அதிக தொகையை நிரந்தர வைப்புத் தொகையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) சேமிக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கை
Mon Oct 06, 2014 2:44 pm
அதிக தொகையை நிரந்தர வைப்புத் தொகையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) சேமிக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுத்துறை வங்கிகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிக முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் விவரத்தை சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தேனா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகளில் நிகழ்ந்த மோசடிகளின் விளைவாக இத்தகைய அறிவுரையை மத்திய நிதி அமைச்சகம் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
கேஒய்சி கட்டாயம்
நிரந்தர சேமிப்புக் கணக்கில் (ஃபிக்ஸட் டெபாசிட்) அதிக முதலீடு செய்யப்படும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வங்கி கள் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக கேஒய்சி விவரத்தைப் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நிரந்தர சேமிப்புக் கணக்குகளை அதிக உயர் மதிப்பு பிரிவில் சேர்த்து அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ரூ. 436 கோடி மோசடி
தேனா வங்கி மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவற்றில் நடத்தப்பட்ட தணிக்கையில் ரூ. 436 கோடிக்கு மோசடி நடந்துள்ளது முதல்கட்ட தணிக்கையில் தெரியவந்துள்ளது. பல அடுக்கு முறையின் காரணமாக இது நடைபெற்றிருக்கலாம் என்றும், மிகப் பெரிய பண மோசடி நடந்ததற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபிக்ஸெட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட ரூ. 180 கோடி தொகையை ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியும், ரூ. 250 கோடி தொகையை தேனா வங்கியும் தள்ளுபடி செய்துவிட்டன. இந்த மோசடி குறித்து இப்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடுமையான விதிமுறை
இது தவிர, ரிசர்வ் வங்கிக்கும் நிதி அமைச்சகம் சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதாவது வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மீது கடன் அளிக்கும் விதிமுறையை மேலும் கடுமையாக்கும்படி கூறியுள்ளது.
கரண்ட் அக்கவுண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர் மற்றும் நிறுவனங்களுக்கு அந்த குறிப்பிட்ட வங்கி தவிர பிற வங்கிகள் கடன் அளிக்கக்கூடாது என சட்டத்தை கடுமையாக்கும்படி கூறியுள்ளது. இதற்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் உதாரணமாக நிதியமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
கடன் பெற்று திரும்ப செலுத்தாத பலர், தாங்கள் பெற்ற கடனை வேறு பணிகளுக்கு செலுவிடுவதும், பன்முக அடுக்கு முறையில் வங்கிக் கணக்குகளை செயல்படுத்துவதும் தவறுகளுக்குக் காரணமாகிறது என்றும் நிதியமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி விதிகள் கடுமையானதாகவும், கண்காணிப்பு தீவிரமாகவும் இருந்தால் இத்தகைய தவறுகளைத் தடுக்க முடியும் என சுட்டிக் காட்டியுள்ளது.
வங்கிளுக்கு பெருமளவில் கடன் நிலுவை வைத்துள்ள கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியில் நடப்புக் கணக்கு (கரண்ட் அக்கவுண்ட்) மூலம் ரூ.7.5 கோடியை சேமிப்பாக வைத்துள்ளது. ஆனால் இந்நிறுவனமோ ஸ்டேட் வங்கியை உள்ளடக்கிய வங்கி களுக்கு ரூ. 6,521 கோடியை நிலுவையாக வைத்துள்ளது. இதனால் இந்நிறுவன செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதோடு அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.
இதைப்போல கடன் பெற்று அந்தத் தொகையை வேறு பணிகளுக்கு செலவிடுவது, திருப்பிவிடுவதை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் வகையில் புதிய செயல்பாடுகள் வகுக்கப்பட வேண்டும் வேண்டும் என்றும் நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி குறைவு காரணமாக வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளது. சில நிறுவனங்களால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை நிலவுகிறது.
சில நிறுவனங்கள் திரும்ப செலுத்தும் திறன் இருந்தும் வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் உள்ளன. இத்தகைய நிறுவனங்களை அடையாளம் காணும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யூகோ வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்யுமாறு நிதி அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த வங்கி கடன் வழங்கியதில் முறைகேடு இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றியதால் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum