இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்""
Mon Feb 02, 2015 8:51 am
Kalaignar Karunanidhi
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்"" என்ற குரல் மீண்டும் கேட்கத் தொடங்கி விட்டதே
தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், அந்த இருபெரும் இமயங்களின் அடியொற்றி இலட்சோப இலட்சம் செயல்வீரர்களும் பண்படுத்தி, வளர்த்து, பாதுகாத்து வரும் இந்த பூமியிலேதான், அதுவும் பெரியார் வாழ்ந்த திருச்சியிலே தான், இப்படி ஒரு குரல் கேட்டிருக்கிறது. திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத்தின் மாநாட்டில், அதன் செயல் தலைவர் பிரவீன் தொக்காடியா பேசும்போது, "நாடாளுமன் றத்தில் மதமாற்றத்தை தடை செய்யும் வகையிலான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். ஒரே நாட்டில் இருவிதமான சட்டங்கள் இருக்கக் கூடாது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இந்துக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட குரல் எழுப்பப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப் பேற்றதற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற "இந்துத்துவா" அமைப்புகளைச் சேர்ந்த பலரும், ஏன், மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும் இப்படிப் பேசி வருவதை இந்தியா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே; காந்தியாரைப் போன்ற தேச பக்தர் கோட்சே; கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்க வேண்டும்; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்"" போன்ற அடிப்படை வாதக் கருத்துகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.
பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற போது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பகவத் கீதையைத்தான் பரிசளித்தார் என்றும், அப்போதே அதற்குத் தேசிய புனித நூல் தகுதி வழங்கப்பட்டு விட்டது என்றும், அதனைத் தேசியப் புனித நூல் என்ற அறிவிப்புதான் இந்த ஆட்சியில் இன்னும் அரசு ரீதியாக வெளியிடப்பட வில்லை என்றும்; அந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு விடும் என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியிருக்கிறார்.
அதைப்போலவே, "முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்கள் இல்லை. அவசரநிலை காலத்திலேதான் இந்த இரு சொற்களும் சேர்க்கப்பட்டன. இந்த சொற்கள் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்"" என்று சர்ச்சைக்குரிய கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட் டிருக்கிறார்.
அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டுவதை நினைவூட்ட நாடு முழுவதும் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை "ராம் மகோத்சவம்" நடத்தப்படும் என்றும்; கிராமங்கள் தோறும் இரண்டரை அடி உயரமுள்ள ராமர் சிலையை நிறுவி, பத்து நாட்கள் வழிபாடு நடத்தி அந்தந்த இடங்களிலேயே ராமர் சிலை நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.
இந்தியத் திருநாட்டை பிற்போக்குத் திசைக்கு இழுத்துச் செல்லும் எதிர்மறைக் கருத்துகளை யார் வெளியிட்டாலும் அதை அவ்வப்போது மறுத்து தெளிவு படுத்த வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காத்து வருவது, ஜனநாயகம் - மதச் சார்பின்மை - சமாதானம் - சமதர்மம் - யாரையும் விலக்கி வைக்காத அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சிப் பாதை ஆகிய முற்போக்கு லட்சியங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக் கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum