்து வருகிறது என்று புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அதற்கு யார் என்ன செய்வது?
3 தலைமுறையாய் நாங்கள் கிறிஸ்தவர்களாய் இருக்கிறோம்.. நாங்கள்தான் ஆலயங்களுக்குப் பணம் கொடுக்கிறோமே தவிர..ஒரு பைசாகூட இதுவரை எங்கிருந்தும் வந்ததேயில்லை. எங்கள் உணவிற்கு நாங்கள்தான் உழைக்க வேண்டியதிருக்கிறது. அதுதான் உண்மை.
உங்களுக்குச் சந்தேகமாய் இருந்தால், நீங்களும் வந்து பாருங்கள்..யார் வேண்டாம் என்றது?
தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுக்கிற வெளிநாட்டு நிறுவனங்கள் பல இருக்கிறது.
தர்ம காரியம் செய்யப் போகிறோம்..ஏழைகளுக்கு உதவப் போகிறோம்..மருத்துவ உதவிகள் செய்யப் போகிறோம் என்று யார் கேட்டாலும் அவர்கள் உதவி செய்வார்கள்.
கிறிஸ்தவர்கள் என்றில்லை..யார் வேண்டுமானாலும் தொண்டு நிறுவனங்களை ஆரம்பியுங்கள்..பதிவு செய்யுங்கள்..FCRAல் பதிவு செய்யுங்கள்..பெங்களுருவில் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்துவிட்டால் போதும்..அவர்களே உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணமும் பெற்றுத் தந்துவிடுவார்கள்.
பணம் பெற்றுக் கொண்ட பிறகு, நீங்கள் செலவளித்தற்கு முறையான வவுச்சர் கொடுக்க வேண்டும்..அவ்வளவே.
கிறிஸ்தவர்களில் பலருக்கு இது தெரிந்திருக்கிறபடியால் பண ஆசை உடைய மனிதர்கள் இது போல் பல நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்கள்.பணம் பெறுகிறார்கள். அவர்களுக்கும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
உலக கிறிஸ்தவ அமைப்பு, உலகில் உள்ள எல்லா கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் நன்கொடைகளை சில விதிகளுக்குட்பட்டு வழங்குகிறது.
சுனாமியால் இந்தியா பாதிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காய் பணம் வந்தது.
ஆனால் அதில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் ஊழல் செய்ததாக புகார் பெறப்பட்டதால், அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் பலரும் இதுபோல் பணம் பெற்றுக் கொண்டு, அதை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் தன் விருப்பம் போல் செலவு செய்கிற வழக்கம் வந்துவிட்டதால், பல கிறிஸ்தவ நிறுவனங்களுக்குப் பணம் கொடுப்பதை வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு குறைக்க ஆரம்பித்துவிட்டன.
தவறு செய்கிறவர்கள் எல்லா இடத்திலும் உண்டு.
அதற்காக தவறு செய்கிற ஒரு சிலரை, ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிநிதியாகப் பார்க்கப்பட முடியாது.
கிறிஸ்தவம் இன்னும் வேகமாய் பரவுகிறதே என்று பொறாமையால் பதறுகிறவர்கள்.. முதலில் தங்களிடத்தில் காணப்படுகிற குறைகளைச் சரி செய்து கொள்ளுங்கள்.
சுடுகாட்டில்கூட பிற ஜாதிப் பிணங்களை அனுமதிக்க மறுக்கிற உங்களுக்கு, மற்றவர்களிடத்தில் குறை காணும் தகுதி எப்படி வந்தது?
உயர்ந்தோர்..தாழ்ந்தோர் இல்லை.
மேலோர்..கீழோர் என்று எவரும் இல்லை..
எல்லாரும் என் மக்களே..
எல்லோரும் என் இனமே..
எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு..என்று சொல்லிப் பழகுங்கள்..
அதுவரை இந்த தேசத்திற்கு க்ளாரிந்தாவும், அன்னை தெரசாக்களும் தேவைப்படத்தான் செய்வார்கள்..
ஒருவரும் ஒன்றும் செய்வதற்கில்லை..!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum