இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:44 pm
அற்புதங்கள் அற்புதங்களே
இயேசுவின் புதுமைகள்.அவை,
நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட
நன்கொடைகள்.
விசுவாசத்துக்கு அளிக்கப்பட்ட
விருதுகள்.
மாந்திரீகத்தின்
மந்திரக் கோல் அல்ல
இயேசுவின் புதுமைகள்,
அவை
உறுதியை வளர்க்கப்
பவனி வந்த
அவனியின் ஆச்சரியங்கள்.
நன்றி: http://xavierbooks.wordpress.com/ ல் இருந்து எடுத்தாளப்பட்டது
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:45 pm
கானாவூர் திருமணம், அற்புதத்தின் ஆரம்பம்
முதலவன் செய்த
முதல் புதுமை இது.
கலிலேயாவில் கானாவூரில்
கல்யாணம் ஒன்று
கலகலப்பாய் நடந்தது.
பிந்தியவர்க்கு
பந்தியில் பரிமாற
திராட்சை ரசம் இல்லாமல்
திருமண வீடு
குறையொன்று கண்டது.
இயேசுவும், தாயும், சீடரும்
விருந்துக்காய்
வந்திருந்தனர்.
இறைவனின் திட்டம்
அன்னை மரி
அறிந்திருக்க வேண்டும்.
மகனின் மனசுக்கு
ஓர்
மனு அனுப்பினார்.
திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!.
விண்ணப்பத்தை வாங்கிய
விண்ணக மகன்
வினவினார்.
என் நேரம்
வரவில்லையே அம்மா?
புதுமைகளில் படிக்கட்டுகளை
இப்போதே அடுக்குதல்
அடுக்குமா ?
தாய் தடுமாறவில்லை,
பணியாளரைப் பார்த்தார்
இயேசு சொல்வதை
மறுக்காமல் செய்யுங்கள்
என்றார்.
ஆறு கற்சாடிகள்
யூதரின்
ஒழுங்கு முறைப்படி
அங்கிருந்தது.
தண்ணீர் நிறையுங்கள்
சாடிகளின் கழுத்துவரை !
அமைதியாய் சொன்னார்
ஆண்டவர்.
இதென்ன வினோதம் ?
கைவசம் ரசமுமில்லை,
வாங்கி வர நேரமுமில்லை.
இதிலே
நீர் எதற்கு
நீர் நிறைக்கச் சொல்கிறீர் ?
எனும் கேள்வி
அவர்கள் உள்ளத்தில்
உருண்டிருக்க வேண்டும்.
உள்ளே ரசம் வேண்டும்
கூட்டமிருக்கிறது.
இயேசுவிடம்
அதற்கென ஓர்
திட்டமிருக்கிறது
என்று நினைத்த அவர்கள்,
இறைத்த தண்ணீர் எடுத்து.
நிறைத்து வைத்தனர்
இயேசு,
அவற்றை ஆசீர்வதித்தார்.
கிணற்றிலிருந்து
கரையேறி வந்த தண்ணீர்
திராட்சை இரமாய்
உருமாறியது !
பயமும், வியப்பும்
பற்றிக்கொள்ள
பணியாளர்கள் நடுங்கினர்.
திருமகன் தந்த
திராட்சை ரசமோ
சுவையில்
போட்டியின்றி வென்றது
புதுமையின்
முதலெழுத்தால் நின்றது.
விருந்தினர்
அருந்தினர்.
வியப்பில் விழிகள்
விரிந்தனர்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:45 pm
குளக்கரைப் பிணியாளன் குணமாகிறான்
யெருசலேமில்
பெத்சதா என்றொரு குளம்
இருந்தது.
குணமாக்கும் குளம்.
பக்கத்தில் இருந்த
கட்டிடத்தின் கால்மனையில்
கட்டிலோடு கிடந்தான்
முப்பத்தெட்டு ஆண்டைய
பிணியாளிப் பாமரன் ஒருவன்.
தேவதூதர்கள்
குளத்தைக் கலக்கும் போது
முதலில் இறங்குவோர்
பிணி துறந்து
குணம் பெறுவர் என்பது
நம்பிக்கையாயிருந்தது.
இயேசு அவனிடம்
கனிவுடன் கேட்டார்.
குணமாக விரும்புகிறாயா ?
எனக்கு சொந்தம் இந்த
நோய் மட்டுமே,
என்னை குளத்துள் இறக்கிவிட
பொது நலக் கைகள்
இதுவரை வரவில்லை.
சுயநலக் குளியல்களையே
தரிசித்து தரிசித்து
மரத்துப் போய்விட்டது மனசு.
நோயாளி வருந்தினான்.
இயேசுவோ,
படுக்கையை மடித்து எடுத்துப்போ
நீ
குணம் பெற்றாய் என்றார்.
அந்நேரமே அவன்
வலி விலகி வலிமையானான்.
என் வார்த்தைகளைக் கேட்டு
வாழ்க்கையை கட்டுபவன்
என்றும்
சாவுக்குள் சஞ்சரியான்.
சத்தியமாய் அவன்
வாழ்வுக்குள் வந்திடுவான்.
கல்லறைகள் கலங்கும்
கடைசி நாள் வரும்,
நீதித் தீர்ப்பு அப்போது
நிறுத்தப்படாது.
மனம் திரும்புங்கள்
மனிதராகுங்கள்.
உள்ளத்தால் உள்ளவராகுங்கள்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:46 pm
லாசரைப் பிரிகிறது மரணம்
லாசர்,
மார்த்தாள், மரியாளுக்கு
சகோதரன்.
இயேசுவின் நேசத்துக்குச்
சொந்தக்காரன்.
பிணியுற்ற லாசரை
பார்த்துவிட்டு,
பயணம் தொடர்ந்தார் பரமன்.
சிலநாளில்
லாசர் இறந்து விட்டான்.
லாசரின் மரணம்
இயேசுவின் புதுமைக்கான
ஓர் களம்.
லாசரின் பிரிவு
இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இயேசு திரும்பினார்.
லாசர் வீட்டை நோக்கி
நேசர் நடந்தார்.
எதிர்கொண்டு
கண்ணிரண்டில்
கண்ணீர் மொண்டு
கால் தொட்டு கதறினர்
சகோதரியர்.
இயேசுவே
நீர் இருந்திருந்தால்
அவன் இறந்திருப்பானா ?
நீர்
விலகியதால் தானே
உடலைவிட்டு விட்டு
அவன் உயிர்
விலகிச் சென்றது.
மீண்டும் கண்ணீர்
இமை இடித்துக் கொட்டியது.
கலங்கிய கர்த்தர்,
கல்லறை எங்கே என்றார்.
உடலை அடைத்திருந்த
குகை
தூரமாய்,
ஒரு ஓரமாய் இருந்தது.
கல்லறை வாசலில்
கல்லொன்று கதவாகி இருந்தது.
திறவுங்கள்,
கல்லறையின் கதவை
இயேசு சொன்னார்.
நான்கு நாள் ஆன உடல்
நாற்றத்தில் இருக்குமே,
வினா விழித்தெழுந்தது.
நம்புங்கள்,
வல்லமையின் ஒளி
கல்லறை வரை பாயவேண்டும்.
நானே ஒளி !
கல்லறை திறக்கப்பட்டது.
இயேசு கட்டளையிட்டார்.
‘லாசரே வெளியே வா’
அதிர்ச்சிக் குரல்களும்
ஆச்சரியக் குரல்களும்
மலைகளில் மோதி
மண்டை உடைய,
லாசர் உயிர்பெற்று வந்தான்.
கட்டவிழ்த்து அவனை
நடக்க விடுங்கள்
இயேசு சொன்னார்.
லாசரின் உடலைச் சுற்றியிருந்த
துணி அவிழ்க்கப்பட்டது
கூட்டத்தினர் மனசில்
துணிவு சுற்றிக் கொண்டது.
இயேசு
சாவுக்கு சாவும அடித்தார்
வாழ்வுக்கு
வரவேற்புக் கம்பளம் விரித்தார்.
அஞ்சிய கூட்டம்
அகல,
எஞ்சிய கூட்டம்
மீட்பின் கூட்டத்தில்
மனசை நட்டது.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:46 pm
பாதையோரப் பார்வையற்றவன்
இயேசு
எரிகோ செல்லும் வழியில்
பார்வையற்ற ஒருவன்
அமர்ந்து
அகப் பார்வை உள்ளோரிடம்
பிச்சை சேகரித்துக் கொண்டிருந்தான்.
திடீரென
சத்தங்கள் அவனை
சூழ்ந்து கொண்டன.
என்ன சத்தம் ?
அருகில் இருந்தவரை
வினவினான்,
இயேசு செல்கிறார்
என்று பதில் கூறினர்.
சட்டென்று அவனுடைய
பிச்சைப் பாத்திரத்தில்
ஓர்
பிரபஞ்சம் விழுந்ததாய்,
உள்ளுக்குள் விழுந்து கிடந்த
நம்பிக்கை எலும்புகள் எல்லாம்
நலம் பெற்று மிளிர்ந்தன.
இயேசுவே
இரக்கம் வையும் என
கதறினான்.
‘இதென்ன கூச்சல் ?
நாகரீகமற்ற கத்தல்
அவர் பெரியவர்
பேசாதிரு’
என அதட்டினர் அவனை.
அவர்களோ
முகத்தில் கண்கள் கொண்டவர்கள்
இவனோ
நம்பிக்கைக்கு
பார்வை முளைத்தவன்.
நிறுத்தாமல் கத்தினான்.
இயேசு நின்றார்.
அவனைக் கூட்டி வாருங்கள்
என்றார்.
குருடன் வந்தான்,
அப்போதே
பார்வை பெற்ற ஆனந்தம்
அவன் முகம் முழுதும்.
இயேசுவே என்றான்.
‘நான் என்ன செய்ய வேண்டும்’
இயேசு வினவினார்.
பார்வை இழந்தவனுக்கு
தேர்வை வைக்கிறார் தேவன்.
நான்
பார்வை பெற வேண்டும் ஆண்டவரே
என்றான் அழுக்குப்
போர்வைக்குள் கிடந்த அவன்.
பெறு என்றார்.
பெற்றுக் கொண்டான்.
உன்னை நலமாக்கியது
நானல்ல.
என்மேல்
நீ கொண்ட நம்பிக்கையே
என்றார்.
அவனுடைய
கருப்பு வாழ்வின்
நிறுத்தப் புள்ளியாய்
இயேசு
கண்களைப் பரிசளித்து நகர,
அவன்
பார்வைக்குப் பரிகாரமாய்
பாதையை மாற்றினான்.
இயேசுவின்
சுவடுகளுக்குள் விழித்திருந்த
சத்தியத்தைத் தொடர்ந்தான்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:46 pm
பிறவிக் குருடன் கண் திறக்கிறான்
பார்வையற்றிருக்கத் தான் என்று
கண்ணுடையோர் எல்லாம்
காணாமல் நடக்க,
பிறவிக் குருடன் ஒருவன்
கண்ணின்றி இருந்தான்.
பொருளாதாரம்
அவன் கையில்
பிச்சைப் பாத்திரத்தை
பிச்சையிட்டிருந்தது.
இருளுக்குள் கிடந்து
பாத்திரத்தில் விழும்
பொருளுக்குள் கிடக்கும்
இதயங்களை
கைகளால் தீண்டி
இதயத்தால் அழுது கொண்டிருந்தான்
அவன்.
இயேசுவே,
இவன் குருடனாய் இருப்பது
அவன் பாவமா ?
இல்லை ஜென்ம பாவமா ?
என்று கேட்டது
கூட்டம்.
இயேசு சொன்னார்,
நோயாளி
பாவத்தின் அடையாள அட்டை அல்ல
இங்கே
அருள் நடக்கும் பாருங்கள்
என்றார்.
உமிழ்நீரால் சேறுண்டாக்கி
அவன்
விழிமீது பூசினார்.
போ,
சீலோவாம் குளத்தில்
கண்களைக் கழுவு.
பார்வையைத் தழுவு என்றார்.
அவன்
பார்வை பெற்றார்.
பொருள் தடவி நடந்தவனுக்கு
அருள் உதவி கிடைத்தது.
மண்ணிலிருந்து முளைத்த
ஆதாமின் சந்ததிக்கு
மண்ணிலிருந்தே பார்வை
வழங்கப்பட்டது.
ஆனந்தத்தில் கிடந்தது
நம்பிக்கைக் கூட்டம்,
அதிச்சியில் உறைந்தது
எதிர்த்த கூட்டம்.
பெற்றோர் பரசவப் பட்டனர்
மற்றோர்
இயேசுவைத் தீர்க்க
அவசரப் பட்டனர்.
இயேசு அவர்களிடம்
குருடர்களுக்குப் பார்வை
இருக்கிறது,
இல்லையேல் கிடைக்கிறது.
நீங்களோ
காண்கிறது என்னும் கனவில்
காணாமல் கிடக்கிறீர்கள்
என்றார்.
தொழுநோய் தொலைகிறது
தொழுநோயாளிகள்,தீண்டத்தகாதவர்கள் என
ஒதுக்கப்பட்ட மனிதக் குப்பைகள்.
பாவத்தின் பதுங்கு குழிகளென்று
புறக்கக்கப்பட்ட
பிணியாளிகள்.
ஒருமுறை
போதனை முடித்துப் பரமன் திரும்ப,
விசுவாசத்தின்
தோள்தொட்டு நின்றான்
தொழுநோயாளி ஒருவன்.
நீர் விரும்பினால்…
நான் குணமாவேன்,
விருப்பத்தின் மருந்துகளால்
நோயோட்ட மாட்டீரா ?
வினயத்தோடு வினவினான்.
இயேசு சொன்னார்,
சித்தமாயிருக்கிறேன்
சுத்தமாகு.
ஏக்கத்தின் உச்சரிப்பை ஏற்று
நோய்க்கு எச்சரிக்கை
அனுப்பினார்.
அதிசயத்தின் ஆடுகளமானது
அவன் தேகம்.
நோயின் சுவடுகள் கலைந்தன
சடுதியில் சுகமானான்,
சகலராலும் ஒதுக்கப்பட்டவன்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:47 pm
அரச அலுவலர் மகன் குணமாதல்
கப்பர்நாகூமில் இருந்தது
அந்த
அரச அலுவலரின் இல்லம்.
அவர் மகன்
சாவின் நுனியில்
சக்தியின்றி
தொங்கிக் கொண்டிருந்தான்.
எந்நேரமும் அவன்
மரணத்தின் கழுத்தில்
மாலையாகலாம் என்பதை
அறிந்த தந்தை,
பாசத்தின் பச்சையம்
உலர உலரக் கலங்கினார்.
அப்போது தான்
அவருடைய
அச்சாணி சிதறிய
நம்பிக்கைத் தேருக்கு
புது அச்சாணியாய் வந்தது
அச்செய்தி.
இயேசு
கலிலேயாவில் இருக்கிறார்.
கடைசிக் கொழுகொம்பைத் தேடி
செடி
இடம் மாறி ஓடியது.
பேய்கள் பதறி ஓடுகின்றன,
நோய்கள் உதறி ஓடுகின்றன
தண்ணீர் திராட்சை இரசமாகிறது
என்றெல்லாம் வந்த
செய்திகள் அவனுக்குள்
புதிது புதிதாய்
விசுவாச விதைகளை விதைத்துச்
சென்றன.
ஓடினான்,
கலிலேயாவிற்கு.
அங்கு இயேசுவைக் கண்டு
இதயம் கதறினான்.
இயேசுவே வாரும்,
என்
மகனின் பிணிக்கு மருந்து
நீரே,
என் மகனெனும் கிளைக்கு
நீர் தான் வேரே,
அவன் சாகும் முன்
அவனை சமீபிக்க வேண்டும்,
உயிர்
அகலும் முன் அவனுக்கு
அருள வேண்டும்.
என் மகனைக்
குணமாக்க வேண்டும்,
என் நம்பிக்கைகளை
முடமாக்க வேண்டாம்.
என்று மன்றாடினான்.
இயேசு அவரை நோக்கி,
அருஞ் செயல் இல்லையேல்
நீங்கள்
பரம் பொருளை நம்புவதில்லை.
நீ போகலாம்,
உன் மகன் நலமானான்.
என்றார்.
அவரும் திரும்பி
மகனை நோக்கி ஓடினார்.
தொலை தூரத்து
இல்லம் நோக்கி.
மறுநாள்,
பயணத்தின் வழியில்
பணியாளர் வந்து,
மகன் பிழைத்தான் என்றனர்.
தந்தை
உச்சிவரை உற்சாகமானார்,
ஆனந்தத்தின்
ஆணிவேரோடு அறிமுகம்
கொண்டார்.
எப்போது நலமானான் என
ஆனந்தத்தில் வினவ,
நேற்று பிற்பகல் ஒருமணி
என்றனர்.
அது இயேசு
நலமாவான் என்றுரைத்த
நேரமென்று கண்டான் தலைவன்.
ஒரு வார்த்தை
தூரங்களை எல்லாம்
தாண்டி,
மகனை மீட்டதால்,
அவர் குடும்பமே
இயேசுவில் இணைந்தது.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:47 pm
திமிர் வாதத்தின் திமிர் தீர்கிறது
தலைவன் ஒருவனின்ஊழியனுக்கு வந்தது
உயிர் உலுக்கும் திமிர்வாதம்.
ஒரு வார்த்தை விழுந்தால்
ஊழியன் நலமாய் எழுவான்,
நம்பினான்
நூற்றுவர் தலைவன்.
இல்லம் செல்லலாம்
என்கிறார் இயேசு.
தாழ் பணிந்து
தாழ்மை சொல்கிறான் தலைவன்.
உம் பாதம்
படுமளவுக்கு
என் தகுதி தகாது பரமனே,
ஒரு வார்த்தை சொன்னாலே
ஊழியன் நலமாவான்.
எனக்கு பணிசெய்யவும்
பணியாளர் உண்டு
வா என்றால் வருவான்
போ என்றால் போவான்
செய் என்றால் செய்வான்
எதிர்ப்பதில்லை எதுவும்.
நீரும்
ஆணையிட்டால் போதும்
அருள் வந்து சேரும்
என்றான்.
அவன் நம்பிக்கையின்
ஆழத்தில் அதிசயித்தார்
ஆண்டவர்,
விசுவசித்தபடி நடக்கும் என்றார்,
அவ் வினாடியே
ஊழியன்
வாதம் விலக வலுவடைந்தான்.
காய்ச்சல் கலைகிறது
பேதுருவின் மாமியார்,
உடல் முழுதும் உலைக்களமாய்
கடும் காய்ச்சல்.
உயிரைச்
சுடும் காய்ச்சல்.
இயேசு வந்தார்,
இருளும் பகலும் ஒரே இடத்தில்
இருக்க இயலுமா ?
நோயும் மருந்தும்
ஒரே புட்டிக்குள் படுக்க இயலுமா ?
நோயைத் தீர்த்தன
இயேசுவின் விரல்கள்.
பிணிகளை உறிஞ்சி
ஆரோக்கியத்தை ஊற்றியது
உன்னதரின் உள்ளங்கை.
கரம் தொட்டதும்
காய்ச்சல் விட்டது.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:48 pm
பத்துத் தொழுநோயாளிகள்
இயேசுவின்
யெருசலேம் பயணத்தின் வழியில்
இயேசுவை
பத்து பேர் எதிர்கொண்டார்கள்.
அவர்களின்
மேனியெங்கும் தொற்றிக் கிடந்தது
தொழு நோய்.
அவர்களின்
விழிகளெல்லாம்
அழுது கொண்டிருந்தன
விரல்களெல்லாம்
விழுந்து கொண்டிருந்தன.
ஓர்
இலையுதிர்க் கால
மரத்தைப் போல,
நம்பிக்கையின் கடைசி இலை
காற்றிலும் கிளையிலுமாய்
ஊசலாட,
இயேசுவிடம் வந்தனர்.
இயேசுவே,
இரக்கமற்ற சமுதாயம்
எங்களை
முரட்டு இருட்டுக்குள்
பூட்டி விட்டது.
எங்களை வருத்தும்
நோய்களைத் துரத்தும்
என்றனர்.
இயேசு,
‘போய் உங்களை
குருக்களிடம் காட்டுங்கள் “
என்றார்.
நோயைப் போக்கச் சொன்னால்
குருவிடம்
போகச் சொல்கிறாரே
என்று எண்ணியபடி
நோயாளிகள் சென்றனர்.
வழியிலேயே
அவர்களின்
நோய் விலக , வியந்தனர்.
அவர்களில் ஒருவன்,
ஒருவன் மட்டும்
ஆண்டவரை நோக்கி ஓடினான்,
ஆண்டவரே
நன்றி என்று
கால்கள் தொட்டு கதறினான்.
ஒரு பானை சோற்றுக்குப்
பதம்
ஒரு சோறு தானே.
இதுவரை
தன்னை ஒதுக்கி வைத்த
சமுதாயத்தின் முன்
பதுங்காமல் நின்றான் அவன்.
இயேசு புன்னகைத்தார்,
மற்றவர்கள் எங்கே ?
வேண்டுதல்களில் பத்துபேர்
நன்றி செலுத்துதல்
ஒற்றை மனிதனா ?
செல்.
உன் நம்பிக்கை தான்
உன்னை நலமாக்கிற்று
என்று சொல்.
என்றார்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:48 pm
அசுத்த ஆவி அகல்கிறது
உடல் அடையும்
கல்லறைகளுக்கிடையே இருந்து
அசுத்த ஆவிபிடித்தவன்
ஒருவன்
அலறினான்.
மலைகளோடு கூச்சலிட்டு
கல்லறைகளோடு
படுத்துக் கிடந்தவன் அவன்.
நரம்புகளில் பாயும் இரத்தத்தை
கற்களால் கீறி
கண்களால் பார்த்துக்
கொண்டிருந்தவன் அவன்.
சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருந்தும்
இணக்கத்துக்கு வரமறுத்த
இரும்பு நோயாளி அவன்.
பல பேய்களின்
மாநாடு அவன் தேகம்.
அதனால்
பல நோய்களின்
படுக்கையறையாகவும்
நீண்டு கிடந்தது.
அவனுடைய
கண்களுக்கு இயேசு
தெரிந்தார்.
இயேசுவாய்.
என்னை வதைக்கவேண்டாம்
எங்களை
சிதைக்க வேண்டாம்.
நீர் கடவுளின் மகன்
நானறிவேன்.
விட்டுவிடும் என்னை
கட்டளையிட்டு கலைத்து விடாதேயும்
என்று உறுமினான்.
இயேசுவின் கண்களில்
உறுதி உலவியது
பேயின் கண்களில்
கிலி பரவியது.
துரத்துவதாய் இருந்தால்
அதோ
அந்த பன்றிக் கூட்டத்தில்
புகலிடம் தாரும் என
அசுத்த ஆவிகள்
விண்ணப்பம் வைத்தன.
இயேசு
அனுமதித்தார்.
பேய்கள்
மனிதனை விட்டுவிட்டு
பன்றிகளில் புகுந்தன.
மனிதன் நலமானான்
பன்றிகள்
பேய்களின் புகுதலால்
சரிவில் புரண்டு,
கடலுள் பாய்ந்து
காணாமல் போயின.
o
பேய் பிடித்த இன்னும்பலர்
பரமன் பார்வைக்காய்
பார்த்திருந்தனர்.
பேய்களோ
பரமனைப் பார்த்ததும்
பதறின,
உடல்களை விட்டுச் சிதறின.
பெயல்சபூல்
குறைசொல்லும் கூட்டம்புதிதாய் கதை சொன்னது,
பேய்களின் தலைவன்
பெயர் பெயல்சபூல்.
அவனைக் கொண்டே
இவன்
அதிசயம் செய்கிறான்.
சாத்தான் சாத்தானை
ஓட்டுமா ?
பூட்டு பூட்டைத் திறக்குமென்று
பூச்சுற்றுகிறீர்களே.
வீடு
தன் வீட்டுக்கெதிரானால் வாழுமா ?
அது
சுய கல்லறைக்குச் சமம்.
தன் தலையில்
உலை வைக்கும் வேலையை
சாத்தான் செய்வானா ?
இறையைக்
குறைசொல்வதைக்
குறைத்துக் கொள்ளுங்கள்,
நிறைவாய் நம்பிக்கையை
நிறைத்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை.
அதுதான்
உடலில் உலவும் உயிர்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:49 pm
இயற்கை இறைவனில் சங்கமம்
படகில் ஒருநாள்
பயணித்தார் பரமன்
சீடர்களின் அருகாமையில்.
கடலின் கர்ப்பத்திலிருந்து
புயல்த் துண்டொன்று பதறி எழுந்தது,
அலைகள் எழுப்பிய பள்ளத்துள்
படகுகள் அலைக்கழிக்கப்பட்டன.
அலைகளின் மேல்
முரட்டுக் காற்று உட்கார்ந்து
கடிவாளம் இல்லாக் குதிரையை
கடற்பரப்பெங்கும்
ஓட விட்டுக் கொண்டிருந்தது.
வானத்து மேகத்தை
தொட்டு விடும் ஆவேசத்தில்
அலைகள்
எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன,
காற்றின் சத்தமும்,
இரவின் வண்ணமும் சேர்ந்து
பயத்தின் சதுப்பு நிலத்துக்குள்
சீடர்களைப் பதுக்கியது.
நித்திரையிலிருந்த இயேசுவை
பயந்த சீடர்கள்
பைய எழுப்பினர்.
இயேசுவோ,
காற்றோடும் கடலோடும்
அமைதி என்று சொல்லி
சாந்தப் படுத்தினார்.
சீடர்கள் வியந்தனர்.
அலைகளின் மொழியும்
அறிந்தவர் இவரோ,
காற்றின் காதுகள்
தெரிந்தவர் இவரோ ?
உடல்களோடு மட்டுமல்ல
கடல்களோடும்
கட்டளை இடுகிறாரே.
என
வியப்பின் எல்லையை
தயக்கமின்றி விரித்தனர்.
கடல் மீது கடவுள்
இயேசு ஒருமுறை
கடல் மீது நடந்து
சீடர்கள்
பயணித்துக் கொண்டிருந்த
படகுக்குச் சென்றார்.
நீர் மீது அவர்கால்கள்
காற்றைப் போல
மூழ்காமல் மிதந்தன.
நான்காம் ஜாம இருட்டில்
கடல் மீது
ஓர்
இருட்டு உருவம்.
பதறிய சீடர்கள்
பேயென்று பயந்து
அலறினர்.
‘அஞ்சாதீர்கள் நான் தான்’
கடல் மீது நடந்தது
பரிச்சயமான பரமன் குரல்.
விசுவாசமே
செயல்களின் சுவாசம்.
பகலை
திருடிச் சென்ற இருட்டு
அலைகளின் முதுகை
வருடிக் கிடந்த இரவு அது.
சின்ன கல் கூட
ஆழம் வரை மூழ்கித் தொலைக்கும்
நீரில்,
நீர் எப்படி நடக்கிறீர் ?
வினாக்கள் உள்ளுக்குள்
வினாத்தாள் தயாரித்தன.
பயம்
பதிலெழுதிக் கொண்டிருந்தது.
பேதுரு
ஆர்வத்தில் எழுந்தார்.
நானும் நடக்கவா ?
இயேசு.
நட என்றார்.
சில அடிகள்
கடல் மீது வைத்த பின்
பயத்தின் உள்ளே
வழுக்கினார் அவர்.
நம்பிக்கை மெல்ல
கைவிட்டுச் செல்ல
கால்கள் தண்ணீருள் தாழ்ந்தன
காப்பாற்றும் கடவுளே
காப்பாற்றும்.
பயத்தின் குரல் பரபரத்தது.
இயேசுவின் கரம்,
அவரைத் தாங்கியது.
விசுவாசம் பெரிது,
நம்பிக்கை இல்லாவிட்டால்
செயல்கள் செய்வது சாத்தியமில்லை.
பரமன் மொழிந்தார்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:49 pm
கூரைக்குள் வானம்
ஒரு வீட்டில்பேசிக்கொண்டிருக்கிறார்
இயேசு.
கட்டிலோடு தூக்கி வந்தனர்
ஒரு முடக்குவாதக் காரனை.
நாயகனைச் சுற்றி
மக்கள் கூட்டம்,
வாசல்களில் நசுக்கப்பட்டு
காற்று கூட
வெளிநடப்பு செய்தது.
முடக்குவாதக் காரன்
என்ன செய்வான் ?
நல்லவேளை
அவனை படுக்கையோடு
தூக்கி வந்த கூட்டம்
கூடவே
நம்பிக்கையையும்
கூட்டி வந்திருந்தது.
ஐந்து பக்கங்களும்
அடைந்துபோன வீட்டுக்கு
ஆறாவது பக்கமாய்
கூரை கதவாகி
கூப்பிட்டது.
நோயாளி
கூரை வழியே
பரமனின் முன் இறக்கப்பட்டான்.
பரமன் இரக்கப்பட்டார்.
கொடுக்கிற தெய்வம்
கூரையைப் பிய்த்தும் கொடுக்கும்,
கூரை பிய்த்துக் கேட்டாலும்
கொடுக்கும்.
இயேசு
அவன் பாவங்களை மன்னிப்பதாய்
பகிரங்கப் படுத்தினார்.
ஏட்டுச் சுருளுக்குள்
சுருண்டு கிடந்த கூட்டம்
விரிந்த இயேசுவின் மனசுக்கு எதிராய்
இருண்ட கேள்விகளை
மனதுக்குள்
உருட்டிக் கொண்டிருந்தது.
வானங்களில் வசித்தவர்
மனங்களை வாசித்தார்.
ஏன்
தேவையற்ற கேள்விகளோடு
அவையில் இருக்கிறீர்கள் ?
நான் மனுமகன்
எனக்கு
பாவிகளை தண்டிக்கும்
அகங்காரம் இல்லை.
பாவங்களை மன்னிக்கும்
அதிகாரம் உண்டு என்றார்.
சொல்லிவிட்டு
முடக்குவாதக் காரனை நோக்கி,
எழு
படுக்கையை எடு.
நட…
நல்வழியில் நட. என்றார்.
நோயில் சுற்றப்பட்டு
பாயில் வந்திறங்கியவன்,
நோயைச்
சுருட்டி எறிந்து விட்டு
பரவசப் பயணம் ஆரம்பித்தான்.
கூட்டம்
பிரமிப்பின் வரைபடத்தை
விழிகளில் வரைந்தது.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:49 pm
வருடங்களின் பிணி, வருடலில் மறைகிறது
பன்னிரண்டு ஆண்டைய
பிணி அவளுக்கு.
விலகவில்லையே எனும் வலி
விலகாதோ எனும் கிலி
எல்லாம் சேர்ந்து அவளை
கண்ணீர் தேசத்தின்
எல்லைக்குத் தள்ளின.
மிச்சமிருந்த நம்பிக்கையை
முடிச்சிட்டு எடுத்துக் கொண்டு
இயேசுவின்
பொன்னடிப்பாத
மண்ணடிச் சுவடைத் தேடி
ஓடினாள்.
நட்சத்திரங்கள் நெருக்கியதால்
மேகத்துக்குள்
மறைந்துபோன நிலவாய்,
கூட்டத்தின் இடையே
கடவுள் நடந்தார்.
பெரும்பாடுள்ள பெண்
தன் நோய்க்காய் நேரம் ஒதுக்க
இறைவனுக்கு இயலாதெனும்
நிலையறிந்து,
ஆடையைத் தொட்டாலே
என்
ஆயுள் நீளுமே,
வலியின் விரல்கள் வீழுமே
என்று உள்ளத்தில் எண்ணினாள்.
ஆடையின் ஓரம் தொட்டாள்.
ஆச்சரியத்தின் ஓர் இழை
அங்கே
ஆடைகளின் வழியே
ஆண்டவனுக்குள்ளிருந்து வந்தது.
தொட்ட வினாடியில்
அவளைத்
தொடர்ந்த வியாதி,
சூடுபட்ட பூனையாய் ஓடியது.
இயேசு திரும்பினார்,
மாது நடுங்கினாள்,
என் ஆடையைத் தொட்டது யார் ?
இயேசுவின் வார்த்தைகள்
சீடர்களை குழப்பின.
புயலடிக்கும் பூந்தோட்டமாய்
கூட்டம் நெருக்கும் இடம் இது !
என்னைத் தொட்ட
காற்று ஏதென்று
கடவுளிடமிருந்தே கேள்வியா ?
சீடர்களின் கேள்வி முடியும்முன்,
மண்டியிட்டழுதாள் மாது,
மன்னியுங்கள் மகானே,
கரம் தொடும் வரம் வராதோ எனும்
பயத்தின் நகம் கிழிந்ததால்,
ஆடையை மெல்ல தீண்டினேன்,
என் வலியின் தேசம் தாண்டினேன்,
நோய்
போய் விட்டது.
மன்னியுங்கள்.
இயேசு புன்னகைத்தார்,
நம்பினவர்களை
வாழ்க்கை நடுவழியில் விட்டுச் செல்லாது,
நீ நலமானாய்,
உன் நம்பிக்கையை
நலமாய் காத்துக் கொள்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:50 pm
இறந்த சிறுமி உயிர்க்கிறாள்
தொழுகைக் கூடத் தலைவன்
இயேசுவைப் பணிந்தான்,
கண்களில் ஈரமாய் கண்ணீர்
நெஞ்சில்
பாரமாய் பாசம்.
என் மகள் இறந்துவிட்டாள்.
நீர் வந்தால்
மீண்டு வருவாள்
மீண்டும் வருவாள்
சாவை ஒதுங்கச் சொல்லி
ஓடி வருவாள்.
உம் கைகளை வைப்பீரா ?
கிழிந்த என் மனசை தைப்பீரா ?
ஆம்
என்னும் பதிலை மட்டுமே வேண்டி
அழுது நின்றான்
வேண்டியவர்களை
விலக்கிவிடுவது வேந்தனின்
செயல் இல்லையே,
ஒத்துக் கொண்டு ஓடினார்.
சிறுமியின் வீட்டு
வாசலெங்கும் மரண வாசனை.
தோளில் தாங்கிய மாதா
மார்பில் அடித்து
கண்ணீர் வடித்தாள்.
ஒப்பாரிகளின் சத்தத்தில்
மரணத்தின் ரணம் கசிந்தது.
இயேசு சொன்னார்,
சிறுமி தூங்குகிறார்
சாகவில்லை.
விலகிப் போங்கள்.
கூட்டம்,
நகைச்சுவையைக் கேட்டதாய்
நகைத்தது.
செத்துப் போனதை
ஒத்துக் கொண்ட கூட்டம்,
பொத்திப் பொத்திச்
சிரித்தது.
இயேசு
சிறுமியின் கையை
மெல்லமாய் தொட்டார்.
இமைகள் விலக
சிறுமி சட்டென்று எழுந்தாள்.
கனவு கண்டு விழித்ததாய்
கண்களை விரித்துச் சிரித்தாள்.
நகைத்த கூட்டம்
திகைத்தது.
சிறுமி உயிர்த்தெழுந்தாள் !
கூட்டத்தினரிடையே
சத்தம் செத்து விழுந்தது.
அமைதியாய் நகர்ந்தார்
இயேசு,
பணி முடிந்த திருப்தியில்.
சில மனங்களை
தன்பால் முடிந்து கொண்டு.
பரபரப்புச் செய்தி
பரவலாயிற்று.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:50 pm
இறந்த இளைஞன் எழுகிறான்
இயேசு
நயீன் என்னும் ஊருக்குச்
சென்றார்,
கரம் பிடித்து நடக்கும்
கடல் அலைகளாய்
பெருங்கூட்டம் பின் தொடர்ந்தது.
ஊரின் வாசலில்
வாழ்வை
ஓர் சாவு வரவேற்றது.
கைம்பெண் ஒருத்தியின்
ஒரே மகன்,
வாழ்வின் ஊன்றுகோலால்
அவளுக்கிருந்த
ஒரே நம்பிக்கை.
அவர் எதிரே
பாடையில்
பயணித்துக் கொண்டிருந்தது.
தாயின் இதயம்
ஒப்பாரிகளை விழுங்கி
உயிரை
கண்கள் வழியே
வடித்துக் கொண்டிருந்தது.
மனசு இடைவிடாமல்
மரண வலியில்
துடித்துக் கொண்டிருந்தது.
இயேசு நின்றார்.
ஒளிக்குள்
ஒளியப் பார்க்கும்
ஓர்
இருட்டுத் துண்டமாய்
மரணம் அவர் முன்னால் நின்றது.
அந்தத் தாயின் வலியை
ஓர்
புதுமைத் தூரிகையால்
துடைத்துவிட முடிவெடுத்தார்.
முன் சென்று
பாடையைத் தொட்டார்,
தூக்கி வந்தவர்கள் நின்றார்கள்.
கண்களால்
ஏன் என்றார்கள்.
இளைஞனே
எழுந்திரு. என்றார்.
மரணத்தோடு
இயேசு பேசியதை உணராமல்
உடலோடு
அவர் உரையாடுவதாய் எண்ணி
கூட்டம் நகைத்தது.
இளைஞன் எழுந்தான்.
பாடை தூக்கியவர்கள்
பயத்தைத் தூக்கினார்கள்.
இறந்து கிடந்தவன்
பேசத்துவங்கினான்,
பேசிக் கொண்டிருந்த கூட்டம்
வாயடைத்தது.
மிச்சம் மீதி இருந்த
அவ நம்பிக்கையை
அவிழ்த்தெறிந்தது.
ஆச்சரியச் செய்தி
ஊரெங்கும்
உச்சரிக்கப்பட்டது.
அச்செய்தி
யோவானின் காதுகளுக்கும்
போய் சேர்ந்தது.
அவர்
ஆயத்தப் பணிகளுக்காக
ஆண்டவரால்
அனுப்பப் பட்டவர்.
யோவான்
தன் சீடரை அழைத்து,
செல்லுங்கள் !
நாம் தயாரிக்கும் பாதைக்கான
மனுமகன் அவர் தானா
இல்லை இன்னோர்
அவதாரம் வருமா
என
அறிந்து வருங்கள் என்றார்.
அவர்கள்
இயேசுவை அணுகி வினவ,
இயேசுவோ
நீங்கள் கண்டவற்றை
அவருக்குச் சொல்லுங்கள்.
என்
செயல்களே எனக்கான
அடையாள அட்டை.
இதோ
நோயாளிகளின் நோய்களெல்லாம்
சொல்லிக் கொள்ளாமல்
ஓடுகின்றன.
பேய்களெல்லாம்
புறமுதுகு காட்டுகின்றன.
மரணத்தின் வாள்கள் கூட
முனை ஒடிந்து போகின்றன.
ஏழைகள்
நற்செய்தி பெறுகிறார்கள்.
அவரிடம் இதையெல்லாம்
அறிவியுங்கள்.
என்னை
விசாரணை செய்யாமல்
என்னில்
விசுவாசம் கொள்பவன்
பாக்கியவான் என்றார்.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:51 pm
நம்பிக்கைப் பார்வை நலமளிக்கும்
குருடர் இருவர்அகப் பார்வை பெற்று
ஆண்டவனிடம் வந்தனர்.
வந்தனம் செய்தே நின்றனர்.
நீ
குணமாவாய் என்று நம்புகிறாயா ?
ஒரே கேள்வி,
ஆம் என்ற பதில்
ஆணித்தரமாய் வந்தது.
என்மேல் உனக்குள்ள
விசுவாசம் உனக்கு
வாழ்வு தந்தது,
என்று சொல்லி
பார்வை பரிசளித்தார்.
o
நாவின் நரம்புகள்
நலிந்துபோய்,
மெளனம் பேசிப் பழகிய
ஊமையன் ஒருவன் வந்தான்.
புகழ் பாக்கள் பாடி
திரும்பிச் சென்றான்.
வாழ்வுக்கான நீர்
சமாரியா நோக்கிய
பயணத்தில் களைப்புற்று
இயேசு
கிணறொன்றின் கரையில்
தாகத்தோடு அமர்ந்தார்.
நண்பகல் வெயில் விரிக்க,
கிணற்றில் நீரெடுக்க
சமாரிய மங்கை ஒருத்தி
குடத்துடன் வந்தாள்.
மாதே,
தண்ணீர் தருவாய்
தாகம் கொள்கிறது நாவு.
இறைமகன் விண்ணப்பித்தார்.
அச்சத்தில் விழித்தாள்
அச் சமாரியப் பெண்.
யூதர் பரம்பரையே,
சமாரியரோடு
சகவாசம் கொள்வதில்லையே.
தண்ணீர் தரும் தகுதி
எனக்கில்லையே என்றாள்.
இயேசுவோ,
என்னை அறிந்திருந்தால்
நீயே
வாழ்வின் தண்ணீரை
வழங்கக் கேட்டிருப்பாய்.
நானும் கொடுத்திருப்பேன்
புன்னகையுடன் வந்தது பதில்.
ஆழமான கிணறிருக்கு,
கையில் கயிறு எங்கிருக்கு ?
தண்ணீர் எடுக்கும்
தந்திர வித்தை என்னவோ ?
மங்கை சிரித்துக்கொண்டே வினவினாள்.
இக்கிணற்றின் நீர்
அடுத்த தாகத்தின் அனுமதிச் சீட்டு.
வாழ்வின் நீர்
நிரந்தமாய் உன்
தாகம் தணிக்கும்.
நிரந்தரத் தீர்வு உண்டெனில்
சலுகைச் சமாதானங்கள்
எனக்கெதற்கு
அதிசய நீரை
நீர் எனக்குத் தாரும்.
நீள் தொலைவு நடந்து
பாதங்கள் பழுதடைகின்றன.
பெண் பணிந்தாள்.
உன் கணவனை
என்னருகே அழைத்து வா.
பொருள் பொதிந்த பார்வையில்
அருளாளர் சொன்னார்.
அவளோ,
கணவன் இல்லையே என
கண் கலங்கினாள்.
இயேசு பார்த்தார்.
உண்மை சொன்னதில்
உளம் மகிழ்ந்தார்.
உனக்கு கணவர் ஐவர் இருந்தனர்.
இப்போது இருப்பவன்
கணவன் அல்லன் என்றார்.
ஆச்சரியம் பூச்சொரிய
விழி மின்னல் வீச்செறிய
அவள் அவரை பார்த்தாள்.
உண்மையில்
நீர்
உன்னதரே
இதயம் தொட்ட இறைவாக்கினரே.
என்று பணிந்தாள்.
பரமபிதாவை தொழுவதில்
பழுதின்றி வாழ்
இயேசு பேசினார்.
மெசியா வருவார் என்பதை
அறிவேன் நான்.
வந்ததும் அறிவியும் என்றாள்.
இயேசுவோ,
உன்னோடு பேசும்
நானே அவர்.
அறுவடைக்காலம்
அண்மையில் உள்ளது
அரிவாள் முனைகள்
ஆயத்தமாகட்டும்
என்றாள்.
அவள்
ஊரெங்கும் ஓடிச் சென்று
வியப்புச் செய்தியை விதைத்தாள்.
வயிற்றில் பசி
சம்மணமிட்டு அமர
சீடர்கள் கேட்டனர்
உணவு வாங்கி வரவா ?
தந்தையின் விருப்பத்தை
தரணியில்
செயல் படுத்துவதே
அவர்
தனையனாம் எனக்கு உணவு.
வயல்வெளிகளை பாருங்கள்,
இலைகளின் இடையே
தலை நீட்டும் கதிர்கள் எல்லாம்
அறுவடைப் பக்குவத்தில்
தலையாட்டுகின்றன,
அறுப்பவர்கள் கூலிகிடைப்பதால்
மனசின்
சந்தோசக் கலங்களில்
புன்னகை நிறைக்கிறார்கள்,
உரிமையாளன்
அறுவடைப் பயனின்
அளவைக் கண்டு
ஆனந்தத்தில் திளைக்கிறான்.
என்றார்
சீடர்கள்
தலையாட்டினர்
காற்றில் ஆடும் இலைகளென.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:51 pm
ஐந்து அப்பமும், ஐயாயிரம் பேரும்
ஒருமுறை,
போதனைகள் கேட்கவும்,
புதுமைகள் காணவும்,
மக்கள் கூட்டம் நிறைந்தது.
போதனை நீள,
பசியில் கூட்டம் படுத்தது.
சீடர்களிடம்
இருந்ததோ வெறும்
ஐந்து அப்பமும் இரண்டு மீனும்.
இது போதும்
உள்ளோர் அனைவருக்கும்
உணவளிக்க,
புன்னகைத்தார் பிதாமகன்.
வந்தவரெல்லாம்
பந்தியில் அமரட்டும்
என்றார்.
அமர்ந்தனர்.
அப்பங்களை எடுத்து
வானக தந்தையின் அனுமதி கேட்டு
சீடர்களிடம் கொடுத்து
இயேசு சொன்னார்.
பரிமாறுங்கள்
பசியாறுங்கள்.
ஐந்து அப்பம்
ஐயாயிரம் பேருக்கு ஆகாரமாகுமா ?
ஐயத்தின் முனையில்
சீடர்கள் தொங்கினர்.
ஆனாலும்,
பரமனின் வார்த்தைகளை
கேலிக் குரல்களால்
கழுவிக் களையவில்லை,
ஆணையிட்டதை செய்தனர்.
பந்தியில் அப்பம்
பரிமாறப்பட்டது.
ஐயாயிரம் பேர் உண்ட மீதி
பின்
பன்னிரண்டு கூடையிலும்
நிரம்பி வழிந்தது.
ஆச்சரியம்
மக்களின் மனக்கூடையை
நிரம்பி வழிந்தது.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:51 pm
வலிப்பு வலி விலகியது
இயேசுவின் மேல்
பார்வை இருத்தி.
வலிப்பு நோய் வருத்திய
மகனுக்காய்
அழுதாள் தாய் ஒருத்தி
ஆண்டவரே இரங்கும்,
வலிப்பு நோயின்
வலியாய் அவதிப் படுகிறான்
என் மகன்,
தண்ணீரிலும் தீயிலும்
வலிப்பின் வலுக்கட்டாயத்தால்
விழுந்து விடுகிறான்.
உம் சீடர்களால்
நோய்தீர்க்க இயலவில்லை
உம்மால் கூடும்,
நோய்கள் ஓடும் என்றாள்.
இயேசு,
அவனை சந்தித்தார்.
எதிர் துருவம் கண்ட
காந்த விசை போல
வலிப்பு நோய் விலகியது.
சீடர்களுக்குள் சந்தேகம்
ஏன் எங்களால்
இயலவில்லை ?
நிறைய நோய்களைக்
குணமாக்கியதுண்டே
இயேசுவின் பெயரால்,
இந்த நோய்மட்டும் ஏன்
இடம் பெயராமல் ?
வினாக்கள் விழுந்தன.
இயேசு சொன்னார்,
உங்கள் நம்பிக்கை
இன்னும் ஆழப் பரவவில்லை.
அது தான் காரணம்.
உண்மை தான்
நம்பிக்கை நங்கூரம்
நாட்டப்படாத கப்பல்,
நிலையாய் இருப்பது
இயலாதே.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:52 pm
மீனுக்குள்ளும் நாணயம் உண்டு
இயேசுவும்
பேதுருவும்
கப்பர்நாகூம் கோயிலுக்கு வந்தனர்.
வரி செலுத்துங்கள்
வரி செலுத்துங்கள்.
இருவரும் வரி செலுத்துங்கள்.
வரி வசூலிப்போர் கேட்டனர்.
இயேசு பேதுருவிடம்
கேள்வி ஒன்றைக் கேட்டார்
பதில் தெரிந்து கொண்டே.
வரி யாரிடம் வசூலிக்கிறார்கள் ?
தம் மக்களிடமிருந்தா ?
இல்லை பிற மக்களிடமிருந்தா ?
பிறரிடமிருந்து தான்
பேதுரு பதிலிறுத்தார்.
எனில் நாம் வரிசெலுத்துதல்
கட்டாயமல்ல.
எனினும்
கட்டாமல் போவது நம்
திட்டமல்ல.
நீ போய் கடலில்
தூண்டில் போட்டு மீன் பிடி.
இயேசு சொன்னார்.
மீனை விற்றுப் பணமாக்கி
பணத்தை வரியாய்
வரவு வைக்கவா ?
பேதுரு மனதில் கேள்விகள்.
மனக் கேள்விக்கு
மனுமகன் விடைசொன்னார்.
உன் தூண்டிலில்
சிக்கும் முதல் மீனின் வாயில்
இரு நாணயம்
இருக்கக் காண்பார்.
நமக்கான வரி அது.
என்றார்.
பேதுரு,
கேள்விகள் ஏதுமின்றி
தூண்டில் வீச
மீனின் வாயில்
மின்னியது நாணயம்
விண்மீன் வால் நீட்டி
வாழ்த்தியது
அன்று.
கடல்மீன் வாய் காட்டி
வரிசெலுத்தியது
இன்று.
Re: இயேசுவின் புதுமைகள் (கவிதைகள்)
Thu Nov 27, 2014 7:52 pm
கேட்காத காது கேட்கிறது
செவிடனும் திக்குவாயனுமாய்
சமீபித்தான் ஒருவன்.
காதுகள் திறந்தால்
ஓசைகளோடு வசிக்கலாமே
திக்கு வாய்
தீருமெனில்
இசையையும் வாசிக்கலாமே
மனதுக்குள் கனவுகள்
விழுதிறக்க
ஆலமர நம்பிக்கையோடு
ஆண்டவரிடம் வந்தான்.
என்
செவிட்டை விரட்டுவாய்
திக்குவாய் தீர்க்குவாய்.
பணிவுடன் பணிந்தான்.
எப்பெத்தா என்றார்
இயேசு.
திறக்கப்படு என்பதே அதன் பொருள்,
திறந்து வைத்தார்
பரம் பொருள்.
சொன்னதைக் கேட்டான்,
காதுகளில் ஆச்சரிய மழை,
வார்த்தைகள் இப்போது
வாசலோடு விழவில்லை
உள்ளுக்குள் வழிந்தது.
வார்த்தைகளுக்கு இப்போது
முட்டி வலி இல்லை,
அவை
நொண்டாமல் நடந்தன.
இன்னொரு புதுமை
இப்படி முடிந்தது
இன்னொரு வாழ்வு
இப்படி விடிந்தது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum