தண்ணீருக்காக தவிக்கபோகும் தமிழகம்-எச்சரிக்கும் அறிக்கை
Sat Aug 09, 2014 6:47 pm
தண்ணீருக்காக தவிக்கபோகும் தமிழகம்-எச்சரிக்கும் அறிக்கை
தமிழ்நாடு புவியியல் அமைப்புபடி தண்ணீர் பற்றாக்குறையுள்ள நில அமைப்பை கொண்டிருக்கிறது. இரண்டு பருவங்களிலும் பெய்யும் மழை நீர் மற்ற தென்மாநிலங்களில் கிடைப்பதை விட தமிழகத்தில் குறைவாகவே கிடைக்கிறது. இந்த காரணத்தால் தான் மன்னர் காலத்திலிருந்து கிடைக்கும் தண்ணீரை ஊற்று, குட்டை, நீராவி, கேணி, கிணறு, ஓடை, தெப்பம், வாய்க்கால், குளம், ஏந்தல், ஏரி என்று நீர் ஆதாரங்களை உருவாக்கி பயன்படுத்தினார்கள். தண்ணீரை பொக்கிஷமாக கருதினார்கள்.
இந்தியாவில் சராசரியாக தனிநபருக்கு கிடைக்கும் தண்ணிரின் அளவு 2300 கனஅடி. தமிழ்நாட்டில் தனிநபருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெறும் 750 கனஅடி. இதை பார்த்தால் தமிழ்நாடு மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுத்து தண்ணீரை சேமிப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டில் கிடைக்கும் தண்ணீரின் அளவு 1240 டி.எம்.சி. இதில் 58 டி.எம்.சி தண்ணீர் தான் குடிநீருக்காக பயன்படுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் மழைக்காலங்களில் கிடைக்கும் 50 சதவீத தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து விடுகிறது. நதிகளின் பரப்பை மீறி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் 7,563 எக்டர் நிலப்பரப்பு பாதிப்புக்கு உள்ளாகிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் 5,112 மில்லியன் எக்டர்கள் பாதிப்புக்குள்ளாகிறது.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை. இந்தியாவில் 12 மில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது.
தண்ணீர் தானே என்று அலட்சியம் செய்யக்கூடாது என்று சொல்வதிலும், மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக இருக்கும் என்றும் சொல்வதில் உள்ள அபாயகரமான உண்மைகளை அனைவரும் புரிந்து கொள்வதற்கான கால கட்டம் இது.
பூமியில் கிடைக்கும் தூய நீரின் அளவு 36 மில்லியன் கன கிலோ மீட்டர்கள் தான். 2025 ம் ஆண்டில் உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள். சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலையில் ஏழைநாடுகளில் 80 சதவீத நோய் பாதிப்பு ஏற்படும். வேறு வழியில்லாமல் அசுத்த நீரை குடிக்க தொடங்கும் போது நீரினால் உருவாகும் நோய்களால் இறப்பும் அதிகரிக்கும்.
கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக 90 சதவீதம், விவசாயத்திற்காக 40 விழுக்காடும் நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலத்தடி நீரும் தமிழ்நாட்டின் பல இடங்களில் குறைந்து வருகிறது.
நீர்வள நிர்வாகம் சரியாக சரியான முறையில் செயல்படுத்த படாவிட்டால் 2025 ஆம் ஆண்டில் நீர்த்தேக்கங்களில் உள்ள நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போகும். வறண்டு போனால் எந்த போர்வெல் கிணற்றிலும் தண்ணீர் இருக்காது. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 73 சதவீதம் கடினப்பாறைப் பகுதி. 27 சதவீதம் வண்டல் மண் பகுதி. இந்த வண்டல் மண் தான் நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. அதிலும் 30 சதவீதம் தான் சேமிக்கும்.
இந்த நிலையில் மழை நீர் சேமிக்கப்படாமல் போனாலும், நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினாலும் என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.
எனவே இனிவருங்காலங்களில் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் மழை நீரை ஒரு துளி விடாமல் எப்படி சேமிப்பது மற்றும் எந்தக்காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஆறுகளை இணைப்பது, மழை பொழிய காரணமான காடுகளின் பரப்பளவை காப்பாற்றுவது உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டியது அவசியம்.
- K.N.N. ராஜன் , ஆய்வாளர் , மதுரை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum