நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
Wed Aug 27, 2014 11:14 pm
இந்தச் சொல் நான்கு எழுத்துகளால் ஆனது. வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்குப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டும். ஆம்! வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக, பொருள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
பொருளை ஆங்கிலத்தில் CASH என்கின்றோம். இதுவும் நான்கு எழுத்துக்கள் கொண்டதுதான். உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கின்றபோது சில நேரங்களில் உரிமை யோடு என்ன எவ்வளவு CASH வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்கின்றோம். தமிழில், எவ்வளவு காசு வைத்திருக்கின்றீர்கள் என்கிறோம்.
இந்த CASH -ஐப் பெறுவதற்கு KASH இருந்தால் போதும். இது என்ன? புதிதாக இருக்கின்றதே என்கிறீர்களா? ஆம். இந்த KASH என்ற நான்கு எழுத்துகளிலும் நல்ல வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கின்றது.
K & Knowledge - அறிவு
A & Attitude - மனப்பான்மை
S & Skill - திறமை
H & Habit - பழக்கம்
இவை வெறும் சொற்களல்ல, வெற்றிக்கான மந்திரங்கள். அறிவு, மனப்பான்மை, திறமை, பழக்கம் என்ற இந்த நான்கு சொற்களின் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். அந்த பொருள் தானாகவே உங்கள் கைகளுக்கும், பைகளுக்கும் வந்து சேரும். வாழ்க்கையும் வளமானதாகும்.
வாழ்க்கை, நான்கு எழுத்துகள் கொண்டது என்றேன். எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் நான்குவிதமானது. அவை:
1. தனிப்பட்ட வாழ்க்கை, 2. குடும்ப வாழ்க்கை, 3. தொழில் வாழ்க்கை,
4. சமூக வாழ்க்கை அல்லது தொண்டு வாழ்க்கை.
இந்த நான்கு விதமான வாழ்க்கையை யார் முழுமையாக வாழ்கின்றார்களோ, அவர்கள்தான் முழுமை பெற்றவர்கள். முழுமையாக வாழ்ந்தவர்கள்.
பொதுவாக இந்த முதல் மூன்று வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கும். அது பொதுவானதும் கூட. ஆனால் நல்ல வாழ்க்கை நான்காவது வாழ்க்கைதான். அதுதான் தொண்டு செய்து வாழ்கின்ற தூய வாழ்க்கை. இந்த தொண்டு வாழ்க்கை தான், முன்னர் குறிப்பிட்ட மூன்று வாழ்க்கைகளுக்கும் அங்கீகாரத்தைக் கொடுப்பது. உங்களது முகத்தை, முகவரியை ஊருக்கும், உலகுக்கும் காட்டுவது.
'ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்கும் அளவுகோல், அதன் ஜனத்தொகையோ, நகரங்களின் விசாலமோ, செல்வத்தின் மிகுதியோ அல்ல. அங்கு பிறக்கும் மனிதர்களின் குணங்கள்தான்' என்பார் சிந்தனையாளர் எமர்சன்.
உங்களது குணத்தை வெளிப்படுத்துவது சேவைதான். பிறருக்காகச் செய்கின்ற சேவையில்தான் மகத்தான சக்தி வெளிப்படும். மனிதநேயத்தின் திறவுகோல், சேவையில்தான் இருக்கின்றது. உலகில் வாழும் உயிர்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த அறம் வேறு இல்லை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum